Tuesday, September 11, 2018

Hereditary (2018)



Hereditary (2018)


Horror / Drama


ஆனி கிரஹாமுடைய தாயின் இறுதிச் சடங்கில் ஆரம்பிக்கிறது இந்தப்படம். சடங்குகள் முடிந்து அதற்கடுத்த இரண்டு நாட்கள் அவளது குடும்பம் சோகத்துடனே கழிகின்றது.

ஆனி கிரஹாம் ஒரு மினியேச்சர் ஆர்ட்டிஸ்ட். அவளது வீட்டிலேயே அதற்கான வொர்க் ஷாப்பும் வைத்திருக்கிறாள். அவளது மகன் பீட்டர் – கல்லூரி மாணவன். மகள் – சார்லீ. (இதுபோக அவளது கணவனும் அந்த வீட்டில் ஒரு ரிட்டயர்டு வயது ஆள் போல உடன் இருக்கிறார். ஆனால் அவர் என்ன செய்கிறார்? செய்தார்? என்பதைப் பற்றிய காட்சிகளோ, வசனங்களோ படத்தில் இல்லை. அது இந்தப் படத்திற்கு எவ்விதத்திலும் முக்கியமானதுமில்லை)

நமக்குத் தேவையான கேரக்ட்டர் – சார்லீ

சார்லீயைப் பற்றி சில வரிகளாவது சொல்லியே ஆக வேண்டும். அவள்தான் இந்தக்கதையின் முக்கிய கதாபாத்திரம். 13 வயது சிறுமி. ஆம்! சிறுமிக்குண்டான மூளை வளர்ச்சி மட்டுமே அவளுக்கு. மற்ற பதின் வயது பெண்களைப் போல உடல் வளர்ச்சியிருந்தாலும் அவளது நடவடிக்கைகள், மூன்று வயது சிறுமியை ஒத்ததாகவே இருக்கும். பனி பெய்யும் நேரத்தில், வெறும் காலுடன் காட்டில் தன்னை மறந்து நடந்து கொண்டிருப்பாள். வகுப்பில் தேர்வு நேரத்தில் பொம்மையை வைத்து விளையாடிக் கொண்டிருப்பாள். இடி விழுவது போல டமாரென்று அறையில் சப்தமெழுந்தாலும் அசங்காமல் வேறு ஏதோ சிந்தனையில் இருப்பாள். குறிப்பாக பறவைகள் எதாவது கையில் கிடைத்தால் மறக்காமல் அதன் தலையை மட்டும் கத்தரிக்கோலால் வெட்டி கோட்டுப் பைக்குள் பத்திரப்படுத்திக் கொள்ளுவாள். பின்பு வீட்டிற்கு சென்றதும் அதை நூலில் இணைத்து விளையாடுவாள். அடிக்கடி வீட்டில் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வெளியே நடந்து சென்று கொண்டிருப்பாள். பின்பு, அவளது தாய் ஆனி, இவளைத் தேடிக் கண்டுபிடித்து அழைத்து வருவாள். இரண்டு நாட்களுக்கு முன் இறந்து போன தனது பாட்டியின் மீது இவளும், இவள் மீது பாட்டியும் மிகுந்த பாசத்துடன் இருந்தனர். இப்போதும் அவள் தனது பாட்டியின் மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கிறாள். ஆனால் என்ன ஒன்று, தனது பாட்டியின் இறுதிச் சடங்கில் பாட்டி இறந்து விட்டாள், இனி திரும்ப வரமாட்டாள் என்பது கூட தெரியாமல் சாக்லேட் தின்று கொண்டும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டும் இருந்தாள். இது எல்லாவற்றுக்கும் மேலாக அவளது அதி முக்கிய 'டொக்கு' போடும் மேனரிசம்.

ஆக, சார்லீயைப் பற்றிய இந்த அறிமுகம் போதுமென நினைக்கிறேன்.

அடுத்ததாக படத்தின் ஒரு சிறு நிகழ்வு.

இரண்டு நாட்கள் கழித்து, பீட்டர் தனது தாயார் ஆனியிடம் அன்று மாலை தனது நண்பன் வீட்டில் ஒரு விருந்து நடக்கவிருப்பதாகவும், அவளது கார் வேண்டுமெனவும் கேட்கிறான். அவள் பார்ட்டியின் போது குடிக்கக் கூடாது என்கிற கண்டிசனுடன் தனது காரைத் தருவதாக சம்மதிக்கிறாள். மேலும், சார்லீயை உடன் அழைத்துச் செல்லுமாறு வற்புறுத்துகிறாள். அவனோ வேண்டா வெறுப்பாக அவளது அறைக்குச் சென்று அவளை அழைக்கிறான். சார்லீ அவளது அறையிலும் இல்லை. வீட்டிலும் இல்லை. எப்போதும் போல எங்கேயோ காட்டிற்குள் சென்று விட்டாள். ஆனி அவளைத் தேடி அழைத்துச் சென்று பீட்டரிடம் ஒப்படைக்கிறாள். சார்லீக்கு, பீட்டருடன் அவனது நண்பர்கள் உள்ள விருந்திற்குச் செல்ல மனமில்லை. ஆனியின் வற்புறுத்தலால் பீட்டரோடு செல்கிறாள்.

பார்ட்டியில் அவளை கேக் சாப்பிட வைத்து விட்டு, சில நண்பர்களுடன் கஞ்சா அடிக்க மாடியில் உள்ள அறைக்குச் சென்று விடுகிறான். சில நிமிடங்களில் சார்லீ, அந்த அறைக்கு வருகிறாள். தன்னால் மூச்சு விட இயவில்லை எனவும், அவளது தொண்டை விரிவதாகவும் சொல்லி சிரமப்படுகிறாள். பீட்டர் பதறியடித்துக் கொண்டு அவளை ஒரு சிறு குழந்தை போல தூக்கிக் கொண்டு காருக்கு ஓடுகிறான். அவளை பின் சீட்டில் உக்கார வைத்து காரை, மருத்துவமனை நோக்கி புயல் வேகத்தில் செலுத்துகிறான். செல்லும் வழியில் சார்லீ தன்னால் மூச்சு விட முடியாமல், காரின் ஜன்னல் கண்ணாடியை சரித்து முகத்தை வெளியே நீட்டி மூச்சிரைக்கிறாள். பிரயோஜனமில்லை. அது எதுவும் வேலைக்காகமல் பீட்டரை அழைக்கிறாள்.

திரும்பிப் பார்த்த பீட்டர் அதிர்ச்சியடைய, அங்கே சார்லீ தனது பாதி உடலை ஜன்னலுக்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்க, அவளை உள்ளே உட்காரச் சொல்லிவிட்டு ஸ்டியரிங் பக்கம் திரும்ப, சாலை நடுவே யாரோ/எதுவோ கிடக்க, அதைத் தவிர்ப்பதற்காக ஸ்டியரிங்கை பக்கவாட்டில் ஒடிக்க, சாலையின் பக்கவாட்டில் கம்பம் ஒன்றை கார் சமீபிக்க, பீட்டர் சுதாரிக்க முயற்சித்து தோற்க, சார்லீ மூச்சுத் திணறலுடன் அந்தக் கம்பத்தில் மோத…

அது நடந்தே விடுகிறது.

இந்தக் காட்சிக்குப் பின் என்னால் சில நிமிடங்களுக்கு மூச்சு விடமுடியவில்லை. அங்கே என்ன நடந்திருக்கும் என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன். அடுத்து சார்லீ பேயாக வந்து பீட்டரை பழிவாங்கப் போகிறாள் என்று நீங்கள் நினைத்தால் அயம் வெரி சாரி. இது வேற வேற வேற மாதிரி. (சத்தியமா சொல்றேன் – பயந்துட்டேன். வயித்துக்குள்ள என்னமோ கலங்கிருச்சு!)

எத்தனையோ ஹாரர் படங்கள் பார்த்து சிரித்திருக்கிறேன். இது வேற லெவல் படம். இயக்குநர் Ari Aster-க்கு இதுதான் முதல் படம். முதல் படமே யப்ப்ப்ப்பா என்று வியக்க வைத்திருக்கிறார். இயக்குநருக்கு என் பாராட்டுக்கள் கம் பொக்கே! சார்லீயாக நடித்த Milly Shapiro – விற்கும் இதுதான் முதல் படம். இருவருக்குமே நல்ல எதிர்காலமுள்ளது.

படத்தில் ஒரு நெய்ல் பைட்டிங் சீன் சாதரணாமாக ஆரம்பித்து, ரொம்ப அசாதாரணமாக கதையை எங்கோ கொண்டு சென்று விடும். அது பீட்டருக்கும், ஆனி கிரஹாமுக்குமான உரையாடல் காட்சி. அந்தக் காட்சியில் ஆனி கிரஹாமாக நடித்த Toni Colette பின்னிப் பெடலெடுக்கிறார். பீட்டராக நடித்திருக்கும் Alex Wolff-வும் சாமானியப்பட்ட ஆளல்ல. மனுசன் முக பாவனைகளாலேயே தானும் மிரண்டு, நம்மையும் மிரள வைக்கிறார்.

மறுபடியும் சொல்லுகிறேன். நீங்கள் என்னவெல்லாம் நினைத்து ஹாரர் படம் பார்ப்பீர்களோ அது எதுவுமே இதில் இல்லை. இது முழுக்கவே வித்தியாசமான முக பாவனைகளாலேயே (சத்தியமாக மைதா மாவு மேக்கப் போட்ட பேய்கள் கூட இல்லை) நம்மை மிரள வைத்திருக்கும் படம். தைரியமாக பார்க்கலாமென்று பரிந்துரைக்க முடியாது. கொஞ்சம் பயந்துதான் பார்க்க வேண்டியிருக்கும்.

நாளை மீண்டும் ஒரு படத்துடன் சந்திப்போமா!

4 comments:

  1. அற்புதமான விமர்சனம்...இந்த படத்தை பல பேர் சிபாரிசு செய்தார்கள்..பார்க்க நேரமில்லை...உங்களது விமர்சனம் பாக்க சீக்கிரமே என்னை வைக்கின்றது

    ReplyDelete
  2. அற்புதமான விமர்சனம்...இந்த படத்தை பல பேர் சிபாரிசு செய்தார்கள்..பார்க்க நேரமில்லை...உங்களது விமர்சனம் பாக்க சீக்கிரமே என்னைப் படம் பார்க்க வைக்கின்றது

    ReplyDelete
  3. Thala enaku intha movie konjam purila konjam explain panringala

    ReplyDelete