Monday, December 14, 2020

Triples (2020) - Web Series

 


தமிழ்ல ஒரு சீரிஸ் நல்லாருந்தா அதுக்குன்னு டைம் வேஸ்ட் பண்ணி பதிவெழுதலாமா, வேணாமா?

 

இருந்திச்சின்னா எழுதலாம். ஆனா அப்டித்தான் நல்லா இருந்திச்சு. ஆனா மாது சீனு மைதிலின்னு எல்லாமே கிரேஸி மோகனை ஞாபகப் படுத்திகிட்டுத்தான் இருந்திச்சிங்கறதையும் சொல்லிக்கிறேன். So,

 

Triples (2020)

Web Series, Comedy

 

ஜெய், விவேக் பிரசன்னா, ராஜ்குமார் மூனு பேரும் சேர்ந்து ஒரு ஐடி பார்க்ல கலக்கிட்டடா காப்பின்னு ஒரு காப்பி ஷாப் ஆரம்பிக்கிறாங்க. அதுக்காக பேபி சேட்டாங்கற ரவுடி பைனான்சியர்கிட்ட (கம்மட்டிபாடம்ல பாலகிருஷ்ணனா நடிச்சவர்) இருபது லட்சம் அஞ்சு வட்டிக்கி வாங்கறாங்க. (ஹார்ம்லெஸ் காமெடி வில்லன்தான்). எல்லாம் நல்லா போய்ட்டிருந்த சமயத்துல, அங்க வேலை பார்த்திட்டிருந்த பையன், அந்த ஐடி கம்பெனியில வேலை பார்த்துகிட்டிருந்த அந்த ஏரியா ஆளுங்கட்சி கவுன்சிலர் (ஏ.வெங்கடேஷ்) பொண்ணை இழுத்துகிட்டு ஓடிப் போயிடுறான். போனவன் சும்மா போகல. பேபி சேட்டாவுக்கு குடுக்கறதுக்காக வச்சிருந்த இருபது லட்சத்தையும் லவட்டிகிட்டு ஓடிப் போக, அவங்க ரெண்டு பேரையும் தொரத்திகிட்டு இவங்க மூனு பேரும் போக, பேபி சேட்டா குரூப்பும், ஆளுங்கட்சி கவுன்சிலர் குரூப்பும் இவங்கள தொரத்திகிட்டு போக, செம அமளி.

 

கிட்டத்தட்ட சுந்தர்.சி படம் மாதிரி சீரிஸ் மொத்தமும் கலகலப்பா போகுது.

 

ஜெய் – இந்தப் பயபுள்ள பொறக்கும் போதே நாம யாரையெல்லாம் நெனச்சி கிரஸ்ன்னு உருகறமோ, அவங்க கூடயெல்லாம் ஜோடி போட்டு ரொமான்ஸ் பண்ற வரத்தோட பொறந்திருக்கும் போல. நயன்தாரா, ஸ்வாதி, நஸ்ரியா, பிரியா ஆனந்த், அஞ்சலி, ஆன்ட்ரியா, விஜயலட்சுமின்னு வாணி போஜன் வரைக்கும் ஜோடி போட்டு ரொமான்ஸ் பண்றாப்ல. அட, அவ்ளோ ஏன்? சன்னி லியோன் கூட டூயட் பாடுன ஒரே தமிழ் நடிகர் இவர்தான்னு சொன்னா அது மிகையாகாது. இருங்க கண்ண தொடச்சிக்கிறேன். ச்சே ச்சே எனக்கு பொறாமையெல்லாம் இல்ல. லைட்டா இல்ல. ஹெவிய்ய்ய்ய்யாவே பொறாமைதான். மொத பொண்டாட்டி வாணி போஜனை டைவர்ஸ் பண்ணிட்டு… 


எதே…??? வாணி போஜனையே டைவர்ஸா??? 


இருங்க இருங்க அதுக்கும் பயபுள்ள ஒரு காரணம் வச்சிருக்கு. அதுக்கப்புறம் அதே அப்பாவி மூஞ்ச வச்சிக்கிட்டு இன்னொரு பொண்ணு கூட லவ்ஸு, கல்யாணம்னு அத ஏன் கேக்கறீங்க? என்னமோ நல்லாருந்துட்டு போகட்டும்.

 

விவேக் பிரசன்னா – மேயாத மான், சூரரைப் போற்றுக்கப்புறம் நெஜமாவே சொல்லிக்கிற மாதிரி ஒரு காமிக்கல் கேரக்ட்டர். அதுவும் கிரேஸி மோகனோட ஆஸ்தான கதாபாத்திரம் மாதுவாவும், ஜானகியோட கணவனாவும். மாது ஜானகின்னு சொல்லியாச்சு. அது பிராமின் கேரக்ட்டரா இல்லாம இருந்தாத்தான் ஆச்சரியம். இந்த சீரிஸ்ல அதிகமா ஸ்கோர் பண்ணி இன்னொசண்ட் மேனரிசத்தால நம்மள பொரண்டு பொரண்டு சிரிக்க வைக்கிறது இவர்தான்.

 

ராஜ்குமார் – நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் படத்துல பாலாஜியாவும், சீதக்காதி படத்துல சூட்டிங்ல ஹீரோவா நடிக்கிற சரவணனாவும் நடிச்சவர். இன்னும் சரியா சொல்லனும்ன்னா, ”நா சொன்னா நீ கேப்பியா மாட்டியா? மயிரு நீ சொன்னா நா யேண்டா கேக்கனும்னு வி.சே கேப்பாரே, அது இவரப் பாத்துதான். ஜெய்-கூட ஆல்ரெடி சரஸ்வதி சபதம்ல நடிச்சிருப்பாரு. F.R.I.E.N.D.S சீரிஸ்ல Joey எப்டியோ, இதுல இவர். 


ஆக மொத்தம் மூனும் மூனு தத்தி ப்ளஸ் பிளேபாய்ஸ்.


வாணி போஜன் – இந்த சீரிஸ்ல நடிக்கிறதுக்காக செலக்ட் பண்ணானுகளா, இல்ல சீரியல்ல நடிச்ச பொண்ணுதானன்னு கிளிசரின ஒரு பாக்ஸ் ஆர்டர் பண்ணிட்டு இவங்கள செலக்ட் பண்ணானுகளான்னு தெர்ல. இப்டியெல்லாம் வாணிய மிஸ்யூஸ் பண்ணதுக்கு, டேய் நீங்கெல்லாம் நல்ல்ல்ல்லா……வே இருக்க மாட்டிங்கடா :’( ஏன்னா சமீபத்துல வந்த பென்குயின்ல கீர்த்தி சுரேஷ் எப்டி நடிச்சிருந்ததோ அத அப்டியே டிட்டோ நடிக்க ஆள மட்டும் மாத்தி கூப்ட்டிருக்கானுக. அதுவும் ஒரு காமெடி சீரிஸ்ல. கொஞ்சம் கூட மனசாட்சி, மனிதாபிமானம்ங்கறதெல்லாம் இல்லையாடா? இல்ல அதெல்லாம் வழக்கொழிஞ்சி வத்திப் போச்சா? ச்சைக் ச்சைக் ச்சைக் அயம் பீலிங் டூ திரீ பைவ் மச் டுடே

 

மத்தபடி இதுல மெயின் வில்லன்களா நடிச்ச, ஏ.வெங்கடேஷ் & மணிகண்டன் ரெண்டு பேர்த்தோட நடிப்ப விட (அது வழக்கமா நல்லாத்தான் இருக்கும். அவங்கதான் எப்பவும் அவங்க பார்ட்ல குறை வச்சதில்லியே) அவங்க கூட வர்ற அடியாள்களோட காமெடிதான் செம டைமிங்ல இருந்தது.

 

ஆக மொத்தத்துல இந்த சீரிஸ் குடும்பத்தோட பாக்கறளவுக்கு,

 

இரு இரு சுந்தர்.சியோட கச்சாமுச்சா காட்சிகளோட உள்ள ஹீரோயினிகளயே குடும்பத்தோடதான பாத்துக்கிருக்கோம்?

 

ஆமா சரிதான். ஆனா இது உண்மையிலயே குடும்ப…

 

நீதான சுந்தர்.சி படம் மாதிரின்னு சொன்ன?

 

நா சுந்தர்.சி பட காமெடி மாதிரி இருக்கும்னு சொன்னேன்.

 

ஓஹோ…!

 

கூடவே கிரேஸி மோகனையும் க்வோட் பண்ணேன், நீர் பாக்கலியாங்காணும்?

 

ஓ அப்டி.

 

அப்டித்தான்!

 

அவங்கள வுடுங்க. இது வழக்கம்போல சொல்றதுதான். இது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்ல அவைலபிள்.

 

மீண்டும் ஒரு நல்ல சினிமா / சீரிஸ் பத்தின பதிவுல சந்திப்போமா!

 


Wednesday, December 9, 2020

Honest Thief (2020)

 


Honest Thief (2020)

Action, Thriller

ஒரு திருடன். பன்னண்டு பேங்க். ஒன்பது மில்லியன் டாலர். மொத்தத்தையும் லவட்டிகிட்டு ரொம்ப முக்கியமா ஒரு தடயம் கூட விட்டு வைக்காம வெளிய நிம்மதியா சுத்திகிட்டு திரியிறான். தொழில்ல அவ்ளோ சுத்தம். அவன் குறி வைக்கிறதெல்லாம் ஸ்மால் டவுன் பேங்க்ஸ். அதனால அதோட செக்யூரிட்டியும் சுமாராத்தான் இருக்கும். லாக்கரும் பழைய மாடலாத்தான் இருக்கும். எல்லா லாக்கரையும் சொல்லி வச்ச மாதிரி டெட்டனேட்டர் வச்சி மூனு நாலு நாள் லீவு உள்ள நேரமா பாத்து ஆட்டைய போடுறான். போலிஸுக்கு ஒரு துரும்பும் கிடைக்கறதில்ல துப்பும் கிடைக்கறதில்ல. அதனால பல வருசமா அத ரொம்ப தீவிரமா தேடிட்டு, பேப்பர்லயும் ட்ரெண்டிங்ல இருந்துட்டு கடைசில அத பெயரளவுல ஓபன்ல இருக்கற கேஸா காட்டி ரெண்டு பேர அதுக்கு நியமிச்சிட்டு கவர்மெண்ட் ஒதுங்கிக்கிது.

ஆனா அதை செஞ்ச திருடன், நம்ம ஹீரோ ஒரு பொண்ண சந்திக்கிறான். ஹீரோ ஃபிப்ட்டி ப்ளஸ். அவர் சந்திக்கிற பொண்ணு ஃபோர்ட்டி ப்ளஸ். அவளப் பார்த்த நிமிசத்துலேர்ந்து அவன் திருட்டுல உள்ள கிக்க, அவளோட அருகாமையில உணருறான்.

அதனால வங்கிக் கொள்ளையில இருந்து ரிட்டயர்டாகனும்னு விரும்புறான். அத ஒரு தீர்வா நெனச்சிகிட்டும், தன் காதலிக்கு நேர்மையா இருக்கறதா நெனச்சிகிட்டும், போலிஸுக்கு கால் பண்ணி, தான்தான் அந்த வங்கிக் கொள்ளையன்னும், இதுவரைக்கும் பன்னண்டு பேங்குகள தடயமே இல்லாம கொள்ளையடிச்சதாகவும், அந்தப் பணம் மொத்தத்தையும் சில கண்டிசன்களின் பேர்ல திருப்பி ஒப்படைக்கறதாகவும் சொல்றான்.

ஆனா போலிஸ், ”ஓ பேங்க் கொள்ளை கேஸா, இதோட ஒன்பதாவது ஆள் நீ. எதாவது நாங்க நம்புற மாதிரி சொல்லு”ன்னு சொல்லி கட் பண்ணிடறாங்க. இந்தக் கேஸ் ட்ரெண்டிங்ல இருந்ததால, பல பேர் இதை தான்தான் செய்ததாகவும் தன்னை வந்து கைது பண்ணனும்னும் பல போன் கால்கள் இதுக்கு முன்னாடி வந்ததனால, போலிஸ் இதையும் ஒரு prank / fake காலாகத்தான் பாக்குது.

சரி தொலையிது. இத இந்தக் கேஸ ஹேண்டில் பண்ற ஆளுங்ககிட்ட அனுப்புறேன்னுட்டு அந்த அதிகாரி சொல்லிட்டு கால கட் பண்ணிடறாரு. அதே மாதிரி நம்ம ஹீரோவோட கன்ஃபெசனையும் அதுக்கான டிபார்ட்மெண்ட்ல ஃபார்வேர்டும் பண்ணிடறாரு.

ரெண்டு நாளாகியும் எந்த போலிஸும் தன்னை வந்து அரெஸ்ட் பண்ணாததால கடுப்பான நம்ம ஹீரோ மறுபடியும் கால் பண்ணி போலிஸ்கிட்ட கடுப்பா பேசுற சமயத்துல அவர விசாரிக்க வேண்டிய டிபார்ட்மெண்ட் ஆளுங்களும் வந்து சேர்ந்துடறாங்க.

அவன்கிட்ட, ”சொல்லுப்பா நீ சொல்றத நாங்க எப்டி நம்புறது? இதுவரைக்கும் பன்னண்டு பேரு இந்தக் கொள்ளைகள செய்ததா கன்ஃபெஸ் பண்ண கால் பண்ணிருக்காங்க. எதுவுமே உண்மையில்ல. உன்ன எப்டி உண்மையான கொள்ளையன்னு நம்புறது”ன்னு கேட்டுட்டும் கேலியா சிரிக்கிறாங்க.

அந்த அதிகாரிங்ககிட்ட ஒரு லாக்கர் சாவியையும் அட்ரஸையும் கொடுத்து, ”அங்க போய்ப் பாருங்க. உங்களுக்கு நம்பிக்கையிருந்தா என்னை அரெஸ்ட் பண்ணுங்க”ன்னு சொல்லி அனுப்ப அந்த அதிகாரிங்க அங்க போறாங்க.

அங்க மூனு மில்லியன் டாலர் அவங்களுக்கு கிடைக்கவும், அங்கதான் ஒரு சின்ன ட்விஸ்ட். அந்த அதிகாரிங்க மனசு மாறுது. இவன நம்புறதுக்காக இல்ல. அதை ஆட்டையப் போடுறதுக்கு. அவங்க இவன சும்மா விட்டாங்களா? அந்தப் பணம் மொத்தமும் என்ன ஆச்சு? அப்டிங்கறதுதான் Honest Theif (2020) படத்தோட மீதிக் கதை.

ஆச்சரியப்படுற விதமா இந்தக் கதையும், Liam Neesonக்கு அவரோட முந்தைய படங்கள் மாதிரி Cat and mouse கதையா அமைஞ்சிருக்கா, இல்ல அந்த மாதிரிக் கதைகள இந்த ஆள் தேடித் தேடி நடிக்கிறாரான்னு தெரியல. ஏன்னா இதுவும் I don’t know who you are. I don’t know where you are. But, I will find you, I will kill you டைப் கதையாதான் இதுவும் அமைஞ்சிருக்கு. மனுசன் பொறக்கும் போதே அந்த டைப் படத்துல நடிக்கிறதுக்குன்னு வரம் வாங்கிட்டு வந்திருப்பார் போல.

It’s a light entertainer. No harm scenes. You can watch it with your family. But find the mode of watching on your own.

மீண்டும் ஒரு நல்ல படத்தோட சந்திப்போமா!


Wednesday, December 2, 2020

The Call (2020) - Korean

 



The Call (2020)

Korean

Crime, Thriller, Fantasy

 

உங்களுக்கு நன்றாக தெரிந்த ஒரு நபர் / எதோ ஒரு ஊடகத்தின் வழியாக பழக்கமானவர் என்று வைத்துக் கொள்வோம். அவர் குறிப்பிட்ட தினத்தில் இறந்து போவார் என்பதும் உங்களுக்கு மட்டும் தெரிய வருகிறது. அவரை எந்த வகையிலாவது காப்பாற்றி விடலாமென்று நம் மனம் கெஞ்சும் அல்லவா?

 

அந்த நபர் இறந்த காலத்தில் இருபது / முப்பது வருடம் பின்னால் (உண்மையிலேயே இறந்த காலத்தில்) வாழ்பவர் என்று வைத்துக் கொள்வோம். நம்மால், ஒரு தகவலால் அவர்களை காப்பாற்ற முடியும் என்ற ஒரு வாய்ப்பு நமக்கு அமைந்தால் இறந்த காலத்தில் உள்ள ஒருவரின் சாவிலிருந்து நம்மால் காப்பாற்ற இயலும் அல்லவா?

 

ஆம் என்பது உங்கள் பதிலானால் அதனால் வரப்போகும் பின்விளைவுகளுக்கு நீங்களே பொறுப்பு.

 

சில கொடூரமான விசயங்களையெல்லாம் கண்டும் காணாமல் ‘ஓ அப்டியா த்சோ த்சோ’ என்று உச்சுக் கொட்டிவிட்டு, விட்டுவிட வேண்டும். மீறி, ‘அச்சச்சோ பாவம்’ என்று தூக்கி மடியில் போட்டுக் கொண்டால், அப்புறம் ’அம்மா’ என்று கத்தினாலும் சரி ’அய்யோ’ என்று கதறினாலும் சரி, பட வேண்டிய துன்பத்தை பட்டே ஆக வேண்டும். அப்புறம் வேலியில் போனதை வேட்டியில் எடுத்து விட்டுக் கொண்ட கதைதான்.

 

சீ-யூன், ஒரு வீட்டிற்கு வருகிறாள். அவசரமாக அவள் ஒருவருக்கு கால் செய்ய வேண்டியதாகிறது. அதனால் அங்கிருந்த ஒரு பழைய கார்ட்லெஸ் ஃபோனை எடுத்து சரி செய்து கால் செய்ய நினைக்கும் முன் அந்த நம்பருக்கு கால் வருகிறது. எடுத்து அட்டெண்ட் செய்தால், மறுமுனையில் ஒரு பெண் தன்னைக் காப்பாற்றும்படியும், அவளைத் தனது வளர்ப்புத் தாய் கொல்ல வருவதாகவும மறுமுனை கதறுகிறது. இவள் அதை எதோ ராங் காலாக எண்ணி கட் செய்கிறாள். மீண்டும் மீண்டும் சில இடைவெளியில் இரண்டு மூன்று முறை இதே போல அந்த ஃபோனுக்கு அழைப்புக்கள் வரவே அவள் அந்தப் பெண்ணின் வார்த்தைகளை கவனிக்கிறாள். ஆனால், இவளால் எதுவும் புரிந்து கொள்ள இயல்வதில்லை.

 

சிலபல முயற்சிக்குப் பின் அவள் இறந்த காலத்திலிருந்து அந்த எண்ணிற்கு, அதே வீட்டிலிருந்து, அந்த எண்ணுக்கே கால் செய்கிறாள் என்பது இவளுக்குப் புரிகிறது.

 

(அதாவது கால் செய்பவரும், கால் அட்டெண்ட் செய்பவர் பேசுவதும் ஒரே எண், ஒரே இன்ஸ்ட்ருமெண்ட்)

 

நடப்புக் காலத்தில் இருக்கும் சீ-யூன், இறந்த காலத்திலிருந்து வளர்ப்புத் தாயின் கொடுமையை அனுபவிக்கும் யங்-சூக்-கும் தங்களது காலங்களைப் பற்றி நிறைய விசயங்களைப் பற்றி பரிமாறிக் கொள்கிறார்கள். யங்-சூக் இறந்த காலத்தில் வாக்-மேன் காலத்தில் வாழ்பவள். அவள் வரையில் கார்ட்லெஸ் ஃபோன்கள்தான் அதிகப்படியான அறிவியல் வளர்ச்சி. ஆனால், 2020இல் வாழும் சீ-யூனுக்கு அப்படியா? இண்டர்நெட் வேகம் அவள் சொல்லும் விசயங்கள் அவளை வியப்பிலும் நம்ப முடியாதவையாகவும் வியப்பிலாழ்த்துகிறது. இருவரும் ஒருவரையொருவர் பேனா நண்பர்கள் போல எல்லா விசயங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.

அதில் ஒரு நன்மை என்னவென்றால், இறந்த காலத்தில் சீ-யூனுக்கு நடந்த ஒரு சம்பவத்தை இறந்த காலத்தில் வாழும் யங்-சூக்கால் மாற்ற முடியும் என்கிற நிலை. அதை அவள் வெற்றிகரமாக செய்து முடிக்க, அவள் வீட்டில் நடந்த ஒரு விபத்தைத் தடுத்து சீ-யூனின் பெற்றோர்களை அவள் காப்பாற்றுகிறாள்.

 

பதிலுக்கு யங்-சூக்கின் இறப்பை சீ-யூன் தெரியப்படுத்தி சாவிலிருந்து அவளைக் காப்பாற்ற…

 

சீ-யூனுக்கு அதன்பிறகே புரிகிறது, யங்-சூக்கின் வளர்ப்புத் தாய் ஏன் அவளைக் கொல்வதற்கு அத்தனை முறை முயன்றாள் என்பதை – ஏனென்றால் யங்-சூக் ஒரு சீரியல் கில்லர்.

 


ஆல்ரெடி
Frequency (2000) படம் மற்றும் Frequency (2016) சீரிஸையும் பார்த்தவர்களுக்கு இந்தக் கதை எளிதில் புரியும். அவ்வளவு சிக்கலான கதை என்று எதுவும் இதில் இல்லை. சிக்கலான கோட்பாடுகளைப் புறம் தள்ளிவிட்டு இந்தப் படத்தைப் பார்ப்பவர்களுக்கு இதன் கதை ஒரு பிரச்சினையே கிடையாது. Frequency போல இவர்கள் எந்த விளக்கமும் இதில் ஏன் இப்படி நடக்கிறது என எதையும் பார்வையாளர்களுக்கு விளக்கமாகத் தந்து கொண்டிருக்கவில்லை. மாறாக நேரடியாக சொல்ல வந்த கதைக்குள் ‘டொபுக்’ என்று குதித்து நம்மை கதைக்குள் தள்ளியிருக்கிறார்கள்.


படம் நெட்பிளிக்ஸில் உள்ளது. பார்க்க விரும்புபவர்கள் முடிந்தால் குடும்பத்தோடு கூட பார்க்கலாம். எந்தப் பிரச்சினையும் இல்லை. இதே டைட்டிலில் இந்த வருடம் இன்னொரு படமும் வெளியாகி உள்ளது. அதை இன்னமும் நான் பார்க்கவில்லை. பார்க்க விரும்புபவர்கள், The Call (2020) Korean என்கிற வார்த்தைகளை சர்ச் எஞ்சினில் பிரயோகிக்கவும்.

 

கண்டிப்பாகப் பார்க்கலாம்.

 

மீண்டும் சந்திப்போமா!