Friday, August 31, 2018

Time Trap (2017)




TimeTrap (2017)

Science Fiction / Adventure


(ஸ்பாய்லர்கள் உள்ளது. ஆகவே ஸ்பாய்லரைத் தவிர்க்க விரும்புபவர்கள் ஒரு பெரிய லாங் ஜம்ப் செய்து கடைசி நான்கு பாராக்களை மட்டும் வாசிக்கவும்)

காணாமல் போன தனது குடும்பத்தைத் தேடி சில தடயங்களைக் கொண்டு ’ஹாப்பர்’ தனது உற்ற தோழன் ’பாஸ்’ எனும் நாயுடன் அந்த காட்டிற்கு வருகிறார். அங்கே ஒரு குகையைக் கண்டுபிடிக்கிறார். அதன் உள்ளே ஒருவர் துப்பாக்கியுடன் நிற்பதைக் கண்டு திரும்பி விடுகிறார்.

அடுத்த நாள் மீண்டும் சில கூடுதல் உபகரணங்களுடன் செல்கிறார். அந்த குகைக்கு மறுபக்கம் மற்றொரு குழி போன்ற ஒரு வழியை யதேட்சையாக கண்டுபிடிக்கிறார். குகையின் முன்வாசல் வழியாக திரும்ப முடியாவிட்டால் உதவட்டுமே என்று குழியில் ஒரு நீளமான கயிற்றை கட்டி வைத்துவிட்டு, முன்வாசலில் நுழைகிறார். முந்தைய தினம் துப்பாக்கியுடன் நின்றிருந்தவன் இன்றும் அதே போஸில் துப்பாக்கியுடன் அப்படியே நின்றிருக்கிறான்.

துணிந்து உள்ளே செல்கிறார் ஹாப்பர்.

சில தப்படிகள் உள்ளே நுழைந்ததும், அங்கே கண்ணுக்குத் தெரியாத ஒரு திரை காற்றின் மேல் பரவியிருப்பதை அவர் உணருகிறார். தைரியத்தை வரவழைத்துக் கொண்டு முன்னேறுகிறார். அந்த துப்பாக்கி மனிதனை நெருங்குகையில் அவன் அப்போதுதான் முன்னே நகர்ந்து கொண்டிருப்பதை உணருகிறார். இருவரும் குகையில் தொலைகிறார்கள்.

சில நிமிடங்களுக்குப் பின் அதே குகைவாசலின் வழியாக வெளியேறுகிறார். ஆனால், அந்த சாதாரண காய்ந்த மரங்களைக் கொண்ட காடு, அடர்ந்த அமேசான் வனம் போல மாறியிருப்பதை உணர்கிறார். குழப்பத்துடன் மீண்டும் குகைக்குள் அதே வழியாக நுழைந்து மீண்டும் தொலைந்து போகிறார்.


தொலைந்து போன ஹாப்பரைத் தேடி, ஒரு டீனேஜ் குழு அந்த காட்டிற்கு வருகிறது. அவர்கள் வந்தடைந்தது குகையின் மறுமுனைக் குழி. அங்கே ஹாப்பர் கட்டி வைத்திருந்த கயிற்றைக் காண்கிறார்கள். ஆனால், அவர்கள் அந்த வழியைத் தவிர்த்து, மூன்றாவதாக ஒரு குகையின் வழியைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
உண்மையில் அவர்களுக்கு ஹாப்பர் நுழைந்த குகையின் முன்பக்கம் தெரிந்திருக்கவில்லை. மறுமுனை குகை குழியின் அருகே ஹாப்பரின் காரைக் கண்டதும் அங்கேயிருந்து வேறு பக்கமாக தேடியதில் குகையின் மூன்றாவது வாசல் தென்பட்டிருந்தது.

அந்தக் குழுவில் ஃபர்பி (Furby) என்ற சிறுவனை வெளியில் காத்திருக்கச் சொல்லிவிட்டு மூன்று பெண்களும் ஒரு வாலிபனும் உள்ளே நுழைகிறார்கள்.

அவர்கள் உள்ளே சென்ற சில நிமிடங்களுக்கு அமானுஷ்யமான குரல்களைக் கேட்டு குழம்புகிறார்கள். அந்தக் குரல்களில் ஒன்று சிறுவன் ஃபர்பியினுடையது. தன்னைக் காப்பாற்றும்படி ஈனஸ்வரத்தில் கெஞ்சுகிறது. அவர்களோ குழப்பமடைகிறார்கள். காரணம், அவன் குகைக்கு வெளியிலிருப்பதாக எண்ணிக் கொண்டல்ல. அந்தக் குரலுக்கு சொந்தக்காரன் ஒரு 90 வயதுக்குரியவனோடதாக இருந்தது. முதலில் ஃபர்பி வெளியே தான் இருக்கிறானா என்பதை உறுதி செய்ய வந்த வழியே ஒருத்தி கயிற்றில் மேலேறுகிறாள். சில அடிகள் மேலேறியதும் அந்தக் கயிறு அறுபட்டு பொத்தென கீழே விழுந்து கால் உடைகிறது. கயிற்றை இழுத்துப் பார்த்ததில் அதனை யாரோ அறுத்து விட்டிருப்பதை கண்டுபிடிக்கிறார்கள். அவர்கள் அந்த குகையில் இறங்கியது மொத்தம் இரண்டு கயிறுகள். அந்த மற்றொரு கயிற்றின் வழியாக அந்த வாலிபன் ஏற முயற்சிக்கையில் அந்தக் கயிறும் அறுபட்டிருக்கிறது. இவனும் கீழே விழுந்து கை உடைகிறது.

மேலும் சில குழப்பங்களுக்குப் பிறகு, அந்த குகையை விட்டு வெளியே சென்று வெளி உலக உதவியை நாடலாமென முடிவெடுக்கின்றனர். ஆனால், வெளியே செல்லப் போவது யார்? நால்வரில் ஒருவர் கை முடம், மற்றொருவர் கால் முடம். மீதமிருக்கும் இரண்டு பேரில், ஒருத்தி டீனேஜே தொட்டிருக்காத சிறுமி. ஒரே ஒருத்தி மட்டுந்தான் மேலே ஏற வாய்ப்புள்ளது. அவளும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மேலேறுகிறாள்.

மேலே ஏறும் முன்னமே அந்தக் குழிக்கு கீழே உள்ள குன்றின் பின்புறத்தில் ஃபர்பி இறந்த நிலையில் கிடக்கிறான்.

அந்தக் குழு அதிர்ச்சியடைந்து செய்வதறியாது திகைத்து நிற்கிறது. தற்போது அவர்களுக்கு வெளியுலக உதவி நிச்சயம் தேவை என்பதை உணர்கிறார்கள். அவள் மீண்டும் மேலே ஏறுவதற்கு அந்த குன்றின் மீதேறி குழியின் உச்சிய்யைப் பார்த்தபோது, அதன் மேலே யாரோ வேகமாக பயங்கர ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சியும் அணைத்தும் விளையாண்டு கொண்டிருப்பதை காண்கிறாள்.

அங்கே ஹாப்பர், எதற்கும் இருக்கட்டுமே என்று முன்பு கட்டி வைத்திருந்த கயிற்றைக் காண்கிறாள். அதனைப் பிடித்து மேலேற முயற்சிக்க அந்தக் கயிற்றையும் யாரோ அறுத்து விட்டிருப்பதை உணருகிறாள். இனி வேறு வழியில்லை. கைகளால் அந்த குகையின் சுவர்களைப் பிடித்துப் பிடித்து மேலேறுகிறாள்.

அங்கே ஒளி வெள்ளம் அணைந்து ஒளிர்ந்து கொண்டேயிருக்கிறது. அதைச் சட்டை செய்யாமல் மேலேறுகிறாள்.

முன்பு ஹாப்பர் முன்வாசலில் நுழைகையில் உணர்ந்த காற்றுத் திரையை இப்போது அவள் உணருகிறாள். அதைத்தாண்டி முன்னேறி குழியின் வழியாக மேலேறுகிறாள்.

அங்கே…

அந்தக் காடு…

முற்றிலும் மாறுபட்ட பொட்டல் காடாக காட்சியளிக்கிறது. அவளது பீக்கனில் (Becon) சிக்னல் எதுவும் கிடைக்கவில்லை. சற்று தூரத்தில் மணல் புயல் சுனாமி போல தாக்க வருவதைக் காண்கிறாள். ஆனால், அதற்கு மேலே அவள் கண்ட விசயம் அவளை மேலும் உடைந்து போகச் செய்கிறது.

வான் வெளி, அதன் நீலம் என்று எதையுமே காணவில்லை. அதற்கு பதிலாக, பூமிக்கு அருகே சுற்றும் சில கோள்களும், சேட்டிலைட்களையும் காண்கிறாள். மணல் புயல் அவளை நெருங்கவும், வேறு வழியில்லாமல் மீண்டும் குழியின் வழியாக குகைக்குள் இறங்குகிறாள்.

அப்போதுதான் அவர்கள் ஒரு விசயத்தை கண்டுபிடிக்கிறார்கள். மேலே யாரும் லைட்டத்து விளையாடவில்லை. அது சூரியன். தங்களை அது கடந்து செல்வதைத்தான் பார்த்து குழம்பிருக்கிறோம். இங்கே ஒரு நொடி என்பது வெளியில் ஒரு நாள். குகைக்குள் காலம் நகர்வதற்கும், குகைக்கு வெளியில் காலம் நகர்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்று குழப்பிக் கொள்கிறார்கள்.

உண்மையில் குகைக்கு உள்ளே ஒரு நொடி என்பது, குகைக்கு வெளியே ஒரு ஆண்டு. மேலே சூரிய ஒளி நகர்வு ஒரு நாட்களுக்கு அல்ல. ஒரு ஆண்டுக்கு. அதை அவள் மேலே ஏறும்போது வைத்திருந்த கேமராவை ஸ்லோ மோசனில் ஓடவிட்டு பார்த்த அந்த சிறுமி கண்டுபிடிக்கிறாள். அதில் அந்த காற்று மண்டல மாறுபாட்டில், அவள் நகர்ந்து மேலேறிய போது, குகைச் சுவர்களில் இருந்த சிறிய செடிகள் பெரிதாக வளர்ந்து, காய்ந்து மீண்டும் அங்கே வேறு தாவரங்கள் முளைப்பதாக அதில் பதிவாகியிருந்தது.

அந்த குகைக்குள் இருந்து அவர்கள் எப்படி தப்பினார்கள்? தப்பித்தார்களா? ஹாப்பர் என்னவானார்? சிறுவன் ஃபர்பி எப்படி இறந்தான்? அவனைக் கொன்றது யார்? மேலும் கயிற்றை யாரும் அறுத்துவிடவில்லை. அது கால மாற்றத்தால், வயதாகி அறுபட்டிருக்கிறது. அப்படியென்றால் அந்த குகைக்குள் மட்டும் எப்படி காலம் மாறுபடாமல் இருக்கிறது?

ப்ப்ப்ப்ப்ப்ப்பா செம கதைங்க. அந்த தாவரம் வளர்ந்து காய்ந்து… அந்த ஒரு ஸ்லோ-மோசன் காட்சி. அப்போதுதான், அதைப் பார்த்தபின்புதான் நான் இதை டைம் டிராவல் படம் என்பதையே உணர்ந்தேன். உண்மையில் Time Trap (2017) என்ற தலைப்புக்கு ஏற்ற கதை. ஏனென்றால், படம் ஆரம்பித்து சில நிமிடங்களில் நடந்து முடிந்த இந்தக் காட்சிகளைக் கொண்டு, நான் என்னவெல்லாம் நினைத்திருக்க முடியும்? 

1)   இது ராங் டர்ன் போல ஸ்லேஷர் மூவியாக இருந்திருக்கலாம் என்று

2)   இந்தக் குழுவில் யாரோ ஒரு கருப்பு ஆடு இருக்கிறான். அவனுக்கும் இவர்களுக்கும் ஒரு ஃப்ளாஸ்பேக் எப்படியும் இருக்கும் என்று நினைத்து ஆவ்வ்வ்வ் என்று கொட்டாவியும் கூட வந்திருக்கலாம் என்று

3)   ஹாப்பர்தான் இவர்களை குழிக்குள் வரவைத்து, இவர்களது மூவ்மெண்டுகளை ரகசிய கேமரா மூலம் கண்டு லைட்டடித்து, வெளியே விண்வெளிப்படம் காட்டி, கயிற்றை அறுத்து ஃபர்பியைக் கொன்று / அவனையும் கூட வைத்துக் கொண்டு அவன் இறந்தது போல நடிக்க வைத்திருக்கலாம் என்று

4)   அல்லது இவர்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து கொண்டு, அதில் ஒருத்தியை ஏமாற்றி கடைசியில் ஏப்ரல் ஃபூல் எனச்சொல்லி விளையாடியிருக்கலாம் என்று

5)   இவ்வளவையும் செய்வது ஒரு பேய். அது ரொம்பவும் சக்தி வாய்ந்த சாத்தான். குகைக்குள் இவர்கள் சிறுவயதில் குழுவாக வந்து அந்தப் பேய் உயிரோடு இருக்கும்போது கொன்று, அது பழிவாங்க ஹாப்பரைப் பிடித்து வைத்துக் கொண்டு, அடுத்து வரும் காட்சிகளில், ஒவ்வொரு திருப்பங்களிலும் இவர்கள் திரும்பும்போது திடீரென முகத்திற்கு முன் வந்து ‘பூச்சாண்டி’ என்று ஐஸ் பாய்ஸ் ஆடப் போகிறதோ என்று


  6) எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த அமேசான் காடுகள் மிகவும் ஆபத்தானது என்று டயலாக்குடன் வரப்போகும் இதன் தமிழ் டப்பிங் வர்சனை என்று

என்னென்னவோ தோன்றியது. நல்லவேளையாக இதுபோல எதுவும் இல்லாமல், ரொம்பவே வித்தியாசமான கதைதான்.

இதில் நான் மேற்கூறிய விவரணைகள் எல்லாமே படம் ஆரம்பித்த சில நிமிடங்களுக்கு வரும் காட்சியின் வருணனைகளே. மேற்கொண்டு இவ்வளவு நீளமாக, லென்த்தாக, நீட்டமாக, கொட்டாவி வரும்படியாக என்று எதுவும் இல்லாமல், அனைத்துமே சுவாரஸ்யமான காட்சி நகர்வுகள்தான்.

ஆகவே இந்தப்படத்தை சைன்ஸ் ஃபிக்சன் ஜானர் விரும்பிகள் குடும்பத்துடன் தாரளமாக பார்க்கலாம்.

நன்றி வணக்கம்.


மீண்டும் அடுத்து ஒரு நல்ல படத்துடன் சந்திப்போம்.

No comments:

Post a Comment