Wednesday, December 2, 2020

The Call (2020) - Korean

 



The Call (2020)

Korean

Crime, Thriller, Fantasy

 

உங்களுக்கு நன்றாக தெரிந்த ஒரு நபர் / எதோ ஒரு ஊடகத்தின் வழியாக பழக்கமானவர் என்று வைத்துக் கொள்வோம். அவர் குறிப்பிட்ட தினத்தில் இறந்து போவார் என்பதும் உங்களுக்கு மட்டும் தெரிய வருகிறது. அவரை எந்த வகையிலாவது காப்பாற்றி விடலாமென்று நம் மனம் கெஞ்சும் அல்லவா?

 

அந்த நபர் இறந்த காலத்தில் இருபது / முப்பது வருடம் பின்னால் (உண்மையிலேயே இறந்த காலத்தில்) வாழ்பவர் என்று வைத்துக் கொள்வோம். நம்மால், ஒரு தகவலால் அவர்களை காப்பாற்ற முடியும் என்ற ஒரு வாய்ப்பு நமக்கு அமைந்தால் இறந்த காலத்தில் உள்ள ஒருவரின் சாவிலிருந்து நம்மால் காப்பாற்ற இயலும் அல்லவா?

 

ஆம் என்பது உங்கள் பதிலானால் அதனால் வரப்போகும் பின்விளைவுகளுக்கு நீங்களே பொறுப்பு.

 

சில கொடூரமான விசயங்களையெல்லாம் கண்டும் காணாமல் ‘ஓ அப்டியா த்சோ த்சோ’ என்று உச்சுக் கொட்டிவிட்டு, விட்டுவிட வேண்டும். மீறி, ‘அச்சச்சோ பாவம்’ என்று தூக்கி மடியில் போட்டுக் கொண்டால், அப்புறம் ’அம்மா’ என்று கத்தினாலும் சரி ’அய்யோ’ என்று கதறினாலும் சரி, பட வேண்டிய துன்பத்தை பட்டே ஆக வேண்டும். அப்புறம் வேலியில் போனதை வேட்டியில் எடுத்து விட்டுக் கொண்ட கதைதான்.

 

சீ-யூன், ஒரு வீட்டிற்கு வருகிறாள். அவசரமாக அவள் ஒருவருக்கு கால் செய்ய வேண்டியதாகிறது. அதனால் அங்கிருந்த ஒரு பழைய கார்ட்லெஸ் ஃபோனை எடுத்து சரி செய்து கால் செய்ய நினைக்கும் முன் அந்த நம்பருக்கு கால் வருகிறது. எடுத்து அட்டெண்ட் செய்தால், மறுமுனையில் ஒரு பெண் தன்னைக் காப்பாற்றும்படியும், அவளைத் தனது வளர்ப்புத் தாய் கொல்ல வருவதாகவும மறுமுனை கதறுகிறது. இவள் அதை எதோ ராங் காலாக எண்ணி கட் செய்கிறாள். மீண்டும் மீண்டும் சில இடைவெளியில் இரண்டு மூன்று முறை இதே போல அந்த ஃபோனுக்கு அழைப்புக்கள் வரவே அவள் அந்தப் பெண்ணின் வார்த்தைகளை கவனிக்கிறாள். ஆனால், இவளால் எதுவும் புரிந்து கொள்ள இயல்வதில்லை.

 

சிலபல முயற்சிக்குப் பின் அவள் இறந்த காலத்திலிருந்து அந்த எண்ணிற்கு, அதே வீட்டிலிருந்து, அந்த எண்ணுக்கே கால் செய்கிறாள் என்பது இவளுக்குப் புரிகிறது.

 

(அதாவது கால் செய்பவரும், கால் அட்டெண்ட் செய்பவர் பேசுவதும் ஒரே எண், ஒரே இன்ஸ்ட்ருமெண்ட்)

 

நடப்புக் காலத்தில் இருக்கும் சீ-யூன், இறந்த காலத்திலிருந்து வளர்ப்புத் தாயின் கொடுமையை அனுபவிக்கும் யங்-சூக்-கும் தங்களது காலங்களைப் பற்றி நிறைய விசயங்களைப் பற்றி பரிமாறிக் கொள்கிறார்கள். யங்-சூக் இறந்த காலத்தில் வாக்-மேன் காலத்தில் வாழ்பவள். அவள் வரையில் கார்ட்லெஸ் ஃபோன்கள்தான் அதிகப்படியான அறிவியல் வளர்ச்சி. ஆனால், 2020இல் வாழும் சீ-யூனுக்கு அப்படியா? இண்டர்நெட் வேகம் அவள் சொல்லும் விசயங்கள் அவளை வியப்பிலும் நம்ப முடியாதவையாகவும் வியப்பிலாழ்த்துகிறது. இருவரும் ஒருவரையொருவர் பேனா நண்பர்கள் போல எல்லா விசயங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.

அதில் ஒரு நன்மை என்னவென்றால், இறந்த காலத்தில் சீ-யூனுக்கு நடந்த ஒரு சம்பவத்தை இறந்த காலத்தில் வாழும் யங்-சூக்கால் மாற்ற முடியும் என்கிற நிலை. அதை அவள் வெற்றிகரமாக செய்து முடிக்க, அவள் வீட்டில் நடந்த ஒரு விபத்தைத் தடுத்து சீ-யூனின் பெற்றோர்களை அவள் காப்பாற்றுகிறாள்.

 

பதிலுக்கு யங்-சூக்கின் இறப்பை சீ-யூன் தெரியப்படுத்தி சாவிலிருந்து அவளைக் காப்பாற்ற…

 

சீ-யூனுக்கு அதன்பிறகே புரிகிறது, யங்-சூக்கின் வளர்ப்புத் தாய் ஏன் அவளைக் கொல்வதற்கு அத்தனை முறை முயன்றாள் என்பதை – ஏனென்றால் யங்-சூக் ஒரு சீரியல் கில்லர்.

 


ஆல்ரெடி
Frequency (2000) படம் மற்றும் Frequency (2016) சீரிஸையும் பார்த்தவர்களுக்கு இந்தக் கதை எளிதில் புரியும். அவ்வளவு சிக்கலான கதை என்று எதுவும் இதில் இல்லை. சிக்கலான கோட்பாடுகளைப் புறம் தள்ளிவிட்டு இந்தப் படத்தைப் பார்ப்பவர்களுக்கு இதன் கதை ஒரு பிரச்சினையே கிடையாது. Frequency போல இவர்கள் எந்த விளக்கமும் இதில் ஏன் இப்படி நடக்கிறது என எதையும் பார்வையாளர்களுக்கு விளக்கமாகத் தந்து கொண்டிருக்கவில்லை. மாறாக நேரடியாக சொல்ல வந்த கதைக்குள் ‘டொபுக்’ என்று குதித்து நம்மை கதைக்குள் தள்ளியிருக்கிறார்கள்.


படம் நெட்பிளிக்ஸில் உள்ளது. பார்க்க விரும்புபவர்கள் முடிந்தால் குடும்பத்தோடு கூட பார்க்கலாம். எந்தப் பிரச்சினையும் இல்லை. இதே டைட்டிலில் இந்த வருடம் இன்னொரு படமும் வெளியாகி உள்ளது. அதை இன்னமும் நான் பார்க்கவில்லை. பார்க்க விரும்புபவர்கள், The Call (2020) Korean என்கிற வார்த்தைகளை சர்ச் எஞ்சினில் பிரயோகிக்கவும்.

 

கண்டிப்பாகப் பார்க்கலாம்.

 

மீண்டும் சந்திப்போமா!


3 comments: