Triangle - ஒரு குழப்பமான அனுபவம்
புதுசு புதுசாய்
படங்களை தேடித் தேடி பார்த்தாலும், ஏற்கனவே பார்த்த சில படங்கள் எப்போதும் திரும்பத்
திரும்ப பார்க்கத் தூண்டும். அப்படி சில படங்கள் என் பட்டியலில் உண்டு. அதில்
Triangle என்கிற ஹாலிவுட் படம் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. காரணம் அதன் குழப்பும்
கதையமைப்பு. ஒவ்வொரு முறை பார்க்கும் போதும், ஒரு புதிய குழப்பம் மண்டையை கிறுகிறுக்க
வைக்கும். மேலும் அதற்கான விடைகள் படத்தில் இருப்பதாக நம்பி ஒவ்வொரு முறையும் பார்த்து
மேலும் என்னைக் குழப்பிக் கொள்கிறேன். படத்தின் முடிவிலாவது அதற்கான விடையை ‘இதுதான்டா
கதை. இப்படித்தான் நாங்கள் இதை எடுத்திருக்கிறோம்’ என்று முடித்திருக்க மாட்டார்கள்.
ஒரு Unsolved mystery-ஆக அப்படியே படம் முடிந்து விடும். பல புதிர்கள், வெகுசாதாரண
காட்சியில் கூட நம்மைக் கடந்து சென்றது, அதற்கான தொடர் காட்சிகளில் நம் மண்டையில் உறைக்கும்.
ஆனால், ‘ஆமாம் இது இப்படித்தான்’ என்று எந்த முடிவுக்கும் வந்து விடாமல், ‘இல்லயில்ல.
இப்படியிருக்க வாய்ப்பேயில்லை’ என ஏதோ ஒன்று நம்மைத் தடுக்கும்.
இந்த கட்டுரை சற்றே நீ…ளமானது. இந்தப் படத்தை இதுவரை பார்க்காதவர்களும், இதுவரை இந்தப் படத்தைப் பார்த்து வந்த குழப்பங்களே போதும் என்று நினைப்பவர்களும் இதற்கு மேல் இதனைத் தொடர வேண்டாம்.
‘ஜெஸ்’ ஆட்டிசத்தால்
பாதிக்கப்பட்ட தனது ஐந்து வயது மகன் ‘டாமி’ கண்ட கனவுக்கு ஆறுதல் சொல்வதிலிருந்து படம்
ஆரம்பிக்கிறது. அது ஒரு கெட்ட கனவு. மீண்டும் மீண்டும் அவனுக்கு வருவதாக அவன் அழுகிறான்.
இந்தக் காட்சியின் தொடக்கத்திலிருந்து, திரையில் காண்பிக்கப்படும் ஒவ்வொரு காட்சியும்,
ஒவ்வொரு டீட்டெய்லும், ஒவ்வொரு வசனமும், ஒரு காரணத்தோடு அமைந்திருக்கும். அவனோடு துறைமுகத்திற்கு
கிளம்புவாள். ஆனால் டாமி வர அடம் பிடிப்பான். ஆறுதல் சொல்லி அவனை அழைத்துச் செல்வாள்.
ஆனால் அவள் மட்டும் துறைமுகத்திற்கு வந்திருப்பாள். சிறுவன் டாமி ஸ்கூலுக்கு சென்று
விட்டதாக கூறுகிறாள். அங்கே க்ரெக், விக்டர், டௌனி, அவனது மனைவி சேலி, அவளது தோழி ஹீதர்
ஆக ஆறு பேர் கொண்ட குழு ஒரு பாய்மரப் படகில் கடலில் பயணிக்கின்றனர். அது ஒரு சாதாரண
weekend picnic போன்றதொரு பயணம். கிளம்பும்போதே சோம்பலாக இருந்த ஜெஸ், படுத்து விடுகிறாள்.
அவள் கண் விழிக்கையில் கடலின் ஒரு கரையில் அடித்து ஒதுங்கிய நிலையில் கண் விழிக்கிறாள்.
ஹீதரின் குரல் கேட்டு திரும்புகையில்தான் அது ஒரு கனவு என்று உணர்கிறாள். அவள் இன்னும் படகில்தான்
இருக்கிறாள். ஆனால், உடைந்த நினைவுகளுடன். சற்று நேரத்தில் கடலில் அவர்கள் பயணித்த
அந்த பிராந்தியம் முழுக்க காற்றடிப்பது சட்டென்று நின்று போகிறது. தூரத்தில், சில கருமேகக்
கூட்டங்கள் கடுமையான மின்னல்களுடன் இவர்களது படகை நோக்கி வருகிறது. தாக்குகிறது. படகு
பேரலைகளால் புரட்டப்படுகிறது. தலைகீழாக கவிழ்கிறது. அந்த Electromagnetic Storm நின்றதும்
தத்தளித்துக் கொண்டிருந்தவர்கள், தலைகீழாக கவிழ்ந்த அந்தப் படகில் ஏறுகிறார்கள். ஆனால்,
ஹீதரை மட்டும் காணவில்லை. இறந்துவிட்டாள் என்று அறிவிக்கின்றனர். ஆனால், சேலி அதை நம்ப
மறுக்கிறாள். சில நேரம் கழித்து ஒரு பெரிய கப்பல் இவர்களை நோக்கி வருவதை பார்க்கிறார்கள்.
அந்தக் கப்பலின் பெயர் ‘AEOLUS’ (எயோலஸ்). உதவி கேட்டு கத்துகின்றனர். யாரோ அவர்களை
அங்கிருந்து பார்க்கிறார்கள். ஆனால், யாரும் ரெஸ்பான்ட் செய்யவில்லை. இவர்களே கப்பலை
நெருங்கி அதில் ஏறுகின்றனர். அதன் பிறகு நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களனைத்தும் நம்மைக்
குழப்பத்தின் உச்சிக்கே இட்டுச் செல்லும். அந்தக் கப்பலில் வேறு யாரும் இருக்கவில்லை.
இவர்கள் மட்டுமே அங்கே இருக்கிறார்கள். அப்படி இருக்கையில் ஜெஸ்ஸின, வீட்டுச் சாவி,
கார் சாவி மற்றும் டாமியின் படம் அடங்கிய அவளின் சாவிக் கொத்து ஏற்கனவே அங்கே இருக்கிறது.
அந்தக் கப்பலின் அறைகள் முழுவதும் ஏற்கனவே பார்த்ததைப் போல இருப்பதாக ஜெஸ் கூறுகிறாள்.
ஐந்து பேரும் ஐந்து மூலைகளில் இருக்க, ஜெஸ் தன்னைப் போலவே ஒருத்தியைப் பார்க்கிறாள்.
முகமூடியணிந்த ஒரு உருவம் மற்றவர்களைக் கொலை செய்கிறது. கடைசியில் அந்த முகமூடியணிந்த
உருவம் ஜெஸ்ஸைக் கொலை செய்ய முயலும் போது நடந்த சண்டையில் அந்த முகமூடியணிந்த உருவம்
பெண் குரலில் அவளை எச்சரிக்கிறது. ‘அனைவரையும் கொன்றால்தான் வீட்டிற்கு செல்ல முடியும்’
என்று அவளை எச்சரித்துவிட்டு கடலில் விழுந்து விடுகிறது. அப்போதுதான் அவள் மேலும் குழப்பமடைகிறாள்.
கடலில், இன்னொரு ஜெஸ், க்ரெக், விக்டர், டௌனி, சேலி அடங்கிய குழு தங்களை காப்பாற்ற
உதவும்படி கூச்சலிடுகிறது. ஆனால், இவளோடு வந்த க்ரெக், விக்டர், டௌனி, சேலி அனைவரும்
இறந்து விட்டனர். ஒரு மர்மமான புதிரில் மாட்டிக் கொண்டதாக அவள் குழம்புகிறாள். அந்த
இரண்டாவது குழு கப்பலில் ஏறுகிறது. அவர்களும் கொல்லப்படுவதை காண்கிறாள். மீண்டும் ஒரு
குழு கடலில் வருகிறது. அவர்களும் கொல்லப்படுகிறார்கள். முகமூடிக் கொலைகாரன் தனக்கு
முன்னரே வந்த ஜெஸ் என்பதை உணர்கிறாள். இப்போது ஜெஸ் முகமூடியணிந்து கொள்கிறாள். க்ரெக்கை
கொல்கிறாள். மூன்றாவது குழுவில் வந்த ஜெஸ்ஸை எச்சரித்து விட்டு கடலில் குதிக்கிறாள்.
கடற்கரையில் அடித்து ஒதுங்கிய நிலையில் கண் விழிக்கிறாள்.வீடு திரும்புகிறாள். அங்கே காலையில் வீட்டிலிருந்து கிளம்புகையில் இருந்த நிலையில் இருக்கும் ஜெஸ்ஸைக் காண்கிறாள்.
டாமி, படம் வரைந்து கொண்டிருக்கிறான். ஜன்னலில் பின்புறம் சத்தம் கேட்டு திரும்புகையில்
கைதவறி பெயிண்ட் கலக்கி வைத்திருந்த குவளை தவறி விழுகிறது. ஆத்திரத்தில் வீட்டிலிருந்த
ஜெஸ் அவனை அடிக்கிறாள். வெளியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த ஜெஸ் வீட்டிற்குள் நுழைந்து
ஜெஸ்ஸைக் கொன்று விடுகிறாள். பிணத்தை ஒரு பெரிய பையில் திணித்து காரில் வைத்துக் கொண்டு
கிளம்புகிறாள். காரில் ஒரு பறவை மோதி இறக்கிறது. டாமி அழுகிறான். காரை நிறுத்தி இறங்கி
அந்தப் பறவையை சாலையிலிருந்து அகற்றுகிறாள். அதனை சாலையோரத்திலிருக்கும் கடற்கரையில்
எறியும்போது அங்கே ஏற்கனவே நிறைய பறவைகள் இறந்த நிலையில் வீசப்பட்டிருப்பதைக் காண்கிறாள்.
மீண்டும் காரில் கிளம்புகிறாள். டாமி அழுதுகொண்டே இருக்கிறான். அவனை சமாதானப்படுத்த
திரும்புகையில் கார் விபத்துக்குள்ளாகிறது. டாமி இறந்துவிடுகிறான். காரை ஓட்டி வந்த
ஜெஸ் தப்பிக்கிறாள். மீண்டும் வாடகைக் காரில் க்ரெக்கின் படகில் பயணிக்கிறாள். படம்
முடிவடைகிறது.
இது ஒரு நேரடி
கதை சொல்லல் முறை. Chronological story telling. ஆனாலும் குழப்பம். மொத்தக் கதையும்,
படத்தின் ஆரம்பத்தில் இருந்து முதலில் காட்டப்படும் ஜெஸ்ஸின் பார்வையில் இருந்தே கதை
சொல்லப் படுகிறது. இந்தக் கதையின் அடிப்படைக் கரு Time Travel, Time Loop, Time
Paradox, Greek Mythology இவைகளிலிருந்து எடுத்தாளப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தைப்
பலமுறை பார்த்து நான் புரிந்து கொண்டவைகள் பின்வருமாறு:
Curse of AEOLUS – எயோலஸின் சாபம்
கிரேக்க புராணத்தின்படி மூன்று காலகட்டத்தில் மூன்று எயோலஸ்கள் வாழ்ந்துள்ளனர். இதில் எந்த எயோலஸ் என்பதைப் பிரித்துக் கூறுவது கடினம். இவர் காற்றுக்
கடவுளாகவும் வணங்கப்படுகிறார். எயோலியன் என்கிற இனத்தை உருவாக்கியவர். பொசைடனின் மகன். என்றெல்லாம் கூறப்படுவதுண்டு. ஒடிஸியஸ் தனது வீட்டுக்கு செல்ல காற்று தேவைப்பட்டதாகவும், ஆகவே இவர் ஒரு பையில் காற்றை
ஊதித் தந்ததாகவும், ஒரு வரலாறு உண்டு. ஒடிஸியஸ் அந்தக் காற்றுப் பையுடன் பயணிக்கையில்
சக பயணி ஒருவர், அந்தப் பையில் விலையுயர்ந்த பொருட்கள் இருப்பதாக எண்ணி அதனைத் திறந்துவிட,
அதிலிருந்து விடுபட்ட எயோலஸின் காற்று, பெரும்புயலாக மாறி, ஒடிஸியஸின் அந்தப் பயணம்
மிக நீண்ட, முடிவில்லாத பயணமாக மாறியதாக ஒரு வரலாறு கிரேக்கப் புராணத்தில் உண்டு.
இதன்படி, டாமி,
அந்த பெயிண்ட் டப்பாவை தட்டி விட்டதற்காக ஜெஸ் அவனை அடிக்கிறாள். பயத்தில் அன்று அவன்
கண்ட கனவுதான் இந்த எயோலஸ் கப்பல் பயணம் என்றும் கொள்ளலாம். படத்தின் முதல் காட்சியில்,
டாமி தான் மீண்டும் மீண்டும் காணும் ஒரு கனவினால் அழுவதாகவும், அதற்காக அவள் அவனைத்
தேற்றுவதாகவும் காட்டப்பட்டிருக்கும். இங்கே ஒரு விசயத்தை உண்மையில் கவனிக்கத் தவறியிருப்போம்.
படத்தின் ஆரம்பத்திலேயே இரண்டு ‘ஜெஸ்’ காட்டப்பட்டிருக்கும். இரண்டு ஜெஸ்ஸிற்கும் உடைகளும்
வேறு வேறாய்த்தான் இருக்கும். ஒன்று Sun dress அணிந்த ஜெஸ். மற்றொன்று Shorts அணிந்த
ஜெஸ். ஷார்ட்ஸ் அணிந்த ஜெஸ், டாமிக்கு ஆறுதல் சொல்வாள். ஆனால், அடுத்த காட்சியில்,
சன் ட்ரெஸ் அணிந்த ஜெஸ் அந்த பெயிண்ட் கறையினை சுத்தம் செய்வாள். அடுத்த காட்சியில்
‘ஷார்ட்ஸ்’ ஜெஸ், வரமாட்டேன் என்று முரண்டுபிடிக்கும் டாமியிடம், ‘அம்மா இனிமேல் அடிக்க
மாட்டேன். அந்த பெயிண்ட் கறைகளை சுத்தம் செய்து விட்டேன்’ என்று ஆறுதல் கூறுவாள். இந்தக்
காட்சியினை படத்தின் ஆரம்பக் காட்சியாக வைக்கக் காரணம் ‘எயோலஸ் சாப’த்தை உணர்த்துவதற்காக
இருக்கலாம். ஆகவே டாமியின் கனவில், டாமியின் படங்கள் மட்டும் வருகிறது. டாமி இருப்பதில்லை.
அந்தப் பயணத்தில் ஆக்ரோஷமான ஜெஸ்ஸும், பயந்து நடுங்கும் ஜெஸ்ஸும் வருகின்றனர். அந்தப்
பயணம் ஒரு முடிவற்ற பயணமாகவும், திரும்பத் திரும்ப நிகழும் ஒன்றாகவும் இருக்கிறது.
Electromagnetic Storm – மின் காந்தப் புயல்
Electromagnetic
Storm is a doorway to both Alternate Multiverse as well as to its Original
Universe. இதன் வழியாக பயணிக்கும் எதையும் கவர்ந்திழுத்து/ மாற்றியமைத்து நிஜ உலகத்திற்கோ
அல்லது மாற்று உலகத்திற்கோ அனுப்ப இதனால் முடியும். இந்தக் குழப்பங்களுக்கெல்லாம் அதிமுக்கிய
காரணகர்த்தா இந்த மின் காந்தப் புயலாகவும் இருக்கலாம். ஆக இந்தக் கதையை,
மின்
காந்தப் புயலுக்கு முந்தைய ஜெஸ்ஸின் நிகழ்வுகள்
மின்
காந்தப் புயலுக்கு பிந்தைய ஜெஸ்ஸின் நிகழ்வுகள்
என்று இரண்டாகப்
பிரிக்கலாம்.
மின் காந்தப் புயலுக்கு
முன், ஜெஸ் டயர்டாக இருக்கிறாள். உறங்குகிறாள். கனவு காண்கிறாள். படகு ஓட்டுகிறாள்.
புயலில் மாட்டிக் கொள்கிறாள். இவையனைத்தும் சாதாரண நிகழ்வுகள். ஆனால், அதன் பின்னர்
நடப்பவைதான் நிஜ உலக வாழ்க்கைக்கு அப்பாற்பட்டவை. நடைமுறைக்கு ஒத்து வராதவை. அவை இந்த
மின் காந்தப் புயலால் ஏற்பட்ட கால மாற்றமாகவும், கால முரணாகவும் இருக்கலாம்.
Accident – விபத்து
இது சாத்தியமற்ற
ஒன்றுதான். ஆனால் இந்த நோக்கிலும் கதை பொருந்துகிறது. மின் காந்தப் புயலில் சிக்கிய
படகில் அனைவரும் இறந்து விடுகின்றனர். ஹீதர் மட்டுமே உயிர் பிழைக்கிறாள். ஆகவே அவள்
மட்டும் இவர்கள் கண்களுக்குத் தெரிவதில்லை. இவர்கள் ஐவரும் எயோலஸ்ஸில் ஏறுகிறார்கள்.
முகமூடியணிந்த ஜெஸ்ஸினால் கொல்லப்படுகின்றனர். இறந்தவர்களுக்கு ஏது சாவு. அனைவரும்
மீண்டும் அதே கப்பலுக்கு வருகிறார்கள். கொல்லப்படுகிறார்கள். இதில் ஒரு விசயத்தை நாம்
கவனிக்க வேண்டும். ஐவரில் ஜெஸ்ஸைத் தவிர மற்ற நால்வரும் கொல்லப்பட்ட பிறகே மீண்டும்
ஒரு குழு கப்பலை வந்தடைகின்றனர். ஆக, ஜெஸ் மீண்டும் வீட்டிற்கு வருகிறாள். டாமியின்
கண்களுக்கு ஆவியாகத் தெரிகிறாள். டாமி அவளோடு வர மறுக்கிறான். காரில் சன் ட்ரெஸ் அணிந்த
ஜெஸ்ஸுடன் டாமி வருகிறான். விபத்து ஏற்பட்டு இறக்கிறான். ஷார்ட்ஸ் அணிந்த ஜெஸ் ஆவியாக
நின்று பார்த்துக் கொண்டிருக்கிறாள். தன் பின்னால், ஒரு கார் டிரைவர் தன்னை சவாரிக்கு
அழைக்கிறான். அவனோடு வந்து துறைமுகத்தில் இறங்கி மீண்டும் பயணிக்கிறாள். ஓகே. இது உங்களை
எச்சாக குழப்பியிருக்கும்.
முகமூடிக் கொலைகாரன்
எயோலஸ் கப்பலில்
ஏற்கனவே ஒரு கொலைகாரன் பதுங்கியிருப்பதாய் வைத்துக் கொள்வோம். அதெப்படி? அதற்கு கதையில்
எந்த இடத்திலாவது ‘க்ளூ’ தரப்பட்டிருந்ததா? ஆம். க்ளூ இருக்கிறது. அந்த முகமூடிக் கொலைகாரனது
கைகள் க்ளோஸ் ஷாட்டில் இரண்டு முறை காட்டப்பட்டிருக்கும். அந்த கைகளில் ஆண்களைப் போல
முடிகள் இருக்கும். அதேபோல ஜெஸ்ஸின் உயரத்திற்கு ஏற்ற ஒல்லியான கதாபாத்திரம் படத்தில்
யார் இருந்தார்கள் என்று யோசித்துப் பாருங்கள். ஆம். இவர்தான். அந்த Cab Driver.
அது கூட, டபுள்
ஆக்சன் காட்சியை படமாக்க ஜெஸ்ஸுக்கு போட்டிருந்த டூப்பாகவும் இருக்கலாம். அப்படி யோசித்தால்,
அந்தக் காட்சியில் கேப் டிரைவரே தேவையில்லையே. கப்பலிலிருந்து தப்பித்து வந்து சாலையில்
லிப்ட் கேட்டு கையை நீட்டி ஜெஸ் நின்றிருப்பாள். அடுத்த காட்சியில் அவள் வீடு இருக்கும்
தெருவில் ஓடி வந்து கொண்டிருப்பாள். கார் தேவைப்பட்டிருக்கவில்லை, காரில் வந்ததாகவும்
காட்டப்படவில்லை. கிளைமாக்ஸில் மட்டும் எதற்கு கார்? கார் டிரைவர்?
Room No. 237
எல்லாவற்றிற்கும்
மேல் அந்தக் கனவில் Room No.237 ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த அறையில் கண்ணாடியில்
GO TO THEATRE என்று எழுதப் பட்டிருக்கும். THE SHINING படத்தில் சிறுவன் Danny உள்ளே
செல்ல பயப்படும் அதே அறை எண் 237. அந்த படத்திலும் அந்த அறையில் கண்ணாடியில் ரத்த எழுத்துக்கள்
இருக்கும். அந்தப் படமும் டேனியின் வாய்க்குள் இருக்கும் Tony-யின் கற்பனைக் கதையாகக்
காட்டப்பட்டிருக்கும். ஆகவே இந்தப் படத்தில் உள்ள மொத்தக் கதையும் டாமியின் கனவு. கனவு.
கனவு என்று உங்களைக் குழப்பி இந்தப் பதிவை முடித்துக் கொள்கிறேன்.













