Saturday, September 15, 2018

Predator (2018) – ஹாலிவுட் மெர்சல்



Predator (2018)

Science Fiction / Action

விண்வெளியில் இரண்டு பெரிய பறக்கும் தட்டுகள் களேபரம் நடத்திக் கொண்டிருக்க, அது சில போர்ட்டல்களை திறப்பதும் வேறு போர்ட்டகளுக்கும் நுழைவதுமாக இருந்தது. ஒரு தட்டு, இன்னொரு தட்டை துரத்துவதும் இன்னொன்று அதற்கு பதிலடி கொடுத்துக் கொண்டே தப்பித்துக் கொண்டும் இருக்க,

நமது பூமியில்…

க்வின் மெக்கென்னா ஒரு ஆர்மி ஸ்னைப்பர். தன்னுடைய டீமுடன் ஒரு மிசனில் காட்டில் ஸ்னைப்பர் ரைபிளின் கிராஸ்ஹேரில் தொலைவிலுள்ள ஒரு டார்கெட்டை குறி வைத்து, சரியான சமயத்தில் ட்ரிகரை அழுத்தக் காத்திருக்கிறான். சரியான சமயமும் வந்தது. ஆனால், அதே சமயத்தில் முதல் பாரா களேபரம் பூமிக்கு நகர்ந்து அந்த தப்பித்துக் கொண்டிருந்த தட்டு இவர்கள் இருக்கும் காட்டின் மேலாக பறந்து விழுகிறது. அதிலிருந்து வெளிவந்த ஒரு ப்ரிடேட்டர், மெக்கென்னாவின் குழுவைத் தாக்கி கொன்று விட, அதன் மேல் ஆத்திரமடைந்த மெக்கென்னா (எவஞ்செத்தா எனக்கென்னான்னு அப்பவே போயிருந்திருக்கலாம்ல) ஆத்திரத்தில் அதனோடு சண்டையிட அதன் சில உபகரணங்கள் இவன் கைக்கு கிடைக்கிறது. கவனிக்கவும். அது ஏலியன் கேட்ஜெட்ஸ். (ஆகா செம மேட்டரா இருக்குதே இத வச்சு கதை பரபரப்பா சூடுபறக்கப் போகுது என்று நினைத்த எனக்கு அடுத்த நிமிடமே அந்த நினைப்பில் விழுந்தது பெரிய பாறாங்கல்.) அதை வைத்து பிரிடேட்டரிடமிருந்து மெக்கென்னா தப்பிக்கிறான். பிறகு… பிறகெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை. அதை ஒரு பார்சலாக தனது வீட்டிற்கு அனுப்பி வைக்கிறான். ராணுவம் இவனை கைது செய்கிறது - ஏலியன் வருகையை பார்த்திருக்கலாமென்றும், அதன் சில உபகரணங்கள் இவனிடம் மறைந்திருக்கலாமென்றும். கூடவே அந்த ப்ரிடேட்டர் கையிலும் இல்லீகல் என்ட்ரி என்று விலங்கு மாட்டி சட்டம் தன் கடமையை ஆற்றி, ஊருக்கு ஒதுக்குப்புறமா ஒரு லேப்புல வச்சு ஆராய்ச்சி நடத்துகிறது.

பிறகுதான் நடந்தது ஒரு பெரிய கூத்து.

பார்சலை அவனது மகன் ரோரி மெக்கென்னா பிரித்து அதை இயக்க அதன் ரகசியங்கள் அவனுக்குத் தெரிந்து விடுகிறது. ஏலியன் ரோரியை டார்கெட் செய்கிறது. ரோரிக்கு அதன் கரடுமுரடான பாஷைகள் புரிகிறது. ஜாங்கிரி எழுத்துக்கள் புரிகிறது. அதன் கண்ணீரும் கம்பலையுமான வரலாறு தெரிகிறது. அது வந்திருக்கும் காரணத்தை அறிகிறான். அடப்போங்கடாங்கொங்கொங்கொங்…

அங்கே புதிதாக இன்னொரு தட்டு வந்து விழுகிறது. அது நேராக இந்த ரகசியமான ரிசர்ச் செண்டரை நெருங்கும் வேளையில் அங்கிருந்த ப்ரிடேட்டர் தப்பிக்கிறது. தப்பித்து ரோரியை தேடுகிறது. அந்த வழியாக தனது பழைய குழுவுடன் அரெஸ்ட்டாகி சென்று கொண்டிருந்த மெக்கென்னாவும் தப்பித்து வீட்டுக்கு ஓடுகிறான். அவனிடமிருக்கும் அந்த கேட்ஜெட்ஸை அஹிம்சை வழியில் பறிக்கும் வேளையில்…

புதிதாக வந்த இரண்டாவது தட்டிலிருந்து ஒரு ராட்சச ப்ரிடேட்டர் – அளவிலும் சைஸிலும் முதலாம் பிரிடேட்டரை விட நான்கைந்து மடங்கு பெரியது. அதன் முட்டிங்கால் சைஸ்தான் இந்த பழைய ப்ரிடேட்டர். வந்த வேகத்தில் அந்த ராட்சச ப்ரிடேட்டர் அதனோடு மோதியதில், சின்ன ப்ரிடேட்டரின் தலையை சர்ரக்கென்று பிய்த்து விட, அந்த சின்னூண்டு ப்ரிடேட்டர் செத்துப் போச்சி.

முடியலடா டேய்…

கோட் வேர்டுல சொல்றேன். புரிஞ்சிக்க ஈஸியா இருக்கும்.

சிறுவன் கையில் ப்ரேஸ்லெட் மாட்டி அதன் மூலம் ரகசியம் தெரிந்து, அதற்காக அந்தச் சிறுவனை கடத்திச் சென்று தன்னை விட பெரிய வில்லனை, சின்ன வில்லன் கொல்ல நினைக்க, தனது மகனைக் காப்பாற்ற, பெரிய வில்லனை ஹீரோ போட்டுத் தள்ள… டேய் இது மம்மி பார்ட் டூ-டா!

இதென்ன பிரமாதம். ஷ்பெசல் அயிட்டம் ஒன்னு வச்சிருந்தானுக கிளைமேக்ஸ்ல.

அடேய் டைரக்டர் ஷேன் ப்லாக்கு, நீ அயன் மேன் 3 டைரக்டரா இருந்திருக்கலாம். அதுக்காக அதே நெனப்புலயா உக்காந்து கதை எழுதுவ?

இப்பப் புரிஞ்சதா? அட்லீக்கள் எல்லா நாட்டுலயும் இருக்காங்கன்னு. உண்மையிலயே இது ஒரு ஹாலிவுட் மெர்சல்தானுங்கோவ்!

ப்ரிடேட்டர் வரிசைப் படங்களில் Predator (1987), AVP (2004), AVP Requiem (2007) மற்றும் Predators (2010) இவை மட்டுமே பெஸ்ட்டு. இன்னைக்கு கூட நைட்டு ஸ்டார் மூவீஸ்லயும், ஹெச்.பி.ஓவுலயும் போடுவானுகன்னு நெனைக்கிறேன். பாக்கறதானா அதையே மறுபடி மறுபடி பார்த்து ஆர்கஸம் அடையவும். தவறிக் கூட இந்தப்படம் ஓடுற தியேட்டர் பக்கம் போயிடாதிங்க ப்ரெண்ட்ஸ் என்று உங்கள் மலர்ப் பாதங்கள் தொட்டு மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.

நன்னி நமக்கம்.

(யேண்டா இவ்ளோ பெரிய ஹாலிவுட் படத்துல சொல்லிக்கிற மாதிரி ஒன்னு கூடவா இல்ல என்று கேட்பவர்களுக்கு, - படத்துல அப்டியே டிட்டோ 1987 பிரிடேட்டர்ல ஆலன் சில்வெஸ்ட்ரி போட்ருந்த பேக்ரவுண்ட் மியூசிக்க கட் காப்பி பேஸ்ட் பண்ணிருந்தாங்க. காப்பி பேஸ்ட்னாலும் பழைய படத்தோட இசை உங்களுக்கு அதே பழைய பிரிடேட்டர் பீல் கொடுக்க ட்ரை பண்ணிருந்தது. அப்புறம் இன்னொன்னு, பிரிடேட்டர்கிட்ட நியூடா உக்காந்து ஹீரோயின் தப்பிச்சது – செம கிளுகிளுப்பான காமெடி. இந்த சீனுக்கு தியேட்டரே பொரண்டு பொரண்டு சிரிச்சது. இதவிட ஒரு பெரிய அவமானத்த பிரிடேட்டருக்கு வேற யாரும் கொடுத்திருக்க முடியாது. என்ன ஒரு குபீர் சிந்தனை டைரக்டருக்கு. அடேய் கிட்டத்தட்ட ஃபோர் டெக்கேட்ஸ் - நாப்பது வருச பில்டப்ப, இப்டி ஒரே சீன்ல சல்லி சல்லியா நொறுக்கீட்டியேடா பாவி. பதினெட்டுப்பட்டி கிரகத்துலயும் அது எப்பேர்ப்பட்ட தலக்கட்டு! எப்பேர்ப்பட்ட ஏலியன் மிருகம் அது! ஒரு இது வேணாம்? ஹி ஹி ஆனாலும் அந்த சீன இப்ப நெனச்சாலும் எனக்கு குபீர் குபீர்னு சிரிப்பு வருது.)

Beauty and the Dogs (2017) - அரபி



Beauty and the Dogs (2017)


Arabic
Drama / Thriller


மரியம் 21 வயதான பல்கலைக்கழக மாணவி. நல்ல லட்சணமான தோற்றமுடையவள். பார்ப்பவர்களை எளிதில் வசீகரிக்கும் முகப் பொலிவுடையவள். நைட் கிளப்பிற்கு செல்ல வேண்டும் என்கிற ஆவலில் தனது தோழியிடம் ஒரு குட்டையான நீல நிற ஆடையை இரவல் வாங்கி அணிந்து கொண்டு செல்கிறாள். அங்கே யூசெப்பை சந்திக்கிறாள். அவனிடம் பேசிப் பழகுகிறாள். இருவரும் நைட் கிளப்பை விட்டு அருகிலுள்ள கடற்கரைக்கு செல்கிறார்கள்.

அங்கே ஆரம்பிக்கிறது அவர்களுக்கு ஏழரை நாட்டுச் சனி.

சில நிமிடங்கள் கழித்து மரியம் உடலில் சிறிய சிராய்ப்புக் காயங்களுடன், உதட்டோரம் லேசாக வழியும் ரத்தக் காயத்துடன் மரண பீதியில் ஓடி வருகிறாள். அவள் பின்னாலேயே யூசெப்பும் ஓடி வருகிறான். அவர்களுக்கு பின்புறமாக ஒரு கார் சைரனுடன் வந்து கடந்து செல்கிறது.



காரைக் கண்டதும் மரியம் மிரளுகிறாள். யூசெப் அவளைத் தேற்றி, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறான். மருத்துவமனை செவிலியிடம், அவளை மூன்று பேர் சேர்ந்து வன்புணர்ந்ததாகவும், அவர்கள் மீது வழக்குப் பதிய மரியத்தை பரிசோதித்து மருத்துவச் சான்றிதழ் வழங்க வேண்டுமெனவும் கேட்கிறான். அது ஒரு தனியார் மருத்துவமனை. ஆதலால் மரியத்தின் அடையாள அட்டை இருந்தால்தான் அனுமதிக்க முடியும் எனவும் கூறுகின்றனர். மரியத்தின் கைப்பை, அதிலிருந்த பணம், செல்போன், அத்தோடு தனது அடையாள அட்டை யாவும் அந்த போலீஸ் வாகனத்தில் பறிகொடுத்ததாக கூறுகிறாள்.

வேறு வழியில்லாமல், அரசு மருத்துவமனைக்கு வந்து மிகுந்த சிரமத்திற்குப் பிறகு பாரன்சிக் மருத்துவரை சந்திக்கின்றனர். அவரோ, முதலில் போலீஸ் ஸ்டேசனில் கம்ப்ளைண்ட் பதிந்து, பிறகு அவர்களது அனுமதியோடுதான் பரிசோதிக்கவோ, சான்றிதழ் வழங்கவோ முடியுமென்று மறுத்து விடுகிறார். மீண்டும் வேறு வழியில்லாமல் போலீஸ் ஸ்டேசனுக்கு செல்கிறார்கள்.

மரியத்திற்கு கட்டம் சரியில்லை. இங்கேதான் அவளுடைய ஏழரைச் சனி குத்த வைத்து குத்தாட்டம் போடப் போகிறது.



பெண் உரிமை, சுதந்திரம், பேச்சுரிமை என எதை வேண்டுமானாலும் நம் நாட்டில் பேசலாம். அனுபவிக்கலாம். ஆனால், அது வட ஆப்பிரிக்கக் கண்டத்தில் மத்திய தரைக்கடலை ஒட்டி சுற்றிலும் கடல் சூழ அமைந்துள்ள நாடான துனீசியாவின் தலைநகரம் துனிஸ். அங்கே 2011இல் நடந்த புரட்சிக்குப் பிறகு, பழமைவாத கலாச்சார விதிமுறைகளால் ஊறித் திளைக்கும் நாடு.

அதுவும் போலீஸ்காரங்க மேல கற்பழிப்பு கேஸ் பதிய போலீஸ் ஸ்டேசனுக்கே – குடுக்கலாம்ல? நம்மூர்ல கூட கம்ப்ளைண்ட் கொடுக்க போலீஸ் ஸ்டேசனுக்குத்தான போவோம். ஆனா அந்த ஊர் போலீஸ்காரங்க வேற மாதிரி டைப்பு. அதெல்லாம் நம்மூர்ல இருந்தா நமக்கு வரும் கடுப்பு. நான் பெற்றெடுத்த பிள்ளை சிம்பு – அய்யய்யோ சாரி நான் கொஞ்சம் எமோசனாயிட்டேன்.

என்னவோ போங்க, அந்த மரியம் புள்ளயும், யூசெப் பையனும் வகையா போயி வலைக்குள்ள மாட்டுன எலிங்க மாதிரி ஓடவும் முடியாம ஒழியவும் முடியாம – பிக் பாஸ் கன்பெசன் ரூமுக்குள்ள ஒரு ஓவியா, ஆயிரம் காயத்திரிகிட்ட மாட்டுன மாதிரி அந்தப் புள்ள அனுபவிக்கிற வேதனை இருக்கே. ச்சை.

இது Beauty and the Dogs (2017) படத்தோட கதை. ஆங்கில சப்டைட்டிலோடு கூடிய Aala Kaf Ifrit (2017) அரபி மொழித் திரைப்படத்தோட கதை. கிட்டத்தட்ட தொண்டிமுதலும் திருக்ஷாக்ஸியும் படத்தைப் போல போலீஸ் ஸ்டேசன்லேயே முழுக்கவும் கதை நகரும். ஆனா மரியமும் யூசெப்பும் ஓடி வர்ற அந்த சீன்ல இருந்து கடைசி ப்ரேம் வரைக்கும் நல்லா ஸ்பீடு. நிஜக்கதை வேறயா? நமக்கு அடிக்கடி – இதுக்கு மேல பாக்கனுமா? அப்டிங்கற மாதிரி ஒரு பதட்டம் இருந்துகிட்டே இருக்கும். ஏன்னா வசனமெல்லாம் ரொம்ப டீப்பா (சப்டைட்டில்ல பாத்ததுக்கே இந்த எபெக்ட்டு) இருக்கும். அதுக்கு ரியாக்ட் பண்ண முடியாம தவிக்கிற அந்த சூழ்நிலைய படம் பார்க்குறவனுக்கும் உணர வச்சிருப்பாங்க. என்னய மாதிரி ரொம்ப மனோதிடம் உள்ள ஆளுங்க பாக்கலாம். அந்த புசுபுசு (ரம்பா + ஹன்சிகா + குஷ்பு) டைப் ஹீரோயின் மரியத்துக்காக – ஆமென்! ரொம்ப அழகுன்னு சொல்ல வந்தேன்.


Tuesday, September 11, 2018

Hereditary (2018)



Hereditary (2018)


Horror / Drama


ஆனி கிரஹாமுடைய தாயின் இறுதிச் சடங்கில் ஆரம்பிக்கிறது இந்தப்படம். சடங்குகள் முடிந்து அதற்கடுத்த இரண்டு நாட்கள் அவளது குடும்பம் சோகத்துடனே கழிகின்றது.

ஆனி கிரஹாம் ஒரு மினியேச்சர் ஆர்ட்டிஸ்ட். அவளது வீட்டிலேயே அதற்கான வொர்க் ஷாப்பும் வைத்திருக்கிறாள். அவளது மகன் பீட்டர் – கல்லூரி மாணவன். மகள் – சார்லீ. (இதுபோக அவளது கணவனும் அந்த வீட்டில் ஒரு ரிட்டயர்டு வயது ஆள் போல உடன் இருக்கிறார். ஆனால் அவர் என்ன செய்கிறார்? செய்தார்? என்பதைப் பற்றிய காட்சிகளோ, வசனங்களோ படத்தில் இல்லை. அது இந்தப் படத்திற்கு எவ்விதத்திலும் முக்கியமானதுமில்லை)

நமக்குத் தேவையான கேரக்ட்டர் – சார்லீ

சார்லீயைப் பற்றி சில வரிகளாவது சொல்லியே ஆக வேண்டும். அவள்தான் இந்தக்கதையின் முக்கிய கதாபாத்திரம். 13 வயது சிறுமி. ஆம்! சிறுமிக்குண்டான மூளை வளர்ச்சி மட்டுமே அவளுக்கு. மற்ற பதின் வயது பெண்களைப் போல உடல் வளர்ச்சியிருந்தாலும் அவளது நடவடிக்கைகள், மூன்று வயது சிறுமியை ஒத்ததாகவே இருக்கும். பனி பெய்யும் நேரத்தில், வெறும் காலுடன் காட்டில் தன்னை மறந்து நடந்து கொண்டிருப்பாள். வகுப்பில் தேர்வு நேரத்தில் பொம்மையை வைத்து விளையாடிக் கொண்டிருப்பாள். இடி விழுவது போல டமாரென்று அறையில் சப்தமெழுந்தாலும் அசங்காமல் வேறு ஏதோ சிந்தனையில் இருப்பாள். குறிப்பாக பறவைகள் எதாவது கையில் கிடைத்தால் மறக்காமல் அதன் தலையை மட்டும் கத்தரிக்கோலால் வெட்டி கோட்டுப் பைக்குள் பத்திரப்படுத்திக் கொள்ளுவாள். பின்பு வீட்டிற்கு சென்றதும் அதை நூலில் இணைத்து விளையாடுவாள். அடிக்கடி வீட்டில் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வெளியே நடந்து சென்று கொண்டிருப்பாள். பின்பு, அவளது தாய் ஆனி, இவளைத் தேடிக் கண்டுபிடித்து அழைத்து வருவாள். இரண்டு நாட்களுக்கு முன் இறந்து போன தனது பாட்டியின் மீது இவளும், இவள் மீது பாட்டியும் மிகுந்த பாசத்துடன் இருந்தனர். இப்போதும் அவள் தனது பாட்டியின் மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கிறாள். ஆனால் என்ன ஒன்று, தனது பாட்டியின் இறுதிச் சடங்கில் பாட்டி இறந்து விட்டாள், இனி திரும்ப வரமாட்டாள் என்பது கூட தெரியாமல் சாக்லேட் தின்று கொண்டும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டும் இருந்தாள். இது எல்லாவற்றுக்கும் மேலாக அவளது அதி முக்கிய 'டொக்கு' போடும் மேனரிசம்.

ஆக, சார்லீயைப் பற்றிய இந்த அறிமுகம் போதுமென நினைக்கிறேன்.

அடுத்ததாக படத்தின் ஒரு சிறு நிகழ்வு.

இரண்டு நாட்கள் கழித்து, பீட்டர் தனது தாயார் ஆனியிடம் அன்று மாலை தனது நண்பன் வீட்டில் ஒரு விருந்து நடக்கவிருப்பதாகவும், அவளது கார் வேண்டுமெனவும் கேட்கிறான். அவள் பார்ட்டியின் போது குடிக்கக் கூடாது என்கிற கண்டிசனுடன் தனது காரைத் தருவதாக சம்மதிக்கிறாள். மேலும், சார்லீயை உடன் அழைத்துச் செல்லுமாறு வற்புறுத்துகிறாள். அவனோ வேண்டா வெறுப்பாக அவளது அறைக்குச் சென்று அவளை அழைக்கிறான். சார்லீ அவளது அறையிலும் இல்லை. வீட்டிலும் இல்லை. எப்போதும் போல எங்கேயோ காட்டிற்குள் சென்று விட்டாள். ஆனி அவளைத் தேடி அழைத்துச் சென்று பீட்டரிடம் ஒப்படைக்கிறாள். சார்லீக்கு, பீட்டருடன் அவனது நண்பர்கள் உள்ள விருந்திற்குச் செல்ல மனமில்லை. ஆனியின் வற்புறுத்தலால் பீட்டரோடு செல்கிறாள்.

பார்ட்டியில் அவளை கேக் சாப்பிட வைத்து விட்டு, சில நண்பர்களுடன் கஞ்சா அடிக்க மாடியில் உள்ள அறைக்குச் சென்று விடுகிறான். சில நிமிடங்களில் சார்லீ, அந்த அறைக்கு வருகிறாள். தன்னால் மூச்சு விட இயவில்லை எனவும், அவளது தொண்டை விரிவதாகவும் சொல்லி சிரமப்படுகிறாள். பீட்டர் பதறியடித்துக் கொண்டு அவளை ஒரு சிறு குழந்தை போல தூக்கிக் கொண்டு காருக்கு ஓடுகிறான். அவளை பின் சீட்டில் உக்கார வைத்து காரை, மருத்துவமனை நோக்கி புயல் வேகத்தில் செலுத்துகிறான். செல்லும் வழியில் சார்லீ தன்னால் மூச்சு விட முடியாமல், காரின் ஜன்னல் கண்ணாடியை சரித்து முகத்தை வெளியே நீட்டி மூச்சிரைக்கிறாள். பிரயோஜனமில்லை. அது எதுவும் வேலைக்காகமல் பீட்டரை அழைக்கிறாள்.

திரும்பிப் பார்த்த பீட்டர் அதிர்ச்சியடைய, அங்கே சார்லீ தனது பாதி உடலை ஜன்னலுக்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்க, அவளை உள்ளே உட்காரச் சொல்லிவிட்டு ஸ்டியரிங் பக்கம் திரும்ப, சாலை நடுவே யாரோ/எதுவோ கிடக்க, அதைத் தவிர்ப்பதற்காக ஸ்டியரிங்கை பக்கவாட்டில் ஒடிக்க, சாலையின் பக்கவாட்டில் கம்பம் ஒன்றை கார் சமீபிக்க, பீட்டர் சுதாரிக்க முயற்சித்து தோற்க, சார்லீ மூச்சுத் திணறலுடன் அந்தக் கம்பத்தில் மோத…

அது நடந்தே விடுகிறது.

இந்தக் காட்சிக்குப் பின் என்னால் சில நிமிடங்களுக்கு மூச்சு விடமுடியவில்லை. அங்கே என்ன நடந்திருக்கும் என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன். அடுத்து சார்லீ பேயாக வந்து பீட்டரை பழிவாங்கப் போகிறாள் என்று நீங்கள் நினைத்தால் அயம் வெரி சாரி. இது வேற வேற வேற மாதிரி. (சத்தியமா சொல்றேன் – பயந்துட்டேன். வயித்துக்குள்ள என்னமோ கலங்கிருச்சு!)

எத்தனையோ ஹாரர் படங்கள் பார்த்து சிரித்திருக்கிறேன். இது வேற லெவல் படம். இயக்குநர் Ari Aster-க்கு இதுதான் முதல் படம். முதல் படமே யப்ப்ப்ப்பா என்று வியக்க வைத்திருக்கிறார். இயக்குநருக்கு என் பாராட்டுக்கள் கம் பொக்கே! சார்லீயாக நடித்த Milly Shapiro – விற்கும் இதுதான் முதல் படம். இருவருக்குமே நல்ல எதிர்காலமுள்ளது.

படத்தில் ஒரு நெய்ல் பைட்டிங் சீன் சாதரணாமாக ஆரம்பித்து, ரொம்ப அசாதாரணமாக கதையை எங்கோ கொண்டு சென்று விடும். அது பீட்டருக்கும், ஆனி கிரஹாமுக்குமான உரையாடல் காட்சி. அந்தக் காட்சியில் ஆனி கிரஹாமாக நடித்த Toni Colette பின்னிப் பெடலெடுக்கிறார். பீட்டராக நடித்திருக்கும் Alex Wolff-வும் சாமானியப்பட்ட ஆளல்ல. மனுசன் முக பாவனைகளாலேயே தானும் மிரண்டு, நம்மையும் மிரள வைக்கிறார்.

மறுபடியும் சொல்லுகிறேன். நீங்கள் என்னவெல்லாம் நினைத்து ஹாரர் படம் பார்ப்பீர்களோ அது எதுவுமே இதில் இல்லை. இது முழுக்கவே வித்தியாசமான முக பாவனைகளாலேயே (சத்தியமாக மைதா மாவு மேக்கப் போட்ட பேய்கள் கூட இல்லை) நம்மை மிரள வைத்திருக்கும் படம். தைரியமாக பார்க்கலாமென்று பரிந்துரைக்க முடியாது. கொஞ்சம் பயந்துதான் பார்க்க வேண்டியிருக்கும்.

நாளை மீண்டும் ஒரு படத்துடன் சந்திப்போமா!

Goodachari (2018) - Spy thriller



Goodachari (2018)


தெலுங்கு
Action /Thriller


இந்திய காவல் படைகளில் நான்காவது ரகசிய காவல் படை - திரிநேத்ரா. அதில் உள்ள ரகசியங்கள் வெளிப்பட்டுவிட உடனடியாக அந்த அமைப்பு கலைக்கப் படுகிறது. அதில் ஒரு முக்கியமான ஏஜண்ட் பிரகாஷ்ராஜ். அவரது உடன் பணிபுரியும் ஏஜெண்ட் ஒருவர் இறக்க, அவரது மகன் கோபியை சந்தர்ப்ப சூழலால் எடுத்து வளர்க்க நேர்கிறது. அவனுடைய பெயர், ஊர், பிறந்த தேதி என சகலத்தையும் மாற்றி அவனது தந்தையைப் பற்றிய எண்ணமே வரவிடாதபடி பார்த்துப் பார்த்து வளர்க்கிறார். திரிநேத்ரா அமைப்பு கலைக்கப்பட்டதும், உடனடியாக பிரகாஷ்ராஜும் கோபியும் இறந்து விட்டதாக நம்ப வைத்து விட்டு ராஜ முந்திரியில் ரகசியமாக வாழ்கிறார். கோபி, அர்ஜுன் குமாராக (அதி விசேஷ்) வளர்கிறான்.

என்னதான் பிரகாஷ்ராஜ் அர்ஜுனுக்கு தந்தையைப் பற்றிய நினைவுகளே வராதபடி வளர்த்திருந்தாலும் அவனது சிறுவயது முதலே, தன்னுடைய தந்தையைக் கொன்றவனை பழிவாங்க வேண்டுமென்றே வளர்கிறான். அர்ஜுனுக்கு அந்தக் கொலைகாரன் ஒரு தீவிரவாதி என்றும் அவனது பெயர் என்னவென்பதும் தெரியும். இந்த விசயம் பிரகாஷ்ராஜுக்கு தெரியாது.

அர்ஜுன் வளர்ந்து பெரியவனானதும், திரிநேத்ராவில் சேர்கிறான். அவனது பதவியேற்பு நாளன்றே, திரிநேத்ராவின் முதன்மை அதிகாரியும், பாதுகாப்பு அமைச்சரும், இலவச இணைப்பாக தனது காதலியும் கொல்லப் படுகின்றனர். ஆனால், அந்தக் கொலைகளை அர்ஜுனே செய்தது போல் தீவிரவாத இயக்கம் செட்டப் செய்கிறது. தனது பதவியேற்பு நாளன்றே அர்ஜுன், தேசமே தேடப்படும் மோஸ்ட் வாண்டட் கிரிமினல்.

உண்மையில் இந்தக் கொலைகளை செய்தது யார்? தீவிரவாத அமைப்பு ஏன் அர்ஜுன் மேல் கொலைப்பழியை ஜோடித்தது? இதன் பின்னணியில் உள்ள மர்ம நபர் யார்? போன்ற பல கேள்விகளுக்கு ஆக்சன் ப்ளஸ் சஸ்பென்ஸ் கலந்த திரில்லராக வெளியாகியிருக்கும் படம்தான் Goodachary (2018).

கூடச்சாரி என்றால் உளவாளி என்று அர்த்தம்.
ஹீரோ அதி விசேஷ் ஏற்கனவே Kshanam (2016) படம் மூலம் நமக்கு அறிமுகமானவர்தான். இவரே க்ஷணம் மற்றும் கூடச்சாரி இரண்டு படங்களின் கதைகளையும் எழுதி ஹீரோவாக நடித்திருக்கிறார். இவரது நடிப்பு சுமார்தான். ஆனால் அதை விட கதை எழுதும் பாணியே அவருக்கு நல்ல எதிர்காலத்தைத் தரும். மிசன் இம்பாசிபிள் ஸ்பை கண்ணாடி, மென் இன் ப்ளாக் இண்டர்வியூ காட்சி போன்ற பல சீன்களின் கொலாஜாக இந்தப் படத்தின் கதை இருந்தாலும் அதை பிரசண்ட் செய்த நேர்த்திக்காக பாராட்டலாம்.

மேலும், ஷ்பெசல் ஏஜெண்ட்கள் மோஸ்ட் வாண்டட் கிரிமினல்களாக சித்தரிக்கப்பட்டு வந்த படங்களின் கதைகளை சற்றே ஞாபகப்படுத்திப் பாருங்கள். கிட்டத்தட்ட 90% ஸ்பை திரில்லர்களுக்கு இதே கதைதான் மையக்கரு.

ஹீரோயின் கொல்லப்பட்டதும், எனக்கு விக்ரம், இருமுகன் படமெல்லாம் கண் முன்னாடி வந்து போனது. ஆனால், ஒரு சின்ன வித்தியாசம் – இதில் குண்டு பாய்வது தொண்டையில் – ஆனால், மூன்றுமே ஸ்னைப்பர் ஷாட்டுதான். இதை ஒரு பெரிய காப்பியாக எடுத்துக் கொள்ள முடியாது. வில்லனுக்கு அங்கே ஒரு சின்ன தடுமாற்றம். அதில் ப்ளான் A, பிளான் B-யாக மாற்ற வேண்டிய சூழ்நிலை. அதையும் ர(ட்)சிக்கும்படியாகவே சுவாரஸ்யப்படுத்தியிருந்தார்கள்.

இப்படி படம் முழுக்க மற்ற ஸ்பை திரில்லர் சீன்களை எடுத்து சுவாரஸ்யப் படுத்தியிருந்தார்கள். இன்னும் சொல்லப் போனால், மிசன் இம்பாசிபிள் முதல் பாகத்தில் வரும் ஒரு ஹீஸ்ட் காட்சி – சி.ஐ.ஏ அலுவலகத்தில் இருந்து NOC லிஸ்ட்டை திருட, டாம் குரூஸ் ஏர் கண்டிசன் டக்ட் வழியாக தலைகீழாக தொங்கிக் கொண்டு வந்து நாக் லிஸ்ட்டை பிளாப்பியில் காப்பி செய்து கொண்டு போவார். இந்தக் காட்சி அந்தப் படத்திலேயே ஹைலைட்டான காட்சி. மொத்த ஸ்டண்ட்டையும் டூப் போடாமல் டாம் குரூஸே செய்திருப்பார். உண்மையில் அந்தக் காட்சி அந்தப் படத்தின் ஒரிஜினல் காட்சி கிடையாது. Rififi (1955) மற்றும் Topkapi (1964) படங்களில் வந்த ஹீஸ்ட் சீன்களின் அப்டேட்டட் வர்சன் தான் இது. ஆனால் மிசன் இம்பாசிபிள் வெளியானதும், அதைக் காப்பியடித்து எத்தனையோ ஆக்சன் மற்றும் ஹீஸ்ட் காட்சிகள் வந்தது. என் சுவாசக் காற்றே படத்தில் வந்தது கூட அந்த ஹீஸ்ட் சீக்வன்ஸின் சீன் பை சீன் அட்டை டு அட்டைக் காப்பிதான்.

படத்தில் இரண்டு பாடல்கள் இருந்ததாக நியாபகம். உண்மையில் இரண்டா அல்லது ஒன்றா? நினைவில் இல்லை. கதையின் வேகத்தில் அது மறந்தே போனது. க்ஷணம் படம் கொடுத்த தைரியத்தில் இந்தப் படத்தை அமேசான் பிரைமில் ரிலீசானதும் பார்த்தேன். இனிமேல் அதி விசேஷ் கதை எழுதிய படமென்றால் நிச்சயம் ஒருமுறை பார்க்கலாம். இந்தப் படத்திற்கே இரண்டாவது பாகம் வெளியானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.