Sunday, December 17, 2017

Black Panther - Solo Debut



இதன் முந்தைய பகுதிகளை வாசிக்க




 Black Panther - Solo Debut


மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸைப் பொறுத்தவரை ப்ளாக் பேந்தரின் கதை, ஹோவார்ட் ஸ்டார்க், ஸ்டீவ் ரோஜர்ஸிற்கு கேப்டன் ஷீல்டை செய்ததிலிருந்தே துவங்குகிறது. இன்னும் சரியாக சொல்லப் போனால், Captain America – The First Avenger (2011)-இல் இருந்தே துவங்குகிறது. அந்த ஷீல்ட், வைப்ரேனியத்தால் ஆனது. அது மிகவும் அரிதிலும் அரிதான உலோகம். உலகத்தில், வகாண்டாவில் மட்டுமே கிடைக்கக் கூடிய உலோகம். அங்கே மட்டும் எப்படி கிடைக்கிறது?

சிலபல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் ஒரு விண்கல் பறந்து வந்து பூமியில் விழுந்தது. அதில் இருந்த, பூமியில் அதுவரை இல்லாதிருந்த ஒரு உலோகம்தான் வைப்ரேனியம். அது விழுந்த இடம் பத்தாயிரம் வருடங்கள் கழித்து வகாண்டாவாக மாறியிருந்தது. (இது ஒரு கற்பனை வரலாறு. மார்வெல் காமிக்ஸிற்காக புனையப்பட்டது - பின்வருபவையும்).

வகாண்டாவின் மீது ஊடுறுவும் விஷமிகளின் மெயின் டார்கெட் மொத்தமும் அந்த வைப்ரேனியம் மட்டுமே. அப்படி ஒரு அரிதான உலோகம் நமது ஊருக்குள் இருப்பது தெரிந்தால், அமெரிக்காக்காரன் சும்மா இருப்பானா? உடனே நட்பு பாராட்டிக் கொண்டு அதற்குள் தனது வியாபாரத்தை நுழைத்து அதற்கு பண்டமாற்றாக வைப்ரேனியத்தைக் கேட்பான். பேரம் படியாவிட்டால், பயங்கரவாத தேசமென்று திரித்து போர் தொடுத்து மக்களை அளித்து அதிரடியாக உள்நுழையப் பார்ப்பானல்லவா? ஆனால், வகாண்டாவிற்குள் ஊடுறுவவதென்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. முதலில் அப்படி ஒரு விசயம் இருப்பது மற்ற நாடுகளுக்கு தெரிந்தால்தானே?

அதெப்படி தெரியாமல் போகும்? செயற்கோள்களெல்லாம் சொம்பைகளா? என்றெல்லாம் கேட்கத் தோன்றுகிறது தானே?

முதலில் ஒரு விசயத்தை தெரிந்து கொள்வது அவசியம். புறத்தோற்றத்திற்கும், செயற்கைக் கோள்களின் கண்களுக்கும் வகாண்டா, அடர்ந்த காடுகளும், ஏரிகளும், பனிபடர்ந்த மலைகளும் நிறைந்த டிபிக்கல் ஆப்பிரிக்காவாகத்தான் தெரியும். ஆனால் அதற்குள்ளே உண்மையில் என்ன இருக்கிறது? அது எப்படிப்பட்ட அறிவியல் வளர்ச்சிகளை தன்னுள்ளே கொண்டது என்பதை வெளித் தோற்றத்திற்கு தெரியாத வண்ணம் ஒரு ஷீல்ட் அமைக்கப் பட்டிருக்கும். அது வெளியிடும் ரிப்ளெக்சனைத்தான் செயற்கைக் கோள் படம் பிடிக்கும். இன்னும் சொல்லப் போனால், உலகத்தின் மற்ற வளர்ந்த நாடுகளை விட பலமடங்கு முன்னேறிய நாடு இந்த வகாண்டா.

ஓகே. மீண்டும் MCU-விற்குள் வருவோம்.

ப்ளாக் பேந்தரை ஏற்கனவே Captain America – Civil War (2016)-இல் கூட்டத்தோடு கூட்டமாக அறிமுகப்படுத்தியிருந்தாலும் அவருக்கென Solo Debut Movie வரும் 16/02/2018 இல் வெளியாகவிருக்கிறது. அதன் கதை என்னவாக இருக்கப் போகிறது? மே மாதம் வெளியாகப் போகும் அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் படத்திற்கும் இதற்கும் எதாவது தொடர்பிருக்குமா? என்பதை பின்வரும் பத்திகளில் பார்க்கலாம்.

ப்ளாக் பேந்தர் என்பது, ஒரு ஆளின் பெயரல்ல. அது ஒரு பதவி. வகாண்டாவில் உள்ள ஒருவர் அந்த நாட்டின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும், அதன் கனிம வளங்களையும், நாட்டு மக்களையும் காக்கும் காவலனுக்கு அந்தப் பெயர். அந்தப் பதவிக்கு பல்வேறு லெவல்களில் மல்யுத்தம் நடக்கும். அதில் அங்குள்ள மக்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். அதில் வெற்றி பெறுபவனே வகாண்டாவின் ப்ளாக் பேந்தராகவும், அந்த நாட்டின் அரசனாகவும் அங்கீகரிக்கப்படுவான்.

வெளியாகப்போகும் இந்தப் படத்தில் நாம் பார்க்கப் போவது ஒரு ப்ளாக் பேந்தரல்ல. மூன்று பேர்.

T’Chaka – ட்’ச்சக்கா - இவர்தான் தற்போதைய ப்ளாக் பேந்தர். வகாண்டாவின் அரசன். ஆனால், இவரை கேப்டன் அமெரிக்கா சிவில் வார் கதையில் வியன்னாவில் நடக்கும் ஒரு பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட ஒரு வெடி விபத்தில் இறந்து விட்டாரென்பது ஞாபகத்தில் உள்ளதல்லவா? அங்கேயிருந்துதான் பக்கி பார்னேவின் மீது அந்தப் பழி விழுந்து, ட்’ச்சக்காவின் மகன் துரத்திக் கொண்டு வருவான் அல்லவா. ஓகே அவர் இறந்து விட்டாரென்பதால் அவரது மகன், நேரடியாக அவரது ப்ளாக் பேந்தர் பதவியில் உட்கார்ந்து விடலாம் என்று நினைத்தால் அது தவறு. வாகாண்டாவின் சட்டங்கள் கடுமையானது. மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கும் எலெக்சன் முறையல்ல. முறைப்படி எல்லா தகுதிகளும் உடைய, அதற்கான பயிற்சியில் கற்றுத் தேர்ந்த, ஒருவனால் மட்டுமே அந்தப் பதவிக்காக நடக்கும் மல்யுத்தப் போட்டியில் ஜெயித்து ப்ளாக் பேந்தராக முடியும்.

ஆகவே இந்தப் படத்தின் கதை அதற்கான போட்டிச் சண்டையில் ஈடுபடுவதாகவும் இருக்கப் போகிறது.

ட்’ச்சக்கா ப்ளாக் பேந்தராக இருந்த போது, வகாண்டாவை கொள்ளையடிக்க யுலிசெஸ் கிளா (Ulysses Klaw) என்பவனுக்கு உதவிய வகாண்டியனின் மகன் தான் N’Jadaka – ன்’ஜடாக்கா. இதே யுலிசெஸ் கிளாவின் ஒரு கையை Avengers – Age of Ultron (2015) – இல் அல்ட்ரான் துண்டித்ததை பார்த்திருக்கிறோம் ஞாபகமிருக்கிறதா? அதே ஆள் தான். அவன் அப்பொழுதே CIA-வின் வசம் கைதாகி விட்டான். ப்ளாக் பேந்தர் கதைகளைப் பொறுத்தவரை அவன் ஒரு முக்கியமான கதாபாத்திரம். ஆகவே அவனை மீண்டும் சி.ஐ.ஏ-விடமிருந்து தப்பிக்க வைக்கும் கதாபாத்திரமாக இருக்கப் போவது ன்’ஜடாக்கா அலையஸ் எரிக் கில்மாங்கர் (Erik Killmonger). இந்தப் படத்தின் மெயின் வில்லன்கள் இரண்டு பேர். யுலிசெஸ் கிளா மற்றும் கில்மாங்கர். அந்த இரண்டாவது பிளாக் பேந்தர் இந்த கில்மாங்கர்தான். அவனும் ப்ளாக் பேந்தர் போல கருப்பு வைப்ரேனியத்தினாலான கருப்பு உடையில் இருப்பது குழப்பத்தைத் தரலாம். ஆனால், அதில் உள்ள சில பகுதிகள் தங்க நிறத்திலிருப்பதால் பிரித்தறிய முடிய சுலபமாக இருக்கலாம்.

மூன்றாவதாக நமது ஹீரோ ட்’ச்சாலா. ப்ளாக் பேந்தர் உடையில் சிவில் வாரில் பக்கியை துரத்தியவன். அது உண்மையில் தனது தந்தையின் ப்ளாக் பேந்தர் உடை. இவனுக்கான உடையை அவன் இன்னும் அடையவில்லை. அது வரப் போகும் இந்தப் படத்தின் முக்கியக் காட்சியாக இருக்கும்.

டோனி ஸ்டார்க்கிற்கு ஜார்விஸ் போல, ட்’ச்சாலாவிற்கு அவனது தங்கை ஷூரி (Shuri). இவள் ட்’ச்சக்காவின் இளைய மகள். ட்’ச்சாலா பறந்து பறந்து எதிரிகளுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் பொழுது, அவனது உடையில் வேண்டிய மாற்றங்களை அமைக்கும் வேலையோடு மட்டுமல்லாமல், இவளும் அவனுக்கு இணையாக பறந்து பறந்து சண்டையிடும் திறனுடையவள்.

கில்மாங்கருக்கும், ட்’ச்சாலாவிற்கும் நடக்கும் பதவிச் சண்டையே இந்தப் படத்தின் பிரதானக் கதையாக இருக்கலாம். அதை ட்’ச்சாலாவோடு நேரடியாக மோதாமல், யுலிசெஸ் கிளாவோடு இணைந்து கொண்டு வகாண்டாவை கைப்பற்றும் சூழ்ச்சியோடு செய்வதாக இருக்கப் போகிறது இந்தப் படத்தின் கதை. மூன்றாவதாக ம்’பாகு (M’Baku) என்றொரு வில்லனும் உண்டு. இவனுக்கு Man-Ape என்றும் White Gorilla என்றும் பெயர்களுண்டு. யுளிசெஸ் கிளாவின் துண்டான ஒரு கைக்கு பதிலாக வேறொரு கை ஒன்று அவனுக்கு காமிக்ஸ் கதைகளில் உண்டு. Super Sonic Hand. அதிலிருந்து வெளிவரும் சப்தம் பெரும் சேதங்களை விளைவிக்கும் தன்மையுடையது.


இந்த வில்லன்களையெல்லாம் எப்படி தனது ப்ளாக் பேந்தர் பதவியில்லாமல் முறியடித்து, வகாண்டாவையும், அதன் வளங்களான வைப்ரேனியங்களையும் ட்’ச்சாலா எப்படி காப்பாற்றப் போகிறான் என்பதையும், இந்தப் படத்திற்கும் இன்பினிட்டி வார் திரைப்படத்திற்கும் எதாவது தொடர்பிருக்குமா என்பதையும், இதில் தோன்றப் போகும் மற்ற மார்வெல் சூப்பர் ஹீரோக்களெல்லாம் யார் யாரென்பதையும் 16/02/2018 அன்று வெளியாகப் போகும் ப்ளாக் பேந்தர் திரைப்படத்தில் காண நானும் உங்களோடு காத்திருக்கிறேன்.


2 comments: