Sunday, December 17, 2017
Sunday, December 3, 2017
வில்லன்ஸ் - 1 - ப்ரசன்னா
வில்லன்ஸ் - 1
பிரசன்னா
எண்பதுகளில் தமிழ்
சினிமாக்களில் பெண்களின் வாழ்க்கையை நாசமாக்கும் வேலையைச் செய்யும் வில்லன்கள் என்றவுடன்
சட்டென ஞாபகத்திற்கு வருவது ராஜீவ், ரவீந்தர் போன்றவர்களே. இவர்களிருவரும் ரிட்டயர்டானதும்
அந்த இடத்தில் ஒரு பெரிய வெற்றிடம் ஏற்பட்டது. தொண்ணூறுகளில் வில்லன் என்று பெயர் சொன்னதும்
ஞாபகத்தில் வரும் பிரகாஷ்ராஜ், ரகுவரன் போன்றவர்களும் அதைத்தாண்டி பல வெரைட்டியான வில்லன்
நடிப்பில் ஈடுபட்டிருந்ததால், அந்த வெற்றிடம் பெரிய பள்ளமாகவே தமிழ் சினிமா ரசிகர்களால்
உணரப்பட்டது.
நண்பர்களோடு அரட்டையடிக்கும்
சமயத்தில் இதைப்பற்றி பேசியதுண்டு. ”என்னடா வில்லனுக வர்றானுக? ச்சைக் ஒரு ரேப்ப கூட
ஒழுங்கா அட்டன் பண்ணத் தெரியலியே” என்று வடிவேலு வசனத்தோடு கலாய்த்ததுண்டு. உண்மையில்
அப்படி சொல்லுபவனிடம், ”ஆமா இவரு அப்டியே டெய்லி ரெண்டு ரேப் அட்டன் பண்ணி டயர்டாகிட்டாரு.
ஒரு பொண்ணுகிட்ட ஹாய் சொல்ல மூனு வருசமா முக்குற நாய்க்கி பேச்சப்பாரு” என்று பதிலுக்கு
அவனைக் கலாய்ப்பதும் வழக்கம்.
2008. அப்போதெல்லாம்
ஆளுக்கொரு செல்போன் கையிலிருந்தாலும் ஆண்டி சோஸியல்களாக இல்லாமல் அதிக நேரம் நண்பர்களோடு
நேரடியாக பேசுவதிலேயே செலவழிப்போம். அப்படியே நண்பர்களுக்கு போன் செய்தாலும் நான்கு
நொடிகளில், அந்த எடத்துக்கு வந்திரு என்று சொல்வதற்காகத்தான் மொபைல் போனையே உபயோகப்படுத்திக்
கொண்டிருந்தோம். அப்படி அரட்டையடிக்கும் சமயத்தில் நண்பன் ஒருவன் சொன்ன கேரக்ட்டர்தான்
தயா. சரி அதையும்தான் பார்த்துவிடுவோமென தியேட்டருக்கு அனைவரும் கிளம்பினோம். கிட்டத்தட்ட
21 பேர். படம் போடுவதற்கு முன்பு வரை, “எனக்கென்னமோ நீ ஓவரா பில்டப் பண்ணிச் சொல்றியோன்னு
தோனுது. நீ சொன்ன மாதிரி மட்டும் இல்லாம இருக்கட்டும். அப்றம் இருக்கு உனக்கு” என்று
அவனிடம் சொல்லிக் கொண்டிருந்தோம். இன்னும் ஒரு நண்பன் அதற்கு மேலே போய் மிஷ்கினின்
முந்தைய படத்தில் வந்த நரேனின் டயலாக்கை படுகேவலமாக திட்டிக் கொண்டிருந்தான். “இப்பிடித்தாண்டா
போனவாட்டி சித்திரம் பேசுதடின்னு ஒரு படத்துக்கு நீ சொன்னேன்னு கூட்டிட்டு போன. அந்த
ஹீரோ நரேன் வேற, சாவடிச்சிருவேண்டா சாவடிச்சிருவேண்டான்னு சொல்லி சொல்லி சாவடிச்சாண்டா.
இப்ப அதே டைரக்டரு, அதே நரேனு” என்று உண்மையில் அந்தப் படத்தில் வந்த மற்ற ஆஸ்பெக்ட்டுகளை
ரசித்திருந்தாலும், நரேனின் அந்த சாவடிச்சிருவேன் டயலாக்கை அந்தப் படத்தோடு ஒவ்வமையாகவே
கருதினோம்.
ஆனால், அஞ்சாதேவை
பார்த்து முடிந்த போது… அசந்து போயிருந்தோம். தமிழ் சினிமாவின் கலர்களில் ஒட்டாமல்
ஒரு தமிழ் சினிமா. அதுவும் ஒவ்வொரு கேரக்ட்டர்களுக்கும் ஒரு குணாதிசியத்துடன். பாண்டியராஜனை
ஆண்பாவம் தாண்டி நாங்கள் வித்தியாசமாக உணர்ந்ததில்லை. ஏனென்றால், அவர் இயக்கி மற்றும்
நடித்து வெளிவந்த அத்தனை படங்களிலும் கிட்டத்தட்ட ஆண்பாவத்தில் வந்த அதே பாண்டியன்
கேரக்ட்டரே எல்லா படத்திலும் நடித்தது போலிருக்கும். இதில் வில்லன். ”அட்றா சக்கை”
என்றோம்.
இவற்றையெல்லாம்
தாண்டி நாங்கள் எதிர்பார்த்த அந்த முக்கியமான முதல் பாரா வில்லன். அதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
பெண்களைக் கடத்தி, மிரட்டி பணம் வாங்கியதும், உடைகளைக் களைந்து வீட்டிற்கு திருப்பியனுப்புவது.
நண்பனின் தங்கை குளிப்பதை பாத்ரூம் கதவு வழியாக பார்ப்பது இவற்றையெல்லாம், ஏற்கனவே
அங்கொன்றும் இங்கொன்றுமாக பல படங்களில் சில வில்லன்கள் செய்திருந்தாலும், இதில் ஒட்டுமொத்தமாக
ஒரு வித்தியாசத்தை உணர்ந்தோம். கைக்கடிகாரத்தை உள் மணிக்கட்டு வழியாக நேரம் பார்ப்பது,
தனக்கென தனியாக ஒரு சில்வர் டம்ளரை டாஸ்மாக்கிற்கும் மற்ற இடங்களிலும் சரக்கடிக்கும்
போது உபயோகப்படுத்துவதென அந்த இடத்தில் தயா மட்டுமே தெரிந்தான். எங்கேயும் பைவ் ஸ்டார்
பிரசன்னா தெரியவில்லை. ரேப்பெல்லாம் செய்யவில்லையெனினும் மிரட்டியிருந்தான் தயா.
அன்று அந்த நண்பன்
தப்பித்தான். அவனிடம், ”அடுத்தவாட்டி இதே மாதிரி எதாச்சும் ஒரு கேரக்டருள்ள படத்த பாத்தியின்னா,
(வடிவேலு தலைநகரம் படத்தில், சுந்தர் சியிடம் தனது வயிற்றில் குத்தச் சொல்லி ஜாடை செய்வது
போல நாக்கை மடக்கி) ன்ன்ன்… ம்ம்ம்… என்கிட்ட
மட்டும் சொல்லு” என்று சொல்லி வைத்திருந்தேன். ஏனெனில் எங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ளவர்கள்
பெரும்பாலும் ஹீரோக்களை விட, காமெடியன்களையும், வில்லன்களையும் ரசிப்பவர்கள். ஒரு படத்தில்
வில்லன், ஹீரோ இருவரும் இருந்தும் படம் சொதப்பியிருந்தால் வில்லனுக்கு ஹீரோவுக்கு மேலான
/ ஈக்வலான பாத்திரப்படைப்பில்லை என்று வாதிப்பவர்கள் நாங்கள்.
அந்த நண்பன் எங்களது
அடுத்த வில்லனை கண்டுகொண்டு என்னை ஒரு சினிமாவிற்கு அழைத்துச் சென்றான். தனியாக. அந்தப்படம்தான்
முரண். ஆனால், முன்கூட்டியே அவன் சொல்லிவிட்டான் இது ஹிட்ச்காக்கின் Strangers on
a train காப்பியென்று. அதனால், அதையெல்லாம் பெரிதாக நினைக்காமல் அந்த வில்லனை மட்டும்
தனியே கவனித்தோம். ஆனால் அதே வருடத்தின் ஆரம்பத்தில் யுத்தம் செய்யையும் தவறாமல் பார்த்திருந்தோம்.
அதில் மிஷ்கினை மிகவும் ரசித்தோம். மாறாக வில்லன்களென்று தனியே ரசிக்க அதிலொன்றுமில்லை.
உடைத்துச் சொல்வதென்றால் வில்லனின் குணாதிசியம் எங்களைக் கவர வேண்டும். அந்த வேலையைச்
செவ்வனே செய்திருந்தான் அர்ஜுன். முந்தைய படத்தில் பர்வெர்ட்டாக இருந்தாலும் இந்தப்
படத்தில் சீப் திரில் என்கிற போர்வையில் பணத்துக்காக அலைந்தாலும் பேஸிக்கலி விமனைஸராக
அசத்தியிருந்தான் அர்ஜுன். மாடியிலிருந்து குதிப்பது, அடுத்தவன் தோட்டத்தில் மாங்காய்
பறிக்க வேலி தாண்டி மாட்டாமல் தப்பிப்பது, நெடுஞ்சாலையில் நடுவில் நின்று இருபுறமும்
வரும் வாகனங்களிடமிருந்து அடிபடாமல் திரும்புவதென அதையே ட்ரான்ஸ்பர்மேட் செய்து கொலை
செய்வது வரை அந்த கேரக்ட்டர் எங்களை மிகவும் கவர்ந்திருந்தது.
தயா, அர்ஜுன் இருவருக்கும்
பணம்தான் மோட்டிவ். இருவரும் பெண்களிடம் மோசக்காரர்கள். ஆனால் இரண்டிலும் வித்தியாசம்
காட்டியிருந்தார் பிரசன்னா. தயா, அர்ஜுன் இருவரும் எங்கள் நட்பு வட்டாரத்தில் மிகவும்
பிரசித்தம்.
கால மாற்றத்தில்
நான் எனது நண்பர்களை விட்டு பிரிய நேர்ந்தது. அதன் பிறகு அவர்களிடம் போன் காண்டேக்ட்டோடு
சரி. வாட்சாப், மெசஞ்சர் என எந்த உரையாடல்களும் அவர்களோடு இல்லாமல் போனது. அவர்கள்
இன்னமும் பேஸ்புக் வாட்சப் பக்கம் ஒதுங்காமல் இருப்பது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது.
அந்த நண்பர்களில்
ஒருவன் நேற்று போன் செய்து திருட்டுப்பயலே 2 பார்க்கும்படி எனைச் சொல்லியிருந்தான்.
நான் அவனிடம் செகண்ட் பார்ட் வரும் படங்களெல்லாம் முதல் பாகத்தை என்றும் மறக்கடித்ததில்லையே
என்று வாதிட்டேன். ஆனால், அவன் தீர்மானமாக சொன்னதும் சரியென்று இருமனதாகக் கிளம்பினேன்
அந்தப் படத்திற்கு.
மீண்டும் பிரசன்னா
பெண்களை மோசம் செய்யும் கேரக்ட்டரில் நடித்திருந்தாலும், மூன்றாவது முறையாகவும் எங்களை
(மன்னிக்கவும்) என்னை ஏமாற்றவில்லை. மேற்கூறிய தயா, அர்ஜுன் கேரக்ட்டர்களின் அப்டேட்டட்
வர்சன் தான். டெக்னாலஜியை வைத்து பெண்களை வசியம் செய்து, பின்னர் மோசம் செய்யும் கேரக்ட்டர்.
அதையெல்லாம் தாண்டி சில இடங்களில் வித்தியாசம் அந்த நடிப்பில் தெரிந்தது. பாபியின்
மனைவி அமலாவை அடைய நினைக்கும் பிரசன்னாவும், இந்த விசயத்தை ரகசியமாக ஒட்டுக் கேட்டு
அவனை நேரில் சந்திக்க வரும் பாபியும் ஒரு காப்பி ஷாப்பில் சந்திக்கிறார்கள். இந்த இடத்தில்
பாபியில் கையே ஓங்கியிருக்கும். பாபியைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் எவனையும் வேவு பார்க்க
முடியும் அதிகாரத்தில் இருப்பவர். பிரசன்னாவைப் பொறுத்தவரை பாபியின் மனைவி ஒரு டார்கெட்
அவ்வளவே. ஆனால், அதற்காக புல்லட் ட்ரெய்ன் சம்பவத்தில் பிரசன்னாவை பழிவாங்கியிருப்பார்
பாபி. ஒரு விமர்சனத்தில் ஆல்ரெடி படித்திருந்தேன். இது ஒரு கேட் அண்ட் மவுஸ் கேம்.
ஆனால், இருவருக்கும் ஈக்வலான ரோல் என. சரி. இந்த இடத்தில் இந்த சிச்சுவேசனுக்கு பிரசன்னா
என்ன செய்யப் போகிறாரென எதிர்பார்ப்பு கட்டாயம் இருக்கும்தானே. அதே எதிர்பார்ப்புடந்தான்
நானும் இருந்தேன். அடிபட்ட பாம்பு என்ன செய்யும்? பழிவாங்குமல்லவா? அதேதான். என்னயே
கெட்டவன் மாதிரி சித்தரிக்கிறியே, நீ நல்லவனான்னு பாக்க உன் கம்ப்யூட்டரை நைட்டே ஹேக்
பண்ணிட்டேன் என்று சொல்ல வேண்டும். இது வெறுமனே சாதாரணமான டயலாக் டெலிவரி. அதை பால்கி
@ பாலகிருஷ்ணன் டெலிவரி செய்த இடத்தில்தான் நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன். இந்தாளு
அங்கொன்னும் இங்கொன்னுமா படம் பண்ணாலும் இவன் வேற மாதிரிடோய் என்று கன்பார்ம் செய்து
கொண்டேன். அதே போல படம் முழுக்கவே டெக்னாலஜி உதவியுடன் பால்கி செய்யும் அதிரடி வில்லத்தனங்களே
மீதிக்கதையும்.
என்னடா இவன் திடீர்னு
பிரசன்னா புராணம் பாடுறானேன்னு முகம் சுழிக்க வேண்டியதில்லை. எங்களுக்கு இதே போல ஏகப்பட்ட
தமிழ் சினிமா கேரக்ட்டர்களைப் பிடிக்கும். அதையெல்லாம் வெளிக்காட்டியதில்லை. இதுவே
முதல்முறை என்பதால் புதுமையாகவும் தோன்றலாம். மற்றபடி இது ஒரு ஜாலியான நினைவு கூறல்
பதிவு. சீரியஸாக எதுவுமில்லை. ஆனால், எனக்கு உங்களிடம் கேட்க வேண்டிய ஒரு சீரியஸான
ஒரு கேள்வி உண்டு.
ஒரு நல்ல வில்லனில்லாமல்
எந்த ஹீரோவாவது ஹீரோவாக ஜெயிக்க முடியுமா?
Subscribe to:
Comments (Atom)

