The Kitchen (2019)
DC Vertigo
Crime / Drama
1978, நியூ யார்க்கில் Hell's Kitchen என்றொரு மாஃபியா கும்பல், கட்டப்பஞ்சாயத்து அடிதடி கொள்ளை என்ரு வரிசையாக அடாவடித்தனம் செய்து வருகிறது. கெவின், ஜிம்மி, ராப் ஆகிய மூவரும் அதை நடத்திக் கொண்டிருப்பவர்கள். FBI அவர்களை ஒருநாள் அவர்களை காத்திருந்து பொறி வைத்துப் பிடிக்கிறது. மூன்று வருடம் சிறைவாசம்.
அந்த கும்பலின் வழக்கப்படி யாராவது ஜெயிலுக்குச் சென்றால் அவர்களது குடும்பத்திற்கான செலவுகளை கும்பல்தான் பொறுப்பேற்க வேண்டும். அதுவும் மாதாந்திரமாக. தற்போது அந்தக் கும்பலை நிர்வகிக்கும் ஜாக்கி க்வின் அவர்களுக்கு தரவேண்டிய பணத்தை சரிவரத் தராமல், பெயரளவில் சில நோட்டுக்களை மட்டும் தருகிறான். அது அவர்களது அன்றாடத் தேவைக்கே போதாது என்பதால் சிறை சென்ற மூவரின் மனைவிகளில் கெவினின் மனைவி ரூபியும், ஜிம்மியின் மனைவி கேத்தியும் ஜாக்கியிடம் சென்று அவர்களது பணத்தைக் கேட்டு முறையிடுகின்றனர். ஆனால் ஜாக்கி அவர்களை ஏளனமாகப் பேசி துரத்தி விடுகிறான். புது நிர்வாகி பந்தாவையும் கெத்தையும் விட ’பெண்கள்தானே’ என்கிற ஏளனம் அவனுக்கு.
இவர்களில் ராப்பின் மனைவி க்ளேர் மட்டும், இவனிடம் கையேந்தும் எண்ணம் இல்லாததால் தற்காலிகமாக கிடைத்த வேலையைச் செய்கிறாள். அங்கேயும் அவள் ஒரு திருடனிடம் உதைபடுகிறாள். திருமணமான நாளிலிருந்து தினமும் தன் கணவன் ராப்பிடம் உதை வாங்கி உதை வாங்கி வெறுத்துப் போனவள் தன்னால் திருப்பி அடிக்க முடியாத இயலாமையில் ரூபியிடமும், கேத்தியிடமும் சொல்லிக் கொண்டு அழுகிறாள்.
மூவரும் ஒரு முடிவெடுக்கிறார்கள். ஹெல்ஸ் கிச்சனில் இவர்களுக்கு சாதகமான இருவரை உடன் வைத்துக் கொண்டு இவர்கள் மூவரும் நியூயார்க் முழுவதும் தண்டல் வசூலிக்கிறார்கள்.
(அது கிட்டத்தட்ட தண்டல்தான். நியூயார்க்கில் உள்ள கடைகளில் அந்நியர்களிடமிருந்தும், திருடர்களிடமிருந்தும், அடாவடி செய்பவர்களிடமிருந்தும் பாதுகாப்பு தருவதாகக் கூறி மிரட்டலாக பணம் பெறுவதற்கு தண்டல் என்று கூறுவார்கள் என்றுதான் ஞாபகம். அதைவிட சிறந்த பதம் இருந்தால் பரிந்துரைக்கவும்)
இது ஜாக்கி க்வின்னை மிகுந்த கோபத்துக்கு ஆளாக்குகிறது. நேரடியாக அவர்களிடம் மோதாமல், அவர்களுக்கு உதவிக் கொண்டிருந்த அந்த இரு தடியர்களை சுட்டுத் தள்ளுகிறான். ஆத்திரமடைந்த பெண்கள் மூவரும் அவனை நேரடியாகச் சென்று மிரட்டுகிறார்கள். ஆனால் அவன் ’இன்று இரவு தூங்கும் முன் கதவுகளை நன்றாக பூட்டிக் கொள்ளுங்கள். எந்நேரமும் நான் உங்களைக் கொல்லுவேன்’ என்று எச்சரித்து விட்டுச் செல்கிறான்.
உண்மையில் அவன் அதைச் செய்யக் கூடிய ஆள்தான். அவனிடம் ஒரு கும்பலே இருக்கிறது. ஆனால், இவர்களிடம் துணைக்கு இருந்த இரண்டு தடியர்களும் உயிரோடு இல்லை. ஆகவே பயந்தபடியே அந்த இரவு கழிகிறது. ரூபி தனது தாயார் இருக்கும் ஊருக்கு சென்று பதுங்கிக் கொள்கிறாள். கேத்தியுடன் இரண்டு குழந்தைகள் இருப்பதால், வீட்டிலேயே கதவுகளை மூடிவிட்டு தூங்காமல், யாரும் வருகிறார்களா என்று பயந்தபடியே கழிகிறது. க்ளேருக்கு குழந்தைகள் எதுவுமில்லை. கர்ப்பமாக இருந்தபோது கணவனிடம் உதைபட்டு கரு கலைந்து விடுகிறது. ஆகவே அந்த இரவு மூவருக்கும் ஒரு மாதிரியாக பயந்தபடியே கழிகிறது.
ஆனால், ஜாக்கி க்வின் அன்றைய இரவு அவர்களைத் தாக்கவில்லை. மாறாக மறுநாள் அவர்களைக் கொல்ல வருகிறான்.
அன்றிலிருந்து அவர்கள் கதையே வேறு லெவலுக்கு மாறுகிறது. எப்படி என்பதை The Kitchen (2019) படத்தில் காண்க. (பாட்டு புக் பின்னாடி வர்ற கதை அறிமுகம் மாதிரி இருக்கில்ல?)
இது டிசி எண்டர்டெயின்மெண்டின் ஒரு காமிக் கதை வரிசை. ரேட்டிங்கைப் பற்றிக் கவலைப் படாமல் பாருங்கள். நிச்சயம் பார்க்கலாம். R Rated படம் என்பதால் குழந்தைகள் தவிர்க்கவும்.
அமேசான் ப்ரைமில் அவைளபிள். நேத்துத்தான் ஸ்ட்ரீமிங் ஆரம்பிச்சது.

No comments:
Post a Comment