Aadhi (2018)
மலையாளம்Action / Thriller
மலையாளப் படங்கள் என்றாலே ஒரு காலத்தில் பிட்டு படம் ரேஞ்சிற்கு
அவதானிக்கப்பட்டது. காலப் போக்கில் ஷகிலா, ரேஷ்மா போன்ற நடிகைகளை அந்த இண்டஸ்ட்ரியை
விட்டு மிகுந்த சிரமத்தின் பேரில் துரத்தப்பட்டு, நல்ல கதையம்சமுள்ள படங்கள் மீண்டும்
வெளிவந்து பழைய நிலையில் மலையாளப்பட உலகின் மீதான பார்வை மாற்றமடைந்தது. எத்தனையோ மிஸ்டரி
திரில்லர்களையும், ஃபேமிலி டிராமாக்களையும், ஹாரர் மற்றும் ரொமாண்டிக் காமெடிகளையும்
கொண்டிருந்தாலும் சொல்லிக் கொள்ளும்படியாக ஒரு ஆக்சன் மூவி கூட மலையாளத் திரையுலகில்
இல்லை என்பதே நிதர்சனம். அவ்வாறு எடுக்கப்பட்ட பல ஆக்சன் படங்கள் கூட மசாலா படங்களாக
நிலை தடுமாறி மண்ணைக் கவ்விய வரலாறு கேரளாவில் உண்டு.
ஆனாலும் மலையாளத் திரையுலகில் ஆக்சன் ஹீரோவாக அவர்கள் நம்புவது
மோகன்லாலை மட்டுமே. மம்மூட்டியும் சில படங்களில் முயற்சித்திருந்தாலும், அவரை அவ்வளவாக
ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
சென்ற வருடம் வெளியான புலிமுருகன் ஒரு உதாரணமும் கூட. ஆனால்,
ரசனை என்பது மாறிக் கொண்டே இருப்பதுதானே. எண்பது தொண்ணூறுகளில் வந்த அபுஹாய் அபுஹாய்
டைப் சண்டைக்காட்சிகள் 2000த்திற்கு பிறகு மாற்றமடைந்ததை நாம் உணர்ந்திருப்போம். இப்போது
யாராவது அவ்வாறு முயற்சித்தால் அது எவ்வளவு பெரிய காமெடியாக இருக்கும்? அது மாற்றமடைந்து
2000த்திற்கு பிறகு ஆண்ட்டி கிராவிட்டி சண்டைக் காட்சிகள் பிரபலமடைந்து தற்போது அதுவே
ஏற்புடையதல்லாமல் மாறியிருக்கிறது. (இன்னும் சில மாஸ் ஹீரோக்கள் அதையே தொடர்ச்சியாக
செய்து கொண்டிருக்கும் காமெடிகள் வேறு விசயம்)
இத்தனை மாற்றங்களுக்குப் பின் ஒரு ஆக்சன் சினிமா இன்று கேரளாவில்
வெளியாகிறது. அந்தப் படத்தின் ஹீரோ ஒரு அறிமுகம். அதுவும் மலையால சினிமாவின் ஆக்சன்
ஹீரோவாக ரசிகர்கள் நம்பும் ஒருவரின் மகனின் முதல் படம். அந்த ஹீரோ பிரணவ். அவரது அப்பா,
மலையாளத் திரையுலகின் ஆக்சன் ஸ்டார் மோகன் லால். அந்தப் படம்தான் ஆதி (2018).
கதை
இசையமைப்பாளராகும் கனவுடன் ஹீரோ ஆதித்யா மோகன். தனது அப்பா
மோகனின் இரண்டு வருட கெடுவுடன் தனது இசையமைப்பாளர் கனவை நிஜமாக்க போராடுகிறான். வாய்ப்பு
என்பது மிகவும் அரிதான விசயம். அதுவும் சினிமாவில். தன்னை நிரூபிக்க அவனுக்கு ஒரு சந்தர்ப்பம்
தேவைப்படுகிறது. அந்த சமயத்தில் தனது நண்பர்களால், பெங்களூருவில் ஒரு மிகப் பெரிய ஹோட்டலில்
சனிக்கிழமை தோறும் சினிமாப் பிரபலங்கள் கூடும் ஒரு இரவில் இசை நிகழ்ச்சி நடப்பதாக தெரிய
வருகிறது. அங்கே சென்று பாடுவது அவ்வளவொன்று அசாதாரணமான காரியமல்ல. பெரிய பண முதலைகள்
மற்றும் பிரபலங்கள் மட்டுமே உள்ளே நுழையும் அரங்கு அது. அதிசயமாக அவனுக்கு அதுவும்
சாத்தியப்படுகிறது. அவனது தந்தை மூலமாக அவர் பணிபுரியும் நிறுவனத்தின் முதலாளியின்
ரோல்ஸ் ராய்ஸ் காரை பெங்களூருவிற்கு கொண்டு சேர்க்கும் ஒரு வாரப் பணியுடன். இந்த வாய்ப்பை
பயண்படுத்திக் கொண்டு அங்கே சென்று பாடவும் செய்கிறான். ஆனால், அதுதான் அவன் வாழ்நாளில்
இதுவரை பார்க்காத பிரச்சனைகளையெல்லாம் ஒட்டு மொத்தமாக அவன் தலையில் இறக்குகிறது.
ஒரு கொலை. அதுவும் அவனைத் தாக்க வந்தவன், விபத்தாக அவனது
உடன் வந்தவனைக் கொலை செய்ய நேர்கிறது. அது கொலைப்பழியாக மாறி அவன் மேல் சுமத்தப்படுகிறது.
அங்கிருந்து அவன் விதி அவனை இறந்தவனின் தந்தை மூலமாக துரத்துகிறது. அந்தக் கொலையிலிருந்து
ஆதி தப்பித்தானா, அவனால் தன் மேல் விழுந்த பழியை துடைக்க முடிந்ததா, அவனது இசையமைப்பாளர்
கனவு என்னவானது என்பதை பரபரக்காமல் நிதானமான அதிரடி ஆக்சன் காட்சிகள் மூலம் சொல்கிறது
ஆதி (2018)
இந்த அறிமுக ஆக்சன் படத்தின் இயக்குநர் மெமரீஸ் மற்றும் திரிஷ்யம்
புகழ் ஜீத்து ஜோசப். நான் பார்க்கச் சென்றது கார்பன் படத்தை. ஆனால், அது நேற்றோடு கூட்டமில்லாமல்
தூக்கப்பட்டிருந்தது. வேறு வழியில்லாமல் ஆதியை பார்க்கச் சென்றேன். ஜீத்து ஜோசப் என்கிற
பெயர் மிகவும் நம்பிக்கையளித்தது. நம்பிச் சென்றேன். ஆச்சரியம் இது ஒரு சொல்லிக்கொள்ளும்படியான
மலையாள ஆக்சன் சினிமா. அபுஹாய் அபுஹாய்களோ ஆண்டிகிராவிட்டி சண்டைக் காட்சிகளோ இல்லாமல்,
ஹீரோ பொழுது போக்காய் தனது நண்பர்களுடன் சேர்ந்து Parkour Stunts செய்பவராக காட்டப்பட்டு
படம் நெடுக அந்த பாணி ஆக்சன் காட்சிகள். பார்க்கோர் சண்டைக் காட்சிகளை நாம் ஏற்கனவே
B13 மற்றும் B13 Ultimatum படங்களில் பார்த்து வியந்திருக்கிறோம். அதே போல சில ஹீஸ்ட்
பாணி காட்சிகளும் உண்டு. ஆனால், எல்லாமே பொறுமையாய் நகர்ந்து அடுத்து என்னவாகும் என்று
நகம் கடிக்கும் வேளையில், பார்க்கோர் ஆக்சன் காட்சிகளால் உயிர் பெற்று பார்ப்பவர்களை
பரபரப்புக்குள்ளாக்குகிறது.
அறிமுக ஹீரோ பிரணவ் மோகன்லால், நடிப்பு எல்கேஜிப் பையன் பல்ப்பத்தை
தொலைத்து விட்டு முழிக்கும் முகபாவத்துடனேயே படம் நெடுக இருந்தாலும், ஆக்சன் காட்சிகளில்
அடேங்கப்பா என வாய் பிளக்க வைக்கிறார். அதில் எதுவுமே அடித்துக் கொள்ளும் சண்டைகளாக
இல்லாமல் உயிர்பயத்தில் தப்பித்து ஓடுவதற்கு மட்டுமே.
ஹீரோயின் – அப்படியென்று யாருமே இந்தப்படத்தில் இல்லை. நம்புங்க
பாஸ். நோ ஹீரோயின். நோ டூயட்.
வில்லனாக ஜெகபதி பாபு. கன்னடத்திலும் மலையாளத்திலும் நான்கைந்து
காட்சிகள் வந்து… அய்யய்யோ அதெல்லாம் சொன்னால் ஸ்பாய்லராகிவிடுமே.
இசை. படத்திற்கேற்ற பின்னணி இசை ப்ளஸ் இரண்டு பாடல்கள். அதில்
ஒன்றை பிரணவ்வே இசையமைத்து பாடி நடித்திருக்கிறார் என்று சொன்னார்கள். பலே. அதுவும்
படத்தின் டர்னிங் பாய்ண்ட் பாடல். Gypsy song.
ஆக நண்பர்களே இது ஜீத்துவின் பெரிய திரில்லர் படமாக இல்லையென்றாலும்
சொல்லிக் கொள்ளும்படியான முதல் மலையாள ஆக்சன் சினிமா என்பதையும், குடும்பத்துடன் பார்க்கலாம்
என்கிற பரிந்துரையுடன் இந்த பதிவை முடித்துக் கொள்கிறேன்.
நன்னி
நமோஸ்கார்.
(எப்படியாச்சும் அந்த கார்பன் ஓடுற தியேட்டருள்ள ஊருக்குப்
போயி பார்த்துடனும்)

Semma na
ReplyDeleteஜீத்து ஜோஸப் பெயரே போதும். ஆனால் லால் பையன் டைரக்ஷன் முயற்சிப்பதாக அவரும் நடிகராக வந்தது மகிழ்ச்சி. இன்னும் அந்த நான்கு ஹீரோக்களுக்கிடையே நல்ல ஆரோக்ய போட்டி நிலவும். 💘💘💘
ReplyDeleteParkour Stunt-முக்கியமாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஹீரோயின் இல்லை டூயட் இல்லையாம். வித்தியாசமான திரைப்படத்தில் தனது திரை வாரிசை அறிமுகப்படுத்தவும் தில் வேண்டும். மோகன்லாலுக்கு அது இருக்கிறது. அருமையான விமர்சனம் நண்பரே. வாழ்த்துக்கள்.
ReplyDelete