Friday, March 18, 2016

Black Panther - Origin 1


Black Panther - ஓரு அறிமுகம் 

மார்வெல் காமிக்ஸில் அமெரிக்காவைக் காப்பாற்ற ஒரு மிகப் பெரிய சூப்பர் ஹீரோ கும்பலே உண்டு. ஆனால், கறுப்பின மக்களைக் காக்க அதுவும் ஆப்ரிக்கக் கண்டத்திற்கே ஒரே ஒரு சூப்பர் ஹீரோதான் இருக்கிறார். Black Panther. இவரது இயற்பெயர் ட்’ச்சக்கா (T’Chaka).

ஆப்ரிக்காவில் உள்ள ‘வகாண்டா’வில் உலகில் வேறு எங்கும் அதிகம் கிடைக்காத இரண்டு வளங்கள் உண்டு. அதில் ஒன்று மிகவும் அபூர்வமானது. ஒன்று எண்ணெய் வளம். மற்றொன்று அபூர்வமான ‘வைப்ரேனியம்’ (Vibranium). பொதுவாக வகாண்டியர்கள் தனது கனிம வளங்களையும், அறிவியல் கண்டுபிடிப்புக்களையும், அபூர்வமான மருந்துக்களையும் மற்ற நாடுகளிடம் பகிர்ந்து கொள்வதில்லை. அதேபோல வேறு நாடுகளோடு வாணிபமும் செய்வதில்லை. அவர்களுக்கு தேவையானதை அவர்களே உருவாக்கிக் கொள்கின்றனர். இதனாலேயே இவர்களுக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள். இந்த மாதிரி விசயங்களில் அமெரிக்கர்களுக்குத் தான் அதாவது கழுகுக்கு மூக்கு வேர்த்து விடுமே. அந்த நாட்டின் வளங்களை தங்களோடு வாணிபம் செய்யுமாறு அழைப்பு விடுக்கிறது. ஆனால், அந்த அழைப்பினை ப்ளாக் பேந்தர் நிராகரித்து விடுகிறார். இதே போல மற்ற நாடுகளும் வகாண்டாவிடம் கெஞ்சுகிறது. ஆனால் ப்ளாக் பேந்தர் உள்ளவரை அது நடக்காது என்று வேறு ஒரு முடிவுக்கு வருகிறார்கள். அந்த திட்டம் தான் – ப்ளாக் பேந்தரை அழிப்பது.

‘க்ளா’ (Klaw) என்றொருவனை ஏவுகிறார்கள். அவன் ஒரு தொழில் முறைக் கொலைகாரன். அத்தோடல்லாமல், ப்ளாக் பேந்தர் மீதும், வகாண்டாவின் மீதும் பரம்பரை பரம்பரையாக பழி தீர்த்துக் கொள்ளக் காத்திருக்கும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவன். சில தலைமுறைகளுக்கு முன்னால் இவனது பாட்டனார், வகாண்டாவைப் பற்றி சரியாக அறிந்து கொள்ளாமல், அந்த நாட்டின் மீது ஒரு சிறு குழுவுடன் ஊடுறுவ முயற்சிக்கின்றார். ஆனால், ப்ளாக் பேந்தரின் காவலில் உள்ள ராஜ்ஜியம் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. உடன் வந்த அனைவரும் ப்ளாக் பேந்தரால் கண்ணிமைக்கும் நேரத்தில் கொல்லப் படுகின்றனர். மேலும், உயிர் மீது ஆசையிருந்தால் கடைசி வாய்ப்பு தருகிறேன். இப்படியே திரும்பிப் போய்விடு என்று ப்ளாக் பேந்தரால் எச்சரிக்கையும் செய்யப் படுகிறார். இதனால் மேலும் ஆத்திரமடைந்தவர் துப்பாக்கியால் ப்ளாக் பேந்தரை சுட முயலும் போது கொல்லப்படுகிறார். கடைசியாக அவர் அணிந்திருந்த ஒற்றைக் காலணி மட்டுமே அவரது குடும்பத்திற்கு திரும்பக் கிடைக்கிறது. இதனால் பழி தீர்க்க பல தலைமுறைகளாக க்ளா-வின் குடும்பத்தார் காத்திருக்கின்றனர். அதில் கடைசி ஆளும் க்ளா-தான்.

ப்ளாக் பேந்தருக்கு இரண்டு குழந்தைகள். மூத்தவன் ட்’ச்சாலா (T’Chala). எட்டு வயதே ஆனவன். இளையவள் ஸுரி (Shuri). ஐந்து வயது. இவர் தனது குடும்பத்தாரோடு பேசிக் கொண்டிருக்கையில் எங்கிருந்தோ ஒரு புல்லட் வேகமாக வந்து ஜன்னல் கண்ணாடியில் மோதுகிறது. ஆனால் ஜன்னல் கண்ணாடியை துளைத்து உள்ளே நுழையவில்லை. காரணம் அந்த அரண்மனையே வைப்ரேனியம் கலப்பில் உருவானவை. வைப்ரேனியத்திற்கு உள்ள அபூர்வ சக்தியும் அதுதான். எவ்வளவு பெரிய அதிர்வுகளையும் தாங்கும். அந்த புல்லட் க்ளா-வின் துப்பாக்கியிலிருந்து வெளியேறியதுதான். ஆனால், அவன் இந்த வைப்ரேனியத் தடுப்பினைப் பற்றி அறிந்திருக்கவில்லை. மேலும் அவனால் வெறுமனே திரும்பிச் செல்ல இயலவில்லை. ட்’ச்சக்காவை கொன்றே ஆக வேண்டும். அரண்மனைக்குள் அத்துமீறி அப்போதே நுழைந்து பெரும் நாசத்தை விளைவிக்கிறான். ட்’ச்சக்காவின் உடனிருந்த பலர் உயிரிழக்கின்றனர். இதைக் கண்டு கொதித்தெழுந்த ட்’ச்சக்கா அலைஸ் ப்ளாக் பேந்தர் வெறும் கைகளோடு க்ளா-வின் மீது பாய்கிறார். க்ளா-வோ தன்னிடம் அதி நவீன துப்பாக்கி இருப்பதால் தைரியமாக அவரை எதிர்த்து நிற்கிறான். ட்’ச்சக்கா பாய்ந்து வருகையிலேயே அவரது மணிக்கட்டில் கட்டியிருந்த உலோகக் காப்பிலிருந்து வைப்ரேனியக் கை ஒன்று ஐந்து கத்தி போன்ற விரல்களோடு முளைக்கிறது. அதிர்ச்சியில் க்ளா உறைந்து நிற்கையில் ட்’ச்சக்கா அவனது முகத்தின் ஒரு பகுதியை அந்த வைப்ரேனியக் கைகளால் கிழிக்கிறார். அதில் அவனது இடது கண்ணும் சேர்ந்து கிழிந்து விடுகிறது. துரதிர்ஷ்டவசமாக தனது கையிலிருந்த துப்பாக்கியின் ட்ரிகர் விசை அனிச்சையாக அழுத்தப் பட்டதில், அதன் தோட்டா வெளியேறி ட்’ச்சக்கா-வின் உயிரைக் குடிக்கின்றது. ப்ளாக் பேந்தர் இறந்து விடுகிறார். அந்தக் குடும்பத்தில் ஒருவரையும் மிச்சம் விடக் கூடாதென அவரது மனைவியை சுட எத்தனிக்கையில், இவன் வசமிருந்த மற்றொரு துப்பாக்கி இவனைச் சுடுகிறது. சுட்டது ப்ளாக் பேந்தரின் மகன் ட்’ச்சாலா. ஆனால், க்ளா இறக்கவில்லை. மேலும் அங்கிருந்தால் தனது உயிருக்கு ஆபத்தென்று அங்கிருந்து தப்பியோடி விடுகிறான்.

அதன் பிறகு வகாண்டாவை சி’யான் (S’yan) என்பவர் ப்ளாக் பேந்தராக இருந்து ஆட்சி செய்து வருகிறார். இவர் ட்’ச்சக்கா-வின் சகோதரர். அஸூரியின் இரண்டாவது மகன். அவர் இறந்த பிறகு அவரது மூத்த மகன் ட்'ச்சக்கா-விற்கு முடிசூட்டப்படுகிறது. ட்'ச்சக்காவின் கொலைக்குப் பின் சி'யான் அந்த பொறுப்பை ஏற்கிறார்.


வகாண்டாவில் ஆண்டுக்கொரு முறை ‘Battle for the Crown’ என்றொரு மல்யுத்தப் போட்டி நடத்தப்படும். வகாண்டாவாசிகள் யார் வேண்டுமானாலும் ப்ளாக் பேந்தரோடு மோதலாம். அதில் ப்ளாக் பேந்தரை வெல்பவர்களே அடுத்த ப்ளாக் பேந்தர். அன்றே அவரை வகாண்டாவின் ராஜாவென முடிசூட்டப்படுவார்கள். அப்படி ஒரு வருடம் நடந்த போட்டியில் சி’யான்-ஐ முகமூடி அணிந்த வீரன் ஒருவன் ஜெயித்து விடுகிறான். நடுவர்கள் அவனது முகமூடியை கழட்டும்படி கேட்க, அந்த வீரன் தனது முகமூடியை கழட்ட, அவனைக் கண்டு கொண்ட மக்கள் அவனது பெயரை, ‘ட்’ச்சாலா… ட்’ச்சாலா…’ என உச்சரிக்க அவனுக்கு ப்ளாக் பேந்தராகவும், நாட்டின் ராஜாவாகவும் முடிசூட்டப்படுகிறது.

ட்’ச்சாலா-விற்கு ஒரு காதலி இருக்கிறாள். ‘Ororo Munroe’ என்பது அவளது பெயர். அதுசரி, யாரிந்த ‘ஒரோரோ முன்ரோ’?

சிறு வயதில் ஆப்ரிக்க கிராமத்தில் பசிக்காக, ட்’ச்சாலா-விடம் திருடப் பார்த்தவள். பின்பு நாளாவட்டத்தில் இருவரும் காதலில் விழுந்தனர். பிறகு ட்’ச்சாலா நாடு திரும்பியதும், அவள் தனது வழியில் அமெரிக்கா சென்று விடுகிறாள். அவள் ஒரு மியூட்டனும் கூட ‘ஸ்டார்ம்’ (Storm) என்பது அவளது தற்போதைய பெயர். X-Men ஆக சார்லஸ் சேவியரிடம் இருக்கிறாள்.


-தொடரும்.

4 comments: