Sunday, October 22, 2017

சீரியல் கில்லர்ஸ் - 4 - ஹ்வாசியூங் தொடர் கொலைகள்



ஹ்வாசியூங் தொடர் கொலைகள்

ஹ்வாசியூங் (Hwaseong) தென் கொரியாவிலுள்ள ஒரு அழகான நகரம். அதில் விளை நிலங்களைக் கணிசமாகக் கொண்ட விவசாய மாவட்டம் ஜியூங்கி (Gyeonngi). அங்குள்ள நெல் விளை நிலம் ஒன்றில்தான் நமது கதை தொடங்குகிறது.

செப்டம்பர் 16, 1986 அன்று ஜியூங்கி காவல் நிலையத்திற்கு வந்த ஒரு தகவலின் அடிப்படையில் டிடெக்ட்டிவ் பார்க் டூ-மேன் (Park Doo-Man) சம்பவ இடத்திற்கு விரைந்தார்.

ஜியூங்கியின் நெல் பயிரிடப்பட்டிருந்த இரு நிலங்களுக்கிடையில் ஒரு பாதை அமைந்திருந்தது. அதன் ஓரத்தில் அமைந்திருந்த கான்கிரீட் பாத்தியில், ஒரு பெண் பிணம், அதன் கை, கால்கள் கட்டப்பட்டிருந்த நிலையில் கிடத்தப்பட்டிருந்தது. டிடெக்ட்டிவ் பார்க்கிற்கு அந்தப் பிணத்தைப் பார்ப்பதே சிரமமான வேலையாக இருந்தது. காரணம் என்னவென்றால், பாத்தியில் அமைந்திருந்த கான்கிரீட் சிலாப்புகளுக்கு அடியில் கொலையான அந்தப் பெண்ணின் பிணம் கிடத்தப் பட்டிருந்ததுதான்.

பருத்த தேகத்தையுடைய பார்க், அந்தப் பாத்தியில் இறங்கி தன்னால் இயன்றமட்டும் அந்தப் பிணத்தை ஆராய்ந்தார். ஆனால், அவரால் எந்த முடிவுக்கும் வர இயலவில்லை.

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்டின் படி அந்தப் பெண் முந்தைய நாள் இரவில் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு இறந்து போயிருந்தது தெரிய வந்தது. அவளது மார்க்கச்சையால் (Brassiere) அவளது கைகளும், கால் சட்டையால் (stalking) அவளது கால்களும், காலுறையால் (Socks) அவளது வாயும் கட்டப்பட்டிருந்தது. அந்தக் காலுறை சில கூழாங்கற்களால் நிறப்பப்பட்டிருந்தது.

மற்றபடி அவளது உடலில் வேறு எந்த ஆடைகளும் இருக்கவில்லை. முழு நிர்வாணம்.

அடுத்த சில நாட்களில், சரியாகச் சொல்லவேண்டுமென்றால், அதே வருடம் அக்டோபர் 21ஆம் தேதியில் மீண்டும் ஒரு பெண் பிணம் கிடைத்தது. இதில் ஜியூங்கி காவல் நிலையமும், டிடெக்ட்டிவ் பார்க்கும் சற்று அதிர்ந்து போகுமளவிற்கு இருந்தது. காரணம் என்னவென்றால், முன்பு கிடைத்த பெண் பிணத்தின் வயது 71. ஆனால், அக்டோபர் 21ஆம் தேதி கிடைத்த பெண் பிணத்தின் வயது 25. இளம்பெண்ணின் பிணம்.

முதலில் கிடைத்த பெண்ணின் பிணத்திலிருந்த மார்க்கச்சை, கால்சட்டை, காலுறை, மற்றும், காலுறையில் கூழாங்கற்கள் அனைத்தும் மேற்கண்டது போலவே இருந்தது. நமது வலைப்பூவில், நான் அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தை மாடஸ் ஆப்பராண்டி, இந்தக் கொலைகளோடு முழுக்க ஒத்துப் போயிருந்தது.

இந்த இரு சம்பவங்களால் அதிர்ந்து போனது ஜியூங்கி காவல் நிலையம் மட்டுமல்ல. அந்த மாவட்டத்து மக்களும்தான். குறிப்பாக பெண்கள் மத்தியில் இந்தச் சம்பவங்கள் பெருத்த அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. இதனால் பெண்கள் வீட்டை விட்டு  வெளியில் வர பயந்து கொண்டிருந்தனர்.

இதில் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது ஜியூங்கி காவல் நிலையம்தான். மேலிடத்திலிருந்து கொடுக்கப்பட்ட அழுத்தம். ப்ரெஷ்சர் மேல் ப்ரெஷ்சர். அம்மாவட்ட மக்களின் அதிருப்தி. இவையெல்லாவற்றிற்கும் மேல் மீடியாக்களின் கொடூரக் கண்கள். அவை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதையை எழுதிக் கொண்டிருந்தன. அதில் பெரும்பாலும், ஜியூங்கி காவல் நிலையத்தின் கையாலாகாத்தனம் பற்றியதாகவே இருந்தது.

இதனால் பெரிதும் பாதிப்புக்குள்ளானது டிடெக்ட்டிவ் பார்க் தான். அவரது மேலதிகாரிகளும் சடுதியில் இந்த விசாரணையை முடிக்கக் கொடுத்த ப்ரெஷ்சரில், அவர் கையில் கிடைத்தவனையெல்லாம் / கண்ணில் கண்டவனையெல்லாம் கொலையாளி ரேஞ்சிற்கு தனது விசாரணையை மேற்கொண்டிருந்தார். அதில் ஒரு பதின்ம வயது இளைஞனை கிட்டத்தட்ட குற்றவாளையாகவே புனையும் அளவிற்கு அவர் தனது மேலிடத்தால் உந்தப்பட்டிருந்தார்.

இந்தக் களேபரங்களுக்கிடையில், இந்தத் தொடர் கொலைச் சம்பவங்களால் ஈர்க்கப்பட்டு சியோலிலிருந்து ஜியூங்கிற்கு விருப்ப மாற்றலில் வந்தார் சியோ டே-யூன் (Seo Tae-Yoon). அவர் டிடெக்ட்டிவ் பார்க்கைப் போல அவசரக் குடுக்கையல்ல. எதிலும் நிதானித்து, சிந்தித்து செயலாற்றுபவர். பார்க்கை விட வயதில் சற்று இளையவர்.

அவர் ஜியூங்கி காவல் நிலையத்தை வந்தடைந்த பொழுது, டிடெக்ட்டிவ் பார்க், ஒரு பதின்ம வயது இளைஞனை கொலையாளி என்று ஒப்புதல் வாக்குமூலம் வாங்கும் அவசரத்திலிருந்தார். அவரது பார்ட்னராக ச்சோ யோங்-கூ (Cho Yong-Koo) இருவரும் அந்த இளைஞனிடம் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கும் அவசரத்திலிருந்தனர். அதுவும் அந்த இளைஞனை அடித்து உதைத்து அடாவடியாக.

டிடெக்ட்டிவ் சியோ, ஜியூங்கி வந்ததும் பார்க்கின் பகையைச் சம்பாதித்துக் கொண்டார். காரணம். டிடெக்ட்டிவ் பார்க் வாக்குமூலம் வாங்கிக் கொண்டிருந்த அந்த இளைஞன் ஒரு அப்பாவி என்பதை தனது நிதானமான பாணியில் நிரூபித்தார். இது பார்க்கின் கோபத்தை கிளறியது. இப்படியே இருவரும் ஒருவருக்கொருவர் நான் முந்தி நீ முந்தி என்று முந்திரிக் கொட்டைத்தனங்களைச் செய்தனர். அது இந்த விசாரணையை மேலும் குழப்பியதே ஒழிய தெளிவாக்கியிருக்கவில்லை. இதில் ச்சோ-வின் அடாவடித்தனங்கள் வேறு.

இவர்களின் அவசரக்குடுக்கைத்தன குழப்பங்கள், அந்த சீரியல் கில்லருக்கு சாதகத்தையே விளைவித்தது. இதனால், அவனது கற்பழித்து கொலை செய்யும் பணி செவ்வனே நடந்தேறியது. ஒன்றல்ல இரண்டல்ல. இப்படியே 10 கொலைகளை 1991 ஏப்ரல் 3ஆம் தேதி வரை பத்து கொலைகளை நடத்தி விட்டான். ஐந்து வருடங்களாக அவனைப் பற்றிய ஒரு சிறு துப்பு கூட இவர்களுக்கு கிடைக்கவில்லை.

ஐந்து வருடங்களா ஜியூங்கி காவல்துறை கண்டுபிடித்தது கொலையாளியின் ரத்தவகையை மட்டுமே. அதுவும் B+ என்பது மட்டுமே. அதை வைத்துக் கொண்டு இதுவரை சிக்கியவர்களின் ரத்த வகையோடு ஒப்பீடு செய்ததில் ஒருவருக்கும் அது ஒத்துப் போகவில்லை. ஜியூங்கியில் இதன் விசாரணையின் போது சந்தேகத்தின்படி விசாரிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? மொத்தம் 21,280 பேர்கள்.

எந்த ஒரு விசாரணைக்கும் காலவரையறை உண்டு. (Statute of Limitations) அதன்படி இந்த விசாரணை காலாவதியான தேதி 2006 ஏப்ரல் 2ஆம் தேதி.

2004ஆம் ஆண்டு ஒரு பெண் இதே மாடஸ் ஆப்பராண்டியில் கொலையாகியிருந்தாள். எனவே இந்த வழக்கு ஜூலை 2015 வரை நீடித்தது. அன்றுடன் இந்த வழக்கை தென்கொரிய சட்டமன்றத்தால் மூடிப்பட்டு விட்டது. But this case remains unsolved.

ஆனால், அந்த சீரியல் கில்லர் இன்றுவரை தனது அடையாளத்தை வெளியிடவுமில்லை. காவல்துறையால் கண்டுபிடிக்கவும் இயலவில்லை. அந்த சீரியல் கில்லரின் கொலைகளில் அப்படி ஒரு நேர்த்தி. ஒரு சிறிய தடயத்தை தவறுதலாகக் கூட அவன் விட்டு வைத்திருக்கவில்லை.

இவனை ”தென் கொரியாவின் ஸோடியாக்” (South Korean Zodiac) என்று விளித்தனர். அந்தளவுக்கு அவன் சோடியாக்கைப் போலவே உலகப் பிரசித்தம். ஸோடியாக்கிற்கு கூட ஒரு உருவம் உண்டு. ஆனால், ஹ்வாஸியூங் கொலைகாரனைப் பொறுத்தவரை அதுகூட இல்லை.




இந்த கொலைகளை அடிப்படையாகக் கொண்டு 2003 ஆம் ஆண்டு Memories of Murder என்றொரு படம் Bong Joon-Ho-வின் இயக்கத்தில் வெளியாகி சக்கைப்போடு போட்டது. சீரியல் கில்லர் கதைகளில் பெரும்பாலும், கொலையாளியின் அதீத வன்முறையையும், அவனது பாணியையும் அவன் பார்வையிருந்தே எடுப்பதுதான் வழக்கம். ஆனால், மெமரீஸ் ஆப் மர்டர் திரைப்படம் வழக்கத்திற்கு மாறாக, டிடெக்ட்டிவ் பார்க்கின் பார்வையிலிருந்தே கதை சொல்லப்பட்டிருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, கொலையாளியின் முகத்தை எந்த இடத்திலும் காண்பித்திருக்க மாட்டார்கள். அவ்வளவு நேர்த்தியாக, இதுவரை அந்த வழக்கின் விசாரணையில் கிடைத்த உண்மைக்கு மிக அருகில் எடுக்கப்பட்ட ஒரே படம் இதுவாகத்தானிருக்கும். மேலும், கொரிய திரைப்பட வரலாற்றில் அதிகப்பேரால் பார்க்கப்பட்ட முதல் திரைப்படமும் இதுதான்.

மேலும் சில திரைப்படங்களும், தொலைக்காட்சித் தொடர்களும், இந்தக் கொலைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவை எல்லாமே, Statute of Limitations-க்கு பிறகு நடப்பதாகவே எடுக்கப்பட்டது.

ஹ்வாசியான் தொடர் கொலைகளைப் பொறுத்தவரை அதனை சரிவர சித்தரித்தது மெமரீஸ் ஆப் மர்டர் திரைப்படம் மட்டுமே. இது எனக்கு மிகவும் பிடித்த திரைப்படங்களில் அதிமுக்கியமானது. சுவாரஸ்யமானதும் கூட. கொரிய திரைப்பட ரசிகர்கள் தவறவிடவே கூடாத படமும்.


மீண்டும் சந்திப்போம்.

Sunday, October 15, 2017

சீரியல் கில்லர்ஸ் - 3 - டெக்ஸ்டர்



சீரியல் கில்லர்ஸ்


வித்தியாசமான முறையில் கொலைகள் தொடர்ந்து நடக்கும். ஒவ்வொரு கொலைக்கும் ஒரு ஒற்றுமை இருக்கும். இதை மாடஸ் ஆப்பரண்டி (M.O – Modus Operandi) என்று விளிப்பார்கள். நம் ஒவ்வொருவருக்கும் ஒரே மாதிரியான ஸ்ட்ரோக், கையெழுத்து ஸ்டைல் இருக்கும் அல்லவா? அதைப் போல இது கொலைகாரர்களின் கையெழுத்து. ஆனால் அது அவர்களது விக்டிம்களின் பிரேதத்தின் மீதானதாக இருக்கும். ”இது அவன் செஞ்ச வேலையாகத்தான் இருக்கும்” என்று முடிவுக்கு வரும் அளவிற்கு சீரானதாக இருக்கும்.

நமக்கு தெரிந்த சில உதாரணங்களையே பார்ப்போமே

ராமன் ராகவ் - இரவில் மாடியில், ஜன்னலோரத்தில் தூங்கிக் கொண்டிருப்பவர்களை மண்டையில் இரும்புத்தடியால் அடித்து கொலை செய்வான். இது அவனது M.O.

ஜாக் த ரிப்பர் – தனது இரையாக உடலை விற்றுப் பிழைக்கும் பெண்களை தேர்வு செய்து, அவர்களைக் கொன்று இருதயம், கல்லீரல் போன்ற பகுதிகளை ஒரு தேர்ந்த மருத்துவனைப் போல அறுத்தெடுத்துச் சென்று மறைந்து விடுவான். யார் கண்டார், அவன் ஒரு அறுவை சிகிச்சை நிபுணராகக் கூட இருந்திருக்கலாம். இது அவனது M.O

பஹாதுர்கார் பேபி கில்லர் – 1995க்கு பிறகான ஹரியானாவில் ஐந்து முதல் ஒன்பது வயது வரையிலான பெண்பிள்ளைகள் மர்மமான முறையில் இறந்து கொண்டிருந்தனர். மொத்தம் 10 பெண்பிள்ளைகள் இறுதியில் 1998ல் சதிஸ் என்பவன் பிடிபட்டான். அவர்கள் அனைவரின் சாவுக்கும் ஒரு ஒற்றுமை வன்புணர்வு செய்தபிறகு கொலை செய்யப்பட்டிருந்தனர். இது சதிஸின் M.O

சோடியாக் – இளம் வயதினரை மட்டும் தொடர்ச்சியாக கொல்வான். கொன்றபின் உள்ளூர் பத்திரிக்கைக்கு தனது பெயரை உறுதிப்படுத்த புதிர்க் குறியீடுகளைக் கொண்ட கடிதத்தை அனுப்புவான். இது சோடியாக்கின் M.O

கொலைகாரர்கள் மட்டுமல்ல. திருடுபவர்களுக்கும், கொள்ளையடிப்பவர்களுக்கும் கூட ஒரு சிக்னேச்சர் இருக்கும். பூட்டை கம்பியால் நெம்பித் திருடுபவன், ஆளில்லாத சமயத்தில் வீடு புகுந்து திருடுபவன், கத்தியைக் காட்டி மிரட்டு கொள்ளையடிப்பவன், பிளேடு, பிக்பாக்கெட் என்று ஒவ்வொருவருக்கும் ஒரு மெத்தட் இருக்கும்.

திருடுபவனுக்கும் கொள்ளையடிப்பவனுக்கும் கூட தேவை, ஆசை, மோகம் என்று பல்வேறு காரணங்கள் இருக்கிறது. ஆனால், கொல்லுவதற்கு?

சீரியல் கில்லர்களுக்கு – அடிக்சன். நம்மில் பலர் சிகரெட் புகைப்பதை, குடிப்பழக்கத்தை, செல்போனை நோண்டுவதை, சீரியல் பார்ப்பதைக் கட்டுப்படுத்த / நிறுத்த முடியாமல் அதன்பிடியில் சிக்கி அவதிப்படுவோமே, அதைப் போல இவர்களால், கொலை செய்யாமல் இருக்க முடியாது போலும்.

ஆனால், இதெல்லாம் சீரியல் கில்லர்களைப் பற்றின ஒரு பொதுவாக தோராயமாக நம்பப்படும் எண்ணங்களே!

மேலும், நாம் கண்ட சீரியல் கில்லர்களைப் பற்றிய சினிமாக்களும், அதன் கதைகளும், நமக்கு அப்படிப்பட்ட எண்ணங்களையே வழங்கியிருந்தன.

சீரியல் கில்லர்களை வில்லனாகவும் (வெறுமனே வில்லன் என்கிற வார்த்தைக்குள்ளே அடைக்க முடியாதல்லவா? ஆகையால்) கொடூரமானவாகவும் சித்தரித்திருப்பார்கள். American Psycho (2000), Red Dragan (2002), Silence of the lambs (1991), Sweeney Todd (2007), Sleepy Hallow (1999), From Hell (2001), Memories of Murders (2003), I saw the devil (2010), Zodiac (2007)  இப்படி உதாரணங்களை பட்டியலிட ஆரம்பித்தால், அது எண்ணிக்கைகளுக்கு அப்பாற்பட்டதாகி விடும்.

இவைகளில் பெரும்பாலும், சீரியல் கில்லர்களை மேற்கூறியது போல, கொடூரமான வில்லன்களாக மட்டுமே சித்தரிக்கப்படுகின்றனர். வெறுமனே இறப்பவன் விக்டிம், கொல்பவன் கொடூரமான சீரியல் கில்லர் என்றே முடித்திருப்பார்கள்.

இந்த அடிப்படை இலக்கணங்களையும் வரைமுறைகளையும் உடைத்து, சீரியல் கில்லர்களை ஹீரோவாக சித்தரித்த படங்களும், கதைகளும் மிக மிகக் குறைவு.

கூகுளில் சென்று serial killer tamil movies என்று தேடினால், வேட்டையாடு விளையாடு, மூடுபனி போன்ற சொற்பமான படங்களே விடையாக கிடைக்கும். ஆனால், இந்தியன், அந்நியன், ரமணா, கஜினி போன்ற படங்களை சீரியல் கில்லர்களாக நாம் இதுவரை பாவித்ததே இல்லை. இதை உங்களால் மறுக்க முடியுமா? முடியாதல்லவா?

ஏன்?

அவர்கள் ஹீரோக்கள். அவர்கள் செய்யும் கொலைகள் கூட நியாயமானதாக இருக்க வேண்டும் என்று நாம் கண்களை கட்டப்பட்டிருக்கிறோம்.

நேரடியாகவே சீரியல் கில்லர்களை ஹீரோவாக சித்தரித்தால் (நெகட்டிவ் ரோல்) படம் ஓடாது என்பதாலா?

வாஸ்தவம்தானே! கோடிகளை முதலீடு செய்து எக்ஸ்பரிமெண்ட் முயற்சிகளால் கைகளை சுட்டுக் கொள்ள யாரும் தயாராக இருக்க மாட்டார்கள்தானே!

ஆளவந்தான் படம் இதற்கான ஒரு நேரடி உதாரணம்.

சரி. மேற்கண்ட சீரியல் கில்லர்களுக்கான இலக்கணங்களை உடைத்து ஒரு அற்புதமான படைப்பு ஒன்று இருக்கிறதென்றால் பார்க்க யாரும் விரும்புவார்கள்தானே? அப்படி ஒன்று இருக்கிறதா? என்கிற எனது தேடலுக்கான விடை…

Dexter ( TV Series 2006 – 2013)



இந்த டிவி சீரிஸை பார்க்கச் சொல்லி ஒரு நண்பர் தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டே இருந்தார். (அவர் ஏற்கனவே என்னை Stranger Things பார்க்கச் சொல்லி கட்டாயப் படுத்தியவர்) இந்த தொடர்களையெல்லாம் பார்க்காவிட்டால் உங்களோடு எனக்கு பேச்சு வார்த்தையே வேண்டாம் என்று என்னை விட்டு விலகியும் கூட விட்டார். அவரது கோபம் அதிகப்படியானதாக அன்று நாங்களெல்லாம் (வாட்சப் குரூப் நண்பர்கள்) நினைத்துக் கொண்டோம். ஆனால், அவரது கோபம் நியாயமானது என்பதை ஸ்ட்ரேஞ்சர் திங்ஸையும், டெக்ஸ்டரையும் பார்த்த பிறகு வெட்கத்தை விட்டு ஒத்துக் கொள்கிறோம். வீ ஆர் சாரி கில்லாடி ரங்கா -/\-

இதைப் பார்க்க ஆரம்பிக்கும் போது எனக்கிருந்த மிகப்பெரிய பயம் ஒவ்வொரு சீசனுக்கும் பன்னிரண்டு என எட்டு சீசன்களுக்கிருந்த 96 எபிசோடுகள்தான். மேற்கூறிய பாராவில் குறிப்பிட்டிருந்த நண்பரின் பரிந்துரைகளை இக்னோர் செய்ய இதுவே முழு முதற் காரணம். ”இது ஆவறதில்ல. இது சத்தியமா ஆவறதில்ல” என்று பார்க்காமல் தவிர்த்துக் கொண்டே இருந்தேன். கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களாக.

அகஸ்மாத்தாக இதன் ஒரு எபிசோடை அமேசான் ப்ரைமில் பார்க்க ஆரம்பித்தேன். பார்க்க ஆரம்பித்து மூன்று மணி நேரங்களில் மூன்று எபிசோடுக்கு என்னை உள்வாங்கியிருந்தது (ஆம். ஒரு எபிசோடுக்கு 50 லிருந்து 60 நிமிடங்கள் வரை) ஆனால், நேரம் போனது கூட தெரியாமல் நான் பார்த்துக் கொண்டிருந்தேன் என்பதை பின்புதான் உணர்ந்தேன். இதோ இரண்டே வாரங்களில் 96 எபிசோடுகளையும் பார்த்தாகி விட்டது. ”அவ்ளோ ஸ்பீடா” என்றால், இல்லை என்றுதான் சொல்ல முடியும். ஆனால், அது ஒரு உள்வாங்கி. அதிலுள்ள பாத்திரங்கள் நம்மை உள்ளிழுத்து அவர்களோடே நம்மை பயணிக்கச் செய்து கால நேரத்தை கடக்கச் செய்யும் ப்ளாக் ஹோல்.

அப்படி என்னதான் கதை அது?

கதையையெல்லாம் விவரிக்க முயல்வது மெத்தக் கடினம். என்னைக் கவர்ந்த சில கதாபாத்திரங்கள் அதில் உண்டு. நிறையவே. அவர்களைப் பற்றி அடுத்தடுத்த பதிவுகளில்


மீண்டும் சந்திப்போமா…