Detour (2016)
Thriller
ஹார்ப்பர், சட்டம் பயிலும் மாணவன். தனது தாய் கோமாவில் ஹாஸ்பிட்டலில் இருக்கிறாள். அவனது தாயாரின் கணவன் வின்சென்ட் குடிபோதையில் சென்று தாறுமாறாக கார் ஓட்டியது தான் விபத்துக்கு காரணம் என்று அவன் மேல் வெறுப்போடும், தாயாரின் கோமாவினால் சோகத்தோடும் திரிபவன்.
ஒருநாள் பார் ஒன்றில் சரக்கடிக்கும் போது, உண்டான தகராறு ஒன்று நட்பாக மாறுகிறது. அவன் பெயர் ஜானி ரே. அவனிடம் முதல் பாராவில் உள்ள தன்கதையை சொல்லுகிறான். ஜானி, வின்சென்ட்டை கொல்கிறேன். அதற்கு 20000 டாலர்கள் தர வேண்டும் என்று சொல்லுகிறான். காலையில் எழுந்து முந்தைய நாள் இரவில் நடந்ததை யோசித்த போது அவன் ஜானியிடம் தன்னைப் பற்றி உளறியது ஞாபகம் வருகிறது.
ஹாஸ்பிட்டலில் இருந்து அவனது தாயாருக்கு உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைவதாக செய்தி வருகிறது. அதே சமயம் வீட்டுக் கதவு தட்டப்படுகிறது. வெளியே ஜானியும் முந்தைய இரவில் அவன் தன் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த கொலைகாரியும், பார் டான்சருமான செர்ரியும் நின்றிருக்கின்றனர். ஹார்ப்பர் அதை எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியடைகிறான். ஜானி ஹார்ப்பரிடம் 20000 டாலர் கொடுக்கச் சொல்லி மிரட்டுகிறான். ஹார்ப்பர், தான் குடிபோதையில் உளறியதாக எடுத்துச் சொல்கிறான். ஆகவே வின்சென்ட்டை கொல்ல வேண்டாம். அது தனது பிரச்சினை என்றும் கூறி கதவை சாத்துகிறான். ஆனால், ஜானி மற்றவர் சொல்வதை கேட்கும் ஆள் கிடையாது. கதவை உடைத்துக் கொண்டு வந்து அவனை மிரட்டுகிறான். வேறு வழியில்லாமல், வேகாஸுக்கு சென்று வின்சென்ட்டை கொல்லுவதற்கு சம்மதித்து அவர்களோடு பயணிக்கிறான்.
ஜானி ரே, வின்சென்ட்டை கொன்றானா? அவர்களது பயணம் எப்படிப்பட்டது? ஜானியுடனும், செர்ரியுடனும் சென்ற ஹார்ப்பரின் நிலை என்னவானது என்பதே மீதிக்கதை.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்க்க ஆரம்பித்தேன். மேற்கூறிய பத்து நிமிடத்திற்கான கதை மட்டுமே மெதுவாக நகர்ந்தது. ஆனால், அதன் பின்னர் கதையின் ஓட்டம் ப்ப்ப்பா மலைக்க வைத்து விட்டது.
முதல் காரணம் Pulp Fiction படத்தின் கதை சொல்லும் முறையில் இந்தக் கதை நகர்ந்தது. அடுத்து ஜானியின் கதாபாத்திரம். அவன் ஒரு மூர்க்கன். அவன் சொல்லுவதை எதிர்த்துப் பேசத் துணிபவர்கள் ரத்தம் பார்க்காமல் போக மாட்டார்கள். அடுத்து என்ன செய்வானோ என்று பீதியைக் கிளப்பும் கதாபாத்திரம். மூன்றாவதாக செர்ரி கதாபாத்திரம். அவள் ஜானியைப் போல மூர்க்கத்தனம் கொண்டவளில்லை. அவளின் முறைகளும் குணங்களும் வேறு. அவளையும் எளிதில் கணிக்க முடியாது. அவளும் அராத்துப் பேர்வழிதான். நான்காவது ஹார்ப்பர் கதாபாத்திரம். அதாவது படம் பார்க்கும் நாம் ஜானியாலும் செர்ரியாலும் எப்படி பதறுவோமோ அதே பதட்டத்தை திரையில் காண்பிக்கும் கதாபாத்திரம். கதையின் நாயகனும் அவனே. ஐந்தாவது, இந்தப்படத்தின் இயக்குநர் கிறிஸ்டோபர் ஸ்மித். இந்தப்பெயரை இதற்கு முன் கேள்விப்பட்டிருக்கிறோம். Triangle படம் ஞாபகமிருக்கிறதா? அந்தப் படத்தின் இயக்குநரே தான். படம் முடிந்தபின்பு தான் இயக்குநரின் பெயரையே கவனித்தேன்.
கண்டிப்பாக பார்த்தே ஆக வேண்டிய must watch thriller படம். (குழந்தைகள் தவிர்க்க)
எதோ சொல்ல வந்து மறந்து விட்டேன் போல. aah Yes. It’s an wonderful Road Movie. செம!

No comments:
Post a Comment