Sunday, June 7, 2026

பரிமளா & கோ

பரிமளா & கோ

அப்டின்னு ஒரு காமெடி கிரைம் திரில்லர் ஹூடன்னிட் படம். நடிகர்கள்னு பாத்தா, ஜெயராம், ஊர்வசி, யோகி பாபு, சஞ்சனா (வதந்தி வெப்சீரிஸ்), அனந்திகா சனில்குமார், மிஷ்கின், சாண்டி, சிங்கம் புலி, பக்ஸ் மற்றும் பலர். தமிழ்ப்படம்ங்கறதால லிஸ்ட் பெருசா வந்திருச்சு. சரி இந்தப் படத்தைப் பாத்த அனுபவம் எப்டியிருந்ததுன்னு பாக்கலாம் வாங்க.

கதைப்படி, பரிமளாவுக்கும் சுதந்திரத்துக்கும், மதுமிதா, பராசக்தின்னு ரெண்டு பொண்ணுங்க. சென்னைல ஒரு வாடகை வீட்டுல குடியிருக்காங்க. அப்ப படம் பாக்குற நமக்கே கோபம் வர்ற மாதிரி வர்கீஸ்ன்னு ஒரு அராத்துப் பேர்வழி மதுமிதாவ கல்யாணம் பண்ணி வைக்கச் சொல்லி அடாவடி பண்ணிகிட்டே இருக்கான். அவன் யார்கிட்ட பேசினாலும் அது கடைசில அடாவடியில தான் முடியும். அந்த மாதிரி ஒரு தான் தான், என்ன விட யார்றா இங்கங்கற மெதப்புல சுத்துற ஒரு கழிசடை. அவன் பண்றதெல்லாம் நமக்கே அவனைக் கொன்னுடலாமான்னு சீரியஸா கேக்கற மாதிரி இருக்கு. ஏன்னா இத எழுதறப்ப நானே ஸ்டைல்ஸ் சின்னா விவேக் வாய்ஸ் ஓவர்ல இவனக் கொன்னுடலாமாடான்னு கேட்டுச்சு. அதனால தான். இப்டிக் குடும்பங்கள் கொல்லறதுக்காக துடிக்கிற ஒருத்தன் தான் வர்கீஸ். அதுவும் அவன் மதுமிதாகிட்ட பண்ற ஸ்டாக்கிங் எல்லாம் எல்லை மீறி நமக்கே ஸ்க்ரீனைக் கிழிச்சுகிட்டுப் போய் அவனக் கொன்றலாம்டான்னு தோன வைக்குது.

திடீர்னு ஒரு நாள் வர்கீஸ் செத்துக் கெடக்கறான். அப்ப மதுமிதா வீட்ல ஒருத்தருக்கொருத்தர் ஓபனாவே யார் கொன்னீங்கன்னு கேட்டுக்கறாங்க. ஆனா என்ன ஒன்னு படம் முடியிற வரைக்கும் ஒருத்தரை ஒருத்தர் சந்தேகப்பட்டுக்கிட்டே இருக்காங்க. ஊர்ல எல்லாரும் இவன் சாகனும்னு நினைக்கிறது ஒரு வகைன்னா, அவனால பாதிக்கப்பட்ட எல்லாருமே அவனைக் கொல்லனும்னு துடிக்கிறளவுக்கு அராத்துப் பேர்வழி. அப்ப யார் கொன்னிருப்பாங்கன்னு சொல்றது கஷ்டம்தான? இதுல ஊர்வசி பேசுற ஒவ்வொரு டயலாக்குக்கும் ஜெயராம் கடுப்புல பல்லைக் கடிக்கிற சவுண்டெல்லாம் டீஃபால்ட்டாவே திகட்டறளவுக்கு எஃப் எக்ஸ்ல விட்டிருக்காங்க, சிட்காம்ல பேக்ட்ராப்ல ஒலிக்கிற லாஃப்ட்டர் ட்ராக் மாதிரி.

ஜெயராம் இதுல எத்தனை முறை பல்லைக் கடிச்சாரோ அத்தனை முறைக்கும் மேல இந்தப் படத்தொட பிரமோசன் இண்டர்வியூ பேசிருக்கலாம்னு ஒரு புள்ளி விவரம் இருக்காம். பஞ்ச தந்திரம் காலகட்டத்துக்கு ஊர்வசி ஜோடி ஓக்கே. ஆனா இப்ப ஊர்வசி பேசறதுக்கு நமக்கே பல்லைக் கடிக்கனும் போலயெல்லாம் தோனுது. இதனால, ஜெயராம் நடிப்பு அமுங்கிப் போயிடுது. அவர் எதாவது யோசிக்கிற மாதிரி ஒரு வசனம் பேசறப்ப குறுக்க ஊர்வசி ஓவர்லேப். அப்புறம் நமக்கு பல்லைக் கடிக்கவே டைம் சரியாப் போயிடும். இதுல ஜெயராம் டயலாக்கை எங்க யோசிக்கறது? எனக்குத் தெரிஞ்சு அவர் வில்லனா நடிச்ச படங்களைத் தவிர மத்த எல்லாப் படங்களுமே அவ்வளவு ரசிச்ச படங்கள். ஆனா இந்தப் படத்தை மட்டும் என்னால ரசிக்க முடியல. மேற்கூறிய காரணத்தால்.

ஸ்டாக்ஹோம் சின்ரோம்ன்னா ஒரே வீட்ல ஒரே ரூம்ல தான் அடைச்சு வைக்கனும்னு இல்ல. இப்டி தொடர்ந்து ஒருத்தன் கொலை பண்ணிடலாம்னு குடும்பத்தோட முடிவெடுக்கறளவுக்கு ஸ்டாக்கிங் பண்ணாக் கூடப் போதும் லவ் வந்துரும்னு சொல்ல வர்றாங்களா படத்துல? இல்ல எனக்கிது புரியல. அனந்திகா கேரக்ட்டர் அவ்வளவு பலவீனம். அது ஆப்போஸிட்டா அக்கா பராசக்தியா சஞ்சனா. எது சஞ்சனா அக்காவான்னு தான் நான் ஷாக் ஆனேன். படத்தோட கிளைமாக்ஸ்ல சஞ்சனா ஆன ஷாக்கை விட.  அதுவே கியூட் குட்டிப் பாப்பா, அதை எப்டிங்க அக்கான்னு சொல்றீங்க? சரி விடுங்க.

படத்துல காமெடிக்குன்னு ஜெயராம், ஊர்வசி, யோகி பாபு, சிங்கம் புலி, பக்ஸ்ன்னு நிறைய பேர் இருந்தாலும், அது இடைச்செருகலா இல்லாம கதையோட போக்குல சின்னச் சின்ன காமெடிகள்லயும் எக்ஸ்ப்ரசன்ஸ்லயும் நம்மள சிரிக்க வைக்கத்தான் செஞ்சிருக்காங்க. அதுவும் பாபநாசம் படம் பாக்க சன் நெக்ஸ்ட் சப்ஸ்கிரைப் பண்ற சீனெல்லாம் நான் குபீர்னு சிரிச்சிட்டேன். ஏன்னா அது ரியாலிட்டியில நம்மளைப் பாத்த மாதிரியே இருந்தது.  அப்புறம் சாண்டியையும், மிஷ்கினையும் பாக்கறப்ப வர்ற கடுப்பைத் தவிர்க்க முடியல. ஏன்னு சத்தியமாப் புரியல.

நீங்களும் படத்தைப் பார்த்துட்டு அதே ஃபீல்தானான்னு சொல்லுங்க. மத்தபடி அடுத்த பதிவுல சந்திப்போம்.

வர்ட்டா!

No comments:

Post a Comment