பேய்ப்படங்கள் எல்லாவற்றிற்கும் கிளிஷேவான சில கதைகளே இருக்கும். அந்தப் புளித்துப் போன பேய்ப்படங்களைப் பார்த்து பார்த்து நமக்கு பேய்ப்படம் பார்க்கும்போது இப்போதெல்லாம் பயமே வருவதில்லை. மாறாக சிரிப்புதான் வருகிறது. சிரிக்க வைக்கவேண்டும் என்றே எடுக்கப்படும் பேய்ப்படங்கள் இந்த லிஸ்ட்டில் சேராது. ஒரு ஈவில் டெட் வந்தால் அதைத் தொடர்ந்து அதே கதையுடன் வரிசையாக படங்கள் வரும். ஆனால், மனதில் நிற்பது ஒரு ஈவில் டெட் தான். அதுதான் கிளாசிக். இந்த மாதிரியான ட்ரெண்ட் செட்டர் படங்கள் எப்போதாவது அபூர்வமாக பூக்கும். அது எந்த மொழியாக இருந்தாலும் இதற்கு விதிவிலக்கு என்பதே இல்லை.
அப்படி அபூர்வமாக பூத்த ஒரு படம்தான் The Wailing (2016) கொரியன் ஹாரர். இது The Stranger என்கிற டைட்டிலுடன் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இதன் ஒரிஜினல் கொரியன் டைட்டில் Goksung. அதுதான் அந்த கிராமத்தின் பெயர்.
மலையடிவாரத்தில் இருக்கும் அந்த கிராமத்திற்கு ஒரு புதிய நபர் நுழைகிறார். அன்றிலிருந்து அந்த ஊரை புது விதமான ஒரு நோய் தாக்குகிறது. நோயால் தாக்குண்டவர்கள் அனைவரும் இறக்கின்றனர். சாகும் முன் அவர்களது கையில் கிடைக்கும் ஆட்களையெல்லாம் ரத்தக்களறியாக்கி கொன்று விட்டே இறக்கின்றனர். பெரும்பாலும் அப்படி கையில் சிக்கி சின்னாபின்னமாவது அவர்களது குடும்பங்களே.
போலீஸால் ரத்த வெள்ளத்துக்கு நடுவில் கிடக்கும் பிணங்களைப் பிரித்தெடுப்பதை சத்திய சோதனையின் உச்சமாக திணறுகிறது. அந்த ஊர் போலீஸ் ஸ்டேசனில் நடுராத்திரியில் தினசரி ஒரு பெண் நிர்வாணமாக நின்று பார்க்கிறாள். கண் மூடி திறப்பதற்குள் காணாமல் போய் விடுகிறாள். இதற்கு முன் இந்த மாதிரி திகில் மற்றும் துர்சம்பவங்களே நிகழ்ந்திராத அமைதியான கிராமம் அது.
யார் இதையெல்லாம் செய்கிறார்கள்? என்ன மாதிரியான நோய் அது என்று துப்பு துலக்க துலக்க கிடைக்கும் பதில்களும் குழப்பங்களும் தான் மொத்தப் படமும்.
இவ்வளவு அழகான ஒரு கிராமத்தையும், அதன் ரம்மியமான மாலை நேரங்களையும், மழை பெய்யும் போதெல்லாம் சரியான நேரத்தில் இடி இடித்து அந்தக் காட்சியின் பயங்கரத்தை இன்னும் கூட்டுவதையும், (இதற்கு முன்னர் விருமாண்டி படத்தில் இரண்டு மூன்று காட்சிகளின் இடையே இடி இடித்து காட்சியின் தீவிரத்தை இன்னும் பயங்கரப் படுத்தியதாக ஞாபகம்), கடைசிவரை பேயை சஸ்பென்ஸ் ஆஸ்பெக்ட்டாக பயன்படுத்திய விதம், அந்த கிராமத்து மக்களின் குசும்பான வசனங்களும், (பொதுவாகவே கொரியர்கள் டயலாக் பேசுவதைப் பார்த்தால் குபீர் குபீரென்று சிரிப்பு வரும். ஆனால், இதில் கிராமத்து இழுவை பாஷை வேறு. ஆனால் என்னை அதிலெல்லாம் சிரிக்க விடாமல் நல்ல காமெடி வசனங்களே அடிக்கடி இருந்தது) குறிப்பாக எந்த பேய்ப்படங்களின் டெம்ப்ளேட்டுகளிலும் இல்லாத வித்தியாசமான கதையமைப்புள்ள படத்தை நான் கண்டது இதுவே முதல் முறை.
எனக்கு படத்தின் பல காட்சிகளில் உறைய வைக்கும் அளவிற்கு பயமுறுத்தும் காட்சிகள் இருந்தது. பயப்படாமல் பார்க்கலாம். Sorry. பயப்படுவதற்காகவே பார்க்கலாம்.
உண்மையில் இது ஒரு கொரியன் கிளாசிக்!

No comments:
Post a Comment