iBoy (2017)
Netflix Movie
Crime / Science Fiction
Crime / Science Fiction
டாம், பதின்ம வயது மாணவன். ஒரு திருட்டு கும்பலிடமிருந்து தப்பித்து ஓடும்போது தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, தனது செல்போனில் போலீஸை அழைத்து பேசியவாறே ஓடுகிறான். துரத்தியவர்களில் ஒருவன் அவனை சுட்டதில் அந்த செல்போனில் இருந்த சில முக்கியமான உபகரணங்கள் மூளைக்குள் பதிந்து விடுகின்றன. அந்த விபத்திற்கு பிறகு சில நாட்கள் கோமாவிலிருந்தவனின் நினைவுகள் திரும்புகிறது. ஆனால், தன்னை வித்தியாசமாக உணர்கிறான். அவனால் தன்னுடைய செல்போனை தொடாமலேயே அதனை இயக்க முடிகிறது. அதில் வரும் மெசேஜ்களை பிரித்து படிக்க முடிகிறது. அது கண் முன்னே ஒரு விசுவல் எழுத்துக்களாக விரிகிறது. இன்டர்னெட் உபயோகத்தையும் ஒரு சினிமா போல கண் முன்னால் பார்க்கவும், உபயோகிக்கவும் முடிகிறது. அவனது செல்போன் மட்டுமின்றி மற்றவர்களது செல்போன்களையும் இவ்வாறாக இயக்க முடிகிறது. மேலும் தன்னால் எல்லா எலெக்ட்ரானிக் கருவிகளையும் தனது மூளையின் நினைப்பாலேயே, கிட்டத்தட்ட டெலி சிக்னல்களை அனுப்பி இயக்க முடிகிறது. காற்றில் அலையும் மின் அலை வரிசைகளையும், செல்போன் சிக்னல்களையும் படிக்க முடிகிறது.
இது அவனுக்கு வரமா, சாபமா? அவனை துப்பாகிக்கியால் சுட்ட முகமூடிக் கும்பல் யார்? அவர்களது தலைவன் யார்? டாமின் இந்த சக்தியைக் கொண்டு அவன் என்ன ஆனான்? என்பதை ஒன்றரை மணி நேர சைன்ஸ் ஃபிக்சன் ஆக்சன் படமாக நெட்பிளிக்ஸில் வெளியிட்டிருக்கிறார்கள்.
படத்தில் என்னைக்கவர்ந்த பாஸிட்டிவ் விசயங்களை முதலில் பார்ப்போம்.
இதைப் போன்ற சைன்ஸ் ஃபிக்சன் படங்களுக்கு திறம்பட படமாக்கப்பட்ட சினிமாட்டோகிராபியும், கண்ணை கட்டும் விஷுவல் எபெக்ட்ஸும் ரொம்பவே முக்கியம். அது இந்தப் படத்தில் நன்றாகவே ஒத்துழைத்திருக்கிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் இரவு நேரத்தில் படமாக்கப்பட்டிருக்கிறது. அதன் பின்னணியும் ஒளிப்பதிவும் The Punisher (2004) படத்தின் இரவு நேர ஆக்சன் காட்சிகளை ஒத்திருந்தது. அதேபோல விசுவல் எபெக்ட்ஸ் – டாமின் மூளையில் பதிந்திருக்கும் செல்போன் உபகரணங்கள் அவனது கண் முன்னால் படமாக விரியும் விசயங்கள் அனைத்தும், அப்படியே அயன்மேன் படத்தில் டோனி ஸ்டார்க்கிற்கு ஜார்விஸ் காட்டும் வித்தைகளோடும் ஜாலங்களோடும் ஒத்திருந்தது. மேலும் லூஸி படத்தில் ஸ்கார்லெட்டினால் செய்ய முடிந்த சாகசங்களுக்கும், டாமின் சாகசங்களுக்கும் இடையே ஒரு சிறிய வித்தியாசம் – லூஸியால் மூளையின் செயல்திறன் ஒவ்வொரு சதவிகிதம் உயர உயர அதன் படிநிலைகளும் வளர்ந்து கொண்டே செல்லும். ஆனால் டாம், செல்போன் மற்றும் சேட்டிலைட் இதன் இரண்டு செயல்திறனையும் அதன் கன்ட்ரோல்களையும் மட்டுமே கொண்டுள்ளவன். Limited Powers. அந்த சிக்னல்களால் என்னென்ன சாகசம் புரிய முடியுமோ அதை மட்டுமே செய்ய முடியும். ஆனால், படம் பார்க்கும் போது அயன்மேனும், ஜார்விஸும், லூஸியும் ஞாபகத்திற்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.
இனி இந்தப் படத்தின் நெகட்டிவ் சமாச்சாரங்களைப் பார்ப்போம்.
உண்மையில் ஒரு நவீன யுக சூப்பர்ஹீரோவுக்கான களம். அதை வைத்து விளையாடியிருக்கலாம். பரபர ஆக்சன் படமாக ஆக்கியிருக்கலாம். ஆனால், இத்தனை இருந்தும் ஹீரோவை ஒரு சப்பை போலவே படம் முடியும்வரை மொன்னையாக காட்டியது ஒரு பெருத்த ஏமாற்றம். அதே போலவே ஆக்சன் காட்சிகளும். சுமாரான காட்சிகள். வில்லனின் கதாபாத்திரமும் அப்படியே ஹீரோவைப் போல மொக்கையாகவே வடிவமைக்கப் பட்டிருந்தது ஏமாற்றம் நம்பர் 2. ஹீரோ செய்யும் சாகசங்களெல்லாம் எந்திரன் படத்தில் சிட்டி ரோபோ, சவுன்ட் சிஸ்டத்தில் வால்யூம் ஏற்றவும் இறக்கவும் அதனை வெடிக்கவும் செய்யும் சாகசங்களை மட்டுமே படம் முழுக்க டாம் ஒரு அற்புதம் போல செய்வதாகக் காட்டி முடித்தது ஏமாற்றம் நம்பர் 3. (மேலே நான் பாஸிட்டிவ் விசயங்களாக குறிப்பிட்டது அனைத்தும் விசுவல் எபெக்ட்ஸ் பற்றிய விவரணைகள். அதெல்லாம் எக்ஸ்பெக்டேசன்ஸ் அளவுதான். ஆனால் படத்தில் உள்ள ரியாலிட்டி இதுதான்). படத்தில் வரும் வில்லனின் அடியாட்கள் முழுவதும் ஸ்கூல் ஸ்டூடண்ட்ஸ். அத்தனை பேரும் ஆயுதங்களை சர்வ சாதாரணமாக கையாள்கிறார்கள். இது ஒரு மிகப்பெரிய… சரி வேணாம் விடுங்க.
எல்லாவற்றையும் தாண்டி இந்தப்படத்தைப் பார்க்கலாமா? கலாம். பார்க்கலாம். பார்க்கவும்.
நன்னி
நமஸ்கார்
(பி.கு: ஹீரோயின் கேம் ஆப் துரோன்ஸ்ல நடிச்சவங்களாமே. சொல்லிக்கிட்டாங்க)

👌👌👌
ReplyDelete