Saturday, January 31, 2026

Anaconda - இத நா எதிர்பாக்கல

Anaconda

அப்டின்னு ஒரு காமெடிகள் நிறைந்த ஹாலிவுட் ஆக்சன் படம். இத நான் சத்தியமா எதிர்பாக்கல. அனகொண்டா பாம்ப வச்சு எப்டியெல்லாம் நம்மள இத்தன காலம் பயமுறுத்திருக்காங்க? அதெல்லாம் கண்ணு முன்னாடி வந்து போகுமா இல்லியா? அதுவும் அத வச்சு கொடூரமா காமெடி பண்ணா நம்மாள சமாளிக்க முடியுமா இல்ல இத நாம எதிர்பாத்திருப்பமா? அப்டி என்றும் இளமையான் ஆண்ட் மேன், ஃப்ரெண்ட்ஸ் புகழ் பால் ரட் நடிச்ச படம் தான் இது. பொதுவாவே பால் ரட் நடிச்சாலே அதுல காமெடிக்கு பஞ்சமிருக்காது. இதுல கதையே அப்டிப்பட்டதுதான். அது எப்டியெல்லாம் இருக்குன்னு பாக்கலாம் வாங்க.

கதைப்படி, பால் ரட் - க்ரிஃப்ங்கற கதாபாத்திரத்துல துணை நடிகரா இருக்காரு ஹாலிவுட்ல. அவரோட நண்பர்கள் எல்லாருக்குமே சின்ன வயசுல இருந்தே ஷார்ட் பிலிம் எடுக்கறது, அத குடும்பமா உக்காந்து பார்த்து ரசிக்கிறதுன்னு அவங்க நட்பு ஆழமானதா இருக்கு. நமக்கு அப்டி எந்த நட்பும் அமையல. அதனால கெடச்சவங்கள வச்சு படம் எடுத்து ரிலீஸ் பண்ணிக்கிருக்கேன். பரவால்ல, அவருக்காவது, டாக், கென்னி, க்ளேர்ன்னு சில நண்பர்கள் அமைஞ்சிருக்காங்க. அவங்ககிட்ட தன்கிட்ட அனகொண்டா படத்தோட ரைட்ஸ் இருக்கறதா ஒரு உருட்ட உருட்டறாரு நம்ம பால் ரட். அத நம்பி, கல்யாண வீடியோ எடிட் பண்ணிட்டிருந்த டாக்குக்குள்ள இருந்த டைரக்டர்க்குள்ள ஃபயர் பத்திக்க, அத எடுக்க நண்பர்களா சேர்ந்து, அமேசான் காட்டுக்குள்ள அனகொண்டா குட்டிய வாடகைக்கு எடுத்துகிட்டுப் போறாங்க. அவங்க அத எப்டியெல்லாம் படமா எடுத்து நம்மள படுத்துனாங்கங்கறதுதான் மிச்சக்கதை.

உண்மையில அனகொண்டா படத்துக்கான ரைட்ஸ் சோனிகிட்டதான் இருக்கு. இந்தப் படத்த எடுத்ததும் சோனிதான். இதுல கதைக்கு நடுவுல இவங்க டீம் அனகொண்டா படத்தை சூட் பண்ணிட்டிருக்கறப்ப, ஒரிஜினல் சோனி டீம், ஐஸ் க்யூம், ஜெனிபர் லோபஸ் மற்றும் பலார வச்சு சூட் பண்ண வருது. அத வச்சுத்தான் பால் ரட்டோட நண்பர்களுக்கே தெரிய வருது, நம்ம நண்பர் ரைட்ஸ் இருக்கறதா உருட்டிருக்காருன்னு. அது படத்துக்கு செம மைலேஜ் கொடுக்கற சீன், அனகொண்டா பயமுறுத்தறத விட காமெடிக்கி நல்ல ஸ்கோப் உள்ள சீன் அது. அப்பப்ப நம்மள படத்துல என்னமோ ஸ்பெசலா இருக்குன்னு ஃபீல் பண்ண வக்கிறது அனாவோட எண்ட்ரி தான். அவள வச்சு என்னமோ பெருசா ஒரு ட்விஸ்ட் இருக்குன்னு நம்மள நம்ப வைக்க மட்டுமே அவங்க அந்தக் கேரக்ட்டர யூஸ் பண்ணிருக்காங்க. மத்தபடி நோ யூஸ்.

படத்துல எல்லாருக்குமே காமெடிக்கு பெருசா ஸ்கோப் இருந்தும், எல்லாருமே டாக்குக்காக அண்டர்ப்ளே பண்ண மாதிரி ஒரு ஃபீலிங். அதுதான் உண்மையா இல்ல உண்மைலயே கதையே அப்டித்தான் எழுதிருந்தாங்களான்னு ஒரு டவுட்டு. டாக் கேரக்ட்டர்க்கு மட்டும் நாம ஸ்பெசலா சிரிக்க, பர்ப்பஸா பண்ண மாதிரியும் பல காட்சிகள். உதாரணமா, பேசிகிட்டிருக்கும் போது பொள்க்குன்னு அனகொண்டா வந்து டாக்க கவ்விகிட்டுப் போற சீனும் சரி, அவன கக்கிட்டு, அந்த பாடிய, மத்த ஃப்ரெண்ட்சுக தப்பிக்க பாம்புக்கு இரையா வச்சு டைவர்ட் பண்ற சீனும் சரி. செம குபீர் சிரிப்பு மெட்டீரியல் அதெல்லாம். 

எல்லாத்துக்கும் மேல, ஐஸ் கியூப்பும் சரி, ஜெனிபர் லோபஸும் சரி, கேமியோவா வர்ற இடங்கள் எல்லாமே கச்சிதமா இந்தக் கதைக்கு தேவையான டைம்ல, தேவையான அளவுக்கு மட்டுமே இருந்தது இன்னும் சிறப்பு. பொதுவா இப்பெல்லாம், தமிழ்க்காமெடிப் படங்களே குடும்பத்தோடவோ, குழந்தைகளோடவோ பாக்கற மாதிரி இருக்கறதில்ல. ஆனா இந்தப் படம் ஆச்சரியமா குடும்பமா கொழந்தைகளோட ரசிக்கிற மாதிரி எடுத்திருந்தத நான் சத்தியமா எதிர்பார்க்கல.

No comments:

Post a Comment