Tuesday, March 13, 2018

Time Loop Movies




இன்று நாம் பார்க்கப்போவது ஒன்றல்ல. மூன்று படங்களைப் பற்றி. மூன்றுமே டைம் லூப் கருவை மையமாகக் கொண்ட படங்கள். அதில் முதலாவது

1) Happy Death Day (2017)

Horror / Thriller



அன்று தெரசா அலயஸ் ட்ரீ-க்கு பிறந்தநாள். காலையில் முன்பின் தெரியாத ஒருவனது சிறிய அறையில் அவனது படுக்கையில் கண் விழிக்கிறாள். எழுந்தபின்புதான் தெரிகிறது. நைட் அடித்த சரக்கு ஓவராகி அவள் இந்த அறைக்கு வந்திருக்கிறாள். அந்த அறை அவள் படிக்கும் அதே ஸ்கூலில் உள்ள பாய்ஸ் ஹாஸ்டல் என்றும், அவனது பெயர் கார்ட்டர் என்றும் அறிகிறாள். அவளது தந்தை அவளது மொபைலுக்கு கால் செய்கிறார். அவள் எடுக்கவில்லை. அவசரமாக தனது பேண்ட்டை தேடி எடுத்து அணிந்து கொண்டு, கார்ட்டரின் டிஷர்ட்டை அங்கேயே அவன் முன்பிலேயே கழட்டி அவளது டாப்ஸை எடுத்து மாற்றிக் கொள்கிறாள். அவள் தங்கியிருக்கும் கேர்ள்ஸ் ஹாஸ்டலுக்கு வேகமாக ஓட்டமும் நடையுமாக வருகிறாள். அவளது அறைத்தோழி அவளுக்கு ஒரு ப்ளம் கேக்கில் ஒற்றை கேண்டிலைப் பொருத்தி ஹாப்பி பர்த்டே என்கிறாள். அவளோ அதை சட்டை செய்யாமல், வகுப்பிற்கு நேரமாகிவிட்டதென கிளம்பி ஓடுகிறாள். இரவு அவளது தந்தைக்கு கால் செய்ய தனியாக ஹாஸ்டலை விட்டு வெளியே வருகிறாள். ஒரு குட்டிப் பாலம். அதற்கு அடியில் நான்கு மூலைகளிலும் சைரன் விளக்குகள் பொருத்தி ஒளிர்ந்து கொண்டிருக்க, அந்த பாலத்திற்கு அடியில் நடுவில் ஒரு பொம்மை, பிறந்தநாள் வாழ்த்து இசையை இசைத்துக் கொண்டிருக்கிறது. ”ஓகே ஓகே யாரா இருந்தாலும் வெளிய வாங்க. வாழ்த்தினதற்கு நன்றி. வெளிய வாங்க” என்று புன் சிரிப்புடன் சத்தமாக அழைக்கிறாள். யாரும் வரவில்லை. சில நிமிடங்களுக்கு அசாத்திய மவுனம். அவள் பின்னால் யாரோ நிற்பது போல ஒரு உணர்வு. திரும்புகிறாள்.

அடுத்தநாள் அதே கார்ட்டரின் அறை. அதே பிறந்தநாள். பேண்ட் இல்லாமல், கார்ட்டரின் டீஷர்ட்டுடன் எழுந்திருக்கிறாள்.

அடுத்தது


2) Before I Fall (2017)

Drama / Mystery


தெரசாவைப் போலவே சமந்தாவும் ஸ்கூலில் படிக்கும் டீனேஜ் வயதுப் பெண். அவளது வீட்டில் படுக்கையில் கண் விழிக்கிறாள். மொபைல் நோட்டிபிகேசன் வருகிறது. இன்று கியூபிட் டே (Cupid Day – வொக்காலி நம்ம ஸ்கூல்ல இந்த மாதிரி டே-எல்லாம் கொண்டாட மாட்டாங்களே) சீக்கிரம் அதற்கு ரெடியாகச் சொல்லி அவளது தோழி லிண்ட்ஸே மெசேஜ் அனுப்பியிருப்பதைப் படித்து வெட்கத்துடன் அவசரமாக தயாராகிறாள். வீட்டில் அவளது குட்டித்தங்கை மற்றும் பெற்றோரை அலட்சியப் படுத்தி விட்டு வெளியே காத்திருக்கும் லிண்ட்ஸேயின் காரில் கிளம்புகிறாள். அடுத்த ஒரு நிறுத்தத்தில் ஆலியும், அதற்கு அடுத்த நிறுத்தத்தில் எலோடியும் ஏறுகிறார்கள். எலோடி ஒரு காண்டம் பாக்கெட்டை கியூபிட் டே பரிசாக அளிக்கிறாள். அன்று அவளுக்கு ஏற்கனவே காதலித்துக் கொண்டிருக்கும் ராப் இடமிருந்தும், பெயர் முகவரியில்லாத ஒரு யாரோவிடமிருந்தும் கியூபிட் டே அழைப்பாக ரோஜாக்கள் வருகிறது. (இதையெல்லாம் படிக்கிற கிளாஸ்ல, வாத்தியார் முன்னாடியே வந்து பொண்ணுங்க மெசெஞ்சர் சர்வீஸ் மாதிரி டெலிவரி பண்றாங்க. நம்ம ஸ்கூல்லயெல்லாம் கிளாஸ் நடக்கும் போது சர்க்குலர் மட்டுந்தான் வரும். ஆனா இங்க லவ் புரபோசல்கள், படுக்கை அழைப்புக்களெல்லாம் வருது. அயம் பீலிங் டூ மச் டுடே). அதே ஸ்கூலில் ஜூலியட் என்றொரு மாணவி. அவளை எல்லோரும் உதாசீனப்படுத்துகிறார்கள். இவர்கள் நால்வரும் குரூப்பாக அவளைக் கலாய்ப்பதை டைம்பாஸாக வைத்திருக்கிறார்கள். அவளும் எவரோடும் சேராமல் தனிமையிலேயே வருவதும் போவதுமாக இருக்கிறாள். தலைக் கேசத்தால் தனது உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் ஒதுங்கிச் செல்கிறாள். அன்றைய இரவு, உடன் படிக்கும் மாணவன் ஒருவனது வீட்டில் பார்ட்டி நடக்கிறது. அனைவருக்கும் அழைப்பு விடுத்திருக்கிறான் அந்த நண்பன். தோழியர் நால்வரும் அங்கு செல்ல, உற்சாக பானத்தின் உதவியுடன் எல்லோரும் தரையில் கால்படாமல் மிதந்து கொண்டிருக்க, ஜூலியட் அங்கே வருகிறாள். அவளை ஏகத்துக்கும் கெட்ட வார்த்தையில் பேசி லிண்ட்ஸே கலாய்த்து விட அவள் அங்கிருந்து ஓடி விடுகிறாள். இதே நினைவில் ஒருவரையொருவர் பேசிக் கொள்ளாமல் காரில் வீடு திரும்பிக் கொண்டிருக்க லிண்ட்ஸே தனது காரை எதன் மேலோ மோதி கார் விபத்துக்குள்ளாகி உருள்கிறது. சமந்தாவிற்கு இறுதியாக அதுதான் ஞாபகத்திலிருக்கிறது.

அடுத்த நாள். சமந்தா அவளது வீட்டில் படுக்கையில் கண் விழிக்கிறாள். மொபைல் நோட்டிபிகேசன் வருகிறது. இன்று கியூபிட் டே…

அடுத்தது ஒரு பழைய படம். இந்தப் படத்தை முதல் முறையாக பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும், இந்தப்படத்தையா இத்தனை வருசமா பார்க்காம மிஸ் பண்ணோம் என ஃபீல் பண்ணப் போவது நிச்சயம்.

3) Groundhog Day (1993)

Comedy / Romance



இந்தப் படத்தைத்தான் முதலில் எழுதியிருக்க வேண்டும். மன்னிக்கவும்

தொலைக்காட்சி செய்திகளின் முடிவில் வானிலை அறிக்கை வாசிப்பவர் நமது கதாநாயகன் ஃபில் கானர்ஸ். பங்ஸுட்டானியில் நடக்கும் ஒரு எலிச் சடங்கு வைபவத்தை கவர் செய்ய தனது மூன்று பேர் கொண்ட டீமுடன் செல்கிறார். வேண்டாவெறுப்பாக செல்கிறார். தனது டீம் வேறொரு இடத்தில் தங்க, இவர் தனியாக வேறொரு ஹோட்டலில் அறை எடுத்து தங்குகிறார். காலையில் எழுந்து வேண்டாவெறுப்பாக வெளியேற, ஹோட்டல் ரெஸ்டாரெண்டில் ஒரு சர்வர் பெண்மணியின் சாதரண விருந்தோம்பல் கேள்விகளுக்குக் கூட சடைந்து கொண்டு, வீதிகளில் நடக்கையில் பிச்சைக்காரக் கிழவனுக்கு காசு தருவது போல பாக்கெட்டிற்குள் கையை விட்டு வெறும் கையை வெளியில் எடுத்து ஒன்றுமில்லை என போக்குக் காட்டி, இன்ஸ்யூரன்ஸ் ஏஜெண்ட் நண்பரிடம் மாட்டிக் கொண்டு சாக்கடையி காலை தவறுதலாக வைத்து கடுங்கோபக் கடுப்புடன் வந்து, அதே தொனியில், ஆனால் அதை தனது டீமிடம் காட்டிக் கொள்ளாமல் செய்தி வாசிக்கிறார். அன்றைய நாள் இரவு அந்த ஊரிலிருந்து கிளம்ப முடியாதபடிக்கு பனிச் சரிவு ஏற்பட்டு சாலைகளில் போக்குவரத்து முடக்கமடைகிறது. சரியான கடுப்புடன் முந்தைய இரவு தங்கியிருந்த அதே ஹோட்டல் அறைக்கு வந்து தங்குகிறார். தூங்குகிறார். காலையில் கிளம்பி ஊருக்கு செல்ல ஹோட்டலை விட்டு வெளியே வருகிறார். அதே ரெஸ்டாரெண்ட் சர்வர் பெண்மணி, பிச்சைக்காரக் கிழவன், இன்ஸ்யூரன்ஸ் ஏஜெண்ட், சாக்கடையில் தவறிய கால், மேலும் அது அதே கிரவுண்ட்ஹாக் டே.

மூன்று படங்களுக்கும் உள்ள மற்றொரு ஒற்றுமை, படத்தின் முக்கிய மாந்தர்கள் ஒரே நாளில் மாட்டிக் கொள்வது. அது அவர்களுக்கு மற்றுமே தெரியும். கதையின் மற்ற மாந்தர்களுக்கு அது முந்தைய நாளின் சாதாரணத் தொடர்ச்சி.

இப்படி ஒரே நாள் திரும்ப திரும்ப வந்து அதையே திரையில் காண்பித்தால் போரடிக்கும்தானே. அது உண்மைதான். ஆரம்பத்தில், அவர்கள் அந்த உண்மை புரிந்து அதிர்ச்சியடைந்து அதற்கடுத்தடுத்த அதே நாட்களில், கடந்த முந்தைய அதே நாட்களின் ஞாபகங்கள் அவர்களுக்கு மட்டும் இருப்பது ஒரு வகையில் சுவாரஸ்யமே.

அதை விட சுவாரஸ்யமானது, இந்த மாதிரியான படங்களில் உள்ள சில மேஜிக்கல் மொமண்ட்ஸ். உதாரணமாக, இன்று நேற்று நாளை படத்தில் மியா ஜார்ஜ் தனது சிறுவயதை டைம் டிராவல் செய்து நேரில் காண்பது ஒருவகை சுவாரஸ்யம் என்றாலும், அதை விட சுவாரஸ்யம், தான் பிறக்கப் போகும் அந்த நிமிடம் பிரசவ வார்டின் முன்பு காத்திருந்து, தன்னைத் தானே கையிலேந்துவது – உண்மையில் இதுதான் டைம் டிராவல் படங்களில் உள்ள மேஜிக்கல் மொமண்ட்.

தெரசா தன்னைக் கொலை செய்யப் போகும் அந்த நபர் யாரென்று கண்டுபிடிப்பதற்காக ஒரு சஸ்பெக்ட் லிஸ்ட்டை ரெடி செய்து வைத்துக் கொண்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரை தொடர்வதும், அதன் இறுதியில் கொலையாவதுமாய் மாண்டேஜாக வரும் காட்சிகள் ஒருவித சுவாரஸ்யம் என்றாலும், தனது அந்த நாளை தன் இஷ்டத்திற்கு வாழ்வதென்று முடிவு செய்து அவள் செய்யும் அதிரடி செய்கைகள் கிளுகிளுப்பான மேஜிக்கல் மொமண்ட்ஸ்.

சமந்தா, தனது ஒரு நாளை இதுவரை தான் வெறுத்து ஒதுக்கியவர்களிடம் அன்புடன் கழிப்பது ஒரு சுவாரஸ்யம் என்றாலும், உண்மையில் தன்னை யாரெல்லாம் விரும்புகிறார்கள் என்று அறிந்து கொள்ளும் இடம் அழகான மேஜிக்கல் மொமண்ட்ஸ்.

அதேபோல ஃபில் கானர்ஸ், ஒருநாள் (இங்கு ஒரு நாள் எனப்படுவதெல்லாமே ரிப்பீட்டாக சுழலும் அதே நாளே) ரெஸ்டாரெண்டில் ஒரு பெண்ணின் பெயரையும், படித்த ஸ்கூலைப் பற்றியும், டுவல்த் கிரேடு ஹிஸ்டரி டீச்சர் பெயரையும் மட்டும் தெரிந்து கொண்டு, அடுத்த அதே நாளில் அவளிடம் வந்து, ஹாய் நான்ஸி, என்னைத் தெரியலியா? நாந்தான் உன் ஸ்கூல்ல உன் கூட படிச்ச ப்ரெண்டு, டுவல்த் கிரேடுல ஹிஸ்டரில் கிளாஸுல உன் பென்ச்ல உனக்கு பக்கத்துல உக்காந்திருந்தனே என்று நம்பிக்கை வருவதற்காக, ஹிஸ்டரி டீச்சர் பேரையும் சொல்லி, அவளை பிக்கப் செய்வதும், பேங்கிற்கு பணம் வரும் வண்டியிலிருந்து முதல் நாள் பார்த்து வைத்து அடுத்த அதே நாள் கொள்ளையடிப்பதும், சுவாரஸ்ய மொமண்டுகள் என்றாலும், தனது டீமிலிருக்கும் ரீட்டாவை கரெக்ட் செய்ய படாதபாடு பட்டு ஒவ்வொரு நாளும் பளார் வாங்கும் காட்சிகளும், அந்த ஏரியாவில் ஒவ்வொருவரின் நடப்புகளையும் கவனித்து அவர்களது அந்த நாளை வாழ்வின் முக்கிய நாளாக மாற்றித்தரும் காட்சிகள் செம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம மேஜிக்கல் மொமண்ட்ஸ்.

இந்த வகைப்படங்களில் அந்த நாள் மட்டும் அவர்களுக்கு தொடர்ந்து மீண்டும் மீண்டும் சுழல்வது ஏனென்று எந்த குறிப்பிட்ட காரணங்களும் இருக்காது. அப்படியெதுவும் காட்டப்படவுமில்லை. ஆனால், இதற்கென எதாவது ஒரு காரணம் இருந்தே ஆகவேண்டுமல்லவா?

அப்படி யோசித்ததில்,

அகாலத்தில் மரணிப்பவர்கள், தனது வாழ வேண்டிய மிச்ச வாழ்க்கையை அனுபவிக்க காலமே ஏற்படுத்திக் கொடுக்கும் ஒரு அற்புதமான வாய்ப்புதான் இந்த டைம் லூப் என்பது எனது தியரி.

மீண்டும் ஒரு நல்ல படத்துடன் சந்திப்போமா!

6 comments:

  1. அட்டகாசம் இதுல groundhog day மட்டும் பார்த்துருக்கேன் அடுத்த ரெண்டும் பார்த்தே ஆகனும்😎

    ReplyDelete
  2. மூணுமே பார்க்கணும் ப்ரோ.. சூப்பர்..

    ReplyDelete
  3. இந்த வகை டைம் லூப்'இல் நான் பார்த்த முதல் படம் Edge of tomorrow... அப்பொழுது யாரோ சொல்லி Groundhog Dayயும் பார்த்தாச்சு...

    Magical இல்லாத medical என்றாலும், இந்த லூப்'இல் எனக்கு பிடித்த படம் 50 First Dates...

    ReplyDelete
  4. மற்ற ரெண்டு படத்தையும் தூக்கி சாப்டிடுச்சு Groundhog day 👌👌

    ReplyDelete
  5. மற்ற ரெண்டு படத்தையும் தூக்கி சாப்டிடுச்சு Groundhog day 👌👌

    ReplyDelete