Blood Simple (1984)
Thriller / Crime
மார்ட்டி, ஒரு
பார் ஓனர். தனது மனைவி ஆபி-யின் நடத்தை மேல் சந்தேகம் வர, லோரென் என்கிற பிரைவேட் டிடெக்ட்டிவ்வின்
உதவியை நாடுகிறார். ஆபிக்கும் ரே என்கிறவனுக்கும் தொடர்பிருப்பதாக லோரென் கண்டுபிடித்துக்
கூறுகிறார். கடுப்பான மார்ட்டி ஆபியை ரேயின் வீட்டில் சென்று தாக்குகிறார். ஆனால்,
ஆபி மார்ட்டியை தற்காப்புக்காக திருப்பி உதைத்து அனுப்பி விடுகிறாள். தனது ஆற்றாமையினால்
மார்ட்டி, ஆபியையும் ரேவையும் கொன்று விடச் சொல்லி லோரெனை கேட்கிறார். அதற்கு
10000 டாலர்கள் தருவதாகவும் கூறுகிறார். லோரென் சம்மதிக்கிறார். நீ நிம்மதியாக சென்று
மீன் பிடித்துக் கொண்டிரு. நான் அவர்களை கொன்று விட்டு வருகிறேன். என்று செல்கிறார்.
இதற்கு மேல் நடப்பதெல்லாம்
சற்றும் எதிர்பாராத திக் திக் திருப்பங்கள் கலந்த திரில்லர்.
இதுதான் கோயன்
சகோதரர்களின் முதல் படம். இந்தப்படத்தை எடுக்க அவர்கள் வசதியுள்ளவர்களின் வீடு வீடாக
சென்று ஏற்கனவே இவர்கள் எடுத்து வைத்திருந்த இந்தப்படத்தின் இரண்டு நிமிட டிரெய்லரை
போட்டுக் காட்டி கிட்டத்தட்ட 7,50,000 டாலர்களை திரட்டினர். அதன் பிறகே இந்த படத்தின்
படப்பிடிப்பு தொடங்கியது. இந்த கிரவ்ட் ஃபண்டிங் ஐடியாவை கோயன்களுக்கு சொன்னவர் ஈவில்
டெட், ஸ்பைடர் மேன் ட்ரையாலஜியின் இயக்குனர் சாம் ரெய்மி.
முதல் படம் என்பதால்
அங்கங்கே continuity mistakes இருக்கத்தான் செய்தது. இருந்தும் அவையெல்லாம் பெரிதாக
தெரியவில்லை. உதாரணத்திற்கு, ஒரு ஜிப்போ லைட்டரை லோரைன் மறந்து எங்கோ வைத்திருப்பார்.
முக்கியமான ஆவணங்களை எரித்துக் கொண்டிருப்பார், அப்பாடா இப்பத்தாண்டா நிம்மதி என்று
சிகரெட்டை உதட்டில் பொருத்தி, பாக்கெட்டில் லைட்டரை எடுக்க கை விட்ட போதுதான் அதை எங்கோ
தொலைத்து விட்டோமே என்பதே ஞாபகத்துக்கு வரும். இது படத்திலுள்ள காட்சி. சரியாகத்தானே
இருக்கிறது. இதிலென்ன மிஸ்டேக் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. சிம்பிள். லைட்டரி
ஆவணங்களை எரிக்க நினைத்த போதே அதைத் தேடியிருக்க வேண்டும். லைட்டரே இல்லாமல் ஆவணங்களை
எப்படி கொளுத்தினார்? அப்படி அதற்கு வேறு லைட்டரோ தீப்பெட்டியோ வைத்திருந்தால், சிகரெட்டையும்
பற்ற வைத்திருக்கலாம்தானே? டொய்ங்ங்ங்
அடுத்து ஆபியின்
கைத்துப்பாக்கி. அதுதான் படத்தில், (ஜேஜே படத்திலிருந்த மாதவனின் நூறு ரூபாய்த் தாளைப்
போல) அனைவரிடமும் கைமாறி உபயோகப்படுத்தப் பட்டிருக்கும். உண்மையில் அந்த .38 ரகத் துப்பாக்கியில்
காக் ஹேமர் இருக்காது. முதல் முறை ஆபி அதை தனது கைப்பைக்குள் வைக்கும் போது காக்கிங்
ஹேமர் இருக்காது. ஆனால், அதன் பிறகு அதனை மற்றவர்கள் உபயோகிக்கும் போது காக்கிங் ஹேமர்
இருக்கும். டொய்ங்ங்ங்
ஒரு காட்சியில்
லோரைன் சுடும்போது எட்டுமுறை ஆபியை நோக்கி சுடுவார். ஆனால் அதில் உள்ள சேம்பரில் ஆறு
புல்லட்டுகள் தான் பொறுத்த முடியும். டொய்ங்ங்ங்
இப்படி படம் நெடுக
ஏகப்பட்ட மிஸ்டேக்குகள். ஆனால் பரவாயில்லை. இதெல்லாம் அப்போதிருந்த யாரும் கவனித்திருக்கப்
போவதில்லை தானே.
மேற்கொண்டு இந்த
படத்தைப் பற்றி பார்ப்பதற்கு முன் இன்னொரு கதையை சொல்ல விழைகிறேன்.
காரலா தனது கணவனைக்
கொல்ல அவரிடம் வேலை பார்க்கும் தனது காதலன் ஜூலியனோடு சேர்ந்து திட்டமிடுகிறாள். ஜூலியனின்
கேபின் உள்ள தளத்திற்கு மேல் தளத்தில்தான் காரலாவின் கணவனாகிய தனது முதலாளியின் கேபின்
இருக்கிறது. பின்பக்க ஜன்னலைத் திறந்து மேல் தளத்திற்கு கயிற்றை வீசி அதைப் பிடித்து
மேல் தளம் வந்து அவரைக் கொன்று விட்டு கீழ்தளம் வருகிறான். அதற்கடுத்த இரண்டு நாட்கள்
அலுவலகம் விடுமுறை என்பதால் எல்லோருமே அந்த கட்டிடத்தை விட்டு கிளம்பிக் கொண்டிருக்கின்றனர்.
ஜூலியனும் எல்லோரையும் போலவும் எப்போதும் போலவும் அலுவலகத்திலிருந்து கிளம்பி லிப்ட்
வழியாக கீழே வருகிறான். கீழே அவன் தனது காரில் அமர்ந்து, ஒருமுறை நடந்தவற்றை எல்லாம்
நினைத்துப் பார்க்கிறான். எல்லாமே ஓகே. யாருக்கும் தன் மேல் சந்தேகம் வராது. வாய்ப்பேயில்லை.
மாட்டுவதற்கு வழியே இல்லை. எப்படி ஜன்னலைத் திறந்து உள்ளே சென்றேனோ, அப்படியே வெளியே
வந்து ஜன்னலையும் மூடியாகி விட்டது. கையுறை உபயோகித்திருக்கிறேன். கைரேகை பட்டிருக்காது.
எல்லாமே பக்கா. It’s a perfect murder என்று தன்னைத்தானே பாரட்டிக் கொண்டு ஒருவித சுய
பெருமிதத்தோடு திரும்பி அவன் வேலை செய்த அலுவலகக் கட்டிடத்தைப் பார்க்கிறான். தனது
முதலாளியின் கேபின் உள்ள தளத்திலிருந்து தனது கேபின் உள்ள தளம் வரை அவன் ஏறி இறங்கிய
அந்தக் கயிறு இன்னும் தொங்கிக் கொண்டிருந்தது.
மேற்கூறிய கதை
Elevator to the Gallows (1958) என்ற ப்ரெஞ்சு மொழிப் படத்தின் ஆரம்பக் காட்சிகள்.
இதை ஏன் இங்கே
கூறினேன் என்றால், ப்ளட் சிம்பிளும் இதே போன்றதொரு Neo-Noir படம் தான். இதிலும் இதே
போன்றதொரு காட்சி உண்டு. இந்த இரண்டு காட்சிகளுமே நான் இதுவரை பார்த்த த்ரில்லர் படங்களில்
வெகுவாக ரசித்தவை.
ப்ளட் சிம்பிளில்,
தொடர்ந்து 15 நிமிடங்களுக்கு வசனமேயில்லாத காட்சிகள் உண்டு. ஆனாலும் அடுத்து என்னவாகும்
என்கிற பதைபதப்பிற்கும், பரபரபிற்கும் குறைவிருக்காது. அந்தக் காட்சிகளின் போது சீட்டின்
நுனியில் அமர்ந்து நகம் கடிக்கப் போவது உறுதி.
கோயன் சகோதரர்களின்
படங்களில் காட்டப்படுவதைப் போல கதாபாத்திரங்கள் பொசுக் பொசுக்கென்று வன்முறைக்கு உந்தப்படுவது
சாதாரணமான ஒன்று. ஆனால், அந்தக் கதாபாத்திரத்திற்கு அதைவிட வேறு வழிமுறைகள் இருந்திருக்காது.
அதிலும் குறிப்பிட்ட ஒரு கதாபாத்திரம் எடுக்கும் / செய்யும் முடிவும், வன்முறையும்
அதைத் தொடர்ந்து கதையின் இறுதிவரையிலும் மற்ற கதாபாத்திரங்களுக்கு ஏற்படும் பின்விளைவுகளுமே
மீதிக்கதையாக இருக்கும். இதே போல திரைக்கதைகளை பல படங்களுக்கு அமைத்து அதில் கோயன்கள்
வெற்றியும் கண்டிருக்கின்றனர்.
ஆபி (Abby) ஆக
நடித்த Frances McDormand
பற்றி நேற்று நமது Fargo பதிவில் பார்த்தோம்.
அவர்தான் Fargo – வில் மார்ஜியாக நடித்தவர். ஆபி கதாபாத்திரத்தில் நடிக்க ஆடிசன் நடத்தப்பட்டு
Holly Hunter என்ற நடிகை தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால், படப்பிடிப்பு தொடங்கிய
சமயத்தில் அவரும் Fargo – வில் ஜெர்ரியாக நடித்த வில்லியம் .ஹெச். மேசியைப் போல நியூயார்க்கிற்கு
ஒரு நாடகத்தில் நடிக்கச் சென்று விட்டார். திரும்ப வரவில்லை. அந்த நேரத்தில் ஹாலி ஹன்ட்டரின்
ரூம் மேட்டாக இருந்த ஃப்ரான்செஸ் மெக்டார்மென்டை இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும்படி
ஹாலி ஹன்ட்டரே சொல்லி உற்சாகப்படுத்தி அனுப்ப, ஃப்ரான்செஸ் மெக்டார்மென்ட் இந்தப்படத்தில்
நடித்தார். இதுதான் இவரது முதல் படமும் கூட. பிறகு இந்தப்படத்தின் இயக்குநர் ஜோயல்
கோயனை காதலித்து மணம் புரிந்து கொண்டார். ஹாலி திரும்ப வந்த போது அவருக்கு மூண்டும்
ஒரு வாய்ப்பளிக்கப்பட்டது. முன்பு பதினைந்து நிமிட வசனமற்ற காட்சியைப் பற்றி கூறியிருந்தது
நினைவிருக்கலாம். அந்த பதினைந்து நிமிடங்களில் ரே காரில் செல்லும் போது, ரேடியோவில்
பேசும் குரல் ஹாலியினுடையது. வாய்ப்பு வாய்ஸ் ரூபத்தில் அவருக்கு கொடுக்கப்பட்டிருந்தது.
மொத்தம் நான்கு
கேரக்ட்டர்களைச் சுற்றியே நடக்கும் கதை. அதில் அதிகமாக ஸ்கோர் செய்பவர் லோரைன். படம்
முடிந்த பிறகும் மனதில் நிற்கிறார். படத்தைப் பற்றி எதாவது சொல்ல ஆரம்பித்தால் அது ஸ்பாய்லராக மாறிவிடும் என்பதாலேயே நான் படத்தின் பின்னணியில் இருந்த சுவாரஸிய தகவல்களைத் தர வேண்டியாகியது. ஆகவே,
கண்டிப்பாக பார்க்க
வேண்டிய திரில்லர் படம். வன்முறை காட்சிகளும் அடல் கன்டென்ட்டும் நிறைந்தது. ஆகவே குழந்தைகள்
தவிர்க்க.
பி.கு: மேற்கூறிய
தகவல்களில் பெரும்பாலானவை யூட்யூபிலும், வலைப்பக்கங்களிலும் பார்த்தவை / படித்தவை.
(மூவி மிஸ்டேக்ஸ் தவிர்த்து)
மீண்டும் நாளை
ஒரு நல்ல திரில்லர் படத்துடன் சந்திப்போம்.
நன்னி
நமஸ்கார்

No comments:
Post a Comment