Wednesday, February 1, 2017

The Fury of a Patient Man (2016) - ஸ்பானிஷ்



The Fury of a Patient Man (2016)


Tarde para la ira (original title) Spanish Movie
Thriller / Drama


ஜோஸ், ஒரு அமைதியான ஆள். தனது மனைவி இறந்த சோகத்தில் எட்டு வருடங்களாக தனிமையில் வாழ்பவன். யாரோடும் வம்புக்கு செல்லாதவன். ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை தூக்கிக் காட்டுமளவுக்கு அஹிம்ஸாவாதி. இரவு நேரங்களில் தூக்கம் வராமல் தவிக்கும் இன்சாம்னியா பேஷன்ட். அந்த இரவு நேரங்களில், பேஸ்புக்கில் அனாவிற்கு ‘ஹாய் தோழி, மணி ரெண்டாகியும் தூக்கம் வரலியா? அய் சேம் பின்ச். எனக்கும்தான்’ என்று காதல் வளர்க்கிறான்.

அனா, ஒரு டீசன்ட்டான பகல் நேர மதுபான விடுதியில் வேலை பார்க்கிறாள். அந்தக் கடையின் முதலாளி ஜுவான்ஜோ, அவளது கணவன் கியூரிட்டோவின் இளைய சகோதரன். கியூரிட்டோ ஒரு நகைக்கடைக் கொள்ளையில் சம்பந்தப்பட்டவன். சிறையில் இருக்கிறான். அந்த வழக்கில் அவன் மட்டுமே சிறையிலிருக்கிறான். மற்றவர்கள் யாரும் மாட்டவில்லை.

ஜோஸ், அனாவைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே ரெகுலராக அவள் வேலை செய்யும் மதுபான விடுதிக்கு செல்கிறான். இதனாலேயே அந்த கடையின் முதலாளி ஜுவான்ஜோவுடன் அவனது குடும்ப விசேசங்களுக்கு செல்லுமளவு நெருக்கமாகிறான். அனாவிற்கு நான்கு வயதில் ஒரு மகனும் இருக்கிறான்.

அனாவுக்கும் ஜோஸுக்கும் காதல் மலர்கிறது. ஜோஸுடன் அவனது கிராமத்து வீட்டில் வாழ விருப்பம் தெரிவிக்கிறாள். இந்த சமயத்தில் கியூரிட்டோ சிறையிலிருந்து விடுதலையாகிறான். ஜோஸ் மீது இருந்த காதலால் கியூரிட்டோவை தவிர்க்கிறாள். அவன் ஒரு மூர்க்கன். அவனால் ஜோஸ் போல சாந்தமாக எதையும் கையாளத் தெரியாது. அனாவுக்கும், கியூரிட்டோவுக்கும் இடையே சண்டை நிகழ்கிறது. சண்டை முற்றி கியூரிட்டோவை விட்டு அனா பிரிகிறாள். தனது நான்கு வயது மகனை அழைத்துக் கொண்டு ஜோஸுடன் அவனது கிராமத்து வீட்டுக்கு சென்று விடுகிறாள்.

அனா மீண்டும் கியூரிட்டோவுடன் இணைந்தாளா? கியூரிட்டோ மட்டும் எப்படி எந்த கொள்ளையில் சிறை சென்றான். மற்றவர்கள் என்னவானார்கள்? ஜோஸின் காதல் என்னவானது? அவனது இன்சாம்னியாவிற்கும் தனிமைக்கும் தீர்வு கிடைத்ததா? என்பதை ஆர்ப்பாட்டமில்லாத திரைக்கதையாக வடிவமைத்திருக்கிறார்கள். ஆனால் அது பார்ப்பவர்களை எப்படி பாதிக்கிறது என்பதை பின்வரும் பாராக்களில் பார்ப்போம்.



இந்தப்படத்தில் என்னைக் கவர்ந்த பாஸிட்டிவ் விசயங்கள்:

முதலில் ஒரு விசயத்தை சொல்லியாக வேண்டும். இது ஒரு ரிவெஞ்ச் திரில்லர். அதை மேலே உள்ள பாராக்களில் எந்த வகையிலும் வெளிப்பட்டுவிடாதவாறு பிரயத்தனங்களுடன் எழுதியிருக்கிறேன். யார் யாரைப் பழிவாங்குகிறார்களென்பதை படம் பார்த்தே புரிந்து கொள்ளுங்கள்.

இரண்டாவதாக ஹீரோ ஜோஸ் (Antonio De La Torre) சற்றே ஹ்யூக் ஜாக்மேனின் முகச்சாயல் கொண்டவர். இன்சாம்னியா பேசன்ட் என்றதும் காட்டுக் கூச்சலில் கத்தி, மண்டை மசுரை இரண்டு கைகளாலும் பிய்த்துக் கொண்டு எதாவது சைக்கோத்தனம் செய்வார் என்று எதிர்பார்த்து ஏமாந்தேன். ம்ஹும் அப்படி எந்தவொரு அசம்பாவிதமும் நடக்கவில்லை. சாந்தமான அண்டர்ப்ளே நடிப்பு. அதுவே ஒரு மிகப்பெரிய பாஸிட்டிவ் பாயின்ட் கம் ஆறுதல்.

மூன்றாவது, இதற்கு முன்னர் எப்படிப்பட்ட ரிவெஞ்ச் படங்களையெல்லாம் நாம் பார்த்திருக்கிறோம்? Kill Bill, Gangs of Wasseypur, மங்கம்மா சபதம், Badlapur, Oldboy, I Saw the Devil, Memento, I Spit on your grave இப்படி ஏக்கச்சக்கமான ரிவெஞ்ச் படங்களைப் பார்த்திருக்கிறோம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் நம்மை அசத்திய ரிவெஞ்ச் திரில்லர்கள். அல்லவா? ஆனால் இதற்கு முன் வந்த எந்த ரிவெஞ்ச் திரில்லர்களின் கட்டுக்குள்ளும் (Templates) அடங்காமல் இது ஒரு புது மாதிரியான திரைக்கதையைக் கொண்ட ரிவெஞ்ச் மூவி. அதிலும் எந்தவித ஆர்ப்பாட்டமோ, பரபரப்பான சேஸிங் சீக்குவென்ஸுகளோ, அதிரடி சண்டைக் காட்சிகளோ எதுவுமே இல்லாமல்.


நெகட்டிவ் பாயின்ட்ஸ்:

ஆரம்பத்தில் வரும் (மேற்கூறிய கதாபாத்திர அறிமுகங்கள் எல்லாமே) படு ஸ்லோவாக நகர்கின்றது. நான் கொஞ்ச நேரம் கண்ணசந்தே விட்டேன். அது மட்டும்தான் நெகட்டிவ். அதற்குமேல் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், எதோ ஒரு புள்ளியில் படம் என்னை உள்ளீர்த்துக் கொண்டது. அதற்குப் பிறகு படம் அருமையாக நகர்ந்தது.


மறுபடியும் சொல்கிறேன். இந்தப்படம் ஓடாது. நகர்ந்து / ஊர்ந்தே செல்லும். ஆனால் ஒரு கிளாசிக்கலான திரைக்கதையாக தோன்றுகிறது. பொறுமையாக பார்க்கலாம். பாருங்கள். (பரபர ஆக்சன் ரசிகர்களுக்கும் குழந்தைகளுக்கும் இது உகந்ததல்ல)


No comments:

Post a Comment