Sunday, February 12, 2017

எஸ்ரா (2016) - மலையாளம்




The Dybbuk (டிபுக்/டைபுக்)


இந்த வார்த்தையை இதற்கு முன் எங்காவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

வாய்ப்புகள் குறைவு. ஒருவேளை டிசி காமிக்ஸ் சூப்பர் ஹீரோ Arrow வில் season 5 episode 10 இல் பார்த்திருக்கலாம். அல்லது Unborn (2009), The Possession (2012) படங்களில் பார்த்திருக்கலாம்.


சரி. அதென்ன Dybbuk?

Dybbuk என்பதற்கு யித்திஷ் (Yiddish) மற்றும் ஹீப்ரூ (Hebrew) மொழியில் ஒட்டிக் கொள்ளுதல்’ என்று அர்த்தம்.

யூத புராணங்களின் படி, இறக்கப் போகும் ஒருவரின் உயிரை அந்த உடலிலிருந்து பிரித்து, அதனை வேறொரு கலனில் அடைத்து வைப்பதற்கு பெயர்தான் டிபுக். அத்தோடு அவரது ரத்தம், தலை முடி, மற்றும் இன்ன பிற அவரது உடைமைகளில் சிலவற்றையும் கொண்டு அந்த கலைனை அடைத்து வைப்பார்கள். நிச்சயம் இது நல்ல காரியத்திற்காக செய்யப்படுவதல்ல. பில்லி, சூனியம், ஏவல் வகைகளில் இதுவும் ஒன்று. அந்தப் பெட்டியை திறந்தால் அந்த ஆவியை அடக்கவோ அல்லது மீண்டும் அதை பெட்டியில் அடைக்கவோ முடியவே முடியாது என்பதும் அந்தப் பெட்டியின் மேல் ஹீப்ரூ மொழியில் எழுதப்பட்டிருக்கும். இதற்காக உபயோகப்படுத்தப் பட்டவரின் உடலை புதைக்கவோ, எரிக்கவோ, பாதுகாக்கவோ கூடாது. ஜலத்தில் தொலைத்து விட வேண்டும் என்பது யூதர்களின் ஐதீகம்.



கிட்டத்தட்ட அரக்கனின் உயிரை ஏழாக எட்டாக பிரித்து ஏழு கடல் ஏழு மலை தாண்டி ஒளித்து வைப்பதைப் போன்றதுதான். ஹாரி பாட்டரில் பார்த்த ஹார்க்ரக்ஸ் (Horcrux) சமாச்சாரம் போன்றதுதான். ஆனால், இது முற்றிலும் வேறு வடிவம், வேறு பரிமாணம் கொண்டது.

இதை யூத புராணங்களில் உள்ளது உள்ளபடி அப்படியே திரையில் கொண்டு வந்த படம் இதற்கு முன் எதுவுமில்லை. அதை இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியான மலையாளத் திரைப்படம் ‘எஸ்ரா (2017)’ செவ்வனே செய்திருக்கிறது.


எஸ்ரா (2016)

மலையாளம்
Horror / Thriller

கதைப்படி, ரஞ்சன் மாத்யூ (பிரித்திவிராஜ்) ஒரு தனியார் அணுமின் நிலையத்தில் உயரதிகாரியாக பணியாற்றுகிறான். சமீபத்தில் திருமணமானவன். அவனது மனைவி பிரியா ரகுராமன் (பிரியா ஆனந்த்). இருவரும் மும்பையிலிருந்து கொச்சினுக்கு இடம் பெயர்கின்றனர். புது வீட்டுக்கு சில புராதனப் பொருட்களைக் கொண்டு அலங்கரிக்க நினைக்கிறாள் பிரியா. அப்போது கடையில் ஒரு புராதனப் பெட்டி கண்ணில் பட அதையே வாங்கி வீட்டில் வைக்கிறாள்.

அதன் பின் அந்தப் பெட்டி அவர்களை என்னவெல்லாம் செய்தது? அந்தப் பெட்டியை அவர்கள் என்ன செய்தார்கள் என்பது மீதிக்கதை.

படத்தில் என்னை மிகவும் ரசிக்க வைத்த பாஸிட்டிவ் விசயங்கள்:

சாதாரணமாக இதுபோன்ற பேய்ப்படங்களில் வரும் கிளைமேக்ஸ் சமாச்சாரங்களெல்லாம் படம் ஆரம்பித்து அரை மணி நேரத்திற்குள் முடிந்தது ஒரு ஆச்சரியம். அதன் பிறகு நடப்பதெல்லாம் எதிர்பாராதவை.

பொதுவாக பேய்ப்படங்களில் ஒரு கிளைக்கதை இருக்கும். அது சர்வ நிச்சயமாக மொக்கையாகவே இருக்கும் என்பது எழுதப்படாத விதி. சில சமயம் ஆவியின் ஃப்ளாஸ்பேக்கில் நமக்கெல்லாம் கொட்டாவி கூட வரும். ஆனால், இது வேறு லெவல் ஃப்ளாஸ்பேக்.

புராணத்தை மையக்கருவாக வைத்து படம் எடுப்பதில் பெரும்பாலும், அதை மான்டேஜாகவோ, காமிக்ஸாகவோ காட்டி முடித்து விடுவார்கள். ஆனால், எஸ்ராவில் அப்படி செய்யவில்லை. அதை அப்படியே நமக்கு முழுமையாகவும், ரசிக்கும்படியாகவும், சுவாரஸ்யமாகவும் காட்டியிருப்பது மற்றொரு ஆச்சரியம். அதிலும் அந்த டிபுக் உருவாகும் விதத்தை கதைக்குள் நுழைத்திருப்பதும் அதைக் காட்சிப்படுத்தியிருப்பதும் அசரடிக்கும் காட்சி விருந்து.

இந்தப்படத்திற்கென ஸ்பெசல் கலர் டோனை படத்தின் கடைசிவரை மாறாமல் உபயோகித்திருப்பது கண்களுக்கு குளிர்ச்சியான சமாச்சாரம். ஒரு மாதிரியான மழை நாளில் உள்ள சாம்பல் நிற கிளைமேட் போல. அதேபோல ஃப்ளாஸ்பேக்கிற்கென வேறு மாதிரியான கண்களை உறுத்தாத வண்ணத்தில் காட்சிப்படுத்தியிருப்பது கொள்ளை அழகு.

ரோஸியாக நடித்த பெண்ணின் கண்கள். அதை கண்டிப்பாக சொல்லியே ஆக வேண்டும். அப்படியே கதை பேசும் சோகக் கண்கள். ஆப்ரஹாம் எஸ்ராவின் உயரம். (இதெல்லாம் ஏனென்று படம் பார்த்து அறிந்து கொள்க)

வழக்கம் போல பேய்ப்படங்களில் மிரட்டியெடுக்கும் ஸ்பெசல் சவுண்ட் எபெக்ட்களை நாம் சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. ஆனால், இதில் கூடவே இழையோடும் பியானோ பின்னணி இசை படத்திற்கு தரத்தை கிளாசிக் லெவலுக்கு உயர்த்திப் பிடிக்கிறது.

பேய்ப்படங்களிலெல்லாம் வைக்கப்படும் ட்விஸ்ட்டுகள் பெரிதாக சுவாரஸ்யம் தருவதில்லை. ஆனால், இந்தப்படத்தில் இருந்த ஒரு ட்விஸ்ட், அதைக் கழித்து விட்டுப் பார்த்தால், இது நிச்சயமாக சாதாரணப் பேய்ப்படங்களின் பட்டியலோடு போய்ச் சேர்ந்திருக்கும்.

பிரியா ஆனந்த் இந்தளவுக்கு நல்ல நடிகையா என்பது செம ஆச்சரியம். தமிழில் இதைப் போல கதையும், வாய்ப்பும் அவருக்கு அமையவில்லை என்பதும் ஒரு காரணம். இந்தப் படத்தில் பிரியாவிற்கு குறிப்பிட்ட ஒரு காட்சி இருக்கிறது. ஆத்தி. அதி பயங்கரம். இது நிச்சயம் பேய்ப்படங்களில் புதுசு.

குறிப்பாக டிபுக் சம்பந்தப்பட்ட காட்சிகள் எல்லாமே. யூத புராணங்களில் டிபுக்கைப் பற்றி உள்ள விசயங்களை கெடுக்காமல், உள்ளது உள்ளபடி அப்படியே படமாக்கியிருப்பது. (மொத்தப்படமே டிபுக் தான்)

நெகட்டிவ் சமாச்சாரங்கள்:

படம் ஆரம்பித்ததும் வந்த ஒரு பாட்டு. அதிலிருந்த மான்டேஜ் காட்சிகள். இவையெல்லாம் மற்ற ரொமான்ஸ் ரக பாடல்களின் டெம்ப்ளேட் காட்சிகளை அடியொற்றி இருந்தது.

ஆனால், இதைத்தவிர வேற எந்த தொய்வும் இல்லாத சுவாரஸ்யமான பேய்ப்படம் இந்த எஸ்ரா.

குடும்பத்தோடு பார்க்கலாம். தரமான பேய்ப்படம்.

No comments:

Post a Comment