விக்கிரமாதித்தனிடம் வேதாளம் ஒரு கதை சொல்கிறது.
அந்தணர் குடியில் பிறந்த மூன்று சகோதரர்கள். மூவரும் ஒவ்வொரு வகையில் வித்தியாசமான பண்புகளைக் கொண்டவர்கள்.
ஒருவன் வாசனைகளைக் கொண்டே அது என்ன மலர் என்று சொல்லிவிடுவதில் வல்லவன். அவனுக்கு நிகர் வேறு ஒருவருமில்லை.
இன்னொருவன், ஒற்றை முடியை வைத்தே அந்தப் பெண் எப்படிப்பட்டவள் என்று சொல்லிவிடுவதில் வல்லவன். அவனுக்கு நிகராகவும் இந்த உலகத்தில் சிறந்த இன்னொருவன் கிடையாது.
மற்றொருவனோ, உறக்கத்தில் வல்லவன். அது எப்படியென்றால், ஒரு சிறு சப்தமோ, அல்லது அவன் படுக்கையில் சிறு தூசியோ இருந்தாலும் உறக்கம் கலைபவன்.
இந்த மூவரில் சிறந்தவன் யார் என்பதில் அவர்களுக்குள் போட்டி உண்டானது. அதைத் தீர்த்து வைக்க அந்த ஊர் ராஜாவை நாடுகின்றனர்.
ராஜாவோ அவர்களை தனித்தனியாக சோதிக்கிறார்.
இவர்களில் யார் சிறந்தவன் என்று சொல்லியிருப்பார் அந்த ராஜா?
என்று வேதாளம் விக்கிரமாதித்த மகாராஜாவைக் கேட்டுவிட்டு மீண்டும் முருங்கை மரமேறிவிடும்.
இந்தக் கதை உங்களில் பலர் அறிந்ததே.
விடை எதுவாக இருக்கும் என்று இந்தக் கதையை படிக்கும் நம்மில் பலர் மண்டை காய விடுவதில் இந்த வேதாளத்திற்கு அப்படி என்னதான் சந்தோஷமோ என்று புலம்பியிருப்போம்.
அப்படி ஒரு கதைதான் நாவல் வடிவில் வந்த சிக்ஸ் சஸ்பெக்ட்ஸ். ஆரம்பத்தில் ஜூனியர் விகடனில் 'அருண் அத்வானியாகிய நான்' என்ற தலைப்பில் தொடராகவும் வந்தது. தமிழ் மொழிபெயர்ப்புதான்.
உண்மையில் ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் மூலம், விகாஸ் ஸ்வரூப் எழுதிய க்யூ & ஏ (Q&A). அவரின் அடுத்த நாவல்தான் இந்த சிக்ஸ் சஸ்பெக்ட்ஸ்.
இதை தமிழில் அஞ்சனா தேவ் மொழிபெயர்த்த விதம்தான் என்னை வெகுவாக கவர்ந்திருந்தது.
Saran Kumar என்னிடம் இந்தப் புத்தகத்தைப் பற்றி சொன்ன போது அதில் யேதாவது ஒரு த்ரில்லான சமாச்சாரம் இருக்கும் என்பதை ஒரு வகையில் உணர்ந்திருந்தேன். ஆனால், நான் மூன்றே நாட்களில் இந்த புத்தகத்தை படித்து முடிக்கும் அளவிற்கு இது த்ரில் த்ரில் த்ரில்தான்.
"ஒரு மனிதனை மிக நெருக்கத்தில் நின்று சுட்டுக் கொல்ல மூன்று விசயங்கள் அவசியமாகின்றன. பலமான 'மோட்டிவ்'... அசைக்க முடியாத துணிச்சல்... சுமாரான துப்பாக்கி!"
ஒரு கொலை.
நாடே வெறுத்து ஒதுக்கும் ஒரு கொலைகாரன். அவன் உள்துறை அமைச்சரின் மகன். அவன் செய்யாத தவறு என்று ஒன்று இந்த இனிய பாரதத்தில் இல்லை. எந்த வழக்குகளும் அவனை அசைக்க முடிவதில்லை. இ.பி.கோ-வே அவன் குற்றமற்றவன் என்கிறது. ஆனால், அவனால் பாதிக்கப்பட்டவர்கள் ஓட்டுப் போட்டால் அவன் சுயேட்சையாகவே ஜெயிக்கலாம். அவ்வளவு கொடூரம் படைத்தவன். அவன் தன் பண்ணை வீட்டில் ஒரு பார்ட்டியில் 600 பேர் முன்னிலையில், போலீசார் காவலிருக்கையிலேயே சுட்டுக் கொல்லப்படுகிறான். இ.பி.கோ செய்யாததை ஒரு இன்ச் புல்லட் செய்கிறது.
அவனைக் கொலை செய்தவன் யார்?
அந்தத் தீர்ப்பை வழங்கிய துப்பாக்கிக்கு சொந்தக்காரன் யார்?
நிச்சயமாக அங்கிருந்த அறுநூரில் ஒருவன்தான். ஆனால், அங்கே சோதனையில் துப்பாக்கியுடன் பிடிபட்டவர்கள் ஆறு பேர். அந்த ஆறு பேருக்குமே அவனைக் கொல்வதற்கான முகாந்திரம் (மோட்டிவ்) இருக்கிறது. ஆனால் யார்?
பயப்படாதீங்க. இங்க நான் அதை சொல்லப் போறதில்லை.
மேலே சொன்ன விக்கிரமாதித்தன் கதையில் வேதாளம் சொல்லி கடைசியில் நம்மையே யோசிக்க விட்டு பறந்து விடுவதைப் போல, அந்த ஆறு பேருக்கும் அவனைக் கொல்வதற்கான மோட்டிவை கதையாக வி(வ)ரித்த வகையில் பலே!
கதை பயணிக்கும் போக்கில் நம் நாட்டில் நடக்கும் சர்ச்சைக்குள்ளான விசயங்களை அசால்ட்டாக சொல்லிச் செல்கிறது. பல கேள்விகளுக்கு பதிலும் கிடைக்கிறது.
ஒவ்வொரு கேரக்ட்டரும் ஒரு வகையில், அவனைக் கொல்வதற்கு கதை நகர்வதை நாம் உணர வைக்கும் நொடியில் கூடுகிறது கதையின் தீவிரம். ஆனால், அதுவரை அந்தக் கேரக்டரோடு போரடிக்காமல் பயணிக்க வைத்த விதத்தில் 'அங்கதாங்க நிக்கிறாரு ஆசிரியர்'!
நான் படித்த த்ரில் கதைகளில் இது முக்கியமான ஒரு நாவல். ஐ ரியலி லைக் இட்!
wink emoticon
Wow Waiting For Web Series 👌👌
ReplyDelete