Monday, January 30, 2017

Tale of Tales (2015)



Tale of Tales (2015)

Fantasy / Drama


பதினாறாம் நூற்றாண்டில் ஒரு ராஜ வம்சத்தில் மூன்று கதைகளின் தொகுப்புதான் இந்தப்படம். உண்மையில், Giambattista Basile என்கிற இத்தாலிய கவிஞர் எழுதிய கதைகளைத் தழுவி கதையமைக்கப்பட்டது.


கதை #1

லாங்க்ட்ரெல்லிஸ் ராஜாவுக்கும் ராணிக்கும் வாரிசுளில்லை. அந்த ஏக்கத்தால் இருவரும் வாடுகின்றனர். மந்திரவாதி ஒருவர், ராஜா தனியே சென்று கடல் மிருகத்தை வேட்டையாடி அதன் இதயத்தை எடுத்து வந்து அதை ஒரு கன்னிப் பெண் தனிமையில் சமைக்க, ராணி அதை உண்டால் அன்றே குழந்தை பிறக்கும் என்று உபாயம் கூறுகிறார். ராஜாவும் அதேபோல வேட்டையாடுகிறார். ஆனால் கடல் மிருகத்தால் தாக்கப்பட்டு இறந்து விடுகிறார். அவர் வேட்டையாடிய கடல் மிருகத்தின் இதயத்தை சிப்பாய்கள் எடுத்து வர, அரண்மனையிலிருந்த சமையல்காரிகளில் கன்னிப் பெண் ஒருத்தி அதனை சமைக்கிறாள். சமைத்துக் கொண்டிருக்கும் போதே அவள் கற்பமாகிறாள். ராணி அதை உண்டதனால் அவளும் கற்பமடைகிறாள். அன்று இரவே இருவருக்கும் ஒரே நேரத்தில் ஆளுக்கொரு ஆண் குழந்தை பிறக்கிறது. எலியாஸ் – ஜோனா. அவர்கள் வளர்ந்து பதினாறு வயதான போது, ராணிக்கு ஒரு பிரச்சனை தனது மகன் எலியாஸின் சகவாசத்தால் வருகிறது. அது சமையல்காரிக்கு பிறந்த மகன் ஜோனா.. ராணிக்கு எலியாஸ், சமையல்காரியின் மகன் ஜோனாவோடு பழகுவது பிடிப்பதில்லை. அவனை அடியோடு வெறுக்கிறாள். ஆனால், எலியாஸோ சமையல்காரியின் மகன் ஜோனா மீது உயிரையே வைத்திருக்கிறான். ராணி அவனைக் கொல்லுவதென்று முடிவெடுக்கிறாள்.

கதை #2

அதே வம்சத்தைச் சேர்ந்த ஸ்ட்ராங்க்லிஃப் ராஜா ஒரு womanizer. திருமணமாகாதவர். சதா பெண்களோடு சல்லாபித்துக் கொண்டு திரிபவர். ஆனால், அவர் காணும் பெண்கள் மீது அவருக்கு காதலோ திருப்தியோ இருந்ததில்லை. ஒருநாள் அவரது அரண்மனைக்குட்பட்ட பகுதியில் உள்ள வசிப்பிடத்தில் மங்கலான வெளிச்சத்தில் ஒரு பெண்ணின் பாடலை கேட்க நேர்கிறது. அந்தக் குரல் மீது அவருக்கு பிரியம் ஏற்பட அவளுக்கு சிப்பாய் மூலம் தங்க மாலையைப் பரிசளிக்கிறார். அவள் அதை முகம் காட்டாமலேயே வாங்கிக் கொண்டு சிப்பாயை திருப்பி அனுப்புகிறாள். உண்மையில் அந்த குரலுக்கு சொந்தமானவள் ஒரு வயதான மூதாட்டி. பெயர் டோரா. அவளுக்கு சகோதரி ஒருத்தியும் அவளோடு வசிக்கிறாள். அவள் பெயர் இம்மா. அவளும் வயதான மூதாட்டியே. இருவரும் வெளி உலகத்திற்கு முகம் காட்டாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அன்று இரவு ராஜா டோராவின் வீட்டிற்கு சென்று கதவைத் தட்டுகிறார். அவள் உள்ளிருந்தபடியே பேசுகிறாள். வெளியே வர மறுக்கிறாள். ராஜாவிற்கு அவளது குரலைக் கேட்டு ஏற்பட்ட பிரியம், அவள் முகத்தை காணாமல் ஏங்கி ஏங்கி அது கட்டுக்கடங்காத காதலாக மாறி விடுகிறது. அவளோ ஒரு வாரம் கழித்து வந்தால் என் ஒரு விரலை மட்டும் காட்டுகிறேன் என்று திருப்பி அனுப்பி விடுகிறாள். ஒரு வாரத்திற்குள் விரலில் உள்ள சுருக்கங்களை மறைக்க பகீரப்பிரயத்தனம் செய்து பார்க்கிறாள். ஆனால் முடிவதில்லை. ராஜா வருகிறார். விரலைக் காட்டச் சொல்லிக் கேட்கிறார். கதவு சந்து வழியாக விரலை நீட்ட இருட்டில் அந்த விரலை கண்மூடித்தனமாக ரசிக்கிறார். இப்போதே அவளை அனுபவித்தாக வேண்டும் என்கிற காம வெறியில், கெஞ்சுகிறார். டோரா அதற்கு சம்மதிக்கிறாள் ஒரு நிபந்தனையோடு.

கதை #3

ஹைஹில்ஸ் ராஜாவுக்கு மனைவியில்லை. ஒரே ஒரு மகள் மட்டுமே. அவள் பெயர் வயலெட். அவர் மகள் மீது மிகுந்த அன்போடு வளர்த்து வருகிறார். வயலெட்டிற்கு பருவப் பெண்ணிற்கு உண்டான எல்லா எதிர்பார்ப்புகளும் உண்டு. தனது கணவன் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று ஒரு பட்டியலே உண்டு அவளிடம். ராஜாவுக்கு பூச்சிகளென்றால் மிகவும் இஷ்டம். யாருக்கும் தெரியாமல் ஒரு பூச்சியை வளர்க்கிறார். அதன் மீதும் அளவு கடந்த பிரியத்தைக் கொண்டிருக்கிறார். அது அளவில் மிகப்பெரியதாக வளர்கிறது.. ஒரு நாள் அது இறந்தும் போகிறது. அந்த வேதனையோடு தனது மகளின் சுயம்வரத்தை நடத்துகிறார். அந்த பூச்சியின் தோலை உரித்து தொங்கவிடுகிறார். அது எதனுடைய தோல் என்பதைக் கண்டுபிடிப்பவருக்கு வயலெட்டை மணம் முடித்து வைப்பதாக போட்டி ஆரம்பமாகிறது.

லாங்ட்ரெல்லிஸ் மகாராணி ஜோனாவைக் கொன்றாளா?, எலியாஸும் ஜோனாவும் என்னவானார்கள்?,

டோராவுக்கும் ஸ்ட்ராங்க்லிஃப் ராஜாவுக்கும் அன்று இரவு என்ன நடந்தது? அவள் கிழவி என்பதை எவ்வளவு நேரம் மறைத்து வைக்க முடியும்? டோராவும் இம்மாவும் என்னவானார்கள்?

ஹைஹில்ஸ் ராஜா நடத்திய சுயம்வரம் என்னவானது? அந்த தோல் எதனுடையது என்பதை யாரேனும் கண்டுபிடிக்க முடிந்ததா? வயலெட்டின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறியதா?

என்பதை ஒரு கதை மாற்றி இன்னொரு கதை என ஒரு தொகுப்பாக ஒரு நாவல் போல நீள்கிறது இந்த திரைப்படம்.

இந்தப்படத்திற்கு imdb யில் 6.4 ரேட்டிங் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இது ஒரு underrated European dark fantasy movie ஆகவே தோன்றுகிறது. இதன் ஒரிஜினல் டைட்டில் il racconto dei racconti (இத்தாலிய மொழி). இதன் இயக்குனர் Matteo Garrone – க்கு இதுதான் முதல் நேரடி ஆங்கிலத் திரைப்படம். மேலும் முதல் பேண்டஸி படமும் கூட. மற்றவைகளெல்லாம் ஒவ்வொன்றும் வெவ்வேறு ஜானர்கள். அனைத்துமே நல்ல என்டர்டெய்ன் செய்யக்கூடிய திரைக்கதையைக் கொண்ட படங்களே.

இந்த வருட ஆரம்பத்திலிருந்து தினசரி ஒரு படமாவது பார்த்துவிடுவது என்று முடிந்தவரை அதை செய்து கொண்டும் இருக்கிறேன். ஆனால், அதனை ஒரு அறிமுகப்பதிவாக எழுதத்தான் முடிவதில்லை. முடிந்தவரை அதனையும் செய்ய முடியுமா என்று பார்க்கிறேன். மேற்கூறிய கதைகள் கதாபாத்திர அறிமுகங்களே. கதையையே சொல்லிவிடும் ஸ்பாய்லர் அல்ல. இந்தப்படமும் சற்றே நீளமானதும் கூட. மொத்தம் 2:15 மணி நேரம் ஓடக்கூடியது. தாராளமாகப் பார்க்கலாம். போரடிக்காது. எனக்கு ரெண்டேகால் மணி நேரம் போனதே தெரியவில்லை. படம் பார்த்து சில காட்சிகள் மூன்று நான்கு நாட்களுக்கு மனதை விட்டு அகலவே இல்லை. (குழந்தைகள் தவிர்க்க)

No comments:

Post a Comment