Tuesday, October 18, 2016

Supergirl - TV Series




கிரிப்ட்டான் கிரகம் (Krypton) அழியப்போகும் தறுவாயில், அங்கிருந்து சிறுவன் Kal-El அவனது பெற்றோர்களால் ஒரு கலனில் வைத்து பூமிக்கு அனுப்பப்படுகிறான். கால்-எல்லுக்கு பாதுகாப்பாக இன்னொரு ஆளையும் அனுப்புகிறார்கள். அது ஒரு பெண். அவளது பெயர் Kara Zor-El. அவளது கலன் (POD) எதன் மீதோ மோதி பாதை மாறி விடுகிறது. உண்மையில் அதன் இயக்கம் தடைபடுகிறது. அவள் பூமியை வந்தடைந்த போது… தன்னைவிட வயதில் சிறியவனான Kal-El பெரியவனாகவும் சூப்பர்ஹீரோவாகவும் வளர்ந்திருக்கிறான். பூமியில் அவனது பெயர் கிளார்க் கென்ட் (Clark Kent) – ஆனால், பூமியில் உள்ள மக்கள் அவனை அழைக்கும் பெயர் சூப்பர்மேன்.

அவள் அனுப்பப்பட்ட காரணமே கால்-எல்லை பாதுகாப்பதற்காக மட்டுமே. அவன் வளர்ந்து அந்த கிரகத்தையே காக்கும் சக்தியாக மாறி விட்டான். ஆனால், காரா இன்னும் சிறுமியாகவே இருக்கிறாள். (இருவருக்கும் இடையே 12 வயது வித்தியாசம்) ஆகவே பாதுகாக்கும் பொறுப்பை கால்-எல் ஏற்றுக்கொண்டு காராவை தனது நம்பிக்கைக்குரிய Danvers குடும்பத்திடம் ஒப்படைத்து விட்டு உலகத்தைக் காப்பாற்றும் பணியில் பிஸியாக பறந்து கொண்டிருக்கிறான்.

National City



சென்ற பதிவில் Barry Allen – The Flash வசிக்கும் நகரமாக சென்ட்ரல் சிட்டியினைப் பார்த்தோமல்லவா. இதில் காரா வசிப்பது National City. இங்கே காரா அந்தக் குடும்பத்தில் ஒருத்தியாக வளர்க்கப்படுகிறாள். அவளது சக்திகள் மறைத்து வைக்கச் சொல்லி கட்டாயப்படுத்தப்படுகிறாள். டான்வர்ஸ் குடும்பத்தில் அவளுக்கு Alexandra என்ற மூத்த சகோதரியும் இருக்கிறாள். அவள் காராவுக்கு மிகவும் பாதுகாப்பாகவும் அன்பான சகோதரியாகவும் இருக்கிறாள். அந்த நகரத்தின் செய்தித்தொடர்பு நிறுவனமான கேட்கோ-வில் (CATCO) அதன் உரிமையாளர் மிஸ்.கேட் கிராண்ட்டிடம் (Miss. Cat Grant) உதவியாளராக பணிபுரிகிறாள் தலையைப் படிய வாரி புட்டி கண்ணாடியுடன். ஒருமுறை அலெக்ஸான்ட்ரா வேலை நிமித்தமாக சென்று கொண்டிருந்த போது அவள் பயணித்துக் கொண்டிருந்த விமானம் செயலிழக்கிறது. அந்த செய்தியினை டிவியில் பார்த்த அடுத்த நொடி தனது கட்டுப்பாட்டையும் மீறி பறந்து சென்று அந்த விமானத்தை விபத்திலிருந்து காப்பாற்றுகிறாள். இதனால், அவளது இருப்பையும் சக்திகளையும் உலகறிகிறது. அன்றுமுதல் சூப்பர்கேர்ள் என்கிற பெயருடன் விளிக்கப்படுகிறாள்.

DEO – Department of Extra-normal Operations



கிரிப்ட்டானை விட்டு காரா கிளம்பிய சில நிமிடங்களிலேயே அவள் பயணித்த விண்கலம் (POD) அந்த கிரகத்தின் அதிபயங்கர தீவிரவாதிகள் மற்றும் வில்லன்களை அடைத்து வைத்திருக்கும் விண்வெளி மிதவையான Fort Rozz மீது மோதி விடுகிறது. உண்மையில், அவளது விண்கலம் பழுதடைந்ததற்கான காரணமும் அதுவே. அதிலிருந்து இண்டிகோ (Indigo) என்கிற ஒரு கைதியும் தப்பிக்கிறாள். அவள் மின்சாரங்களில் பயணிக்கும் சக்தியுடையவள். அவள் தனது சக்தியின் மூலம் காராவின் விண்கலத்தை இயக்கி பூமிக்கு அனுப்புகிறாள். ஆனால், காராவின் விண்கலத்தோடு மோதிய Fort Rozz-ஐயும் தன்னோடு பூமிக்கு இழுத்து வந்ததால், அதில் அடைபட்டிருந்த கைதிகள் வெளியேறி பூமிக்கு சேதம் விளைவிக்கின்றனர். இந்த ஏலியன்களின் தாக்குதல்களிலிருந்து பூமியைக் காப்பாற்ற உருவாக்கப்பட்டது தான் இந்த DEO – Department of Extra-normal Operations. இதன் டைரக்டர் ஜெனரலாக இருந்து இதனை நிர்வகிப்பவர் டைரக்டர் ஹேங்க் ஹேன்ஷா (Hank Hanshaw). அலெக்ஸான்ட்ரா இதில் தான் ஏஜென்ட்டாக பணிபுரிகிறாள். இது கிட்டத்தட்ட மார்வெல்லின் ஷீல்ட் அமைப்பைப் போன்றதுதான். அலெக்ஸான்ட்ராவும் ப்ளாக் விடோவைப் போன்றதொரு ஏஜென்ட்டுதான். (டிசி ரசிகர்கள் மன்னிக்கவும். மார்வெல்லின் ஒப்பீடு இல்லாமல் எங்களால் டிசியின் கதைகளைப் புரிந்து கொள்வது கடினம்.)

Kara Zor-El

தனது சகோதரியைக் காப்பாற்றிய நாள் முதல் சூப்பர்கேர்ளாக அறியப்படுபவள். தன்னால் ஆகாதெனினும் சூப்பர்மேனின் உதவியைக் கேட்டுப் பெறுவதை அறவே வெறுப்பவள். சூப்பர்மேனால் முடியுமென்றால் அது தன்னாலும் முடியுமென்று நம்பிக்கையோடு போராடுபவள். சூப்பர்மேனோடு தன்னை கம்பேர் செய்தாலே மூக்கு சிவந்து விருட்டென்று அந்த இடத்திலிருந்தே கிளம்பி விடுவாள். அவ்வளவு தன்னம்பிக்கையுள்ள ஒரு கதாபாத்திரம். சூப்பர்மேனுக்குள்ள அத்தனை சக்திகளும் சூப்பர் கேர்ளுக்கு டிட்டோ. இருவருக்கும் உள்ள ஒரே ஒரு ஒற்றுமை, பாத்தவுடனே ஈஸியா கண்டுபுடிக்கிற கெட்டப்ப தெரியாத மாதிரியே நடிக்கிறிங்க பாருங்க என்கிற கலகலப்பு படத்தில் இளவரசு சொல்லும் ஒரு டயலாக் இருக்கிறது. அதுதான், செம குபீர் சிரிப்பு மொமன்ட். மூஞ்ச்சியில மருவுக்கு பதிலாக புட்டி கண்ணாடி. புட்டி கண்ணாடியை கழட்டினால் சூப்பர்கேர்ள் / சூப்பர்மேன். புட்டி கண்ணாடியை மாட்டினால் காரா / கிளார்க் கென்ட். மாறு வேசத்துக்குண்டான மரியாத போச்சசேடா உங்களால.



Fort Rozz – லிருந்து தப்பித்த கைதிகளை மீண்டும் பிடித்து DEO விடம் ஒப்படைத்து அடைத்து வைப்பதுதான் சூப்பர்கேர்ளின் ஒரே மிசன்.

இது மொத்தமும் சூப்பர்கேர்ள் சீசன் 1-இல் உள்ள கதை. இதில் சூப்பர்மேனின் முகத்தைக் கூட காட்டவில்லை. ஆனால், அவர் எல்லா எபிசோடிலும் இருப்பதைப் போலவே ஒரு மாயையை மட்டும் உருவாக்கியிருந்தனர். அதாவது, அவரைப் பற்றி பேசும்போது, ஏற்கனவே நாங்கள் அறிமுகப்படுத்தி விட்டோம். நீதான் அந்த காட்சியை / எபிசோடை மிஸ் பண்ணி விட்டாய் என்பதைப் போன்ற வசனங்கள்.மேலும், கிளார்க் கென்ட்டும் காராவும் பேசிக் கொள்ளும் chat conversations. இப்படியே 20 எபிசோட் ஓட்டி விட்டனர். இதில் ஒரே ஒரு ஆறுதல் Flash – Supergirl Mash-up episode மட்டுமே. அதிலும் ஃப்ளாஸ், டைம் ட்ராவல் செய்து தவறுதலாக மல்ட்டிவர்ஸுக்குள் வந்ததாக காட்டி அவமானப்படுத்தி விட்டனர். என்னதான் சிரிப்பழகி, Homeland series புகழ் Melissa Benoist நடித்திருந்தாலும், Grant Gustin சிரிப்புக்கு ஈடாகது. இரண்டாவது சீசன் ஆரம்பித்து இரண்டு எபிசோடுகள் முடிந்த நிலையில், ஒரு ஆச்சரியம் என்னை யெஸ் யெஸ் யெஸ் என்று வெற்றிக்குறி செய்ய வைத்தது. இந்த சீசன் முழுக்கவும் – முழுசாக – வருகிறார் கிளார்க் கென்ட் அலைஸ் சூப்பர்மேன். வ்வ்வ்வ்வாவ்


Tuesday, October 4, 2016

The Wailing (2016) - கொரியன்

பேய்ப்படங்கள் எல்லாவற்றிற்கும் கிளிஷேவான சில கதைகளே இருக்கும். அந்தப் புளித்துப் போன பேய்ப்படங்களைப் பார்த்து பார்த்து நமக்கு பேய்ப்படம் பார்க்கும்போது இப்போதெல்லாம் பயமே வருவதில்லை. மாறாக சிரிப்புதான் வருகிறது. சிரிக்க வைக்கவேண்டும் என்றே எடுக்கப்படும் பேய்ப்படங்கள் இந்த லிஸ்ட்டில் சேராது. ஒரு ஈவில் டெட் வந்தால் அதைத் தொடர்ந்து அதே கதையுடன் வரிசையாக படங்கள் வரும். ஆனால், மனதில் நிற்பது ஒரு ஈவில் டெட் தான். அதுதான் கிளாசிக். இந்த மாதிரியான ட்ரெண்ட் செட்டர் படங்கள் எப்போதாவது அபூர்வமாக பூக்கும். அது எந்த மொழியாக இருந்தாலும் இதற்கு விதிவிலக்கு என்பதே இல்லை.




அப்படி அபூர்வமாக பூத்த ஒரு படம்தான் The Wailing (2016) கொரியன் ஹாரர். இது The Stranger என்கிற டைட்டிலுடன் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இதன் ஒரிஜினல் கொரியன் டைட்டில் Goksung. அதுதான் அந்த கிராமத்தின் பெயர்.

மலையடிவாரத்தில் இருக்கும் அந்த கிராமத்திற்கு ஒரு புதிய நபர் நுழைகிறார். அன்றிலிருந்து அந்த ஊரை புது விதமான ஒரு நோய் தாக்குகிறது. நோயால் தாக்குண்டவர்கள் அனைவரும் இறக்கின்றனர். சாகும் முன் அவர்களது கையில் கிடைக்கும் ஆட்களையெல்லாம் ரத்தக்களறியாக்கி கொன்று விட்டே இறக்கின்றனர். பெரும்பாலும் அப்படி கையில் சிக்கி சின்னாபின்னமாவது அவர்களது குடும்பங்களே.

போலீஸால் ரத்த வெள்ளத்துக்கு நடுவில் கிடக்கும் பிணங்களைப் பிரித்தெடுப்பதை சத்திய சோதனையின் உச்சமாக திணறுகிறது. அந்த ஊர் போலீஸ் ஸ்டேசனில் நடுராத்திரியில் தினசரி ஒரு பெண் நிர்வாணமாக நின்று பார்க்கிறாள். கண் மூடி திறப்பதற்குள் காணாமல் போய் விடுகிறாள். இதற்கு முன் இந்த மாதிரி திகில் மற்றும் துர்சம்பவங்களே நிகழ்ந்திராத அமைதியான கிராமம் அது.

யார் இதையெல்லாம் செய்கிறார்கள்? என்ன மாதிரியான நோய் அது என்று துப்பு துலக்க துலக்க கிடைக்கும் பதில்களும் குழப்பங்களும் தான் மொத்தப் படமும்.

இவ்வளவு அழகான ஒரு கிராமத்தையும், அதன் ரம்மியமான மாலை நேரங்களையும், மழை பெய்யும் போதெல்லாம் சரியான நேரத்தில் இடி இடித்து அந்தக் காட்சியின் பயங்கரத்தை இன்னும் கூட்டுவதையும், (இதற்கு முன்னர் விருமாண்டி படத்தில் இரண்டு மூன்று காட்சிகளின் இடையே இடி இடித்து காட்சியின் தீவிரத்தை இன்னும் பயங்கரப் படுத்தியதாக ஞாபகம்), கடைசிவரை பேயை சஸ்பென்ஸ் ஆஸ்பெக்ட்டாக பயன்படுத்திய விதம், அந்த கிராமத்து மக்களின் குசும்பான வசனங்களும், (பொதுவாகவே கொரியர்கள் டயலாக் பேசுவதைப் பார்த்தால் குபீர் குபீரென்று சிரிப்பு வரும். ஆனால், இதில் கிராமத்து இழுவை பாஷை வேறு. ஆனால் என்னை அதிலெல்லாம் சிரிக்க விடாமல் நல்ல காமெடி வசனங்களே அடிக்கடி இருந்தது) குறிப்பாக எந்த பேய்ப்படங்களின் டெம்ப்ளேட்டுகளிலும் இல்லாத வித்தியாசமான கதையமைப்புள்ள படத்தை நான் கண்டது இதுவே முதல் முறை.

எனக்கு படத்தின் பல காட்சிகளில் உறைய வைக்கும் அளவிற்கு பயமுறுத்தும் காட்சிகள் இருந்தது. பயப்படாமல் பார்க்கலாம். Sorry. பயப்படுவதற்காகவே பார்க்கலாம்.

உண்மையில் இது ஒரு கொரியன் கிளாசிக்!

The Village: Achiara's Secret - K-Drama



திடீரென்று உங்களிடம் யாராவது வந்து, உங்க வாழ்க்கையிலேர்ந்து பதினாறு மணி நேரத்தை மட்டும் கொடுங்க என்று கேட்டால் என்ன செய்வீர்கள்?

முடியாது என்பவர்கள் இங்கேயே இந்தப் பதிவைத் தவிர்க்கவும்.

என்னிடமிருந்து அப்படி ஒரு பதினாறு மணி நேரத்தை ஒரு நாடகம் தின்று விழுங்கி ஏப்பம் விட்டது. ஆனால், நான் இன்னும் அந்த பதினாறு மணி நேரத்திற்குள் மாட்டிக் கொண்டு வெளியில் வர இயலாமல் தவிக்கிறேன். அது ஒரு K-Drama. நம்மில் பலருக்கு இந்த பதம் மிகவும் பரிச்சயமான ஒன்றாக இருக்கும். பரிச்சயமற்றவர்களுக்காக சொல்வதானால் கொரியன் டிராமா என்பது அதன் விரிவாக்கம். அதுவும் இது திரில்லர் மற்றும் எனக்கு மிகவும் பிடித்த மிஸ்டரி ஜானர் டிராமா வகையைச் சார்ந்தது.


அதன் கதையானது, (பயப்படாதிங்க. முழுக்கதையையும் சொல்ல மாட்டேன். ஸ்பாய்லரெல்லாம் இல்லை)

கனடாவில் வாழும் ஒருத்திக்கு கொரியாவில் தனது குடும்பம் சிறுவயதில் இறந்து போனது தெரிய வருகிறது. ஆனால், அதில் அவளும் சேர்ந்து இறந்து போனதாக அந்த தகவல் தெரிவிக்கிறது. கொரியாவிலிருந்து தனக்கு எந்த சொந்தமும் தற்போது இல்லாத நிலையில் யாரோ அவளை அழைக்கிறார்கள். அவளும் தனது சொந்தம் ஒன்று மிச்சமிருப்பதாக நம்பிச் செல்கிறாள். அந்த கிராமத்தின் பெயர் - அச்சியாரா. சின்ன ஊரைக் கொண்ட கிராமம். அதே ஊரில் உள்ள ஹைஸ்கூலில் ஆங்கில ஆசிரியையாக வேலைக்கு சேர்கிறாள்.


அச்சியாரா - Achiara

அச்சி - சிறிய. ஆரா - குளம். இதுதான் அந்த ஊரின் பெயர். வேலைக்கு சேர்வதற்காக செல்லும் பொழுதே ஒரு விசயத்தைத் தெரிந்து கொள்கிறாள். அந்த ஊரில் ஆல்ரெடி பல பெண்கள் காணாமல் போய்க் கொண்டிருப்பதும், அதுவும் மழை பெய்யும் புதன் கிழமை இரவுகளில் மட்டுமே நடக்கும் சம்பவம் இது எனவும். அவள் செல்வதும் மழை பெய்யும் புதன் இரவில். அவள் தங்கிக் கொண்டிருக்கும் வீட்டில் இதற்கு முன் தங்கியிருந்த ஒரு ஆசிரியையும் இரண்டு வருடங்களுக்கு முன் காணாமல் போயிருக்கிறாள் என்பது அவளுக்கு தெரிய வருகிறது. காணாமல் போன டீச்சருக்கும், அவளது செல்லமான மாணவி மற்றும் அந்த ஊர் மினிஸ்டரின் மகளுக்கும் நல்ல நட்பு இருந்ததையும், மினிஸ்டருடன் அந்த டீச்சருக்கு இருந்த தொடர்பை அறிந்த மினிஸ்டரின் மனைவியும், இவளும் போட்டுக் கொண்ட சக்களத்தி சண்டையும் தெரிய வருகிறது.


சீரியல் கில்லர்

அந்த ஊரில் இளம்பெண்கள் அடிக்கடி காணாமல் போய், பின்பு கற்பழித்துக் கொல்லப்பட்ட நிலையில் அவர்களது பிரேதம் மட்டும் கிடைக்கிறது. இதையெல்லாம் செய்யும் அந்த சீரியல் கில்லர்தான் அந்த டீச்சர் காணாமல் போனதற்கும் காரணமாக இருக்கலாமென நம்பப்படுகிறது.

இதுபோல பல லேயர்களில், பல கேரக்டர்களைக் கொண்டு எக்கச்சக்க மர்ம முடிச்சுக்களோடு, பதினாறு எபிசோடும், பதினாறு மணி நேரங்களும் கொண்ட கொரிய திரில்லர் கம் மிஸ்டரி டிராமா தான் The Village: Achiara's Secret. உண்மையில் இது அண்டர்ரேட்டட் டிராமா. இருந்தும் imdbயில் 8.0.

சொல்வதற்கு இதில் எக்கச்சக்கமான விசயங்கள் இருந்தாலும் அதை நீங்களே பார்த்து புரிந்துகொள்க என இந்த சீரீஸை பரிந்துரைக்கிறேன். மர்மதேசம் போன்ற நாடகப் பிரியர்களுக்கும், மிஸ்டரி ஜானர் பிரியர்களுக்கும்.

13 Tzameti (2005) - ப்ரென்ச்




13 Tzameti (2005)


ப்ரென்ச்
Thriller / Psychological thriller


ஒரு விளையாட்டு. (Spoiler alert)

செத்து செத்து விளையாடலாமாங்கற மாதிரி ஒரு Game. அதாவது அந்த விளையாட்டை எப்படி ஆடனும்னா, களத்துல இருபது பேர் நிக்கிறாங்கன்னு வய்ங்க. ஒவ்வொருத்தருக்கும் ஒரு நம்பர் கொடுத்திருப்பாங்க. ஒன்னு ரெண்டு மூனுன்னு இருபது வரைக்கும். இனி உங்களுக்கு பேரெல்லாம் கிடையாது. அந்த நம்பர் மட்டும்தான். இருபது பேரும் ரவுண்டா நிக்கனும். ஒவ்வொருத்தர் கையிலயும் ஒரு ரிவால்வர் கொடுப்பாங்க. ஒரு புல்லட்டையும் கொடுப்பாங்க. ஒரு ஜட்ஜு ஒருத்தர், இந்த விளையாட்டை ஆடப் போறவங்க எல்லாரையும் கவனிக்கிறாப்ல உயரமான ஏணி மேல உக்கார்ந்திருப்பாரு. இனி அவரு சொல்றத அப்டியே செய்யனும். இவ்ளோதான் விளையாட்டு. நாமளா எதையும் செய்ய வேண்டியதில்ல. ஜட்ஜு சொல்றத அப்டியே செஞ்சா போதும். வாவ்! வெரி பியூட்டிபுல் கேம். பை த வே, இந்த கேமுக்கு நேம் என்னங்கன்னு கேக்கறவங்களும், கலந்துக்க நினைக்கிறவங்களும், கமென்ட்ல வந்து உங்க பேரை பதிவு பண்ணிக்கோங்க. நானே என்னோட சொந்த செலவுல போட்டி நடக்குற எடத்துக்கு கூட்டிக்கிட்டுப் போறேன்.

போட்டியில ஜெயிச்சா நீங்களே ரிட்டர்ன் டிக்கெட் எடுங்க. ஒருவேள தோத்துட்டா, அவங்களே ரிட்டன் டிக்கெட் கொடுத்துருவாங்க. பரலோகத்துக்கு… ஆங் என்ன சொல்ல வந்தேன்? ஆ, அதான் பரலோகத்திலிருக்கும் எங்கள் பரமபிதாவே, படத்தைப் பத்தி எழுத வந்துட்டு என்னென்னமோ எழுதிக் கொண்டிருக்கும் இந்தப் பாவியை மன்னியும்.

ஒரு ப்ரென்ச் மூவி. அதுல கதைப்படி ஹீரோ ஒரு கொத்தனாரு. தன்னோட குடும்பத்துல உள்ளவங்க ஒருவேள கஞ்சி குடிக்கவே காசில்ல. இந்த நெலமையில அவரு ரிப்பேர் வொர்க் பார்த்துட்டிருந்த வீட்டுக்காரர் சூசைட் பண்ணிக்கிறாரு. அந்த வீட்டுக்காரரோட வொய்பு, யெப்பா என் வூட்டுக்காரர் செத்துட்டாரு. இப்ப என் கையில காசில்ல. உனக்கு கூலி கொடுக்க என்னால இப்ப முடியாது. நானும் இந்த ஊரைக் காலி பண்ணிட்டு வேற ஊருக்கு போகப் போறேன்னு சொல்லி, இவன் சோத்துல மண்ணள்ளிப் போட்டுடுது. அய்யய்யோ என் வேலைக்கான கூலிய யாரு கொடுப்பான்னு ஹீரோ அழாத கொறையா கேக்க, அந்த நெசமாலுமே அழுதுடுது. கண் கலங்கிப் போயி தன்னோட மண்வெட்டி, காரச்சட்டி, சிமென்ட் மூட்டை, ஏணி, யெல்லாத்தையும் அள்ளிப் போட்டுக்கிட்டு போகுறப்ப, அந்த வீட்டுக்காரருக்கு வந்த ஒரு லெட்டரையும் அள்ளிப் போட்டுக்கிட்டு வந்துடறான். அவனுக்கு நல்லா தெரியும், யேன்னா அந்த வீட்டுக்காரர் இன்னொருத்தரோட இந்த லெட்டர் விசயமா பேசினத ஒட்டுக் கேட்டிருக்கான். அந்த லெட்டர கொண்டு போனா பணம் கொடுப்பாங்க. ஆனா அது தெரிஞ்சே ஏன் அந்தாளு சூசைட் பண்ணாருன்னு ஒரு டவுட்டு வந்தாலும், பரவால்ல, இப்பத்தைக்கு பணந்தான் முக்கியம். பின்னால வர்ற பிரச்சனைய பின்னால பாத்துக்கலாம்னு கெளம்புறான். அந்த லெட்டர் கவருக்குள்ள, ஒரு ட்ரெய்ன் டிக்கெட்டும், அந்த ஊர்ல தங்கப் போற ஹோட்டலுக்கு அட்வான்ஸா கட்டின பில்லும், ஒரு லெட்டரும் இருக்கு. அதோட அதுல 13ஆம் நம்பர் டோக்கன் அட்டையும் இருக்கு. இதுக்கப்புறம் என்னாச்சுன்னு படம் பார்த்தே தெரிஞ்சிக்கோங்க.



இந்தப் படத்தோட பேரு 13 Tzameti (2005). கருப்பு வெள்ளையிலதான் படத்தை எடுத்திருக்காங்க. கலர்ல ஒரு வர்சன் 2010ல இதே டைரக்டர் Géla Babluani 13ங்கற பேர்ல எடுத்திருக்காரு. ரெண்டு கதையும் ஒன்னுதான். மொழியும், ஆளுங்களும், படத்தோட கலரும்தான் வேற வேற. ஹீரோ இதுல கொத்தனாருன்னா, கலர் வர்சன்ல எலெக்ட்ரிஷியன். அவ்ளோதான் வித்தியாசம். இதே கதைய தமிழ்லயும் எடுத்ததா கேள்விப்பட்டிருக்கேன். ஆனா தியேட்டர்ல ரிலீசாச்சான்னு தெரியல. யாருக்காவது அதைப் பத்தி தெரிஞ்சிருந்தா சொல்லுங்க, தெரிஞ்சிக்கறேன்.

படத்தை பார்த்த பிறகும், இந்த விளையாட்டுல கலந்துக்கற எண்ணமிருந்தா சொல்லுங்க. கண்டிப்பா சொன்ன மாதிரி கூட்டிட்டு போறேன்.

Monday, October 3, 2016

The Flash - TV Series


ஒரு சூப்பர் ஹீரோவின் ஆரிஜின் தெரியாமல் திடுதிப்பென்று ஒரு படத்தில் அந்த கதாபாத்திரம் வானிலிருந்து சொய்ங்கென்று பறந்து / தரைக்குள்ளிருந்து முளைத்து வந்தால் படம் பார்ப்பவர்களுக்கு ஙே என்று இருக்காதா? மார்வெல் அந்தப்பணியினை செவ்வனே செய்கிறது. டிசியும் தனது முக்கியமான சூப்பர்ஹீரோக்களுக்கு அறிமுகப்படங்களை எடுத்தால் நல்லது.

பேசிக்கலி, நான் ஒரு மார்வெல் ரசிகன். மார்வெல் ஃபேனு, மார்வெல் மிக்ஸி, கிரைண்டர், இண்டக்சன் ஸ்டவ்வு எல்லாம். ஆனால், டிசி காமிக்ஸ் அவ்வளவாக புடிக்காது. காரணம் (நோலன் இயக்கிய பேட்மேன் ட்ரையாலஜி நீங்கலாக மத்த எதுவும்) சுத்தமாக புரியவில்லை. மார்வெல்லின் மொத்தக் கதைகளும் எதை நோக்கி செல்கிறதென்ற கிளியரான ஒரு ஐடியா கருந்தேள் உபயத்தில் புரிந்தது. அவெஞ்சர்ஸுக்கு அவர் எழுதிய தொடர் அதற்கு அடித்தளம். அப்படி யாராவது டிசி யுனிவர்ஸுக்கும் எழுதியிருந்தால் டெபனட்டாக புரிந்திருக்கும். அப்படி யாருமே எழுதினதாக எனக்கு தெரியவில்லை. அதனால், சரி நாமளாகவே புரிந்து கொள்ளலாம் என்ற முயற்சியில் தேடிய போது கிடைத்த ஒன்றுதான் The Flash.



***ஸ்பாய்லர் அலெர்ட்***

பேரி ஆலன் (Barry Allen) பத்து வயது சிறுவன். ஒருநாள் இரவு தன் வீட்டில் நடந்த விநோத சம்பவத்தால் மொத்தமாக தனது வாழ்க்கையே தலைகீழாக மாறி விடுகிறது. அவனது அம்மா நோரா ஆலனை (Nora Allen) மஞ்சள் உடையணிந்த முகமூடி மனிதனால் கொல்லப்படுவதை நேரில் காண்கிறான். ஆனால், அதை நிரூபிக்க அவனிடம் சாட்சியங்களில்லை. காவல்துறை அவனது சாட்சியை கற்பனையென நிராகரித்து விடுகிறது. தனது தாய் நோராவின் கொலைக்கு அவனது அப்பா ஹென்றி ஆலனை கைது செய்து சிறையில் (Iron Hights) தள்ளுகிறது. அந்த இரவில் பேரி அனாதையாகி நிற்கிறான். அவனை அந்த வழக்கை விசாரித்த டிடக்ட்டிவ் ஜோ வெஸ்ட் (Joe West @ Josaph West) அவரது மகள் ஐரிஸ்ஸுடன் (Iris West) பேரி ஆலனையும் தனது மகனாக பாவித்து வளர்க்கிறார்.

பதினைந்து வருடங்கள் கழித்து ஆலன் சென்ட்ரல் சிட்டி காவல்துறையில் ஃபாரன்சிக் சைன்டிஸ்ட்டாக CSI பிரிவில் பணிபுரிகிறான். ஐரிஸ் ஒரு ப்லாக் எழுத்தாளராக இருந்து கொண்டு வேலை தேடிக் கொண்டிருக்கிறாள்.

சென்ட்ரல் சிட்டியில் இருக்கும் S.T.A.R Lab-ல் ஒரு விபத்து ஏற்பட்டு (Partical Acceleration) அந்த நகரம் முழுக்க ரேடியேசன் தாக்குதல் நடக்கிறது. இதனால் பலர் உயிரிழந்து போகின்றனர். இந்த ரேடியேசன் தாக்குதலால் பலர் மெட்டா-மனிதர்களாக (Meta-Humans) மாறுகின்றனர். அதில் பேரி ஆலனும் அடக்கம். அவன் மீது ஒரு இடி இறங்குகிறது. ஆனால், இறக்கவில்லை. உயிர் இருக்கிறது. ஆனால் கோமாவில் இருக்கிறான். மருத்துவர்களால் இடி விழுந்தவர்களுக்கு வைத்தியம் செய்து காப்பாற்றும் வழிமுறைகளும் தெரிந்திருக்கவில்லை. அந்த சம்பவத்திற்கு காரணமான ஸ்டார் லேபின் உரிமையாளர் மற்றும் சைன்டிஸ்ட் ஹாரிசன் வெல்ஸ் (Harrison Wells) அவனைக் காப்பாற்றுவதாக வாக்களித்து தனது லேபிற்கு கொண்டு செல்கிறார். ஒன்பது மாதங்கள் கழித்து பேரி ஆலனுக்கு நினைவு திரும்புகிறது.

ஒருநாள் உலகத்தின் இயக்கம் ஸ்லோவானதாக அவனுக்கு தோன்றுகிறது. உதாரணத்திற்கு ஒரு காபி கப் தவறி கீழே விழுந்தால், அது தவறியதாக நாம் உணரும் அதே நேரத்தில் அந்த கப் தரையில் சிதறியிருக்கும். ஆனால், ஆலனுக்கு அது தவறிய நொடியிலிருந்து தரைக்குள் விழுந்து சிதரும் வரை ஸ்லோவாக மிமி பை மிமி ஆக நேரம் நகருகிறது. உண்மையில் உலகத்தின் இயக்கம் சரியாகத்தான் இருந்தது. அவனது உடலில்தான் சில மாற்றங்கள் நடந்திருக்கிறது. அதுதான் வேகம். இந்த வேகத்தைக் கொண்டு பகலில் பாரன்சிக் சைன்டிஸ்ட்டாகவும், இரவில் சூப்பர் ஹீரோவாகவும் வாழ்கிறான்.


இவனது வேகத்தை மையமாகக் கொண்டு ஸ்டார் லேப் – ஹாரிசன் வெல்ஸ் நடத்தும் அறிவியல் சோதனைகளும், ரேடியசனில் பாதிக்கப்பட்டு மாறிய மெட்டா மனிதர்களுக்கும் இடையே நடக்கும் போராட்டம்தான் மீதிக்கதை. அதுமட்டுமல்ல. ஃப்ளாஸின் வேகம் ஒவ்வொரு நிலையைத் தாண்டும் போது ஏற்படும் பின்விளைவுகளை ஒவ்வொரு எபிசோடிலும் டீட்டெய்லிங் பண்ணியிருக்கும் விதம் சூப்பர். அதெல்லாம்தான் ஃப்ளாஸின் சூப்பர் ஹீரோ abilities.

Supersonic Punch - வேகமா வந்து ஓங்கி ஒரு குத்து விடுவாரு பாருங்க

Time Remnant - போற போக்குல பேக் டைம் ட்ராவல் பண்ணி தன்னை மாதிரியே இன்னொரு உருவத்தை படைக்கிறவரு

Speed Vortex - கைய க்ளாக்வைஸ்/ ஆன்ட்டி க்ளாக் வைஸ்ல சுத்தி மேலயிருந்து விழுகுற எதையும் தாங்குவாரு. அதேபோல நவக்கிரகத்தை சுத்துறாப்ல நம்மள சுத்தினாருன்னா நாம பஸ்பமாயிருவோம்.

Lightning Throw - தன்னோட வேகத்தால மின்னலை உருவாக்கி அதை அப்டே கையில ட்ரான்ஸ்பர் பண்ணி எதிரிங்க மேல எறிஞ்சு கசமுசான்னு ஆகி அய்யோ அம்மான்னு ஆக்கிடுவாப்ல

Voice Change - அதேதான். கமல், ரஜினி, சிவாஜி, ஆர்னால்டு சுவார்சனேகர், வலம்புரி ஜான், சிவ கார்த்திகேயன், மயில்சாமி மாதிரியெல்லாம் பேசிக்காட்டுவாரு

Telepathic immunity - யூத் படத்துல திரும்பிடு திரும்பிடுன்னு விஜய்ணா சொல்றா மாதிரி சொன்னால்லாம் திரும்ப மாட்டாரு. ஆனா அவரு சொல்லனும்னு நெனச்சாலே நாம திரும்பிருவோம்

Speed Reading - நம்ம சிட்டி ரோபோ செய்யும் அதே ஸ்டைலுதான். ஆனா, புக்கோட அட்டைப்படத்தை லெப்ட் ரைட்டா டில்ட் பண்ணிட்டு படிச்சுட்டேன்னு கப்சா விடமாட்டாப்ல

Rapid Healing - வோல்வரின் மாதிரின்னு சொல்ல முடியாது. ரெண்டு மூனு மணி நேரத்துல குணமாயிடுவாப்ல

Speed Force Aura - வேகமா ஓடி ஓடி ஓடி எதிர்நீச்சல் சிவகார்த்திய தாண்டிப் போயி ஒரு தடுப்பு சுவரையே உருவாக்க முடியும்

Speed Transfer - அவரோட வேகத்தை தானமாவும் கொடுப்பாரு. கடனா கொடுத்துட்டு திருப்பி வாங்கிக்குவாரு

Travel into Dimension - ஒரே நேரத்துல சின்ன வீடு பெரிய வீடு ரெண்டையும் மெயின்டெய்ன் பண்ணி அக்கம்பக்கத்து வீடுகளுக்கும் போயிட்டு வரக்கூடியவரு.

Speed Speak - ஹ்ம்ம் அப்றம்… ஹ்ம்ம் அப்றம்னு மொக்க போட மாட்டாரு. ஆமா குயிக்கா பேசிட்டு, குயிக்கா போயிருவாரு

Time Travel – கையில வாட்சுக்கு பதிலா வால்கிளாக்கையே கட்டிக்கிட்டு அதுல ஊஞ்சலே ஆடுவாரு


இனி இந்த சீரிஸில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய மூன்று கதாபாத்திரங்களைப் பார்ப்போம்.


சிஸ்கோ ரமோன் – Cisco Ramon

இளம் சைன்டிஸ்ட். இந்த கதாபாத்திரம் அடிக்கும் லூட்டியும் காமெடி வசனங்களும் கதையை சுவாரஸ்யமாக்கும் முதன்மை காரணிகளில் ஒன்று.


இந்த கேரக்டரில் நடித்த நடிகர் Carlos Valdes. பார்க்க இந்தியன் மாதிரி இருந்தாலும், இவர் ஒரு கொலம்பியன். நல்ல சிங்கரும் கூட. 1001 Nights, Space Age, Night Off, Open Your Eyes இதெல்லாம் இவர் பாடிய பாடல்கள். நல்ல காமெடியான நடிகரா இருந்தும் இதுவரைக்கும் எந்த சினிமாவிலும் இன்னும் இவர் தலை காட்டாதது ஆச்சரியம். இதுவரை சிஸ்கோ ரமோன் கதாபாத்திரமாகவே அறியப்பட்டு வருகிறார்.


ஹாரிசன் வெல்ஸ் – Harrison Wells

46 எபிசோடுகளும் வேகமாக நகர்ந்து சென்றதில் முக்கியப் பங்கு இந்த கதாபாத்திரத்திற்கே. செம டெரர் அண்டர்ப்ளே நடிப்பு. இவரைப்பத்தி வேற என்ன சொன்னாலும் அது இனிமேல் இந்த சீரிஸை பார்க்கப் போகிறவர்களுக்கு செய்கிற துரோகமாகும். ஏனென்றால், இந்த கேரக்டரை ஜஸ்டிபை செய்வதில்தான் கதையே அடங்கியிருக்கிறது.


இந்த கேரக்டரில் நடித்த Tom Cavanagh இவரை ஏற்கனவே பல நாடகங்களில் பார்த்திருக்கலாம். நடிப்பில் ரகுவரனை எனக்கு அடிக்கடி ஞாபகப்படுத்தினார். Bang Bang you’re dead படத்தில் பிரதான கதாபாத்திரம் இவரே. அதுவும் ஒரு செம திரில்லர் படம்.


ஜோ வெஸ்ட் – Joe West

பேரி ஆலனின் வளர்ப்புத் தந்தை. நல்ல போலீஸ்காரர். இந்த இரண்டு சீசனிலும் நடிப்பில் மிகவும் என்னை வியக்க வைத்த ஒரு நடிகர்.



இந்த கேரக்டரில் நடித்தவர் Jesse.L.Martin. மனுசன் சிரிச்சா என்னடா இந்தாளு இப்படி சிரிக்கிறான் என்று வித்தியாசமாகத் தோன்றும். அப்படி ஒரு கிக்கிக்கி சிரிப்பு. நாகேஷ் சொன்ன தெய்வீகச் சிரிப்பு போலவே. அதேபோலவே சென்டிமென்ட் காட்சிகளிலும். அப்படி ஒரு அசத்தலான நடிப்பு.

பல நடிகர்கள் இந்த சீரிஸில் இருந்தாலும் நடிப்பில் என்னை கவர்ந்தது இந்த மூவர்தான். அதேபோல இந்த ஃப்ளாஸ் சூப்பர் ஹீரோவும்.

மொத்தம் 2 சீசன்கள் தலா 23 எபிசோடுகள். நான்கே நாட்களில் அந்த ஃப்ளாஸை விட வேகமாக சென்றது. ஒரு எபிசோட் முடிந்ததும் என் கைகள் அனிச்சையாக அடுத்த எபிசோடை கிளிக்கும் அளவுக்கு பரபரப்பாக இருந்தது. இப்போது எனக்கு சூப்பர் ஹீரோக்களில் மிகவும் பிடித்த ஒரு கதாபாத்திரமாக ஃப்ளாஸ் கேரக்ட்டர் மாறியது எனக்கே ஆச்சரியம் தான். இனி நாம் சில நாட்கள் இடைவெளியில் டிசியின் சூப்பர் ஹீரோக்களின் அறிமுகத்தைக் காண்போம்.


இன்னும் இரண்டு நாட்களில் இதன் மூன்றாவது சீசன் தொடங்க இருக்கிறது. அதனை தொடர்வதானால், இந்த இரண்டு சீசன்களையும் பார்த்துவிட்டு தொடரவும். மீண்டும் ஒரு சூப்பர் ஹீரோவின் அறிமுகத்துடன் சந்திப்போம். நன்றி.