விசாரணை (2015)
தமிழ்
அப்போதுதான் துவைத்த சட்டை மற்றும் லுங்கியின் ஈரம் காயாமல், பார்க் கழிப்பிடத்தில் குளித்து, துவட்ட, துடைத்துக் கொள்ள டவல் கூட இல்லாமல் அப்படியே ஈரம் சொட்டச் சொட்ட, விடியற்காலையில் வேலைக்குக் கிளம்புகிறான் ‘பாண்டி’. அங்கே தன்னுடன் மளிகைக்கடையில் வேலை செய்யும் சக தமிழர்கள் உடுத்தியிருக்கும் லுங்கியையே போர்வையாக போர்த்திக் கொண்டு உறங்கிக் கொண்டிருக்க, அவர்களுள் இளையவனான ‘அப்சல்’, “அஞ்சு நிமிசம் இருங்கண்ணே, நானும் குளிச்சிட்டு கூட வந்துடறேன்” என்று கிளம்ப எத்தனிக்கிறான். அவனைத் தவிர்த்து விட்டு தான் மட்டும் கிளம்புகையில், “பார்க் வாட்ச் மேன் வாடகை கேட்பான். பார்த்துக்க” என்று எச்சரித்து உடன் உறங்கிக் கொண்டிருக்கும் ‘முருகன்’ எச்சரிக்க, அவன் சொன்னது போல, வாட்ச் மேனை சமாளித்து, அந்த ஆந்திர நகரத்தின் சாலைகளில் நடுங்கிக் கொண்டே, சைக்கிளை மிதித்தவாறு தனது மளிகைக் கடை வேலைக்குக் கிளம்புகிறான்.
அந்தக் காட்சி அத்தோடு நின்றுவிடவில்லை. அடுத்து அவன் சாலையோரக் கடையில் சூடாக தேநீர் அருந்துகிறான். மீண்டும் சில தூரம் சைக்கிள் மிதித்து, மற்றொரு ‘சுவரோர’ (சுவற்றில் கண்ணாடியும் அதன் முன்னே இருக்கையும், அதன் மேற்கூரையாக சாக்கு விரித்து அமைக்கப்பட்ட) சலூனில் சீப்பைத் தேடி எடுத்து, தலை வாரிக் கொள்கிறான். இன்னும் அவன் உடலில் அந்த ஈரம் சொட்டிக் கொண்டேயிருக்கிறது. நடுங்கிக் கொண்டேதான் இருக்கிறான்.
ஆக அவனிடம் தங்கிக் கொள்ள இடமில்லை. துவைத்த துணியைக் காயப் போட நேரமில்லை. மாற்றுத் துணிகளில்லை. அந்தப் பார்க் வெட்டவெளியில் தூங்குவதற்கு வாட்ச் மேனுக்குக் கொடுக்க கையில் காசு இல்லை. முகம் பார்த்து தலை வாரிக் கொள்ள கண்ணாடியோ சீப்போ இல்லை. அதே சலூனில் முடிவெட்டிக் கொள்ளவோ முகச் சவரம் செய்யவோ நேரமோ, காசோ இல்லை. இதையெல்லாம் முடித்து அதிகாலை நான்கு மணிக்கு ஐந்து நிமிடம் தாமதமாக கடையைத் திறக்க சாவி வாங்க முதலாளி வீட்டு வாசலில் வந்து நின்றால், அந்த முதலாளியோ அவனை “கேனக் கூதி” என்பார்.
இப்படி படம் ஆரம்பித்து ஐந்து நிமிடத்தில் எந்த அலங்காரப் பின்னணி இசைகளோ, வாய்ஸ் ஓவரோ எதுவுமின்றி அவனது / அவர்களது முன் வாழ்க்கையை / வாழ்க்கைத் தரத்தை நமக்கு புரிய வைத்து விடுகின்றனர். பின் குறிப்பு – இதே காட்சிகளை வேறு படங்களில் நாம் பார்த்திருந்தால் கொட்டாவி வாயைப் பிளக்க தூக்கம் வந்திருக்கும் என்பதை நினைவில் கொள்க.
இந்தக் காட்சிவரைதான் நாம் சாதாரண சினிமா ரசிகனாக விரல் பிடித்து நடத்திச் செல்லப் படுகிறோம். அதன் பிறகான காட்சிகளில், நாம் ஒரு முரட்டுத்தனமான அனுபவத்திற்கு, அரக்கனின் கைகளில் இரையாக சிக்குண்டு தரதரவென இழுத்துச் செல்லப் படுகிறோம் என்பதையும் அறிக.
“அண்ணே… நாம நல்லவங்க. நமக்கு எதுவும் ஆகாதுன்னு சொன்னியேண்ணே?” என்ற அப்சலின் இறுதி மொழி வரை அங்கே நாம் படம் பார்க்கவில்லை. அவர்கள் நால்வராகவே மாறி, அவர்களின் ரணத்தை அனுபவித்து, “அடிச்சா, கத்தினாலோ, கீழே விழுந்தாலோ, அவங்களுக்கு அடி விழும்” என்ற எச்சரிக்கையுடன் செய்யாத தவறுக்கு ஒத்துக் கொள்ள, பனை மட்டையால் முதுகு கிழியும் வரை ‘பாண்டி’ அடி வாங்கி, கத்தாமல், நகராமல் நண்பர்களைக் காப்பாற்ற போராடி நிற்கும் போது, படம்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து நாமும் உண்மையை ஒத்துக் கொள்ள வைக்கப் படுகிறோம்.
படத்தில் இடைவேளை வந்ததாய் சொல்கிறார்கள். எனக்கு அப்படி எதுவும் ஞாபகத்திலில்லை. ஒரு மாநிலத்தின் காவல் துறையிடமிருந்து தப்பித்து, மற்றொரு மாநிலத்தின் காவல் துறையிடம் வகையாக மாட்டிக் கொண்டதாகத்தான் நினைத்து பயத்தில் உறைந்திருந்தேன். இவர்களுக்கு அவர்கள் எவ்வளவோ பரவாயில்லை. பிரசாதம் கொடுத்து அடிப்பதும், சாப்பிட வைத்து அடிப்பதும், தவறை ஒத்துக் கொண்டால் கோர்ட்டில் ஒப்படைப்பதுமாக கேஸை முடிக்க அவர்கள் காட்டும் தீவிரம் என இடைவேளைக்கு முன்னர் வந்த போலிஸே இவ்வளவு கொடூரமென்றால், இடைவேளைக்குப் பிறகு வரும் போலிஸ் கையால் என்னவாகப் போகிறோமோ? என்று திகிலடைய வைக்கிறது.
காவல்துறை வெளிஉலகத்திற்கு உணர வைக்கும் உண்மைகள் அவர்களால் எழுதப்பட்டது – என்பதை சமுத்திரக்கனி, கிஷோர் அத்தியாயங்கள் நமக்கு அதைச் செவ்வனே உணர வைக்கின்றது. போலிஸால் தனக்கு சாதகமாக எந்த வழக்கின் சாட்சிகளையும் உருவாக்கவும் முடியும். தனக்கு எதிரான சாட்சியங்களை வழக்கின் வரம்புக்குள்ளிருந்து வெளியேற்றி இல்லாமலும் செய்ய முடியும். ஆக நாம் அறிகின்ற உண்மைகள் யாவும் உண்மைகளே அல்ல என்பது எவ்வளவு பெரிய – ?
மற்ற படங்களில் பின்னணி இசை என்பது அந்தந்த காட்சிக்குரிய உணர்வை தூக்கிக் காட்டுவதாக இருக்கும். ஆனால், இந்தப் படத்திற்கான பின்னணி இசை அந்தக் காட்சிகளின் தாக்கத்திலிருந்து நம்மைக் கொஞ்சம் ஆசுவாசப் படுத்துவதாகவே உணர்கிறேன். காட்சிகளின் கொடூரத்திற்கு, இசைதான் நமக்கு மிகப்பெரிய ஆறுதல். ஆனால் நிஜ வாழ்க்கையில் அந்த ஆறுதல் கூட கிடைக்காது என்பதை முழு மனதோடு ஏற்றுக் கொள்க.
பொசுக்கென்று இருளும் திரையும், அதன் பிறகான சில காட்சிகளின் தொகுப்புகளும், இது கதையல்ல. ஏற்கனவே நடந்த சில நிஜங்களின் திரை வடிவம் என்பதை நாம் உணரும் அந்த நிமிடம் இருக்கிறதே… படம் முடிந்து விட்டது என்பதை மறந்து அனைவரும் ஒரு மிகப் பெரிய ஏமாற்றத்தில் மெய் மறந்து மவுனமாக அமர்ந்திருந்தோம். அதற்குப் பிறகான கைதட்டல்களையும் விட அந்த மவுனங்களே – வெற்றிமாறனின் மிகப்பெரிய வெற்றி.
விசாரணை – இந்த சினிமாவை யாராலும் வெறுமனே கடந்து சென்றுவிட முடியாது.

No comments:
Post a Comment