Saturday, March 18, 2017

The Flash – TV Series – பகுதி 3

முதல் பகுதி மற்றும் இரண்டாம் பகுதியை இந்த லின்க்கில் படிக்கலாம்.


The Flash – TV Series – பகுதி 3

இரண்டாவது சீசன்

பேரி ஆலனால் டைம் ட்ராவல் செய்ய முடியும். காலத்தின் முன்னேயும் பின்னேயும் ஓடி ஊஞ்சலாட முடியும். நடந்த ஒன்னை நடக்காததா மாத்தியமைக்க முடியும். அப்ப கண்டிப்பா பேரியால அவனோட அம்மா கொலையாகறதையும் தடுக்க முடியும் தானே? முடியும்! ஸோ, பின்னோக்கி காலப்பயணம் செஞ்சு தன்னோட அம்மாவையும் காப்பாத்தி, அவளைக் கொல்ல வந்த அந்த அமானுஷ்ய வில்லனையும் சிறை பிடிச்சு அடைச்சு வைக்கிறான். இங்க தான் விதி விளையாடுது. விதியை மதியால வெல்லலாம். ஆனா விதிய மாத்த யாராலும் முடியாது. கொழப்பமா இருக்கில்ல. கண்டிப்பா கொஞ்சம் கொழப்பமான சங்கதிதான்.


The Butterfly Effect (2004) வந்த படம். அந்தப் படத்தை பார்த்தவங்களுக்கு நான் சொல்லப் போற விசயம் சொல்லாமயே புரிஞ்சிருக்கும். ஆனா, பார்க்காதவங்களுக்கு சொல்லித்தான ஆகணும். அல்லது இன்று நேற்று நாளையாவது பார்த்திருந்தாலும் போதும். அதாவது, இன்னிக்கு நாம செய்யிற எந்த ஒரு சின்ன செயலும், பல வருடங்களுக்கு பின்னால நடக்கப் போற மாற்றத்துக்கு காரணமாகும். உதாரணத்துக்கு, இன்று நேற்று நாளையில கருணாகரன், மெடல் எடுக்கறதுக்காக பைக்கோட சைடு ஸ்டேண்டை நகர்த்தி அதுல மாட்டிக்கிட்டிருந்த நாயோட கழுத்துச் சங்கிலி ரிலீஸாகும். அதனால பெரிசா எந்த மாற்றமுமில்ல. ஆனா, அந்த நாய் போகாம இருந்திருந்தா, வில்லன் செத்ததை யாராலையும் மாத்தியிருக்க முடியாது. அதே அந்த நாய் போனதால, வில்லன் சாவுல இருந்து தப்பிச்சு, கான்ஸ்டபிள் செத்துப் போயிடுறாரு. கதையே மாறிடுதா? இப்ப வில்லன் உயிரோட இருக்கறதால மறுபடியும் பலருக்கு பிரச்சினைகள் வரும்.


நாம ஃப்ளாஸுக்கு வருவோம். இப்ப பேரியோட அம்மா சாகல. உயிரோட இருக்காங்க. கதையில இதனால ஒரு சின்ன மாற்றம். அப்ப ஆக்சுவல் டைம்லைன்ல பேரிய தத்தெடுத்து வளர்க்கிற போலிஸ்காரர் ஜோ வெஸ்ட்டுக்கும் பேரிக்கும் இந்த டைம்லைன்ல எந்த சம்பந்தமும் இருக்காது. அவரோட பொண்ணு ஐரிஸ் வெஸ்ட்டுக்கு வேற காதலன் இருப்பான். இவ்வளவு ஏன்? பேரி மேல மின்னல் விழுகாமையே கூட போகலாம். இல்லையா? இன்னும் பற்பல கொழப்பங்களுக்கிடையில பலருக்கு பலான பலான மாற்றங்கள் ஏற்படுது. ஃப்ளாஸ்பாயிண்ட் இப்பிடி பல பரிமாணங்கள்ல பலர் வாழ்க்கைய சீரழிச்சுக்கிட்டு திரியிது.


சரி சரி. டென்சனாகாதிங்க. இதெல்லாம் உங்கள கொழப்பறதுக்காக சொல்லல. தெரிஞ்சிக்கனும்னு சொன்னேன். இது கூட பரவால்ல. ஸ்மால் கொழப்பம். ஆனா, இதவிட பெரிய கொழப்பம் ஒன்னு இருக்கு. அதான் Dopplegangers.


Dopplegangers


போன பதிவுல மல்ட்டிவர்ஸ் எர்த் ஒன், எர்த் டூ-ன்னு சொல்லியிருந்தேன் இல்லியா? அதுல உள்ள நம்மைப் போலவே ஒத்த உருவங்களை கொண்டவங்களைத்தான் டாப்பிள்கேங்கர்ஸ்ன்னு சொல்லுவாங்க. உண்மையில இதுக்கான தமிழ் அர்த்தம் – பேயுரு / உயிரோடு இருப்பவர்களின் ஆவித் தோற்றம். கிட்டத்தட்ட அது சரிதான். இரண்டாம் உலகம். முன்றாம் உலகம், நான்காம் உலகம்னு நாம வாழுற இதே உலகத்தோட ஆல்ட்டர்னேட் வர்சன் ஜெராக்ஸ் காப்பிகள் தான் இந்த மல்ட்டிவர்ஸ்.


நாம வாழுற இந்த உலகம்தான் ஒன்னாவது உலகம்னு வச்சுக்கலாம். எர்த் ஒன். அப்படியே டிட்டோவா இன்னொரு உலகம் நம்ம கண்ணுக்குத் தெரியாம இங்கயே சுத்திகிட்டிருக்குன்னு வய்ங்க. அதுதான் ரெண்டாவது உலகம். எர்த் டூ. எர்த் ஒன்ல என் பேரு கார்த்திக் மணி. பெரிய பிஸ்னஸ் மேன்னு வய்ங்க. ரெண்டாவது உலகத்து என் பேரு சின்னச்சாமி, முத்துச்சாமின்னு வேற ஒன்னா இருக்கலாம். அங்கே நான் சாதாரணமா விவசாயம் பார்த்துக்கிட்டு மாடு மேய்க்கிறவனாவோ, ஜவுளி யாவாரியா கூட இருக்கலாம். கண்டிப்பா இங்கே இருக்கற மாதிரி மொக்கையா இருக்க மாட்டேன். இதே மாதிரி எர்த் திரீ, எர்த் ஃபோர், எர்த் ஃபைவ்ன்னு எர்த் ட்வெண்டி, எர்த் தர்ட்டின்னு எல்லா மல்ட்டிவர்ஸ்லயும் வேற வேற பேர்ல நான் வாழ்ந்துகிட்டிருப்பேன். இதே உருவத்தோட.


அதேதான், இரண்டாம் உலகம் படத்துல வந்த அதே கான்செப்ட்டுதான்.


ஒன்னாவது உலகத்துல உள்ள செண்ட்ரல் சிட்டியில ஒரு ஃப்ளாஸ் இருக்கற மாதிரி, ரெண்டாவது உலகத்துல ஒரு ஃப்ளாஸ் இருக்காப்ல. அவரை ஜூம்ன்னு ஒரு கேடு கெட்ட வில்லன் அந்த உலகத்தை தன்னோட கண்ட்ரோல்ல புடிச்சு வச்சுக்கிட்டு, ஃப்ளாஸை அந்த உலகத்துல இருந்து தெரத்தி விட்டுட்டதா ஒன்னாவது உலகத்துல உள்ள ஃப்ளாஸ்கிட்ட வந்து ஹெல்ப் கேக்கறாரு. நம்ம பேரி ஆலனும், கெளம்பி உடுமலைப்பேட்டையிலேர்ந்து கெளம்பி பழனிக்கி போறாப்ல எர்த் டூவுக்கு போறாரு.


(இப்படி மல்ட்டிவர்ஸ் ட்ராவல் பண்றப்ப ஒருவாட்டி அசந்து தூங்கிட்டே வண்டி ஓட்டினதால… அயம் சாரி, தூங்கிட்டே ஓடினதால தவறுதலா எர்த் திரீக்கு போயிடறாரு. அங்க சூப்பர் கேர்ள்ன்னு இன்னொரு சூப்பர் ஹீரோவை சந்திச்சு அவங்களோட நட்பாயிடறாரு. இப்படித்தான் டிசி கிராஸ்-ஓவர் சீரிஸ்கள் நடக்குது)

ZOOM

யாரிந்த ஜூம்? அவன் ஏன் எர்த் டூ ஃப்ளாஸை தெரத்தி விட்டான்னு ஏகப்பட்ட கேள்விகளோட அவனை சந்திக்கப் போனா, அப்பதான் ஒரு உண்மையே தெரியிது. என்னடான்னு வெளிய வெய்ட் பண்ணிகிட்டிருக்கறவங்கெல்லாம் உள்ளாற போயி பாத்தா, ஸ்கெட்ச்சு எர்த் டூ ஃப்ளாஸுக்கு இல்லடீ செல்லம். எர்த் ஒன் ஃப்ளாஸு உனக்குத்தான்னு பன்ச் டயலாக் அடிக்கிறான் அந்த ஜூம் பய.


சரி எர்த் டூவுல உள்ள ஃப்ளாஸு தான் நம்மளவுக்கு தெம்பானவனா இல்லாம இருக்கான், அப்ப இங்கன உள்ள பேரி ஆலன் என்ன ஆனாருன்னு போயி பார்த்தா அவன் சாதாரண மனுசனா டிவி ரிப்போர்ட்டரா, மாமனாருக்கு பயந்து வாழ்ந்துகிட்டிருக்கான். செம கொழப்பம். எர்த் ஒன்ல உள்ள மொரட்டு பீஸெல்லாம் எர்த் டூவுல மொன்னைகளாகவும், இங்க உள்ள மொன்னைகளெல்லாம் அங்க மொரட்டு பீஸூகளாகவும் இருக்காங்க.


ஏற்கனவே இங்க எர்த் ஒன்ல ஃப்ளாஸ்பாயிண்ட்டால வந்த கொழப்பங்களே தீரல. இதுல எர்த் டூ கொழப்பங்கள் வேறயா? அய்யஹோ!


இதுல எர்த் ஒன்ல ஸ்டார் லேப் ஓனரா இருக்கறது சிஸ்கோ ரமோன். அதுவும் ஹைஃபை யோயோ டியூட் கெட்டப்புல நம்மூரு விஜய் மல்லையா மாதிரி ரெண்டு பக்கமும் கவர்ச்சிப் பெண்கள் புடை சூழ வாழுறாரு. இதுக்கு காரணம் நம்ம ஃப்ளாஸ் தம்பி பண்ண டைம் டிராவல் கசமுசாக்கள் தான்.



இங்க எர்த் டூ ஃப்ளாஸ்ன்னு ஒருத்தன் வந்தானே, அவன் ஃப்ளாஸ் இல்ல. அப்ப அந்த ஃப்ளாஸ்ன்னு ஒருத்தன் இருக்கறதா சொன்னனே, அது எர்த் ஒன் ஃப்ளாஸோட அப்பாவோட டாப்பிள்கேங்கர். இங்க ஜூம் தெரத்தி விட்டதா சொல்லி ஒருத்தன் வந்தானே அவந்தாங்க ஜூம். 


இருங்க இருங்க லைட்டா எனக்கே கண்ணக் கட்டுது. முடிச்சுக்கறேன்.


இவ்வாறாக செகண்ட் சீசன் ஒரு வழியா முடிஞ்சு மூக்க சுருக்க வச்சது. ஆனாலும் சில சுவாரஸ்யமான விசயங்கள இங்க நான் சொல்லனும்.

The Flash (1990)

கிபி 1990 வாக்குலயே இந்த ஃப்ளாஸ் சீரிஸ் ஒரு சீசன் மட்டும் வந்திருச்சு. அதுல பேரி ஆலன் அலைஸ் ஃப்ளாஸா நடிச்சது, இந்த புது ஃப்ளாஸ்ல பேரி ஆலனோட அப்பாவா ஹென்றி ஆலன் & எர்த் டூ ஃப்ளாஸ் ஜே கேரிக் ஆக நடிச்ச ஜான் வெஸ்லி ஷிப். இதோட மொதல் பைலட் எபிசோட் சூட் பண்ணிகிட்டிருக்கும் போதுதான், இப்போதைய ஃப்ளாஸ் கிராண்ட் கஸ்டின் பொறந்தான். ரெண்டு பேரி ஆலனும் பிறந்தது ஜனவரியில, நார்ஃபோக், விர்ஜினியாவுல. அது ஒரு அதிசயமான ஒத்துமை. (Click here to link for The Flash (1990) series)

John Wesley Shipp Then & Now

இதே மாதிரி, ஃப்ளாஸ் சீரிஸ்ல ரோனீ ஆக நடிச்ச ராபி ஆமெல், ஆரோ சீரிஸ்ல சூப்பர் ஹீரோவா நடிச்ச ஸ்டீபன் ஆமெல்லோட கஸின் பிரதர். நான் கூட ARQ (2016) படத்துல நடிச்ச ஹீரோவைப் பாத்தா ஒரு சாயல்ல ஆரோவா நடிச்ச ஆலிவர் க்வீன் மாதிரியே இருக்குன்னு சொல்லிருந்தேன். என்ன ஒரு தீர்க்க தரிசனம்!

Robbie Amell & Stephen Amell

டிசியோட காமிக்ஸ்ல முதல் முதலா இந்த ஃப்ளாஸ் கேரக்ட்டர் வெளியானது ஜனவரி 1940. அதுல ரிசர்ச் சைண்டிஸ்ட் ஒருத்தருக்கு ரேடியோக்டிவ் ஆவிய சுவாசிச்சதால வேகமா ஓடுற சக்தி கிடைச்சு ஃப்ளாஸா மாறினதா இருந்தது. அவர் பேரு அதுல Jay Garrick. ஆனா இந்த பேரி ஆலன்ங்கற கேரக்ட்டர் ஃப்ளாஸா மாறி வெளியானது அக்டோபர் 1956. அதுல தான் இந்த மின்னல் சமாச்சாரங்கள் பிற்சேர்க்கப் பட்டது.


ஃப்ளாஸ் சீரிஸ்ல எனக்குப் பிடிச்ச / பிடிக்காத விசயங்களை எழுதுவதே இந்தப் பதிவு. அதனால இதை ஒரு ஃப்ளாஸ் பத்தின அரட்டையாகவே எடுத்துக் கொள்ளவும்.



அடுத்த பதிவுல தொடருவோமா?

Friday, March 17, 2017

The Flash - TV Series - பகுதி 2



The Flash

எத்தனை பேர் இந்த சீரிஸை தொடர்ந்து பார்த்துகிட்டிருக்கீங்கன்னு போன ஃப்ளாஸ் பத்தின பதிவுல தெரிஞ்சுகிட்டேன். அந்த வரவேற்பு தந்த உற்சாகத்துல இதோ ஃப்ளாஸ் சீரிஸ் பத்தின என்னுடைய அடுத்த பதிவு. கிட்டத்தட்ட அஞ்சு மாசத்துக்கு முன்னாடிதான் பார்க்க ஆரம்பிச்சேன். எப்படா அடுத்த எபிசோட் வரும்ன்னு வெய்ட் பண்ண வச்சு ஒவ்வொரு வாரமும் காலைல பல்லு கூட விளக்காம பார்த்துகிட்டிருக்கேன். அந்த சீரிஸ் மேல அப்படியொரு ஈர்ப்பு. முதல் பதிவுல ஃப்ளாஸ் பத்தின அறிமுகத்தை எழுதியிருந்தேன். இந்தப் பதிவுல இந்த சீரிஸ்ல என்னை ரொம்பவே கவர்ந்த அந்தக் கதையோட போக்கையும், சுவாரஸ்யமான சில காட்சிகளையும் பத்தி பார்ப்போம்.

முதல் சீசன்

பேரி ஆலனோட (அதாங்க ஃப்ளாஸோட ஒரிஜினல் நேம். இந்த சூப்பர் ஹீரோ பசங்க எல்லாருக்குமே ஒரு முகமூடி இருக்கும். அத மாட்டிக்கிட்டா ஒரு நேம். கழட்டி வச்சா ஒரு நேம். இதெல்லாம் கூட பரவால்ல. சூப்பர் மேனுக்கும் சூப்பர் கேர்ளுக்கும் கண்ணுல ஒரே ஒரு கண் கண்ணாடிதான். மூஞ்சியில மச்சம் கிச்சம்? அட, அட்லீஸ்ட் கொஞ்சம் முடிய பிச்சு உருட்டி பசை தடவி மூஞ்சியில மருவாச்சும் வச்சுக்கிட்டு வரக்கூடாது? ம்ஹும்) அம்மாவை ரிவர்ஸ் ஃப்ளாஸ் கொல்றதுல ஆரம்பிக்கிது இந்தக் கதை. அப்ப பேரி ரொம்ப சின்னப் பையன். அவன் கண்ணு முன்னாடி மஞ்சள் கலர்ல எதோ ஒன்னு சொய்ங் சொய்ங்ன்னு சுத்தி சுத்தி வந்து அவனோட அம்மாவை கொன்னுடுது. ஆனா அந்த எடத்துல பேரியோட அம்மாவையும், அப்பாவையும் தவிர யாருமே இல்ல. அதனால போலீஸ் அவங்கப்பாவை கைது பண்ணிக்கிட்டு போயிடுது. இந்த சீன்லயே ரெண்டு விசயங்கள் தெளிவாயிடுது.
முதலாவது, பேரி தன்னோட அப்பாவை ஜெயில்லேர்ந்து ரிலீஸ் பண்ணனும். அதுக்கு தன்னோட அம்மாவை கொன்னது யார்ன்னு கண்டுபிடிக்கனும். ரெண்டாவது, கொன்னவனைப் பழிவாங்கனும்.

இதுதான் முதல் சீசன்.

இப்ப மூனாவதா இன்னொரு விசயமும் கூட சேர்ந்துக்குது. அதாவது, கொன்னவனைக் கண்ணாலயே பார்க்க முடியலேன்னா அது ஒரு அமானுஷ்யம். அப்படி ஒரு அமானுஷ்யத்தை கண்டுபிடிச்சு பழிவாங்க அதுக்கு ஈக்குவலான ஒரு சக்தி இருக்கனும். இப்ப முதல்ல சொன்ன அந்த ரெண்டு பாயிண்டையும் நிவர்த்தி செய்யிற ரீசன் கிடைச்சிருச்சா? பேரி ஆலனுக்கு அந்த பவர் ஒரு மின்னல் மூலமா கிடைக்குது.

அதே செண்ட்ரல் சிட்டியில ரிச்சான ஒரு விஞ்ஞானி. டாக்டர் ஹாரிசன் வெல்ஸ். ஸ்டார் லெபாரட்டரின்னு ஒன்னு வச்சு பெப்பெரிய ஆராய்ச்சியெல்லாம் செஞ்சுகிட்டிருக்காரு. அவ்ளோ பெரிய லேப்ல அவர் கிட்ட வேலை பார்க்குறது வதவதவதன்னு, மூனே மூனு பேர். Fran’Cisco’ Ramon, Ronnie Raymond, Caitlin Snow. (அடடே!) இவங்க போசான் துகள் மாதிரி உருவாக்க நினைச்சு அது தோல்வியில முடிய அந்த லேப் வெடிச்சு சிதறிடுது. அந்த சமயத்துல தான் பேரி ஆலன் மேல மின்னல் விழுந்து கோமாவுக்கு போயிடறாரு. (இப்ப கூடவே அந்த நகரத்துல பலர் மேல அதே மாதிரியான சில செயற்கை மாற்றங்கள் நடக்குது. இவங்கள மெட்டா ஹ்யூமன்ஸ்ன்னு (Meta Humans) சொல்லுவாங்க.) பேரி ஆலன் ஒன்பது மாசம் கழிச்சு கோமாவுல இருந்து டெலிவரியாகறாரு. நா யாரு? நா எங்க இருக்கேன்? நா எப்பிடி இங்க வந்தேன்ங்கற பார்மாலிட்டீஸெல்லாம் முடிச்சிட்டு தன்னோட உடல்ல ஏதோ ஒரு புது மாற்றத்தை உணர்றாரு. அங்க இருந்து பேரி ஆலன் ஃப்ளாஸாக மாறி ஓட ஆரம்பிக்கிறார். ஓடினார் ஓடினார் இந்த உலகம் பூராம் ஓடி ஓடி சலிச்சுப் போயி, மல்ட்டிவர்ஸ் எர்த் ஒன், ட்டூ, த்ரீ, ஃபோர்ன்னு எர்த் நைண்டீன், எர்த் ட்வெண்ட்டிக்கெல்லாம் ஓடுறார். உண்மையில அவர் அந்த ஊர்ல உள்ள போலீஸ் டேசன்ல ஃபாரன்சிக் சைன்ட்டிஸ்ட்டா இருக்காரு.

இதுல ஒரு சின்ன காமெடியான விசயம். பசங்களா இந்த ஊர்ல ஸ்டார் லேப் வெடிச்சு மெட்டா ஹ்யூமன் ஆகாதவங்க யாரு? நம்ம ஐரிஸ் அப்பாவும், பேரி ஆலன் அப்பாவும்ன்னு சின்னக் கொழந்தைங்க கூட சொல்லும். அந்தளவுக்கு மெட்டா ஹ்யூமன்ஸ். எதுக்கு?

பேரிக்கு சொய்ங் சொய்ங்ன்னு ஓடுற பவர் இருக்கு. ரைட்டு. அவருக்கு சமமா மோதி ஏற்கனவே கொஞ்சம் சூப்பர் ஹீரோவா இருக்கறவன செம சூப்பர் ஹீரோவா மாத்திக்க வேணாமா? அதுக்குத்தான். தனது காலையே சக்கரமாக்கி, தனது கால் படும் இடத்தையெல்லாம் கன்வேயர் பெல்ட்டாக்கி ச்சும்மா சுத்தி சுத்தி ஓடிப் பழகுறாரு த ஃப்ளாஸ். ஒவ்வொரு மெட்டாவோடயும் மோதி பலப்பரிட்சை செஞ்சு அவங்கள ஜெயிக்கும் போது ஒரு புது லெவல் வேகத்தை கடந்து சாதனை செய்யிறாரு.

வேகத்தோட லெவல்ல ‘Mach’ ன்னு ஒரு அளவு இருக்கு. அத Speed of Sound ன்னு சொல்லுவாங்க. வேகமா ஓடுறதால உருவாகுற ஒலியோட அடர்த்தியான அளவை. 1 Mach = 1234.8 KMPH. இதுல நம்ம ஃப்ளாஸ், மூனு லெவல் தாண்டுறாரு. அந்த வேகமான ஒலியை வச்சு சூப்பர்சானிக் பன்ச் எல்லாம் செய்யலாம். கொஞ்சம் பலமான உறுதியான மெட்டாவை அடிச்சு வீழ்த்த உதவும்.

சூப்பர் வில்லன்


ந்த லெவலெல்லாம் தாண்ட டாக்டர் ஹாரிசன் வெல்ஸ் உதவுறாரு. அவர் பேரியோட ஸ்பீட் மேல காட்டுற அளவுக்கதிகமான ஈடுபாடே அவர் மேல சந்தேகத்தை வரவழைக்கிது. உனக்கு என்னப்பா பிரச்சனை? நீ ஏன் அவன் மேல இவ்ளோ அக்கறையா இருக்கன்னு எல்லாருக்கும் தோன்றுனாலும், யாருமே ஹாரிசனை நெருங்கி ஏன்னு கேக்க முடியாது. அப்படி ஒரு ஆளுமை. ரெண்டு காலும் வேலை செய்யாது. வீல் சேர் வில்லன்னாலே எனக்கு இந்த கேரக்டர்தான் ஞாபகத்துக்கு வரும். எனக்கு பிடிச்ச வில்லன்களோட லிஸ்ட்டுல கண்டிப்பா இவருக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு.

சரி. ரெண்டு காலும் வேலை செய்யாத அந்த வீல் சேர் டாக்டர் எப்படி வில்லனானாரு? அவரு ஏன் பேரி ஆலனோட ஸ்பீட் லெவல் மேல அப்படி ஒரு ஈடுபாடு காட்றாரு? ம்க்கும். அத எப்பிடி சொல்றது? அதுதான கதையே. மொதல் சீசன் மொத்தமுமே அவ்ளோ க்ரிப்பா பரபரப்பா மூவ் ஆனதுக்கு காரணம் ஃப்ளாஸ்ங்கற சூப்பர் ஹீரோ கேரக்ட்டர் அல்ல. டாக்டர். ஹாரிசன் வெல்ஸ். அதுக்கு அவர்கிட்ட இருந்த ஸ்ட்ராங்கான ரீசன், ஸ்ட்ராங்கான ஃப்ளாஸ்பேக் (ரொம்ப லென்த்தெல்லாம் இல்லை. ச்சும்மா ஒரு பத்து நிமிசம் வரும்), இத்தனை நாளும் எப்படி இத கவனிக்காம போனோம்ங்கற அளவுக்கு கண்ணைக் கட்டுற லெவல்ல வில்லனா உருவாகுற விதம். இதெல்லாமே அடேங்கப்பா லெவல் கதை.

இவ்வளவு பில்டப்பையும் தாண்டி, அந்த வில்லன், சமகாலத்திய மனுசன் கிடையாது. எதிர்காலத்துல இருந்து வந்து பேரி ஆலன் fastest man in the world ஆகற வரைக்கும் வளர்த்து, அடப் போங்கப்பா. இட்ஸ் அமேஸிங் அவ்ளோதான் சொல்ல முடியும்.


அடுத்த பதிவுல தொடருவோமா?

Sunday, March 12, 2017

சீரியல் கில்லர்ஸ் - 2 - ஆட்டோ சங்கர்



சம்பவம் 1)

அண்மையில் பாடகி சுசித்ராவின் ட்விட்டர் அக்கவுண்ட் ஹேக் (?!) செய்யப்பட்டு அதில் வெளியான ட்விட்டுகள் எவ்வளவு பரபரப்பை ஏற்படுத்தின என்பது அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியாது. (குறைந்தபட்சம் சோசியல் நெட்வொர்க்குகளில் சலசலப்பையாவது ஏற்படுத்தியிருந்ததை அனைவரும் அறிந்ததே) ஆனால், அது காலப்போக்கில் அப்படியே மறைந்து போகும். காரணம் அதில் இருந்த நம்பகத்தன்மை. திங்கள் கிழமை இருவரின் ரகசிய வீடியோவையும், செவ்வாய்க்கிழமை மற்றிருவரின் ரகசிய வீடியோவையும், மீண்டும் புதன்கிழமை மேலும் ஒரு ரகசிய வீடியோவையும் வெளியிடப்போவதாக பகிரங்கமாக ட்விட்டரில் அறிவித்தார். காரணம் குறிப்பிட்ட இரு பிரபலங்களால் வன்புணரப்பட்டேன் எனவும், அதன் காரணமாக அவர்களிருவரையும், சினிமா உலகில் மறைமுகமாக நிகழ்ந்து கொண்டிருக்கும் ’ஒத்திசைவு’ கலாச்சாரத்தை ஒழிக்கப் போவதாகவும் சவால் விட்டார். அவர் அப்படி சொன்னது ஒரு வெள்ளிக்கிழமையில். அன்று இரவே இரண்டு நடிகைகளின் நிர்வாணப் புகைப்படங்களையும் செல்பி வீடியோக்களையும் வெளியிட்டார். அடுத்ததாக திங்கள் கிழமை வந்தது. செவ்வாய்க்கிழமை வந்தது. போலவே புதன்கிழமையும் வந்தது. ஆனால், அவர் சொன்னபடி எந்த வீடியோக்களையும் வெளியிடவில்லை. இணையத்தில் பற்றி எரிந்த சுச்சி லீக்ஸ் பரபரப்பு புஸ்வானமானது.


சம்பவம் 2)

கோல்டன் பே ரிசார்ட் என்றாலே போதும். நிச்சயம் அதன் முன் பின் சம்பவங்கள் அனைத்தும் ஞாபகத்திற்கு வந்து விடும். தனது கட்சி மந்திரிகளை தனக்கு சாதகமாக சட்டசபையில் வாக்களிக்க சில நாட்கள் மறைத்து வைத்திருந்த சம்பவம்.

இந்த இரண்டு சம்பவங்களும் உண்மையில் தமிழக மக்களுக்கு புதிய விசயமல்ல. ஏற்கனவே தமிழகத்தில் இதே சம்பவங்கள் நமக்கு பரிட்சயமே. ஆனால், இரண்டையும் நிகழ்த்தியது ஒரே நபர். இந்தப் பாராவை வாசிக்கும் போதே பலருக்கு அது யாரெனவும் விளங்கியிருக்கும்.

அந்த நபர் இந்த விசயங்களையெல்லாம் தொடராக எழுத ஆரம்பித்ததும் ஏற்பட்ட கொந்தளிப்புகளும், பல பிரபலங்களின், அரசியல்வாதிகளின் ஏன் காவல்துறையை சார்ந்தவர்களே பதற ஆரம்பித்திருந்தனர். அந்த தொடரை தடுத்து நிறுத்தவும் ஆன மட்டும் முயற்சி செய்தனர். ஆனால், இறுதியில் அந்த தொடர் பல தொடர் எதிர்ப்புகளுக்குப் பின் வெற்றிகரமாக வெளியாகவும் செய்தது. பின்னர் அது புத்தகமாகவும் வெளி வந்தது.

அதை எழுதிய அந்த நபர் ஒரு தூக்கு தண்டனைக் கைதி.


யெஸ். சர்ச்சைக்குரிய அந்த எழுத்தாளர் ஆறு கொலைகளைச் செய்ததாக கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்ட கௌரி சங்கர் (அ) ஆட்டோ சங்கர். உண்மையில் அவர் தொழில் முறை எழுத்தாளரல்ல. கௌரி சங்கர் மற்றவர்களின் சுயநலத்திற்காக எப்படி ஆட்டோ சங்கராக ஆக்கப்பட்டான் என்பதை தூக்கிற்கு முன் தனது வாழ்வில் மறைந்திருந்த ரகசியங்களை, அதை ஒரு மரண வாக்குமூலம் மூலமாக நக்கீரனில் எழுதி விவரித்தார்.

எம்ஜியார் இறந்த சமயத்தில் அதிமுக உடைந்து, ஜெயலலிதா, ஜானகி என்று இரண்டு அணிகளாக ஆன சமயம். அப்போதும், ஜெயாவால், எம்.எல்.ஏக்கள் அனைவரும் கும்பலாக நட்சத்திர ஹோட்டலில் சிறைபிடித்து வைக்கப்ப்பட்டிருந்தனர். அந்த சமயத்தில் ‘வீரத்தகப்பனார்’ சங்கரிடம் முப்பது லட்ச ரூபாய் தந்தார். எதற்காகத் தெரியுமா? எம்.எல்.ஏக்கள் விரும்பும், பெண்களையும், நடிகைகளையும் சப்ளை செய்ய.

இதற்கே வாய்பிளந்தால் எப்படி? அந்த நடிகைகளின் பெயர்களையும் சங்கர் தனது வாக்குமூலத்தில் சூசகமான பெயர்களால் எழுதியிருக்கிறார். அதெல்லாம் யார் யாரென்று டீகோட் செய்தால் அய்யய்யோ இவங்களா என்று வாயோடு சேர்ந்து முழியும் பிதுங்கும்.

எண்பதுகளில் முப்பது லட்சம் என்பது எவ்வளவு பெரிய விசயமாக இருந்திருக்கும் என்று கொஞ்சம் கணக்கிட்டுப் பாருங்கள். அந்தப் பணத்தையெல்லாம் தனது படுக்கையறை மெத்தையில் பதுக்கி வைத்திருந்ததாக தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டிருந்தார். அந்தப் பணம் காவல்துறையினால் கைப்பற்றப்பட்டதாக கணக்கில் காட்டப்படவேயில்லை. சில அதிகாரிகளால் லம்ப்பாக ஸ்வாஹா செய்யப்பட்டிருந்தது. அத்தோடு பல நூறு சவரன் நகைகளும். ஸ்வாஹா. அப்போது கணக்கில் காட்டப்பட்டதெல்லாம் வீட்டில் தரைக்கடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து சடலங்களை மட்டுமே. ஆறாவது பிணம் எரிக்கப்பட்டு அதன் சாம்பல் ஏரியில் கரைக்கப்பட்டிருந்தது.

சங்கர் முதன்முதலில் ஒரு அரசு அலுவலரிடம் நில ஆக்கிரமிப்பபை தனக்கு சாதகமாக ஆக்கிக் கொடுத்ததற்கு லஞ்சமாக கேட்டது ஒரு நடிகையை. அதுவும் தேசிய விருது பெற்ற நடிகையை. அவரது பெயரை சூசகமாக அவர் நடித்துப் புகழ்பெற்ற ஒரு படத்தின் பெயரைக் கொண்டு விளித்திருந்தார். அந்தப்படம் ‘தண்ணீர் தண்ணீர்’. இது கொஞ்சம் பகீர் தகவல் தான். ஆனால், இதைவிட பெரிய பகீர், அந்த நடிகையை அரசு அதிகாரியிடம் அனுப்பி விட்டு, அவர்கள் இருவருக்கும் தெரியாமல் அவர்களை படம் பிடித்து வைத்திருந்தது. இத்தோடு மட்டுமல்லாமல், அவர் அனுப்பிய அத்தனை பிரபலங்களின் எச்சில் வடியும் முகங்களையும், அந்த இருட்டில் நடந்தவவைகளையும் சாகசமாக படமாக்கி வைத்திருந்தார். என்றாவது அவையெல்லாம் தனக்கு ஆக வேண்டிய சிலபல காரியங்களை சாதகமாக நிகழ்த்திக் கொள்ள தேவைப்படும் என்று வெளியிடாமலேயே மறைத்து வைத்திருந்தார். ஆனால், அவற்றை தனக்கு சாதகமாக்கி சம்பாதித்தது இந்த வழக்கை ஆராய்ந்த சில சி.பி.ஐ அதிகாரிகள். சங்கரை வைத்துக் கொண்டே அந்தப் படங்களும், நெகட்டிவ்களும் அதற்கு விலையாக பல பெட்டிகளும் கைமாறின. பணத்தைக் கொடுத்து நெகட்டிவ்களையும் படங்களையும் வாங்கிச் சென்ற பிரபலங்கள், “அடப்பாவி, இத வச்சு நீயும் சம்பாரிக்கல,  எங்களையும் நிம்மதியா விடல. நீ நல்லாவே இருக்க மாட்டடா, நாசமா போயிடுவ” என்று சபித்துக் கொண்டே சென்றார்களாம்.

சங்கரின் அந்த பண மெத்தையோ, சிலபல நூறு சவரன்களோ பெரிய விசயமல்ல. அதைவிட பெரிய ஜாக்பாட் அந்த நெகட்டிவ்களே!

இப்படிப் பல பகீர் பகிரங்கங்களை பக்கம் பக்கமாக கொண்ட புத்தகத்தையோ தொடரையோ வெளியிடுவதில் எவ்வளவு தடைகள் இருந்திருக்கும். அதனை நக்கீரன் கோபால் அவர்கள் ஒரு சாகச நாவல் போல இந்தப் புத்தகத்தின் முன்னுரையாகத் தந்திருக்கிறார். அந்த முன்னுரை மட்டுமே 75 பக்கங்கள். புத்தகம் கைக்கு வந்து இரண்டே நாட்களில் முழு மூச்சாகப் படித்துத் தீர்த்தேன். அதில் பல பக்கங்கள், காவல்துறையின் உண்மையான முகத்தை பதிவு செய்திருந்தது. 

ஆட்டோ சங்கர் சிறையிலிருந்து தப்பி வேறு மாநிலத்தில் மாட்டிக் கொண்டபோது ஒரு காவலதிகாரி சொன்னது, “தமிழ்நாடு போலீஸ்தானே, கிரிமின்ல்களை உருவாக்கும் பிரசவ வார்டு அது.” என்றாராம்.


இந்தப் புத்தகத்தைப் படித்தபோது அது உண்மையென்றே தோன்றுகிறது, இந்த வாக்குமூலத்தில் கூறியவைகள் உண்மையாகவே இருந்திருக்கும் பட்சத்தில்.



புத்தகத்தின் தலைப்பு : ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம்

பதிப்பகம் : நக்கீரன் வெளியீடு
விலை : 300
பக்கங்கள் : 456



இந்தப் புத்தகத்தை எனக்கு பரிந்துரைத்த நண்பர் சிவகுமார் கனகராஜ், முதல் பதிப்பில் அப்போதிருந்த பல அரசியல் தலைவர்களின் பெயர்களும் சம்பவங்களும் இடம்பெற்றிருந்ததாகவும், பின்னர் இரண்டாம் பதிப்பின் போது அந்தப் பெயர்களும் சம்பவங்களும் நீக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார். அது உண்மையெனில், அந்த முதல் பதிப்புதான் உண்மையாகவே தமிழில் போல்டான முயற்சியாக இருந்திருக்கும்.