Wednesday, March 23, 2016

The Four Horsemen - History


The Four Horsemen

அடிக்கடி இந்த வார்த்தையை நாம் சில இடங்களில் பிரயோகிக்கப்படுத்தப் படுவதைப் பார்த்திருக்கலாம். அல்லது கேட்டிருக்கலாம். எங்கே?

வேறு எங்கே நாம் இதையெல்லாம் கேள்விப்பட்டு விடப் போகின்றோம், ஹாலிவுட் படங்களில்தான். இதனை ஆளாளுக்கு எடுத்துக் கொண்டு நீ கொஞ்சம் நான் கொஞ்சம் என்று பிய்த்து கொத்து பரோட்டா போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையில் யாரிந்த Four Horsemen?

இதை தெரிந்து கொள்ள கொஞ்சூண்டு கிறித்துவ வரலாற்றை புரட்ட வேண்டியது அவசியம். Book of Revelation அல்லது திருவெளிப்பாடு அல்லது புதிய ஏற்பாடு. இதை கிறிஸ்துவர்களின் 27-ஆவது புத்தகம் என்றும், கடைசி புத்தகம் என்றும் சொல்லலாம். இந்தப் புத்தகம் எழுதப்பட்ட காலத்தில் கிறிஸ்துவர்கள் கொடிய துன்பங்களுக்கு இலக்காயிருந்தனர். அனேகமாக இது ரோம் பேரரசன் நீரோவின் காலம் (கி.பி.54 - 68) என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் பேரரசன் தொமீசியன் காலமாகவும் (கி.பி.89 – 96) இருக்கலாம் என்றும் சிலர் கூறுகின்றனர். இந்தப் புத்தகம் அல்லது சுருள் (Book or Scroll) ஏழு முத்திரைகளால் (Seven Seals) மூடி பாதுகாக்கப்படுகிறது. ஒவ்வொரு முத்திரையும் ஒவ்வொரு சின்னத்தைக் கொண்டிருக்கிறது. அதில் முதல் நான்கு சின்னங்கள்தான் இந்த ‘நான்கு குதிரைவீரர்கள்’ The Four Horsemen.



இவர்கள்தான் அந்த நான்கு குதிரை வீரர்கள். மேலுள்ள படம் வரையப்பட்ட ஆண்டு 1887. விக்டர் வாஸ்னெட்ஸாவ் (Victor Vasnetsov) என்பவரால் வரையப்பட்டது. இதில் முதல் முத்திரையாக புதிய ஏற்பாட்டை பாதுகாப்பது வெள்ளைக் குதிரை. இது வெற்றியைக் குறிப்பதாகும். இந்த வீரனின் கைகளில் வில்லும், தலையில் வெற்றியைக் குறிக்கும் கிரீடமும் சின்னமாக கருதப்படுகிறது. இரண்டாவது சிவப்புக் குதிரை. இந்த வீரனின் கைகளில் உள்ள நீளமான வாள்தான் அந்த இரண்டாவது முத்திரை. மூன்றாவது கருப்புக் குதிரை. அதன் மீதுள்ள வீரனின் கைகளில் ஆயுதங்கள் எதுவும் இருக்காது. தராசு மட்டுமே இருக்கும். நியாயத்தையும், நீதியையும் இந்தச் சின்னம் குறிக்கின்றது. நான்காவது, நிறங்களற்ற வெளிறிய குதிரை. அதன் மீதுள்ள வீரனின் முகம் வெறும் மண்டை ஓடு. அவனது கைகளில் வெறுமையைக் குறிக்கும் ஒரு சின்னமாக ஒரு ஆயுதம் தலைகீழாக இருக்கும். கிரேக்க புராணங்களின் படி, கீழுலகம் அல்லது இறந்த பின் செல்லும் உலகம் அல்லது பாதாளம் அல்லது ஆவி உலகம் அல்லது நரகம். இவையனைத்தும் இவனைப் பின் தொடர்ந்து வரும். இதுவே அந்த நான்காவது சின்னம்.

இந்த நான்கையும் Conquest, War, Famine and Death என்று வருணிக்கின்றனர். அதாவது, வெற்றி, போர், பஞ்சம் மற்றும் மரணம்.

இவை போக மேலும் மூன்று முத்திரைகள் உள்ளன. வதைபட்டு அல்லது தியாகம் செய்து இறந்தவர்களின் ஆவிகளை ஐந்தாவது முத்திரையாகவும், அதில் வெள்ளைக் கயிறு சின்னமும் பொறிக்கப்பட்டிருக்கும். ஆறாவதாக நிலநடுக்கத்தை முத்திரையாகவும் இருண்மையை சின்னமாகவும் பொறிக்கப்பட்டிருக்கும். ஏழாவது முத்திரையில் ஏழு தேவதைகள், ஏழு ட்ரம்பெட்டுகளைக் (Trumpets) கொண்ட சின்னமாக பொறிக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்தக் கடைசி மூன்றும், முதல் நான்கு முத்திரைகளான Four Horsemen-இல் சேராது.

இந்த ஏழு முத்திரைகளும் ஏழு ரகசியத் தகவல்களைக் கொண்டிருக்கும். இதனை ஆடு அல்லது சிங்கம் ‘Lamb/Lion’ மட்டுமே திறக்கவல்லது என்றும், அந்த ஆடு ஏழு கொம்புகளையும், ஏழு கண்களையும் கொண்டதென்றும் கூறுகின்றனர். இதில் ஆடு அல்லது சிங்கம் என்று குறிப்பிடப்படுபவர் வேறு யாருமல்ல. ஏசு கிறிஸ்துவைத்தான் அவ்வாறு அழைக்கின்றனர். மேலுள்ள ஓவியத்தில் கருப்புக் குதிரைக்கும் சிவப்பு குதிரைக்கும் மேலாக ஒரு ஆட்டின் படம் வரையப்பட்டிருக்கும். அது புதிய ஏற்பாட்டை வாசித்துக் கொண்டிருப்பது போலவும் வரையப்பட்டிருக்கும். இறந்து உயிர்த்தெழுந்த ஏசுவை விண்ணகத்தோர் ஆட்டுக்குட்டி வடிவத்தில் வழிபட்டதாக ஒரு வரலாறு உண்டு.



Four Horsemen –இன் உண்மையான வரலாறு இதுதான். ஆனால், ஹாலிவுட் படங்களில் இந்தப் பெயரை மட்டும் எடுத்துக் கொண்டு புனையப்பட்ட கதைகள் ஏராளம். அப்படி இவற்றை மையமாகக் கொண்டு இந்த வருடத்திலேயே அடுத்தடுத்து இரண்டு படங்கள் ஹாலிவுட்டில் வெளியாகவிருக்கின்றது. X-Men : Apocalypse மற்றும் Now You See Me - 2






- தொடரும்.

1 comment:

  1. Wow இவ்ளோ தகவல்களை சும்மா சர்வ சாதாரணமாக அள்ளி கொட்டுறீங்களே...! சூப்பர் நன்றி...

    ReplyDelete