ஜுராஸிக் பார்க்
என்கிற படம் 1993இல் வெளியானதுதான் பலருக்கு ஹாலிவுட் என்றொரு சினிமா உலகம் இருப்பதை உணர வைத்தது. பலருக்கு அதுதான் முதல் ஹாலிவுட் அல்லது முதல் ஆங்கில சினிமா. அதற்குப் பின்னர் ஆங்கில சினிமாக்களின் தொழில் நேர்த்தி மற்றும் அதன் வளர்ச்சியோடு சேர்ந்து நாமும் வளரத் தொடங்கி விட்டோம். இன்றெல்லாம் நாம் ஜானர் பிரித்து படங்களை பார்க்கும் அளவிற்கு வளர்ந்து அதற்கு ரிவ்யூ எழுதும் அளவிற்கு உயர்ந்து சாமானியனும் ரேட்டிங் கொடுக்கும் அளவிற்கு மாறி நிற்கிறோம். ஆனால், இத்தனைக்கும் ஹாலிவுட்
என்கிற கதவைத் திறந்து நம்மை உள்ளிழுத்துக் கொண்ட ஒரு வாசல் ஜுராஸிக் பார்க்-காகத்தான் இருக்கும். (பெரும்பான்மையானோருக்கு).
இந்த ஜுராஸிக் பார்க் முந்தானாள் கதையெழுதி நேற்று படமாக்கப் பட்டு, இன்று ரிலீஸான சாதாரணப் படம் அல்ல. உண்மையில் இதன் கதை
1993 லிருந்து சரியாக பத்து வருடங்களுக்கு முன்னர் மைக்கெல் க்ரிச்டனின் (Michael Crichton) மூளையில் உதித்த ஒரு கரு. அதை அவர் எழுத ஆரம்பித்து முடிப்பதற்குள் பத்து வருடங்கள் உருண்டோடி விட்டன. அந்த நாவலின் மீது இம்ப்ரெஸ்ஸான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், அதைப் படமாக எடுப்பதற்குள் படாதபாடு பட்டார் என்ற உண்மை இன்றளவிற்கும் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
மைக்கெல் க்ரிச்டன் இந்த நாவலை ரிலீஸ் செய்வதற்கு முன்னரே ஜுராஸிக் பார்க் படத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. நாமெல்லாம் நினைப்பது போல படத்தில் வந்தது கிரிச்டன் எழுதிய கதை அல்ல. பிறகெப்படி அவருக்கு டைட்டிலில் கிரெடிட் கொடுக்கப்பட்டது?
உண்மையில் கிரிச்டன் எழுதிய கதையில் டைனோசர்கள் என்றொரு இனம் இருந்ததாகவும், அதை இன்ஜென் கார்ப்பரேசன் (InGen Corp) என்ற ஒரு பயாலாஜிக்கல் தொழிநுட்ப நிறுவனம் டெஸ்ட் டியூப் மூலமாக டினோசர்களை மறு உருவாக்கம் செய்கிறது. மேலும் டினோசர்கள் உலவும் ஒரு தீம் பார்க்கை ஹவாய் தீவில் நிறுவுகிறது. தீம் பார்க் என்றால் குழந்தைகளெல்லாம் அந்த பெரிய பெப்பெரிய கோவக்கார டி-ரெக்ஸ் மீது ஏறி சவாரி செய்வதாகவும் எழுதியிருந்தார்.
மொத்தமாக இதில் ஒரு இராம.நாராயணன் டச் தெரிகிறதா!
இதைத்தான் அவ்வளவு கஷ்டப்பட்டு இதற்கு கிரிச்டனும் டேவிட் கோயெப்பும் (David Koepp) இணைந்து திரைக்கதை எழுதி மிகப்பெரிய பட்ஜெட் செலவு செய்து படமெடுத்தனர். எடுத்தவரை எல்லா ரீலையும் ஓட்டிப் பார்த்த ஸ்பீல்பெர்க், ‘இது ஜெயிக்காது’ என்ற உண்மையை உணர்ந்து எல்லா கோட்டையும் அழித்து மீண்டும் புதுதாக ஒரு திரைக்கதையை மாற்றி, ‘அது நம்மள நோக்கித்தான் வருது, எல்லாரும் தாழ்வான பகுதிய நோக்கி ஓடுங்க’ பாணியில் ஒரு ஜுராஸிக் பார்க்கை எடுத்தார். அதுவும் ஒருமுறை அல்ல. இரண்டு முறை. அவர் இதை படமாக எடுத்து முடிப்பதற்குள் எத்தனை பிரச்சினைகளை சந்தித்தார் என்பதை ஒரு பட்டியலே இடலாம்.
அவை...
அவை...
1) திரைக்கதை உரிமம்
ஜுராசிக் பார்க் என்கிற நாவலை
மைக்கெல் க்ரிச்டன் எழுதி வெளியான போது அதன் உரிமையை வாங்குவதற்கான போட்டி பல
ஸ்டூடியோக்களுக்கு இடையே கடுமையாக நிலவியது. Warner
Brothers, Columbia Pictures, 20th Century Fox போன்ற ஸ்டூடியோக்களும், Tim
Burton, Richard Donner, Joe Dante போன்ற இயக்குநர்கள் மற்றும்
தயாரிப்பாளர்களும் போட்டி போட்டுக் கொண்டு தங்களது ஆர்வத்தை தெரிவித்திருந்தனர்.
இந்தப் ஆர்வப்போட்டிப் பட்டியலில் இன்னொரு நிறுவனமும் இருந்தது. இவர்களையெல்லாம்
தாண்டி அந்த நிறுவனத்திற்கு உரிமம் வழங்கப் பட்டதன் பின்னால் ஒரு சிறு சம்பவம்
உண்டு.
மைக்கெல் க்ரிச்டன் இந்த நாவலை
எழுதிக் கொண்டிருந்தபோது இவரது ER
என்கிற நாவலின் அடிப்படையில் ஒரு தொலைக்காட்சித் தொடர் உருவாகிக் கொண்டிருந்தது.
அதில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கும் ஒரு தயாரிப்பாளராக இருந்தார். அவரிடம் பேசிக்
கொண்டிருக்கையில் இந்த ஜுராசிக் பார்க் நாவலைப் பற்றி கூறியிருந்தார். அந்தக் கதையினைக்
கேட்ட ஸ்பீல்பெர்க், இது சாதாரண மான்ஸ்டர்களின் கதையைத் தாண்டிய வேறொரு
தளத்திற்கான கதை என்று தனது கருத்தினை தெரிவித்திருந்தார். அது க்ரிச்டனை
வெகுவாகக் கவர்ந்திருந்தது.
இந்தக் கதை உரிமப் போட்டி நிலவிக்
கொண்டிருந்த போதே யுனிவர்சல் நிறுவனம் ஒரு முடிவு செய்து வைத்திருந்தது. இந்தக்
கதையின் உரிமம் கிடைத்து அதைப் படமாக்குவதானால், அதன் இயக்குநர் ஸ்டீவன்
ஸ்பீல்பெர்க் மட்டுமே என்பதுதான் அது. ஏனென்றால், அதற்கு முன்னரே ஸ்பீல்பெர்க்
யுனிவர்சல் நிறுவனத்திற்காக 24 படங்களில் இயக்குநராகவும், திரைக்கதை
எழுத்தாளராகவும். பணியாற்றியிருந்தார். அதில் Jaws (1975), Raiders of the Lost Ark (1981), E.T. The Extra-Terrestrial
(1982), Indiana Jones and the Temple of Doom (1984), Indiana Jones and the Last
Crusade (1989), Hook (1991) போன்ற படங்களில் அவரது தொழில்நேர்த்தி அவகளை
மிகவும் கவர்ந்திருந்தது. அதே போல ஒரு ஆடியன்ஸாக மைக்கெல் க்ரிச்டனையும் அது அவரது
ரசிகனாக்கியிருந்தது. ஆகவே 5 லட்சம் டாலர்களுக்கு ஜுராசிக் பார்க் நாவலின்
அடாப்ட்டேசன் உரிமம் யுனிவர்சல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
2)
ஹவாய் தீவு
நாவலின்படி கதை கோஸ்டா ரிக்கா
(Costa Rica) என்கிற தனித் தீவில் நடப்பதாகத் தான் எழுதப்பட்டிருந்தது. ஆனால்,
அங்கே படப்பிடிப்பு நடத்துவதற்கான செலவுகளை விடவும், ஹவாய் தீவில் இருந்த ஒரு சிறு
தனித் தீவான கவ்வாயில் (Kaua'i) படப்பிடுப்பு நடத்துவது பெருமளவு செலவுகளைக்
குறைக்கும் என்பதால், அங்கே ஜுராசிக் பார்க் செட் அமைத்து படப்பிடிப்பு
தொடங்கியது.
படத்திற்கான ப்ரீப்ரொடக்சன்
வேலைகள் அனைத்தும் கிட்டத்தட்ட இரண்டு முழு வருடங்கள் நடத்தி
முடிக்கப்பட்டிருந்தது. அதில் டைனோசர்களின் சிஜிஐ உருவாக்கம் அதன் அசைவுகள், டைனோசர்
டம்மிகள் போன்றவை மொத்தமும் செய்து முடிக்கப்பட்டிருந்தது. ஸ்பீல்பெர்க்கைப்
பொருத்தவரை டம்மியாகவே இருந்தாலும் அதன் முழு உருவ அளவிற்கே (Life Size) சூட்டிங்கில்
இருக்க வேண்டும் என்கிற நிபந்தனையுடன் தான் இந்தப் படத்திற்கான வேலையிலேயே
இறங்கினார். டைனோசர்களின் லைப்சைஸ் டம்மிகள் படப்பிற்கு ரெடி. ஆனால் அதன் அசைவுகள்
ஸ்பீல்பெர்க்கிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அந்த ரப்பர் பொம்மைகள், தொள தொளவென
அங்கும் இங்குமாக சம்பந்தமில்லாமல் அசைவது துருத்திக் கொண்டு தனியாகத் தெரியவே அது
படம் பார்ப்பவர்களின் மனதில் நிச்சயமாக சிரிப்பையும் அருவருப்பையுமே வரவைக்கும்
என்பதைத் தெரிந்து கொண்டார். ஆகவேதான் சி.ஜி.ஐயில் அதனை மீண்டும் உருவாக்கம்
செய்து திரையில் உலவ விட்டார். அதன் அசைவுகள் மிகவும் திருப்தியான பின்னரே
24/08/1992 இல் சூட்டிங் தொடங்கப்பட்டது.
3)
திரைக்கதை மாற்றம்
பத்து நாட்கள் படப்பிடிப்பு
நடந்த நிலையில், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் மனதில் ஒரு மிகப்பெரிய அச்சம்
குடிகொண்டது. எடுத்தவரை படத்தை போட்டுப் பார்த்த பின் இது நிச்சயமாய்
வொர்க்-அவுட்டாகாது என்பதை அவர் உணர்ந்து கொண்டார். கதாசிரியர் மைக்கெல்
க்ரிச்டனையும், டேவிட் கோயெப்பையும் அழைத்து விசயத்தைக் கூறினார். அவர்களும்
ஒத்துக் கொள்ளவே மொத்தக் கதையும் மாற்றியமைப்பட்டது. யுனிவர்சல் நிறுவனமும் அந்த
முடிவை ஏற்றுக் கொண்டது.
என்ன, புரியவில்லையா? நாம்
பார்த்த ஜுராசிக் பார்க் கதை அதன் இரண்டாவது வர்சன். அதன் முதல் வர்சனில்,
ஜுராசிக் பார்க் என்பது குழந்தைகள் டைனோசரின் முதுகில் ஏறி சவாரி செய்வதாகவும்,
டைனோசரும், குழந்தைகளும் ப்ரெண்ட்லியாக இருப்பதாகவும் திரைக்கதை எழுதப்பட்டு அது
படமாக்கப்பட்டிருந்தது.
அதுதான் ஸ்பீல்பெர்க் பயந்த
விசயம். மனிதர்களும், டைனோசர்களும் எப்படி ப்ரெண்ட்லியாக இருக்க முடியும்? இருக்கலாம்.
முடியும்தான். சைவ டைனோசர்கள், மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்காத டைனோசர்களைக்
கொண்டு அவைகளும், மனிதர்களும் ப்ரெண்ட்லியாக இருக்குமாறு படமாக்க முடியும்தான்.
அதைத்தான் செய்திருந்தனர். ஆனால், இந்தத் தாவரப் பட்சிணி டைனோசர்களை மட்டுமே
வைத்து, அந்தக் கதையை படமாக வெளியிட்டால், அது வெறுமனே ஒரு டாக்குமெண்டரியாக
வேண்டுமானால் இருக்கலாம். மாறாக ப்ளாக் பஸ்டர், வசூலெல்லாம் கிடைக்காது. அதன்
பிறகுதான் கதைக்குள் டி.ரெக்ஸ், ராப்ட்டர் போன்ற அசைவ பட்சிணி டைனோசர்களின்
ஆதிக்கம் கதைக்குள் பெருமளவு புகுத்தப்பட்டது.
ஆக, நாம் பார்க்கும் இந்த
ஜுராசிக் பார்க் படமானது, அதன் இரண்டாவது வர்சன்.
4) எதிர்பாராத
பெருத்த சேதம்
மூன்று வாரங்களில் படத்தின் 90%
படப்பிடிப்பு முடிந்திருந்த நிலையில், ஒரு பெரும்பிரச்சினை வந்தது. இன்னும் ஒருசில
பேட்ச்-அப் காட்சிகளும் ஒரு முக்கியமான காட்சியை மட்டுமே படமாக்க வேண்டியிருந்த
நிலையில், செப்டம்பர் 11, 1992 அன்று இனிகி (Hurricane Iniki) புயல் ஹவாய்த் தீவை
கடந்தது.
எடுத்தவரையான பிலிம்ரோல்களும்,
படப்பிடிப்பு உபகரணங்களும் இரவு வேளையாகவும், அதுவும் சூட்டிங் திட்டமிடப்படாத
இரவு வேளையாகவும் இருந்ததனால் அவைகள் சேதம் எதுவுமின்றி தப்பிப் பிழைத்தது.
உயிர்சேதங்களும் எதுவுமில்லை. அனைவரும் தீவில் உருவாக்கப்பட்டிருந்த ஹோட்டல்
அறைகளில் ஒளிந்துகொண்டு உயிர் தப்பித்திருந்தனர்.
5) அந்த ஒரு காட்சி
இனிகி
புயலுக்கு முன் ஒரு காட்சி மட்டும் பாக்கி இருந்ததாகக் கூறியிருந்தேன் அல்லவா? அது
எந்தக் காட்சி தெரியுமா?
இடைவேளைக்கு
(இந்தியாவைப் பொறுத்தவரை அது இடைவேளைக் காட்சி) முன்னர் பெரிய டி.ரெக்ஸ்
டைனோசரிடமிருந்து தப்பிக்கும் முயற்சியில் அந்த இரு சிறார்கள் சாலையிலிருந்து
வேலியை உடைத்துக் கொண்டு காரோடு சேர்ந்து பாதாளத்தில் விழுந்த பின் அந்தக் கார்
உயரமானதொரு மரத்தில் மாட்டிக் கொள்ளுமல்லவா? அதுவரை படமாக்கப் பட்டிருந்தது.
அதிலிருந்து கார் கீழே தரையில் தலைகுப்புற விழும் காட்சி - அது மட்டும்தான்
பாக்கியிருந்தது.
உண்மையில்
கார் மரத்தில் மாட்டிக் கொள்ளும் காட்சி எடுக்கப்பட்டிருந்தது உண்மையான மரத்தின்
மேல். புயல் விளைவித்த சேதங்களில் அந்த உயரமான மரமும் காணாமல் போயிருந்தது.
பிறகு
வேறு வழியில்லாமல் அதனை அந்த கவ்வாய் தனித்தீவின் அருகிலிருந்த ஓஹு (Oahu) தீவில்
அந்த மரத்தைப் போலவே செயற்கையாக மரத்தின் செட் அமைக்கப்பட்டு பின்பு அந்தக் காட்சி
முழுமைப் படுத்தப்பட்டது.
6) The Power of Cinema
ஆக, ஏற்கனவே ஒருமுறை இயற்கை
படைத்து பிறகு அவைகள் ட்ரையல் அண்ட் எரர் என்று இயற்கையே அழித்த, டைனோசர்களின்
மீள் உருவாக்கத்தை இயற்கையே விரும்பவில்லை போலும். எனினும், நமக்கு ஒரு விசயம்
தெரிந்து கொண்டே ஆக வேண்டும் என்கிற விதி இருந்தால் அது நம்மை எப்படியும் விட்டுப்
போகாது, அல்லவா! மனிதனின் முயற்சியால் அவை மீண்டும் உலகத்திற்கு தெரிவிக்கப்பட்டது.
ஜுராசிக் பார்க் படத்தின் மூலம்.
என்னதான் அவை நாவலாக முதலில்
வெளிவந்திருந்தாலும், படமாக எடுக்கப்படாமல் போயிருந்தால்?
நிச்சயமாக டைனோசர்களைப் பற்றி
இவ்வளவு விசயங்கள் நாம் அறிந்திருப்போமா என்பது சந்தேகம்தான். The Power of Cinema!
இந்தப் படம் வெளிவராமல்
விட்டிருந்தால், ஹாலிவுட் அறிமுகம் நமக்கு இன்னும் தாமதப்பட்டிருக்கும். இதற்கு முன்னரும்
சில படங்கள் வந்திருந்தாலும், அவைகள் பெற்றோர்களால் தணிக்கை செய்யப்பட்டு, அவர்களால்
அனுமதிக்கப் பட்ட பிறகே பார்க்க முடிந்தது. மேலும் இந்தப் படத்தை எங்கள் ஊரில் இருந்த
அத்தனை பள்ளிகளும் தலா ஒரு காட்சி என்று ஒவ்வொரு நாளும் தங்களது மாணவர்களை சாரை சாரையாக
ஜுராசிக் பார்க் படத்தைக் காண அழைத்துச் சென்றது. நானும் அப்படித்தான் இந்தப் படத்தை
முதன் முதலில் பார்த்தேன்.
பின் குறிப்பு : இதற்கு முன்னரே யாத்ரீகன் என்றொரு அறிவியல் எழுத்தாளர் பாக்யாவில் தொடராகவே ஜுராசிக் பார்க்கைப் பற்றி எழுதி அது புத்தகமாகவே வெளியாகிவிட்டது. இருபது வருடத்திற்கு முன்னரே. இப்போது
நான் எழுதியிருக்கும் இந்தப் பதிவானது அந்தப் புத்தகத்தில் இருந்த சில விசயங்களின்
சிறு தொகுப்புதான்.
ஆக
நண்பர்கள் எவரிடமாவது அந்தப் புத்தகம் இன்னும் இருந்தால், அதைக் குப்பையில்
இட்டுவிடாமல் எனக்கு அளித்து உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.



சூப்பர் Karthikeyan Bro
ReplyDeleteசெம்ம்ம்ம்ம 💘🌟
ReplyDeleteSuper... அற்புதமான தகவல்கள்... யாத்ரீகன் புத்தகம் என்னிடமும் இருந்தது... இப்ப எங்கேன்னு தெர்ல...
ReplyDeleteசிறப்பான பதிவு.. பல தகவல்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி. என்னிடம் இந்தப் புத்தகம் இன்னும் பத்திரமாக உள்ளது.
ReplyDelete