வரதன் (2018)
மலையாளம்
Thriller/Drama
வரதன் என்ற சொல்லுக்கு வெளியாள் / அந்நியன் / வேறு ஊர்க்காரன் / அசலூர்க்காரன் போன்ற பல அர்த்தங்கள். ஆனால் அவை அனைத்தும் உணர்த்தும் ஒரே விசயம் அவர்கள் வரதன் என்று குறிப்பிடும் ஆள் தங்களைச் சேர்ந்தவனல்ல என்பதுதான். அது பார்வை சம்பந்தப்பட்ட விசயம். இந்தப்படமும் அப்படிப்பட்ட பார்வைகளுடனானதுதான்.
கதைப்படி துபாயில் வசிக்கும் பிரியா (ஐஸ்வர்யா லெக்ஸ்மி) தனது கணவன் எபியின் (ஃபகத் ஃபாசில்) வேலை போனதால், இந்தியாவில் இருக்கும் தனது பூர்வீக சொத்தான எஸ்டேட்டிற்கு எபியுடன் குடி வருகிறாள். அந்நியோன்னியமான, நாகரீக உடைகளுடன் ஊருக்குள் நுழையும் இவர்களை அந்த மலைக் கிராமத்து மக்கள், முதல் பாராவில் குறிப்பிட்ட வரதனாக பார்க்கின்றனர். அந்த முதல் பார்வைகளிலிருந்தே, பிரியா அதனை புரிந்து கொள்கிறாள். எபியோ அவர்களை கண்டுகொள்வதுமில்லை பெரிது படுத்திக் கொள்வதுமில்லை. சாந்த சொரூபியாகவும், மெலிய புன்முறுவலுடனே அம்மக்களை எதிர் கொள்கிறான்.
அங்கிருக்கும் சில ஆண்களால், அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் பிரியாவிற்கு நாளுக்கு நாள் அச்சத்தை ஏற்படுத்துகிறது. எபியிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அதற்கு அவன் ஆற்றும் எதிர்வினைகள் பெரும்பாலும் மழுப்பலான புன்முறுவலும், ஆறுதல் பேச்சுக்களும் மட்டுமே. இதனால் அவள் தன் கணவன் மீதான நம்பிக்கையையும் இழக்கிறாள். நாள்பட அவர்கள் தன்னை நெருங்குவதை இவனால் ஏன் புரிந்துகொள்ள முடிவதில்லை என்ற கவலையும் இவளை பீதி கொள்ளச் செய்கிறது. ஆனால், அந்த சில ஆண்கள் இவள் மீதான தங்கள் நெருங்கும் முயற்சிகளை மேலும் மேலும் தீவிரப்படுத்திக் கொண்டேயிருக்கின்றனர். எந்நேரமும் அவள் பயப்படுவது போல அது நடந்தேவிடும் என்ற நிலை - அதிலிருந்து பிரியா மீண்டாளா என்பதுதான் மீதிக்கதை.
இது 1971இல் வெளிவந்து மீண்டும் 2011இல் மீண்டும் படமாக்கப்பட்ட ஹாலிவுட் படமான Straw Dogs -இன் unofficial remake. வரதன் அதன் மலையாள வர்சன். ஹாலிவுட்டில் ஸ்ட்ரா டாக்ஸுக்கு இவ்வளவு டைட்டான கிரிப்பான விசுவல் டென்சன் இல்லை. வெறுமனே கடந்து போகும். ஆனால், வரதனில் பிரியாவின் பய உணர்வுகள் நம்மை அந்த ஊருக்குள் நுழையும்போதே தொற்றிக் கொள்ள்ளும். நம்மையும் அவளோடு சேர்ந்து அதை உணர வைத்து கதையோடு எளிமையாக கனெக்ட் செய்கிறது. உண்மையில் வரதனில், பார்வையாளர்களும் பிரியாவும் ஒன்றுதான்.
திரைக்கதையும் அதைப் போல எந்நேரமும் வெடித்துச் சிதறும் எரிமலையைப் போல குமுறலும், உறுமலுமாக நகருகிறது. ஆரம்பம் முதலே இசைக்கும் eerie type பின்னணி இசை, திரைக்கதையுடன் கைகோர்த்து அதை செவ்வனே செய்கிறது.
வில்லன்களும் அதற்கேற்ப பார்வையாலும், நேரில் பார்க்கும் போது நட்புடன் சிரித்தும், தொலைவில் ஆள் மறையும்வரை வைத்த கண் வாங்காமல் குரூப்பாக பார்த்துக் கொண்டேயிருப்பது, பிரியாவைப் பற்றி சிறுவயதில் அவளோடு நடந்ததாக பொய்க்கதைகள் சொல்லி அரட்டையடிப்பது, இவள் பெயர் வரும் இரட்டை அர்த்தம் தொனிக்கும் பாடல்களை வீட்டினருகே சத்தமாக பாடுவது என்று டெரர் ஏத்திக் கொண்டே இருக்கிறார்கள்.
எந்நேரமும் நிகழ்ந்துவிடுமோ என்று பயந்து சாகும் பிரியா படப்போகும் பிசிக்கல் வயலன்ஸை நமக்கு விசுவல் டென்சனாக ஏத்துகிறது இதன் ஒளிப்பதிவு. அப்படியே அழகான அந்த எஸ்டேட்டையும் அதைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளையும். பேய்ப்படங்களிலும், ஹெரிடிட்டரி போன்ற சில படங்களிலும் உள்ள அச்ச உணர்வு இந்தப் படம் முழுக்க இழையோடுவதை ஒவ்வொரு நொடியிலும் உணர்ந்தேன்.
நாமும் இதைப்போல பல ஏரியா ரவுடிகளை தினசரி கடந்து சென்று கொண்டுதானிருக்கிறோம். அவர்களின் பார்வைகளையும், ஆள் மறையும் வரை முறைப்பும், பார்க்கும் போது பவ்யமான சிரிப்புமாக, நம்மைப் பற்றித்தான் பேசுகிறார்கள் என்று தெரியும். ஆனாலும், அவர்களை நாம் தடுப்பதில்லை. சரிதானே? கேட்கவும் முடியும் அதைத் தடுக்கவும் நம்மால் முடியாமலில்லை. சில தேவையில்லாத பின்விளைவுகளை எண்ணி நாம் அதை சகித்துக் கொள்கிறோம். அவ்வளவுதான் அவர்களுக்கும் நமக்குமான தூரம். அந்த வரம்பை மீற மாட்டார்களென்ற அசட்டு நம்பிக்கையும் குருட்டு தைரியமும். இன்னும் அந்த எல்லைக்குள் நம்மை ஒளித்துக் கொண்டுதான் நாம் வாழ்கிறோம் என்பது புரிகிறதா?
(ஃபகத்தையும் ஐஸ்வர்யா லெக்ஸ்மியையும் பற்றி தனித்தனியாக எடுத்துச் சொல்ல புதிதாக எதுவுமில்லை. எனவே அவர்களைப்பற்றி குறிப்பிடவில்லை என்று விசனப்பட வேண்டாம். I never even seen them in this movie)

No comments:
Post a Comment