ஆபாவாணன் - தன்னம்பிக்கையின் மறுபக்கம்
தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
நான் சோர்வுற்றிருக்கும் நேரத்திலெல்லாம் எனக்குள் ஒரு தூண்டலை கொணரும் பாடல் இது. இசை எப்போதும் அப்படித்தான். "நிலைமாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்..." என்கிற பாடல் கேட்கும்போதெல்லாம் என்னடா வாழ்க்கை இது என சலிக்கும் மனது மேற்கண்ட பாடலை கேட்டால் குதித்தெழுகிறது . ஆச்சரியப்படும் விதமாக இரண்டுமே ஒரே படத்தில் இடம்பெற்ற பாடல். இரண்டையும் எழுதியது ஒருவர்தான். இதற்கு இணை இசை அமைத்தவரும் அவர்தான். அந்தப் படத்தை தயாரித்தவரும் அவர்தான். படத்தின் திரைக்கதை வசனத்தில் உதவியவரும் அவர்தான்.
முதன்முதலில் நான் பார்த்து வியந்து பயந்த திரைப்படம் ,ஆங்கிலப்படம் அல்ல. அது ஹாரர் வகை பேய்ப்படமும் அல்ல. அது ஒருதமிழ் திரைப்படம். வெறும் குதிரை வண்டி, மேக்-அப் எதுவும் மிகையாக இல்லாமல் வெறுமனே வெறித்துப் பார்க்கும் வயதான கிழவி. அதிர வைக்கும் பிண்ணனி இசை, இதை மட்டுமே வைத்துக் கொண்டு வெறுமனே படம் பார்க்கும் ஆடியன்சை பயமுறுத்த முடியுமா? அப்படி ஒரு கதையை எழுதி தயாரித்திருக்கிறார் ஒரு திரைப்படக் கல்லூரி மாணவர். இத்தனைக்கும் எண்பதுகளில் திரைப்படக் கல்லூரி மாணவர்களிடமிருந்து எந்தப் படமும் வெளியானதில்லை. அந்தத் திரைப்படத்தில் பணியாற்றிய பெரும்பாலான திரைக் கலைஞர்களும் அந்தக் கல்லூரியின் மாணவர்களே. அந்தத் திரைப்படம் ‘ஊமை விழிகள்’. அந்த தயாரிப்பாளர் /கதாசிரியர் திரு. ஆபாவாணன் அவர்கள். அவர்தான் நாயகர்.
தனது தந்தை மற்றும் தாயின் பெயரிலிருந்து முதல் எழுத்தை கடன் வாங்கி மதிவாணன் ஆபாவாணன் ஆனார். சிவாஜி அவர்களின் நடிப்பைப் பார்த்து வியந்து நடிகனாக வேண்டும் என்று விரும்பாதவர்களை நாம் விரல்விட்டு எண்ணிவிடலாம். அதில் இவரும் ஒருவர்.ஆனால் காலப்போக்கில் கதாநாயகர்களை ஆட்டுவிக்கும் இயக்குனர் ஒருவர் இருக்கிறார் அதற்கும் மேல் கதை திரைக்கதை போன்ற விஷய்னகள் இருக்கின்றன என்பதை உணர்ந்துகொண்ட திரு,ஆபாவாணன் சென்னை திரைப்படக் கல்லூரியில் கதை, திரைக்கதை பிரிவில் மாணவராக சேர்ந்தார்.
முதல் படம் ஊமை விழிகள். விஜயகாந்த், கார்த்திக் தவிர அறிமுகமான முகங்கள் படத்தில் குறைவு. ஆனால் அவர்களும் கதாநாயகர்கள் இல்லை. சந்திரசேகரும் , இந்தப் படத்தில் அறிமுகமான அருன்பாண்டியனும்தான் கதாநாயகர்கள். புது இசையமைப்பாளர்கள். நிதானமான காட்சிகள். ஒரு க்ரைம் நாவல் படிப்பது போன்ற அனுபவம் என அவர் தன சொந்த தயாரிப்பில் எடுத்த மிகப்பெரிய ரிஸ்க் ஊமைவிழிகள். ஆனால் திறமையும், தெளிவான நம்பிக்கையும் என்றும் தோற்பதில்லை. இவரும் தோற்கவில்லை.
இணைந்த கைகள் என்றொரு படம். பிரம்மாண்டம் என்கிற வார்த்தைக்கு இப்போதெல்லாம் நாம் இயக்குனர் ஷங்கர் என்கிற பெயரை உபயோகிக்கிறோம். உண்மையை சொன்னால் ஷங்கருக்கெல்லாம் முன்னோடி நம் ஆபாவாணன். இந்தப்படத்தில் ஒரு சிறை செட் ஒன்று போட்டிருப்பார்கள். அங்கே ஒரு சண்டைக்காட்சியும் உண்டு. மறக்கவே முடியாத காட்சி அது. அந்தப்படத்தின் கதையே பிரம்மாண்டமானதுதான். அப்புறம் படம் எப்படி அப்படி இல்லாமல் போகும்? அதேபோல் தமிழ் சினிமாவில் இதுவரை வந்த படங்களில் இடைவேளை வருவதற்கு முந்தைய காட்சிகளில் மிகச்சிறந்த காட்சிகளை கொண்ட படங்களில் முதல் ஐந்து இடங்களுக்குள் இந்த படத்தின் காட்சியும் இடம்பெறும்.
ஒரு சாதாரண காதல் கதையை ஒரு த்ரில்லர் படம் போல கொடுக்கும் திறமையும் இவருக்கு இருந்தது. அதுதான் செந்தூரப்பூவே! இவரது தயாரிப்பில் வெளிவந்த பல படங்களில் இணை இசை என்று இவரது பெயரைக் கண்டிருக்கலாம். அதாவது, மெட்டமைப்பது அல்ல இணை இசை. உதாரணத்திற்கு, செந்தூரப்பூவே படத்தில் ரயிலும், தண்டவாளமும் ஒரு முக்கியப் பங்கு வகித்திருக்கும். ரயில் மற்றும் ரயில் நிலையம் சார்ந்த அதன் சப்தங்களை பதிவு செய்து படத்தில் ஸ்பெஷல் எபெக்ட்ஸாக உபயோகித்திருப்பார். அன்றைய கால கட்டங்களில், இந்த உத்தியை பயன் படுத்தி சிறப்பு ஒலி அமைப்பு செய்தவர் இவர். ரகுமானும், இளையராஜாவும் கூட பின்னாளில் தனது பேட்டிகளில் இவரைப் பற்றி வியந்து கூறியிருக்கிறார்கள்.ஏனெனில் ஒரு காட்சியோடு நாம் ஒன்றி படம் பார்க்க அந்த காட்சியின் ஒலிகள் மிகமுக்கியம். குறிப்பாய் அந்த படத்தில் விஜயகாந்த் மூளையில் இருக்கும் ஒரு நோயால் அவதிப்படுவார். ரயில்வே ஸ்டேஷனில் தண்டவாளத்தில் அவர் நிற்கையில் திடீரென தலை சுற்றி மயக்கம் போடுவார். அப்போது ஒரு ரயில் கடந்து போகும். விஜயகாந்த் அனுபவிக்கும் வலியை அந்த ரயில் நமக்கு கொடுத்துவிட்டு போகும். இதுதான் ஒரு திறமையாளனின் சிந்தனையும், வெளிப்பாடும். அப்படி அந்த வலியை நாம் உணர்வதால் மட்டுமே அந்த படம் நம் மனதில் இன்றும் நிற்கிறது.
அதேபோல் உழவன் மகன் படத்தில் அவரும் ரேக்ளா ரேஸ் காட்சிகள், தாய்நாடு படத்தில் துப்பாக்கியை எடுக்க ஓடிவரும் காட்சிகள் (இந்த தாய்நாடு படத்தில்தான் நீண்ட நாட்களுக்கு பிறகு டி.எம்.சவுந்தரராஜன் பாடல்கள் பாடினார்..எல்லாமே ஹிட்..)
திரைப்பட கல்லூரி மாணவர்கள் என்றாலே ஏளனமாய் பார்த்துக்கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் தைரியமாய் அந்த மாணவர்களை மட்டுமே நம்பி தன் திரையுலக பயணத்தை துவங்கிய தைரியசாலி நம் ஆபாவாணன்.ஆச்சரியப்படும் விதமாக இந்தப்படத்தில் முதலில் பதிவு செய்யப்பட்டது பாடல்கள் மட்டும்தான். அப்போது இந்தப் படம் எடுக்கப்படுமா இல்லையா என்பது கூட தெரியாது. இந்தப்படத்தில் இடம்பெற்ற தோல்வி நிலையென நிலைத்தால் பாடலை கேட்டுவிட்டுதான் இந்த படத்தை சந்திரசேகர் அவர்கள் கண்டிப்பாய் எடுக்கப்பட வேண்டும் என நினைத்து விஜயகாந்த் போன்றோரை ஒப்புக்கொள்ள வைத்து பின்னர் படம் தொடங்கப்பட்டது.
கிட்டத்தட்ட ஆபாவாணனின் எல்லாப் படங்களிலும் நடித்த ராம்கி மற்றும் அருண்பாண்டியன் இருவரும் திரைப்படக் கல்லூரியில் அவரோடு ஒன்றாக பயின்றவர்கள். நட்பு திறமையையும் சேர்த்து வளர்க்கும் என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி.
இவருக்கு பிறகு பிரம்மாண்ட படங்களை எடுத்த ஆர்.கே. செல்வமணி ஆரம்ப காலங்களில் ஆபாவானனோடு பணியாற்றியவர்தான். அதேபோல் புகழ்பெற்ற ஒளிப்பதிவு இயக்குனர் ரமேஷ் குமாரும் இவரின் கண்டுபிடிப்பே..
திறமை என்றும் தனியே வளராது. தன்னோடு இருப்பவர்களையும் சேர்த்து வளர்க்கும். அப்படி வளர்க்கும் திறமை தனிமனிதனின் தன்னம்பிக்கையின் அடையாளம். அந்த தன்னம்பிக்கை பொங்கி வழிந்த ஒரு ஊற்று ஆபாவாணன். கற்றுக்கொள்ள வாழ்க்கையில் எப்போதும் நிறைய விஷயங்கள் உண்டு. தனியாளாய் ஒரு சகாப்தத்தை உருவாக்கிய இவரிடம் நாம் தன்னம்பிக்கையை கற்போம்.
இந்தக் கட்டுரை india glitz - இல் 10/05/2015 அன்று வெளியானது.

No comments:
Post a Comment