திடீரென்று உங்களிடம் யாராவது வந்து, உங்க வாழ்க்கையிலேர்ந்து பதினாறு மணி நேரத்தை மட்டும் கொடுங்க என்று கேட்டால் என்ன செய்வீர்கள்?
முடியாது என்பவர்கள் இங்கேயே இந்தப் பதிவைத் தவிர்க்கவும்.
என்னிடமிருந்து அப்படி ஒரு பதினாறு மணி நேரத்தை ஒரு நாடகம் தின்று விழுங்கி ஏப்பம் விட்டது. ஆனால், நான் இன்னும் அந்த பதினாறு மணி நேரத்திற்குள் மாட்டிக் கொண்டு வெளியில் வர இயலாமல் தவிக்கிறேன். அது ஒரு K-Drama. நம்மில் பலருக்கு இந்த பதம் மிகவும் பரிச்சயமான ஒன்றாக இருக்கும். பரிச்சயமற்றவர்களுக்காக சொல்வதானால் கொரியன் டிராமா என்பது அதன் விரிவாக்கம். அதுவும் இது திரில்லர் மற்றும் எனக்கு மிகவும் பிடித்த மிஸ்டரி ஜானர் டிராமா வகையைச் சார்ந்தது.
அதன் கதையானது, (பயப்படாதிங்க. முழுக்கதையையும் சொல்ல மாட்டேன். ஸ்பாய்லரெல்லாம் இல்லை)
கனடாவில் வாழும் ஒருத்திக்கு கொரியாவில் தனது குடும்பம் சிறுவயதில் இறந்து போனது தெரிய வருகிறது. ஆனால், அதில் அவளும் சேர்ந்து இறந்து போனதாக அந்த தகவல் தெரிவிக்கிறது. கொரியாவிலிருந்து தனக்கு எந்த சொந்தமும் தற்போது இல்லாத நிலையில் யாரோ அவளை அழைக்கிறார்கள். அவளும் தனது சொந்தம் ஒன்று மிச்சமிருப்பதாக நம்பிச் செல்கிறாள். அந்த கிராமத்தின் பெயர் - அச்சியாரா. சின்ன ஊரைக் கொண்ட கிராமம். அதே ஊரில் உள்ள ஹைஸ்கூலில் ஆங்கில ஆசிரியையாக வேலைக்கு சேர்கிறாள்.
அச்சியாரா - Achiara
அச்சி - சிறிய. ஆரா - குளம். இதுதான் அந்த ஊரின் பெயர். வேலைக்கு சேர்வதற்காக செல்லும் பொழுதே ஒரு விசயத்தைத் தெரிந்து கொள்கிறாள். அந்த ஊரில் ஆல்ரெடி பல பெண்கள் காணாமல் போய்க் கொண்டிருப்பதும், அதுவும் மழை பெய்யும் புதன் கிழமை இரவுகளில் மட்டுமே நடக்கும் சம்பவம் இது எனவும். அவள் செல்வதும் மழை பெய்யும் புதன் இரவில். அவள் தங்கிக் கொண்டிருக்கும் வீட்டில் இதற்கு முன் தங்கியிருந்த ஒரு ஆசிரியையும் இரண்டு வருடங்களுக்கு முன் காணாமல் போயிருக்கிறாள் என்பது அவளுக்கு தெரிய வருகிறது. காணாமல் போன டீச்சருக்கும், அவளது செல்லமான மாணவி மற்றும் அந்த ஊர் மினிஸ்டரின் மகளுக்கும் நல்ல நட்பு இருந்ததையும், மினிஸ்டருடன் அந்த டீச்சருக்கு இருந்த தொடர்பை அறிந்த மினிஸ்டரின் மனைவியும், இவளும் போட்டுக் கொண்ட சக்களத்தி சண்டையும் தெரிய வருகிறது.
சீரியல் கில்லர்
அந்த ஊரில் இளம்பெண்கள் அடிக்கடி காணாமல் போய், பின்பு கற்பழித்துக் கொல்லப்பட்ட நிலையில் அவர்களது பிரேதம் மட்டும் கிடைக்கிறது. இதையெல்லாம் செய்யும் அந்த சீரியல் கில்லர்தான் அந்த டீச்சர் காணாமல் போனதற்கும் காரணமாக இருக்கலாமென நம்பப்படுகிறது.
இதுபோல பல லேயர்களில், பல கேரக்டர்களைக் கொண்டு எக்கச்சக்க மர்ம முடிச்சுக்களோடு, பதினாறு எபிசோடும், பதினாறு மணி நேரங்களும் கொண்ட கொரிய திரில்லர் கம் மிஸ்டரி டிராமா தான் The Village: Achiara's Secret. உண்மையில் இது அண்டர்ரேட்டட் டிராமா. இருந்தும் imdbயில் 8.0.
சொல்வதற்கு இதில் எக்கச்சக்கமான விசயங்கள் இருந்தாலும் அதை நீங்களே பார்த்து புரிந்துகொள்க என இந்த சீரீஸை பரிந்துரைக்கிறேன். மர்மதேசம் போன்ற நாடகப் பிரியர்களுக்கும், மிஸ்டரி ஜானர் பிரியர்களுக்கும்.

No comments:
Post a Comment