Goodachari (2018)
தெலுங்கு
Action /Thriller
இந்திய காவல் படைகளில் நான்காவது ரகசிய காவல் படை - திரிநேத்ரா. அதில் உள்ள ரகசியங்கள் வெளிப்பட்டுவிட உடனடியாக அந்த அமைப்பு கலைக்கப் படுகிறது. அதில் ஒரு முக்கியமான ஏஜண்ட் பிரகாஷ்ராஜ். அவரது உடன் பணிபுரியும் ஏஜெண்ட் ஒருவர் இறக்க, அவரது மகன் கோபியை சந்தர்ப்ப சூழலால் எடுத்து வளர்க்க நேர்கிறது. அவனுடைய பெயர், ஊர், பிறந்த தேதி என சகலத்தையும் மாற்றி அவனது தந்தையைப் பற்றிய எண்ணமே வரவிடாதபடி பார்த்துப் பார்த்து வளர்க்கிறார். திரிநேத்ரா அமைப்பு கலைக்கப்பட்டதும், உடனடியாக பிரகாஷ்ராஜும் கோபியும் இறந்து விட்டதாக நம்ப வைத்து விட்டு ராஜ முந்திரியில் ரகசியமாக வாழ்கிறார். கோபி, அர்ஜுன் குமாராக (அதி விசேஷ்) வளர்கிறான்.
என்னதான் பிரகாஷ்ராஜ் அர்ஜுனுக்கு தந்தையைப் பற்றிய நினைவுகளே வராதபடி வளர்த்திருந்தாலும் அவனது சிறுவயது முதலே, தன்னுடைய தந்தையைக் கொன்றவனை பழிவாங்க வேண்டுமென்றே வளர்கிறான். அர்ஜுனுக்கு அந்தக் கொலைகாரன் ஒரு தீவிரவாதி என்றும் அவனது பெயர் என்னவென்பதும் தெரியும். இந்த விசயம் பிரகாஷ்ராஜுக்கு தெரியாது.
அர்ஜுன் வளர்ந்து பெரியவனானதும், திரிநேத்ராவில் சேர்கிறான். அவனது பதவியேற்பு நாளன்றே, திரிநேத்ராவின் முதன்மை அதிகாரியும், பாதுகாப்பு அமைச்சரும், இலவச இணைப்பாக தனது காதலியும் கொல்லப் படுகின்றனர். ஆனால், அந்தக் கொலைகளை அர்ஜுனே செய்தது போல் தீவிரவாத இயக்கம் செட்டப் செய்கிறது. தனது பதவியேற்பு நாளன்றே அர்ஜுன், தேசமே தேடப்படும் மோஸ்ட் வாண்டட் கிரிமினல்.
உண்மையில் இந்தக் கொலைகளை செய்தது யார்? தீவிரவாத அமைப்பு ஏன் அர்ஜுன் மேல் கொலைப்பழியை ஜோடித்தது? இதன் பின்னணியில் உள்ள மர்ம நபர் யார்? போன்ற பல கேள்விகளுக்கு ஆக்சன் ப்ளஸ் சஸ்பென்ஸ் கலந்த திரில்லராக வெளியாகியிருக்கும் படம்தான் Goodachary (2018).
கூடச்சாரி என்றால் உளவாளி என்று அர்த்தம்.
ஹீரோ அதி விசேஷ் ஏற்கனவே Kshanam (2016) படம் மூலம் நமக்கு அறிமுகமானவர்தான். இவரே க்ஷணம் மற்றும் கூடச்சாரி இரண்டு படங்களின் கதைகளையும் எழுதி ஹீரோவாக நடித்திருக்கிறார். இவரது நடிப்பு சுமார்தான். ஆனால் அதை விட கதை எழுதும் பாணியே அவருக்கு நல்ல எதிர்காலத்தைத் தரும். மிசன் இம்பாசிபிள் ஸ்பை கண்ணாடி, மென் இன் ப்ளாக் இண்டர்வியூ காட்சி போன்ற பல சீன்களின் கொலாஜாக இந்தப் படத்தின் கதை இருந்தாலும் அதை பிரசண்ட் செய்த நேர்த்திக்காக பாராட்டலாம்.
மேலும், ஷ்பெசல் ஏஜெண்ட்கள் மோஸ்ட் வாண்டட் கிரிமினல்களாக சித்தரிக்கப்பட்டு வந்த படங்களின் கதைகளை சற்றே ஞாபகப்படுத்திப் பாருங்கள். கிட்டத்தட்ட 90% ஸ்பை திரில்லர்களுக்கு இதே கதைதான் மையக்கரு.
ஹீரோயின் கொல்லப்பட்டதும், எனக்கு விக்ரம், இருமுகன் படமெல்லாம் கண் முன்னாடி வந்து போனது. ஆனால், ஒரு சின்ன வித்தியாசம் – இதில் குண்டு பாய்வது தொண்டையில் – ஆனால், மூன்றுமே ஸ்னைப்பர் ஷாட்டுதான். இதை ஒரு பெரிய காப்பியாக எடுத்துக் கொள்ள முடியாது. வில்லனுக்கு அங்கே ஒரு சின்ன தடுமாற்றம். அதில் ப்ளான் A, பிளான் B-யாக மாற்ற வேண்டிய சூழ்நிலை. அதையும் ர(ட்)சிக்கும்படியாகவே சுவாரஸ்யப்படுத்தியிருந்தார்கள்.
இப்படி படம் முழுக்க மற்ற ஸ்பை திரில்லர் சீன்களை எடுத்து சுவாரஸ்யப் படுத்தியிருந்தார்கள். இன்னும் சொல்லப் போனால், மிசன் இம்பாசிபிள் முதல் பாகத்தில் வரும் ஒரு ஹீஸ்ட் காட்சி – சி.ஐ.ஏ அலுவலகத்தில் இருந்து NOC லிஸ்ட்டை திருட, டாம் குரூஸ் ஏர் கண்டிசன் டக்ட் வழியாக தலைகீழாக தொங்கிக் கொண்டு வந்து நாக் லிஸ்ட்டை பிளாப்பியில் காப்பி செய்து கொண்டு போவார். இந்தக் காட்சி அந்தப் படத்திலேயே ஹைலைட்டான காட்சி. மொத்த ஸ்டண்ட்டையும் டூப் போடாமல் டாம் குரூஸே செய்திருப்பார். உண்மையில் அந்தக் காட்சி அந்தப் படத்தின் ஒரிஜினல் காட்சி கிடையாது. Rififi (1955) மற்றும் Topkapi (1964) படங்களில் வந்த ஹீஸ்ட் சீன்களின் அப்டேட்டட் வர்சன் தான் இது. ஆனால் மிசன் இம்பாசிபிள் வெளியானதும், அதைக் காப்பியடித்து எத்தனையோ ஆக்சன் மற்றும் ஹீஸ்ட் காட்சிகள் வந்தது. என் சுவாசக் காற்றே படத்தில் வந்தது கூட அந்த ஹீஸ்ட் சீக்வன்ஸின் சீன் பை சீன் அட்டை டு அட்டைக் காப்பிதான்.
படத்தில் இரண்டு பாடல்கள் இருந்ததாக நியாபகம். உண்மையில் இரண்டா அல்லது ஒன்றா? நினைவில் இல்லை. கதையின் வேகத்தில் அது மறந்தே போனது. க்ஷணம் படம் கொடுத்த தைரியத்தில் இந்தப் படத்தை அமேசான் பிரைமில் ரிலீசானதும் பார்த்தேன். இனிமேல் அதி விசேஷ் கதை எழுதிய படமென்றால் நிச்சயம் ஒருமுறை பார்க்கலாம். இந்தப் படத்திற்கே இரண்டாவது பாகம் வெளியானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

No comments:
Post a Comment