Monday, January 30, 2017

ARQ (2016)



ARQ (2016)



Science Fiction / Thriller



ரென்டன் (Renton) படுக்கையிலிருந்து கண் விழிக்கிறான். அப்போது சரியாக காலை 6:16 AM. அருகில் படுத்திருக்கும் தனது மனைவி (Hannah) ஹன்னாவை பார்க்கிறான். பெட்ரூம் கதவு பலத்த சத்தத்துடன் உடைக்கப்படுகிறது. முகமூடியணிந்த மூன்று பேர் நுழைந்து அவர்கள் இருவரையும் அடித்து தரதரவெனெ இழுத்துச் செல்கின்றனர். அவர்களிடமிருந்து ஆவேசமாக விடுபட்டு படிகளில் உருண்டு சுவற்றில் தலை மோதி இறந்து விடுகிறான். பட்டென்று மீண்டும் நினைவுகள் திரும்ப அதே படுக்கை, அதே 6:16AM க்கு கண் விழிக்கிறான். இம்முறை அவன் மனைவியை உசார்படுத்த முனைந்து தோற்று அவர்களிடம் சிக்கி மீண்டும் இழுத்துச் செல்லப்பட…

அது ஒரு டைம் லூப் என்பது இதை வாசித்தவர்களுக்கு இந்நேரம் புரிந்திருக்கும். யெஸ். இது ஒரு டைம் ட்ராவலை அடிப்படையாகக் கொண்ட Triangle (2009), Edge of Tomorrow (2014) படங்களைப் போன்றதொரு நெட்பிளிக்ஸ் படம். ரென்டனாக The Flash சீரிஸில் Deathstorm ஆக நடித்திருக்கும் Robbie Amell நடித்திருக்கிறார். நான் ரொம்ப நேரமாக ஆரோ சீரிஸில் ஆரோவாக நடித்த ஆளோ என்று குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருந்தேன். இருவருக்கும் ஒரே மாதிரியான முகச் சாயல். மற்றவர்களெல்லாம் யாரென்று அவ்வளவாக தெரியவில்லை.

ARQ என்பதன் விரிவாக்கம் Automatic Repeat Query. இதை ரென்டன் தனது வீட்டிலுள்ள தனது வொர்க் ஷாப்பில் உருவாக்குகிறான். அதுதான் கதையின் முக்கியமான கதாபாத்திரம். அதை திருடத்தான் அந்த மூன்று பேர் கொண்ட கும்பல் தன்னையும், தனது மனைவியையும் துன்புறுத்திகிறது என்பதை சில டைம் லூப்பில் ரென்டன் அறிந்து கொள்கிறான். அதை அவர்களிடமிருந்து காப்பாற்றினானா, அவர்களிருவரும் அந்த கும்பலிடமிருந்து தப்பித்தனரா? எதனால் டைம் லூப்பில் சிக்கினான்? அதிலிருந்து மீண்டனரா? என்பது போன்ற கேள்விகளுக்கு குழப்பாமல் திரைக்கதை வேகமாக நகர்ந்து சென்று ஒவ்வொரு முறையும் இதைப் போன்ற ஒவ்வொரு புதிய கேள்விகளை நமக்குள் விதைத்து, அதை அடுத்தடுத்த லூப்பில் வலுப்படுத்தி, எக்கச்சக்க ட்விஸ்ட்டுகளுடன் நம்மை மலைக்க வைத்து, பின்பு ஒவ்வொரு முடிச்சாக அவிழும்போது ஆச்சரியப் படவும் வைக்கிறது.

வெறும் ஆறே பேர். ஒரே ஒரு வீடு. அவ்வளவுதான். கதை அதற்குள்ளேயே நகர்கிறது. ஆனால் ஆச்சரியமாக அந்த வீட்டின் ஜியாக்ரபி படம் ஆரம்பித்த சில நிமிடங்களில் நமக்கு புரிந்து விடுகிறது. இந்த மாதிரியான புரிதல்கள் வெகுசில படங்களிலேயே நமக்கு ஏற்படும்.

உதாரணத்திற்கு Don’t Breathe (2016) போன்ற படங்களில் இது ரொம்ப அவசியம். கதையே அந்த வீட்டிற்குள்தான் எனும்போது அந்த வீட்டின் அமைப்பு, கதாபாத்திரங்களின் அறிமுகங்களின் போதே அதையும் ஒரு கதாபாத்திரமாக படம் பார்ப்பவர்களின் மனதில் பதிய வைத்திருக்க வேண்டும். அது டோன்ட் ப்ரீத்தில் மிஸ்ஸிங். கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போலிருந்தது. ஆனால், சில பேய்ப்படங்களில் இது அழகாக நமக்குள் ஏற்பட்டிருக்கும். காஞ்சூரிங் சீரிஸிலும், (பார்ட் 2வில் வாரன் தம்பதிகளுடைய வீட்டின் அமைப்பும் கூட எளிதில் ஒருசில காட்சிகளின் மூலம் நன்கு பதிய வைக்கப்பட்டிருக்கும்.) Evil Dead (1981) போன்ற படங்களில் இதை நாம் உணர்ந்திருக்கலாம். நிச்சயம் ‘ஆர்க்’ போன்ற படங்களுக்கு அவசியம். படம் பார்ப்பவர்களுக்கு டைம் லூப் மற்றும் திரைக்கதை குழப்பங்களை மட்டும் கவனிக்க அவகாசமிருக்கும். ட்ரையாங்கில் படத்தில் சில காட்சிகள் மட்டுமே காட்டப்படும் ஜெஸ்ஸின் வீட்டின் அமைப்பும் அந்த எயோலஸ் கப்பலின் அமைப்பும் கூட சில காட்சிகளிலேயே நமக்குள் பதிய வைக்கப்பட்டிருக்கும். இவ்வளவு ஏன்? The Shining (1980) படத்தில் அந்த ஓவர்லுக் ஹோட்டலின் உள் வெளி அமைப்புக்கள் ஞாபகமிருக்கிறதா? அதேதான்.

படத்தைப் பற்றிய டீட்டெயிலிங்கோ, அல்லது வேறு எதாவது டெக்னிக்கல் சமாச்சாரங்களையோ சொல்லுவதானால் படத்தின் சில ட்விஸ்ட்டுகளையே சொல்லுவதற்கு ஒப்பாகும். ஆகவே,

டைம் ட்ராவல், டைம் லூப் கதைகளில் நிச்சயம் இது ஒரு நல்ல என்டர்டெயினிங் படம். இனிமேல் யாராவது நல்ல டைம் ட்ராவல் படங்களை பரிந்துரைக்கச் சொல்லிக் கேட்டால் என் லிஸ்ட்டில் நிச்சயமாக முதல் ஐந்து படங்களில் ஒன்றாக ARQ இருக்கும்.

என்னைப் பொறுத்தவரை என்னை மிகவும் ஆச்சரியப்படுத்திய படம் இது. அது ஏனென்று படத்தைப் பார்த்து புரிந்து கொள்ளுங்கள்.

பட்டென்று மீண்டும் நினைவுகள் திரும்ப அதே படுக்கை, அதே 6:16AM க்கு…

No comments:

Post a Comment