Wednesday, August 10, 2016

சீரியல் கில்லர் - 1 - ராமன் ராகவ் - 3.0

இது ராமன் ராகவ் 2.0 படத்தைப் பற்றியதல்ல. அந்தப் படமும் ராமன் ராகவ்வின் உண்மையான கதையுமல்ல.

அப்படியென்றால் ராமன் ராகவ் யார்? ஏன் அப்படி ஒருவனின் பெயர் இந்தப் படத்தில் அவனது வரலாறுகளையும், சில ரெபரன்சுகளையும் கொண்டு எடுக்கப்பட்டது?




மும்பை சென்ட்ரல், புறநகர் பகுதி. கான்க்ரிட் சாலையோரங்களில் படுத்திருக்கும் வீடற்ற மனிதர்கள், வீட்டின் ஜன்னல்களை திறந்து விட்டு உறங்கும் புறநகர்வாசிகள், மொட்டை மாடியிலும், வீட்டுத் திண்ணையிலும் உறங்குபவர்கள் இவர்களெல்லாம் மர்மமான முறையில் 1965 இல் தாக்கப்பட்டுக் கொண்டிருந்தனர். யாரந்த தாக்குதல்களைச் செய்வது? இவர்களை ஏன் தாக்க வேண்டும்? என்கிற கேள்விகளுக்கெல்லாம் பல மாதங்களாக பதிலே கிடைக்காமல் குழப்பங்களே பதிலாக மிஞ்சியது.

ஒன்றல்ல இரண்டல்ல, கிட்டத்தட்ட 19 தாக்குதல்கள். அதில் ஒன்பது பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தனர். உயிர் தப்பிய பத்து பேருக்கும் தன்னைத் தாக்கியவனை யாரென்றே தெரியவில்லை. இதில் காவல்துறை வசம் இருந்த ஒரே துப்பு, அந்தப் பத்தொன்பது தாக்குதல்களும் ஒரே மாதிரியாக கனமான இரும்புக் கம்பியால் நடத்தப்பட்டவையாக இருக்கலாம் என்கிற யூகம் மட்டுமே.

இதை ஆங்கிலத்தில் M.O - ‘Modus Operandi’ ( மாடஸ் ஆபரண்டி ) என்பார்கள். a particular way or method of doing something. சிலருக்கு இருக்கும் இடது கைப்பழக்கம் மாதிரி. அவர்கள் செய்யும் காரியங்களில் இருக்கும் ஒற்றுமை, அல்லது ஒரே மாதிரியான டெம்ப்ளேட் இப்படி சொல்லலாம். இதில் இருந்த மாடஸ் ஆபரண்டி அந்த கனமான இரும்புக் கம்பிதான். குற்றங்கள் பல நடந்து கொண்டிருக்கலாம். நடந்து கொண்டுதானிருக்கிறது. ஆனால், அதற்கான குற்றவாளிகளைப் பிரித்தறிவதற்கு காவல்துறை நடத்தும் பகீரப் பிரயத்தனங்களில் முக்கியமான ஒன்றுதான் இது.

பத்தொன்பது தாக்குதல்களிலும், கனமான இரும்புக் கம்பி உபயோகிக்கப்பட்டிருப்பதே போதும் காவல்துறைக்கு, பத்தொன்பதையும் ஒன்றோடொன்று முடிச்சுப் போட்டு, நாம் தேடிக் கொண்டிருப்பது பத்தொன்பது குற்றவாளிகள் அல்ல, பத்தொன்பது தாக்குதல்களை நிகழ்த்திய ஒருவனை என்று துப்பு துலக்க. இதைக் கொண்டு காவல்துறை ஒரு தேடுதல் வேட்டையை நடத்திக் கொண்டிருந்தது.




கிருத்திகா என்கிற ஒரு பெண் அந்தக் கொலைகாரனை நேரில் கண்டிருக்கிறார் அவரது உறவினர் ஒருவர் இவனால் தாக்கப்பட்ட போது. அவள் சொன்ன அடையாளங்களின் படி, ஒருவனைக் காவல்துறை கைது செய்தது. அவனது பெயர் ராமன் ராகவ். அவனுக்கு வீடென்று எதுவும் கிடையாது. முன்பொரு முறை கொள்ளையடித்த குற்றத்திற்காக ஐந்து வருடம் சிறைக்கு சென்று விடுதலையானவன். அதற்கும் முன்பு தனது சகோதரியை வன்புணர்ந்திருக்கிறான். அவளது உடல் கண்டெடுக்கப்பட்ட போது அதில் சில பல குத்துக் காயங்கள் இருந்தன. வன்புணர்ந்த பின் கத்தியால் குத்தி கொன்றிருந்தான். ஆனால், அவன் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப் படவில்லை. ஏனென்றால் தாக்குதலில் தப்பிப் பிழைத்த யாருமே அவனது முகத்தைப் பார்த்திருக்கவில்லை. ஒருவேளை தாக்குதலில் இறந்தவர்கள் யாரும் இறுதியாக அவனைப் பார்த்திருந்திருக்கலாம். ஆனால் அவர்கள் வந்து சாட்சி சொல்ல முடியாதே. ராமன் ராகவ் விடுதலையானான்.

இந்தப் பத்தொன்பது தாக்குதல்களில், ஆறு மாத குழந்தையும் தாக்கப்பட்டிருந்தது. அது இறந்து போனது ஒன்பது பேரில் அடக்கம்.


ராம்காந்த் குல்கர்னி


மேலும் இரண்டு வருடங்களுக்கு தாக்குதல்களும் கொலையாவதும் தொடர்ந்து கொண்டுதானிருந்தது. 1968இல் மும்பை கிரைம் இன்வெஸ்டிகேசன் டிபார்ட்மென்டிலிருந்த டெபுட்டி கமிஷனர் ராம்காந்த் குல்கர்னி இந்த தொடர் தாக்குதல் மற்றும் தொடர் கொலை சம்பந்தமான விசாரணையில் அமர்த்தப்பட்டார். அவரது தலைமையில் மும்பை புறநகரங்களில் ஒரு தேடுதல் வேட்டையை காவல்துறை தீவிரமாக நடத்தியது. 1966 -1968க்குள் மேலும் 23 கொலைகள் நடந்திருந்தது. இதெல்லாம் காவல்துறையின் வசம் பதிவான கொலை வழக்குகள். ஆனால், மேலும் பல கொலைகள் நடந்திருக்கலாமென்றும், காவல்துறை யூகித்திருந்தது. ஏனெனில் இந்த சாலையோர முதல் பாரா வாசிகள் பலர் காணாமல் போயிருந்த வழக்குகளும் மண்டையை பிய்க்க வைத்துக் கொண்டிருந்தது. காவல்துறை திணறிக் கொண்டிருந்தது.

இந்த இடைப்பட்ட காலங்களில் நடந்த தாக்குதல்களின் போது, பலர் அவனது முகத்தை பார்த்திருந்தனர். சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் ஃபியாலோ அது யாரென்பதை விசாரணையின் போது கண்டுபிடித்திருந்தார். அவர்கள் சொன்ன அடையாளங்களின்படி இவரிடம் ஒரு புகைப்படம் இருந்தது. அது அவர்கள் சொன்ன அடையாளங்களோடு வெகுவாக ஒத்துப் போனது. அதனால் அவன் இம்முறை காவல்துறையிடம் பிடிபட்டான்.


Mug shot of Raman

விசாரணையின் போது அவன் தனது பெயரை ‘ராமன் ராகவ்’ என்று தெரிவித்தான். ஆனால், காவல்துறையின் ரெக்கார்டுகளின் படி, அவன் ஏற்கனவே வேறு பல வழக்குகளில் கைதான போது, தன்னை வெவ்வேறு பெயர்களில் மாற்றி மாற்றி கூறியிருந்ததை காவல்துறை கண்டுபிடித்திருந்தது. சிந்தி தல்வாய், தல்வாய், அண்ணா, தம்பி, வேலுச்சாமி என்று பல பெயர்களில் அவன் மேல் வழக்குகள் பதிவாகியிருந்தது.

காவல்துறையின் விசாரணையின் போது, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல மறுத்து விட்டான். அவனைப் பேச வைக்க காவல்துறை தன் வசம் உள்ள அத்தனை வித்தைகளையும் செய்து பார்த்தது. ஆனால் மூடிய அவன் வாயை திறக்கவேயில்லை. இரண்டு பிளேட் சிக்கன் வாங்கிக் கொடுத்தால்தான் பதில் சொல்வேன் என்று கூறி, அதை அவர்கள் நிறைவேற்றிய பிறகுதான் பதில் சொல்லவே ஆரம்பித்தான். ஒவ்வொரு கொலையையும் எங்கே, எப்படி, யார் யாரையெல்லாம் கொன்றான் என்பதை நடித்தே காட்டினான். அவனது விளக்கமும், காவல்துறை யூகித்திருந்த அந்த கொலைக்கான ஆயுதமும் ஒத்துப் போனது. ஆனால், அவனது பேச்சும் நடவடிக்கையும் அவனை ஒரு கிறுக்கன் என்றே முடிவுக்கு கொண்டு வர வைத்திருந்தது. அவனை நாட்டிலுள்ள சட்ட திட்டங்களை புரிந்து கொள்ளும் திறனற்றவனென்றும், இயற்கைக்கு புறம்பாக அவன் பேசிய பல கூற்றுகள் இவ்வாறான ஒரு முடிவெடுக்க வைத்தது. மொத்தம் 41 கொலைகளை தான் செய்ததாக தனது வாக்குமூலத்தில் கூறியிருந்தான். காவல்துறையை தன்னோடு அழைத்துச் சென்று எங்கெல்லாம் தாக்குதல் சம்பவங்களை நிகழ்த்தியிருந்தானோ அங்கெல்லாம் சென்று அவற்றை மீண்டும் நடித்துக் காட்டினான்.

மருத்துவப் பரிசோதனையில் அவன் கிறுக்கனல்ல என்றும், அவனால், நாட்டின் சட்ட திட்டங்களையும், இயற்கையின் விதிகளையும் புரிந்து கொள்ள முடிகிறது என்றும் அவன் மீதான வழக்கை தொடரலாம் என்றும் கூறினர்.

மருத்துவ முடிவினைக் கொண்டு அவனைக் குற்றவாளி என்று கோர்ட்டில் தீர்ப்பாகியிருந்தது. ஆனால், எதிர் தரப்பு வக்கீல் மூலமாக வேறு மருத்துவரைக் கொண்டு பரிசோதித்த போது, அவன் கிரானிக் பாரனாய்ட் ஸீஸ்னோஃப்ரெனியா என்கிற மன நோய் இருப்பதாக கூறப்பட்டது. அவன் கொலைகளை செய்திருக்கிறான். ஆனால், அவற்றை யாவும் தனது சுய நினைவில் நிகழ்த்தவில்லை என்று வாதாடப்பட்டது.

ஆனால், நீதிபதி அந்த வாதங்களை ஏற்க மறுத்து விட்டார். அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், அவன் மேல் முறையீடு எதுவும் செய்ய வேண்டாம் என்று அந்த தீர்ப்பினை ஏற்றுக் கொண்டான்.

தீர்ப்பு வழங்கும் முன்பு, மீண்டும் ஒருமுறை அரசு மருத்துவர்களைக் கொண்டு அவனது மன நலம் பரிசோதிக்கப் பட்டது. அதற்காக நியமிக்கப் பட்டிருந்த மருத்துவக் குழு அவனை ஐந்து முறை பரிசோதித்தது. ஒவ்வொரு முறையும் ஒரே பரிசோதனையை இரண்டிரண்டு முறைகள் பரிசோதித்த பின்பு அந்த மருத்துவர்களின் முடிவைக் கொண்டுதான் நீதிபதி அவனுக்கு மரண தண்டனையை விதித்து தீர்ப்பளித்திருந்தது.

அந்த மருத்துவ முடிவில் அவர்கள் அளித்த விவரங்கள் பின் வருமாறு:

அவனது சிறுவயது விவரங்கள் எதுவும் அவனிடம் இல்லை. அவனுக்கு அது ஞாபகத்திலுமில்லை.

அவனது மூளை செயல்திறனின்படி அவனால், ஒரு குடும்பத்தின் அங்கத்தினனாகக் கூட இருக்க முடியாது. அது அவனது குடும்பத்திலிலுள்ள அனைவருக்கும் ஆபத்தான ஒன்றாகும்.

அவனுக்கு தெரிந்தவரையில், சிறு வயதிலிருந்தே திருடும் பழக்கமிருந்திருக்கிறது.

பள்ளிக்கூடம் சென்று படித்த ஞாபகமில்லை.

அவனுக்கு தெரிந்தவரையில் தனிமையில் வாழும் பழக்கத்தை அவனாகவே மேற்கொண்டிருக்கிறான்.

1968க்கு முன்னர் புனேயில் இருந்து வந்திருக்கிறான். சிலகாலம் காடுகளிலும், மும்பை புறநகர் பகுதிகளிலும், சாலையோரங்களிலும் தனது ஜாகையை அடிக்கடி மாற்றிக் கொண்டிருக்கிறான்.

இதர பரிசோதனைகளின் படி, அவனது உடலில் வேறு எந்த நோய் நொடிகளுமில்லை. அவனது சராசரி மூளைச் செயல்திறனே அவனது இந்த செய்கைகளுக்குக் காரணமாக இருந்திருக்கிறது.

இவையெல்லாம் மருத்துவ பரிசோதனையின் போது கண்டறிந்த முடிவுகள். மருத்துவர்கள் இவனை ஐந்து இரண்டிரண்டு பரிசோதனைகளை மேற்கொண்டனரல்லவா, அப்போது அவன் தன்னைப் பற்றி கூறிய சில பதில்கள் பின் வருமாறு:

இரண்டு தனித்தனி உலகங்கள் உள்ளது. அதில் கானூன் என்னும் ஒரு உலகத்தில் அவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

மக்கள் அவனைத் தொடர்ந்து பால்மாற்றம் (Sex exchange) செய்ய வற்புறுத்துவதாக எண்ணிக் கொண்டிருக்கிறான். ஆனால், இவன் கானூனில் வசிப்பதால் அவர்களால் அதில் வெற்றியடைய முடிவதில்லை. 

‘ஷக்தி’ என்கிற கடவுளின் அனைத்து சக்திகளும் தனக்கு இருப்பதாக உறுதியாக நம்புகின்றான்.

மக்கள் தன்னை தொடர்ந்து ஓரினச் சேர்க்கைக்கு தூண்டுவதால், அவர்களுக்கு அடிபணிந்து பெண்ணாக மாறிவிடுவான் என்று உறுதியாக நம்புகின்றான்.

தான் 101 சதவிகிதம் ஆண் தான் என்பதில் உறுதியாக இருக்கின்றான். அதையே திரும்பத் திரும்ப கூறிக் கொண்டிருந்தான்.

இந்த உலகத்திலிருந்த அரசாங்கம்தான் தன்னை மும்பைக்கு துரத்தி திருடவும் கொலை செய்யவும் வைத்தது என்றும் உறுதியாக நம்புகின்றான்.

இன்னொரு நிலைப்பாடு அவனிடமிருந்தது. இந்த நாட்டில் மூன்று விதமான அரசாங்கம் ஆண்டு கொண்டிருக்கிறது. ஒன்று, அக்பரின் அரசாங்கம், இரண்டு, பிரிட்டிஷ் அரசாங்கம், மூன்றாவது காங்கிரஸ் அரசாங்கம். இந்த மூன்று அரசும் சேர்ந்துதான் அவனை இத்தனையையும் செய்யத் தூண்டியது.

அவனது தண்டனைக் காலத்தில் மனநோயில் அவன் இருப்பது உறுதியானது. ஆகவே அவனது மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. புனேயிலுள்ள ஏர்வாடா மத்திய சிறையில் அடைக்கப் பட்டிருந்தான். நடிகர் சஞ்சய் தத் அடைக்கப் பட்டிருந்ததும், அஜ்மல் கசாபிற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப் பட்டதும் இதே சிறையில்தான். சில வருடங்கள் கழித்து சிறுநீரகப் பிரச்சனையால் அவதிப்பட்டான். 1995இல் மருத்துவமனையில் இறந்தும் போனான்.


ஸ்ரீராம் ராகவன்


அநுராக் காஷ்யப்பிற்கு முன்னரே ஸ்ரீராம் ராகவன் என்பவர் சைக்கோ ராமனைப் பற்றிய கதையை 70 நிமிடங்கள் ஓடக்கூடிய ஆவணப் படமாக எடுத்திருந்தார். அதை இணையத்தில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்பது சோக வரலாறு. ஆனால் அவரது நேர்காணல்கள் யூட்யூபில் நிறைய காணக் கிடைத்தது. அதில் அவர் தனது வாழ்க்கையை மாற்றிய படமாக The Shawshank Redemption படத்தைக் குறிப்பிட்டிருந்தார். உண்மையில் சைக்கோ ராமனின் கானூன் உலகத்திற்கும், ஷாஷாங் சிறைக்கும் ஒரு சில ஒற்றுமைகள் உள்ளது.

சிறைக்குள்ளே ஆண்டி டுஃப்ரீனை ஓரினச் சேர்க்கைக்கு வற்புறுத்துவது, தான் இந்த இந்த சிறைக்கு வர வேண்டியவனல்ல – வலுக்கட்டாயமாக தள்ளப்பட்டவன் என்று ஆண்டி உறுதியாக நம்புவது, சிறையின் சட்டதிட்டங்களை வெறுக்கும் / அடிபணிய மறுக்கும் ஆண்டியின் உறுதியான கதாபாத்திரம், தன்னால் இங்கிருந்தே தனக்கான உலகத்தை அமைத்துக் கொள்ள முடியும் என்று உறுதியாக நம்புவது இப்படி நிறைய சொல்லலாம்.

எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு காட்சியை அவர் விளக்கியிருந்தார். ஆண்டியின் முதல் சிறை உணவில் ஒரு புழு நெளிந்து கொண்டிருக்கும். அதை ப்ரூக்ஸ் (அந்த பழைய நூலகர்) நீ சாப்பிடப் போகிறாயா? என்று கேட்பார். இல்லை என்று ஆண்டி கூறியதும் தனக்கு தந்து விடுமாறு கேட்பார். அதை ஆண்டியிடமிருந்து வாங்கி தனது சட்டைக்குள் தான் வளர்க்கும் காக்கைக்கு உணவாகத் தந்து விடுவார்.

இந்தக் காட்சியில் ஆண்டியாக ஸ்ரீராம் ராகவனையும், ப்ரூக்ஸ்-ஆக அநுராக் காஷ்யப்பையும், அந்தப் புழுவாக சைக்கோ ராமன் கதையையும் மாற்றிக் கொள்ளுங்கள். ராமன் ராகவ் கதையை நீயே வைத்துக் கொள்ளப் போகிறாயா என்று அநுராக் கேட்பதாகவும், இல்லை என்று ஸ்ரீராம் அவரிடம் அதைக் கொடுப்பதாகவும், அந்தக் கதையை தன்னுடைய ரசிகர்களுக்கென்று விருந்தாக கொடுப்பதாகவும். (இது முழுக்க முழுக்க என் கற்பனையே)

தமிழில் ஏற்கனவே நடுநிசி நாய்கள் படம் ராமன் ராகவ்வின் பாதிப்பிலிருந்து எடுக்கப்பட்டதாக கவுதம் குறிப்பிட்டிருந்தார். நானும் ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பில் அந்தப் படத்திற்கு சென்றிருந்தேன். ஆனால் குறிப்பிட்ட சில காட்சிகள் முகம் சுழிக்க வைப்பதாக இருந்தது. அந்தப் படத்தின் வில்லன் தனது வளர்ப்புத் தாயை புணர்வதாக இருந்த காட்சிகளைக் குறிப்பிடுகின்றேன். அந்தக் காட்சிகளைப் பார்த்த போது ஏன் இப்படியொரு வக்கிர எண்ணம் கவுதமிற்கு என்றே தோன்றியது ராமன் ராகவ்வின் வரலாறு தெரியாத வரை. அந்தக் காட்சிகள் ஏனென்று இப்போது விளங்குகிறது. ராமன் ராகவ் தனது சகோதரியை வன்புணர்ந்த வரலாறுதான் நடுநிசி நாய்களில் வளர்ப்புத் தாயைப் புணரும் காட்சியாக வைக்கப் பட்டிருக்கிறது.

ஆனால், அநுராக்கின் ராமன் ராகவ் 2.0 –இல் அப்படிப் பட்ட காட்சிகள் எதுவுமில்லை. இதிலும் ஒரு சகோதரி ராமனுக்கு இருக்கிறாள். அவள் வயதான ஒருவனுக்கு இரண்டாம் தாரமாக தன் மகனுடன் வசிக்கிறாள். அங்கே ராமனின் வருகை என்னை ஒரு வன்புணர்வுக் காட்சியை எதிர்பார்க்க வைத்திருந்தது. ஆனால், அடுத்தடுத்து வந்த காட்சிகளால் அநுராக் என் மண்டையைத் தட்டி, “டேய் முட்டாள் நான் ஆரம்பத்திலேயே சொல்லி விட்டேன் இது ராமன் ராகவ்வைப் பற்றிய படமல்ல. ராமன், ராகவ் என்கிற இருவரைப் பற்றியது” என்று சொல்லாமல் உணர்த்தியதைப் போலிருந்தது.

மேற்கூறிய கதைகள் அந்த படத்திற்கான பெயர்க்காரணம் மட்டுமே, தவிர படத்தைப் பற்றிய விமர்சனமோ அலசலோ அல்ல. மேலும் ராமன் ராகவ் பற்றிய விவரங்கள் அனைத்தும் இணையத்தில் தேடித் தேடி படித்து தொகுத்தவையே. அதில் சில படிக்க சுவாரஸ்யமாகவும், சில படிக்க கடினமான வார்த்தைப் பிரயோகங்களாகவும் இருந்தது. ஆகவே அந்தக் கஷ்டத்தை தவிர்க்கவே இந்தக் கட்டுரை எழுதப்பட்டது.



நான் படித்த பல கட்டுரைகளில் அவனது பெயரை ‘சைக்கோ’ ராமன் என்றே வழங்கப்பட்டிருந்தது. இன்னொரு அதி முக்கியமான தகவல் அவனது உண்மைப் பெயர் வேலு என்கிற வேலுச்சாமி எனவும் அவன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன் என்பதாகவும் இருந்தது. அவனது பெற்றோர்கள் பிழைப்புக்காக வட மாநிலங்களுக்குச் சென்றிருக்கலாம் எனவும் இருந்தது. இறுதியில் இவைகளும் அவர்களது யூகங்களாக இருக்கலாம் என்பது என் முடிவு.