SOURCE CODE (2011) - குழப்பங்களும் தீர்வுகளும்
கோல்ட்டர் ஸ்டீவன்ஸ் (Jake Gyllenhaal) திடீரென
ஒரு புல்லட் ட்ரெயினில் கண் விழிக்கிறான். தனக்கு எதிர் இருக்கையில் கிறிஸ்டினா
வாரென் (Michelle
Monaghan) தன்னோடு சகஜமாக பேசிக்
கொண்டிருக்கிறாள். அவள் சான் எனக் குறிப்பிட்டு அழைக்கிறாள். ஆனால், அவளை யாரென்றே
ஸ்டீவுக்கு தெரியவில்லை. அவனுக்கு நடப்பது எதுவும் புரியவில்லை. உண்மையில் அவன்
ஒரு ராணுவ விமானி. சற்று நேரத்திற்கு முன்புவரை ஆப்கானிஸ்தானில் ஒரு போரில் பறந்து
கொண்டிருந்தவனுக்கு இந்த ரயில் பயணம் குழப்புகிறது. முகம் கழுவ ரெஸ்ட் ரூம்
செல்கிறான். அங்கிருந்த கண்ணாடியில் தனது முகம், வேறு ஒருவனின் முகம் போலத்
தெரிகிறது. அந்த முகத்தை இதற்கு முன் தான் கண்டதில்லை. குழப்பத்தில் தவிக்கிறான்.
அருகே ஒரு ட்ரெய்ன் இந்த ட்ரெய்னை கடந்து சென்றபோது இரண்டு ட்ரெய்ன்களும்
வெடித்துச் சிதறுகிறது. ஸ்டீவ் வேறு ஒரு இருட்டு அறையில் கண் விழிக்கிறான். அங்கே
குட்வின் (Vera Farmiga) என்கிற
ஒரு ராணுவ அதிகாரி இவனை வீடியோ மூலம் தொடர்பு கொள்கிறாள். அவன் தன்னைப் பற்றியும்,
தனக்கு நேர்ந்த குழப்பங்களையும் கூறி இது எந்த இடம் என்று வினவுகிறான். அதற்கு
அவள், அவன் இருப்பது சோர்ஸ் கோட் என்கிற புரோகிராமில் என்று கூறியவள், வெடிகுண்டு
வைத்தவனை கண்டுபிடித்தாயா என்றும் அவனைப் பற்றிய விபரம் கண்டறியவே அந்த ட்ரெய்னில்
இறந்து போன ‘சான்’ என்பவனின் மூளைக்குள் இவனது நினைவுகளை ட்ரெய்ன் வெடித்த
நேரத்திலிருந்து சரியாக எட்டு நிமிடங்களுக்கு முன் அனுப்பி வைத்திருந்தோம் என்றும்
கூறுகிறாள். தனது தந்தையிடம் பேச வேண்டும் என்று அவளிடம் மன்றாடுகிறான். குட்வின்
மறுத்து விடுகிறாள். ஸ்டீவ் மேலும் குழப்பமடைகிறான். அவன் குழப்பத்திலிருக்கும்
போதே மீண்டும் சானின் நினைவுகளுக்கு அனுப்பப் படுகிறான். ஸ்டீவ் அந்த வெடிவிபத்து
நிகழ்த்தியவனைக் கண்டுபிடித்தானா? அவனது மிசன் முழுமையடைந்ததா? அவனால் அவனது
தந்தையை தொடர்பு கொள்ள முடிந்ததா? குட்வின் எந்த மாதிரியான ராணுவத்தைச்
சேர்ந்தவள்? இந்த சோர்ஸ் கோட் எப்படிப்பட்டது? தனது ஆப்கானிஸ்தான் போர் என்னவானது
என்பது மீதிக்கதை.
இனி படத்தைப் பற்றியும்
அதில் உள்ள குழப்பங்களைப் பற்றியும் அலசுவோம்.
ஸ்டீவின்
பார்வையிலிருந்தே கதை சொல்லப்படுவதால், அவனது மிசனும், குழப்பங்களும் முதலில்
நமக்கு தெளிவாக வேண்டும். அவனது மிசன்,
1. வெடி விபத்தை
நிகழ்த்தியவனைப் பற்றிய தகவல் அறிந்து கொள்வது
2.இந்த இரண்டாவது மிசன் என்னவென்று படம் பார்க்கும் அனைவராலும்
உணரப்பட்டிருக்கும். அது அந்த வெடி விபத்தைத் தடுப்பது. அதில் இறந்த அனைவரையும்
காப்பாற்றுவது.
ஆனால், இதற்கு ஏன்
குட்வினின் உயரதிகாரி டாக்டர் ரட்லெஜ் சம்மதிக்க மறுக்கிறார்?
பொதுவாக ராணுவத்தில்
அறிவியல் கண்டுபிடிப்புக்களினை அவ்வளவாக எடுத்த எடுப்பில் ஏற்றுக் கொள்ள
மாட்டார்கள். அடுத்து இது அவர்களது முதல் முயற்சியே. மேலும், வெடிவிபத்தைத்
தடுப்பதால், இந்த சோர்ஸ் கோட் முயற்சிக்கு எந்த உபயோகமும் இல்லை. அப்படி
தடுத்துவிட்டால் சோர்ஸ் கோட் அதிகாரிகளிடம் இந்த மிசன் வராமலேயே போய்விடுவதற்கும்
வாய்ப்பு உள்ளது. மாறாக வெடி விபத்தைத் தடுக்காமல், அதை செய்தவனைப் பற்றிய தகவலை
மட்டும் கண்டறிந்து அவனை கைது செய்வதால் டாக்டர் ரட்லெஜ் முதல், அதன் அதிகாரிகள்
அனைவரும் பாராட்டப்படலாம் அல்லவா! அந்த சுயநலம்தான் இரண்டாவது முக்கியமான
மிசனுக்கு ரட்லெஜ் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.
அடுத்ததாக, இந்தப்
படத்தில் வரும் சோர்ஸ் கோட் எப்படிப்பட்டது? ஸ்டீவ் பலமுறை டைம் ட்ராவல்
செய்கிறான்? அவனது ஆல்டர்நேட் டைம்லைன்கள் என்னவாகின்றன?
கண்டிப்பாக இந்தக்
கேள்விகள் படத்தைப் பார்த்தவர்களது மண்டைக்குள் குடையும் வாய்ப்பிருந்தது.
எனக்கும் அப்படித்தான் இருந்தது. ( அப்படிக் குழப்பவில்லையென்றால், இன்செப்சன்,
மெமன்டோ, ப்ரெஸ்டீஜ், ட்ரையாங்கிள் போன்ற படங்களை பார்த்திருக்கவே மாட்டோம் )
ஒவ்வொரு முறையும் ஸ்டீவ்
டைம் ட்ராவல் செய்யும் போதும் ஒரு புதிய டைம் லைன் உருவாக வேண்டும் அல்லவா? ஆனால்,
கதைப்படி ஸ்டீவ் இறந்தால், மீண்டும் சோர்ஸ் கோட் புரோகிராமின் அந்த இருட்டு
சேம்பருக்குள் கண் விழிப்பான். ஆகவே, ஒவ்வொரு முறையும் ஸ்டீவ் டைம் ட்ராவ்ல்
செய்கிறான். ரயில் வெடிக்கும். அங்கிருந்தவர்களோடு சேர்ந்து ஸ்டீவும் இறப்பான்.
அவனது டைம் லைனில் எந்த மாற்றமும் இருக்காது.
ஆனால், ஒருமுறை ஸ்டீவ்
ட்ரெய்னிலிருந்து சிகாகோ ஸ்டேசனில் ஒரு சஸ்பெக்ட்டை பின் தொடர்ந்து இறங்கி
விடுகிறான். அவனோடு சேர்ந்து கிறிஸ்டினாவும் இறங்கி விடுகிறாள். இப்போது ரயில்
வெடிக்கும் போது அவர்கள் அங்கே இருப்பதில்லை. இருவரும் சாகவும் மாட்டார்கள்.
அப்போது புதிய டைம் லைன் உருவாகிறது. இங்கே ஒரு களேபரத்தில் ஸ்டீவ் மட்டும்
தண்டவாளத்தில் விழுந்து இறந்து விடுகிறான். ஆனால், கிறிஸ்டினா வாரன் அங்கேயேதான்
இருக்கிறாள். இந்த இடத்தில் அவள் என்னவானாள் என்பது காண்பிக்கப் படுவதில்லை. அதை
பிறகு பார்ப்போம்.
இறந்து போன ஸ்டீவ்
மீண்டும் சோர்ஸ்கோடின் இருட்டு அறைக்குள் வந்து மீண்டும் டைம் ட்ராவல் செய்கிறான்.
ட்ரெய்னிலிருந்து இறங்கும் வேறு ஒருவனை பின் தொடர்ந்து சிகாகோ ஸ்டேசனில் இறங்குகிறான்.
அவனோடு கிறிஸ்டினாவும் இறங்குகிறாள். வெடிவிபத்துக்கு காரணமானவனைக் கண்டறியும்
முயற்சியில் இருவருமே சுட்டுக் கொல்லப்படுகின்றனர். இந்த டைம் லைனில் இவர்கள்
இருவரும் ரயில் வெடி விபத்திலிருந்து தொலைவிலிருந்தாலும், வேறு இடத்தில் இறந்து
விடுவதால் அந்த டைம் லைனும் முடிவுக்கு வருகிறது. ஸ்டீவ் மீண்டும் சோர்ஸ் கோட்
திரும்பி, கொலைகாரனைப் பற்றிய தகவலை குட்வின்னிடம் தெரிவிக்கிறான். அவர்களது மிசன்
முடிவடைகிறது. சோர்ஸ் கோட் புரோகிராமின் முதல் வெற்றியை கொண்டாடுகிறார்கள். ஆனால்,
உண்மையில் சோர்ஸ் கோட் மூலம் அவர்கள் செய்ய வேண்டிய அந்த இரண்டாவது முக்கியமான
மிசன்?
அப்படியே தொக்கி
நிற்கிறது.
அதனை ஸ்டீவ்
தன்னிச்சையாய் செய்வதென முடிவெடுத்து காரியத்தில் இறங்குகிறான். இப்போது அவன் அந்த
முயற்சியில் வெற்றியடைந்தால் என்னென்னவாகும்?
1.ரயில்கள் தகர்க்கப்படுவது தவிர்க்கப்படும்
2.இரண்டாவது வெடி விபத்தும் தடுக்கப்படும்
3.இரண்டு வெடி விபத்திலும் உயிரிழந்த அனைவரும் காப்பாற்றப்
படுவார்கள்
4.வெடிவிபத்துக்குக் காரணமானவனைக் கண்டறிந்து கைது செய்யப்படுவான்.
ஏனென்றால், அவனைப் பற்றிய தகவல் ஸ்டீவிடம் உள்ளது.
5.ஸ்டீவ் தனது தந்தையோடு தொடர்பு கொள்ள முடியும்
6.கிறிஸ்டினாவோடு மகிழ்ச்சியாக மனம் விட்டுப் பேசி ஒரு கப் காபி
அருந்தலாம்.
ஆனால், இவையெல்லாம்
நடந்தால், சோர்ஸ் கோடிற்கு உயிருடன் திரும்ப வரமுடியாது என்று ரட்லெஜ்ஜால்
ஆரம்பத்திலிருந்தே எச்சரிக்கப்படுகிறான். இதனையும் மீறி அவன் இந்த ஸூசைட் மிசனில்
இறங்குகிறான். இதற்கு மேல் நடப்பவை தமிழில் சூர்யா, சமந்தா நடித்து சமீபத்தில்
வெளியான 24 இல் உபயோகப்படுத்தப்பட்ட காட்சியமைப்புக்கள். டிக்கெட்டை ஸ்டைலாக
எடுத்துக் கொடுப்பது, ஷூவின் மேல் தெறிக்கும் காபியிலிருந்து ஸ்டைலாக தவிர்த்துக்
கொள்ளுதல், அங்கே டென்சனாக இருக்கும் பிசினஸ்மேனுக்கு அவனது மனதை முன் கூட்டியே
படித்ததைப் போல அறிவுரை சொல்லி அசத்துதல், அங்கே உள்ளவர்களை மகிழ்விக்க கலகலப்பாக
அந்த சூழ்நிலையையே மாற்றியமைத்தல் என்று அனைத்துமே. இவை படத்தில் இவ்வளவு நேரமாக
இருந்த இறுக்கத்தைத் தணித்து நம்மை ரிலாக்ஸாக படத்தைப் பார்த்து முடிக்கத் தேவையான
காரணிகள். ஆனால், 24இல் இவற்றை நாய் வாய் வைத்ததைப் போல கண்ட இடங்களிலெல்லாம்
இடைச் செறுகலாக வைத்து சலிப்படையச் செய்திருப்பார்கள். உண்மையில் அது
கதையிலிருந்து நழுவி படத்தை எங்கோ கடத்தியிருக்கும். ஆனால், சோர்ஸ்கோடில் இந்த
வகையான காட்சிகள், படத்தின் கிளைமாக்ஸினை முடித்து வைக்க பெரும்பங்காற்றியிருந்தது
ரசிக்க வைக்கக் கூடியதாகவும் இருந்தது.
இதற்கு மேல் குழப்பங்கள்
எதுவும் விடுபட்டுப் போயிருந்தால் தெரிவிக்கவும். முடிந்தவரை தெளிவுபடுத்த
முயற்சிக்கிறேன்.
நன்றி
