Beasts That
Cling to the Straw (2020)
கொரியன்
Drama / Mystery / Thriller
ஒரு ஹோட்டல் சிப்பந்தி, ஒரு பாஸ்போர்ட் அதிகாரி, ஒரு விபச்சார விடுதி முதலாளியம்மா, ஒரு விலைமகள். இவர்கள் அனைவருக்கும் இருக்கும் ஒரு ஒற்றுமை - அவரவர் வகையில் உடனடியாய் கொடுத்தே ஆகவேண்டிய கடன் மற்றும் அவசரத் தேவைக்கான பண நெருக்கடி..
விலைமகள்:
கணவனிடம் தினசரி உதைபட்டு அவனது கடனையும் சேர்த்து அடைக்க விபச்சார விடுதியில் வேலைபார்க்கிறாள். சீனாவிலிருந்து வரும் ஒருவன் அவள் மீது காதல் கொள்கிறான். அவளது கதையைக் கேட்டு அவளது கணவனைக் கொன்றுவிடத் தீர்மானிக்கிறான். அதை அவளிடம்
சொல்லவும் அவள் திடுக்கிடுகிறாள்.
விபச்சார விடுதி முதலாளியம்மா:
ஒருநாள் தன்னிடம் வேலை பார்க்கும் ஒரு பெண்ணை அவளது
கஸ்டமர் தீவிரமாக அடித்து ரத்தக்களறியாக்கி விடுகிறான். அவளைத் தேறி ஆறுதல் கூறுகிறாள்.
அவளோ தான் ஏற்கனவே இருவரைக் கொலை செய்ததாகக் கூறுகிறாள். முதலாளியம்மா திடுக்கிடுகிறாள்.
பாஸ்போர்ட் அதிகாரி:
அளவுக்கதிகமாக சூதாடி நிறைய பணம் இழந்து,
ஒரு மோசமான ஆளிடம் கடன் வாங்கி அதையும் இழந்தவன். பணத்தைக் கேட்டு இவனை அடிக்காமல்
அதற்கு பதிலாக, சிரித்துக் கொண்டே அவனது ஒன்றுவிட்ட சகோதரனை அடித்து துன்புறுத்தி மிரட்டி
கொடுத்த பணத்தைக் கேட்கிறான். ஒரு வாரம் அவகாசம் கேட்கிறான். ஆனால், அந்த ஒருவார அவகாசத்தில்
இவனால் ஒன்றும் நொட்ட முடிவதில்லை. வழக்கம்போல் வந்து தம்பியை அடித்து மிரட்டிவிட்டு
அவகாசம் தந்துவிடுவான் என்றுதான் எண்ணுகிறான். ஆனால், இந்தமுறை ஜாமீனாக அவனது ஒரு கையை
வெட்டிக் கொள்கிறேன். அடுத்த ஒரு நாளில் பணத்தை செட்டில் செய்துகொள் என்று வெட்டப்
போகிறான்.
ஹோட்டல் சிப்பந்தி:
ஏற்கனவே ஹோட்டல் நடத்தி நொடிந்துபோய்
வேறு ஒரு ஹோட்டலில், வயதில் சிறியவனான மேனேஜர் ஒருவனுக்குக் கீழ் சாதாரண சிப்பந்தியாக
வேலை பார்க்கிறான். அந்த மேனேஜருக்கும் இவனை மட்டம்தட்டுவதே முழுநேரப் பணி. மிச்ச நேரத்தில்
கால்ப் விளையாடச் சென்றுவிடுவான்.
வயதான தனது தாய்க்கும், மனைவிக்கும்
எப்போதும் தகராறு. ஒருவரையொருவர் கைகாலை உடைத்துக் கொள்ளுமளவு. இவன் வாங்கும் சம்பளம்
அவர்களது சண்டையில் உடையும் மண்டையை ஒட்ட வைக்கவே போதுமாவதில்லை. இதில் அவனது மகளுக்கு
ஸ்கூல் பீஸ் அடைக்க வேண்டிய கட்டாயம் வேறு இருக்கிறது.
இத்தனை பிரச்சினையையும் தாண்டி அவனுக்கும்
மேனேஜருக்கும் ஒருநாள் முட்டிக் கொள்கிறது. இவனை வேலையை விட்டு துரத்திவிடுகிறான்.
இவ்வளவு பிரச்சினைக்கும் நடுவில் இன்னொரு
கதாபாத்திரம் எல்லோரின் வாழ்க்கையிலும் குறுக்கிடுகிறது. அதுதான் பணம். ஒரு பை நிறைய.
அது இந்தக் கதையின் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் கைக்கு எட்டுகிறது. வாய்க்கு எட்டியதா
என்பதே Beasts That Cling to the Straw (2020) என்கிற கொரியப்
படத்தின் மீதிக் கதை.
இது ஒரு ஹைப்பர்லின்க் கதை. இன்னொரு வகையும் உள்ளது அது பக்கா
ஸ்பாய்லர் என்பதால், மேற்கூறிய கதாபாத்திர அறிமுகங்களோடு படத்தைப் பார்த்து உய்யவும்.
படத்தில் திடுக்கிடும் சில திருப்பங்கள் உண்டு அதற்குத் தகுந்தாற்போல கதாபாத்திர அறிமுகத்தில்
சில ஜிக்ஜாக் வேலைகள் செய்திருக்கிறேன். படம் பார்த்தபிறகு அது உங்களுக்கே புரியும்.
தெரிந்தாலும் கமுக்கமாக வைத்துக் கொள்ளவும்.
நிச்சயம் பார்க்கவேண்டிய மிஸ்டரி திரில்லர்.

வழக்கம் போல செம்ம்ம்ம... ப்ளாக் பத்திலாம் சொல்லி கொடுத்திட்டு. வெப்சைட் நீங்க மட்டும் வெச்சிகிட்டிங்களே.
ReplyDelete