சம்பவம் 1)
அண்மையில் பாடகி
சுசித்ராவின் ட்விட்டர் அக்கவுண்ட் ஹேக் (?!) செய்யப்பட்டு அதில் வெளியான ட்விட்டுகள்
எவ்வளவு பரபரப்பை ஏற்படுத்தின என்பது அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியாது. (குறைந்தபட்சம்
சோசியல் நெட்வொர்க்குகளில் சலசலப்பையாவது ஏற்படுத்தியிருந்ததை அனைவரும் அறிந்ததே) ஆனால்,
அது காலப்போக்கில் அப்படியே மறைந்து போகும். காரணம் அதில் இருந்த நம்பகத்தன்மை. திங்கள்
கிழமை இருவரின் ரகசிய வீடியோவையும், செவ்வாய்க்கிழமை மற்றிருவரின் ரகசிய வீடியோவையும்,
மீண்டும் புதன்கிழமை மேலும் ஒரு ரகசிய வீடியோவையும் வெளியிடப்போவதாக பகிரங்கமாக ட்விட்டரில்
அறிவித்தார். காரணம் குறிப்பிட்ட இரு பிரபலங்களால் வன்புணரப்பட்டேன் எனவும், அதன் காரணமாக
அவர்களிருவரையும், சினிமா உலகில் மறைமுகமாக நிகழ்ந்து கொண்டிருக்கும் ’ஒத்திசைவு’ கலாச்சாரத்தை
ஒழிக்கப் போவதாகவும் சவால் விட்டார். அவர் அப்படி சொன்னது ஒரு வெள்ளிக்கிழமையில். அன்று
இரவே இரண்டு நடிகைகளின் நிர்வாணப் புகைப்படங்களையும் செல்பி வீடியோக்களையும் வெளியிட்டார்.
அடுத்ததாக திங்கள் கிழமை வந்தது. செவ்வாய்க்கிழமை வந்தது. போலவே புதன்கிழமையும் வந்தது.
ஆனால், அவர் சொன்னபடி எந்த வீடியோக்களையும் வெளியிடவில்லை. இணையத்தில் பற்றி எரிந்த
சுச்சி லீக்ஸ் பரபரப்பு புஸ்வானமானது.
சம்பவம் 2)
கோல்டன் பே ரிசார்ட்
என்றாலே போதும். நிச்சயம் அதன் முன் பின் சம்பவங்கள் அனைத்தும் ஞாபகத்திற்கு வந்து
விடும். தனது கட்சி மந்திரிகளை தனக்கு சாதகமாக சட்டசபையில் வாக்களிக்க சில நாட்கள்
மறைத்து வைத்திருந்த சம்பவம்.
இந்த இரண்டு சம்பவங்களும்
உண்மையில் தமிழக மக்களுக்கு புதிய விசயமல்ல. ஏற்கனவே தமிழகத்தில் இதே சம்பவங்கள்
நமக்கு பரிட்சயமே. ஆனால், இரண்டையும் நிகழ்த்தியது ஒரே நபர். இந்தப் பாராவை வாசிக்கும்
போதே பலருக்கு அது யாரெனவும் விளங்கியிருக்கும்.
அந்த நபர் இந்த
விசயங்களையெல்லாம் தொடராக எழுத ஆரம்பித்ததும் ஏற்பட்ட கொந்தளிப்புகளும், பல பிரபலங்களின்,
அரசியல்வாதிகளின் ஏன் காவல்துறையை சார்ந்தவர்களே பதற ஆரம்பித்திருந்தனர். அந்த தொடரை
தடுத்து நிறுத்தவும் ஆன மட்டும் முயற்சி செய்தனர். ஆனால், இறுதியில் அந்த தொடர் பல
தொடர் எதிர்ப்புகளுக்குப் பின் வெற்றிகரமாக வெளியாகவும் செய்தது. பின்னர் அது புத்தகமாகவும்
வெளி வந்தது.
அதை எழுதிய அந்த
நபர் ஒரு தூக்கு தண்டனைக் கைதி.
யெஸ். சர்ச்சைக்குரிய
அந்த எழுத்தாளர் ஆறு கொலைகளைச் செய்ததாக கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்ட கௌரி சங்கர்
(அ) ஆட்டோ சங்கர். உண்மையில் அவர் தொழில் முறை எழுத்தாளரல்ல. கௌரி சங்கர் மற்றவர்களின்
சுயநலத்திற்காக எப்படி ஆட்டோ சங்கராக ஆக்கப்பட்டான் என்பதை தூக்கிற்கு முன் தனது
வாழ்வில் மறைந்திருந்த ரகசியங்களை, அதை ஒரு மரண வாக்குமூலம் மூலமாக நக்கீரனில் எழுதி விவரித்தார்.
எம்ஜியார் இறந்த
சமயத்தில் அதிமுக உடைந்து, ஜெயலலிதா, ஜானகி என்று இரண்டு அணிகளாக ஆன சமயம். அப்போதும்,
ஜெயாவால், எம்.எல்.ஏக்கள் அனைவரும் கும்பலாக நட்சத்திர ஹோட்டலில் சிறைபிடித்து வைக்கப்ப்பட்டிருந்தனர்.
அந்த சமயத்தில் ‘வீரத்தகப்பனார்’ சங்கரிடம் முப்பது லட்ச ரூபாய் தந்தார். எதற்காகத்
தெரியுமா? எம்.எல்.ஏக்கள் விரும்பும், பெண்களையும், நடிகைகளையும் சப்ளை செய்ய.
இதற்கே வாய்பிளந்தால்
எப்படி? அந்த நடிகைகளின் பெயர்களையும் சங்கர் தனது வாக்குமூலத்தில் சூசகமான பெயர்களால்
எழுதியிருக்கிறார். அதெல்லாம் யார் யாரென்று டீகோட் செய்தால் அய்யய்யோ இவங்களா என்று
வாயோடு சேர்ந்து முழியும் பிதுங்கும்.
எண்பதுகளில் முப்பது
லட்சம் என்பது எவ்வளவு பெரிய விசயமாக இருந்திருக்கும் என்று கொஞ்சம் கணக்கிட்டுப் பாருங்கள்.
அந்தப் பணத்தையெல்லாம் தனது படுக்கையறை மெத்தையில் பதுக்கி வைத்திருந்ததாக தனது
வாக்குமூலத்தில் குறிப்பிட்டிருந்தார். அந்தப் பணம் காவல்துறையினால் கைப்பற்றப்பட்டதாக
கணக்கில் காட்டப்படவேயில்லை. சில அதிகாரிகளால் லம்ப்பாக ஸ்வாஹா செய்யப்பட்டிருந்தது.
அத்தோடு பல நூறு சவரன் நகைகளும். ஸ்வாஹா. அப்போது கணக்கில் காட்டப்பட்டதெல்லாம் வீட்டில்
தரைக்கடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து சடலங்களை மட்டுமே. ஆறாவது பிணம் எரிக்கப்பட்டு
அதன் சாம்பல் ஏரியில் கரைக்கப்பட்டிருந்தது.
சங்கர் முதன்முதலில்
ஒரு அரசு அலுவலரிடம் நில ஆக்கிரமிப்பபை தனக்கு சாதகமாக ஆக்கிக் கொடுத்ததற்கு லஞ்சமாக
கேட்டது ஒரு நடிகையை. அதுவும் தேசிய விருது பெற்ற நடிகையை. அவரது பெயரை சூசகமாக அவர்
நடித்துப் புகழ்பெற்ற ஒரு படத்தின் பெயரைக் கொண்டு விளித்திருந்தார். அந்தப்படம் ‘தண்ணீர்
தண்ணீர்’. இது கொஞ்சம் பகீர் தகவல் தான். ஆனால், இதைவிட பெரிய பகீர், அந்த நடிகையை
அரசு அதிகாரியிடம் அனுப்பி விட்டு, அவர்கள் இருவருக்கும் தெரியாமல் அவர்களை படம் பிடித்து
வைத்திருந்தது. இத்தோடு மட்டுமல்லாமல், அவர் அனுப்பிய அத்தனை பிரபலங்களின் எச்சில்
வடியும் முகங்களையும், அந்த இருட்டில் நடந்தவவைகளையும் சாகசமாக படமாக்கி வைத்திருந்தார்.
என்றாவது அவையெல்லாம் தனக்கு ஆக வேண்டிய சிலபல காரியங்களை சாதகமாக நிகழ்த்திக் கொள்ள
தேவைப்படும் என்று வெளியிடாமலேயே மறைத்து வைத்திருந்தார். ஆனால், அவற்றை தனக்கு சாதகமாக்கி
சம்பாதித்தது இந்த வழக்கை ஆராய்ந்த சில சி.பி.ஐ அதிகாரிகள். சங்கரை வைத்துக் கொண்டே
அந்தப் படங்களும், நெகட்டிவ்களும் அதற்கு விலையாக பல பெட்டிகளும் கைமாறின. பணத்தைக்
கொடுத்து நெகட்டிவ்களையும் படங்களையும் வாங்கிச் சென்ற பிரபலங்கள், “அடப்பாவி, இத வச்சு நீயும் சம்பாரிக்கல, எங்களையும் நிம்மதியா விடல. நீ நல்லாவே இருக்க மாட்டடா,
நாசமா போயிடுவ” என்று சபித்துக் கொண்டே சென்றார்களாம்.
சங்கரின் அந்த
பண மெத்தையோ, சிலபல நூறு சவரன்களோ பெரிய விசயமல்ல. அதைவிட பெரிய ஜாக்பாட் அந்த நெகட்டிவ்களே!
இப்படிப் பல பகீர்
பகிரங்கங்களை பக்கம் பக்கமாக கொண்ட புத்தகத்தையோ தொடரையோ வெளியிடுவதில் எவ்வளவு தடைகள்
இருந்திருக்கும். அதனை நக்கீரன் கோபால் அவர்கள் ஒரு சாகச நாவல் போல இந்தப் புத்தகத்தின்
முன்னுரையாகத் தந்திருக்கிறார். அந்த முன்னுரை மட்டுமே 75 பக்கங்கள். புத்தகம் கைக்கு
வந்து இரண்டே நாட்களில் முழு மூச்சாகப் படித்துத் தீர்த்தேன். அதில் பல பக்கங்கள்,
காவல்துறையின் உண்மையான முகத்தை பதிவு செய்திருந்தது.
ஆட்டோ சங்கர் சிறையிலிருந்து
தப்பி வேறு மாநிலத்தில் மாட்டிக் கொண்டபோது ஒரு காவலதிகாரி சொன்னது, “தமிழ்நாடு போலீஸ்தானே,
கிரிமின்ல்களை உருவாக்கும் பிரசவ வார்டு அது.” என்றாராம்.
இந்தப் புத்தகத்தைப்
படித்தபோது அது உண்மையென்றே தோன்றுகிறது, இந்த வாக்குமூலத்தில் கூறியவைகள் உண்மையாகவே
இருந்திருக்கும் பட்சத்தில்.
புத்தகத்தின் தலைப்பு : ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம்
பதிப்பகம் : நக்கீரன் வெளியீடு
விலை : 300
பக்கங்கள் : 456
இந்தப் புத்தகத்தை எனக்கு பரிந்துரைத்த நண்பர் சிவகுமார் கனகராஜ், முதல் பதிப்பில் அப்போதிருந்த பல அரசியல் தலைவர்களின் பெயர்களும் சம்பவங்களும் இடம்பெற்றிருந்ததாகவும், பின்னர் இரண்டாம் பதிப்பின் போது அந்தப் பெயர்களும் சம்பவங்களும் நீக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார். அது உண்மையெனில், அந்த முதல் பதிப்புதான் உண்மையாகவே தமிழில் போல்டான முயற்சியாக இருந்திருக்கும்.


நக்கீரன் இந்த மாதிரி விசயம் செய்வதில் கில்லாடி..உன் விமர்சனம் புத்தகத்தை வாசிக்க தூண்டுதய்யா..சீக்கிரமே வாங்குறேன்...
ReplyDeleteபடிச்சிட்டு வாங்க. பேச நிறைய இருக்கு இந்த புக்குல
Delete