Friday, February 3, 2017

22 Bullets (2010) - ஸ்பானிஷ்


22 Bullets (2010)


ஸ்பானிஷ்
Crime / Action

சார்லி மித்தாய், ஒரு ஓய்வு பெற்ற டான். பழைய வன்முறைகளை விட்டு நிம்மதியாக தனது குடும்பத்தோடு வாழ ஆரம்பிக்கிறார். ஆனால், பழைய எதிரிகள் என்றுமே எதிரிகள் தானே. ஒரு கார் பார்க்கிங்கில் அந்த எதிரிகளால் கொடூரமாக சுடப்படுகிறார். சரமாரியான அந்த துப்பாக்கிச் சூட்டில் அவரால் எதிர்த்து தாக்க முடிவதில்லை. உடல் முழுவதும் சல்லடையாக துப்பாக்கி குண்டுகள் துளைக்க... அந்த இடத்திலேயே சரிந்து விழுகிறார். ஆனால் இறக்கவில்லை. சார்லி அவ்வளவு லேசுப்பட்ட ஆளில்லை. அவரைக் கொல்வதென்பது அசாதாரணமான விசயம். 22 புல்லட்டுகளோடு உயிர் பிழைக்கிறார். ஆனால், ஒரு கை மட்டும் உணர்ச்சிகளற்ற மரக்கட்டையாய் செயலிழந்து விடுகிறது. அவரது பழைய எதிரிகள் எல்லோர் மீதும் சந்தேகம் எழுகிறது. ஆனால் எவரையும் அடையாளம் காண முடியவில்லை. சுட்டவர்கள் எட்டு பேரும் முகமூடி அணிந்திருந்தனர். பதிலாக அவர் எந்த பழிவாங்கும் நடவடிக்கைகளிலும் இறங்கவில்லை. அமைதியாகவே மருத்துவமனையில் இருக்கிறார். ஆனாலும் அவரை மீண்டும் பழைய வன்முறைகளை கையிலெடுக்க வைக்கும்படி ஒரு கொடூர சம்பவம் நடக்கிறது?

அது என்ன? அவரைச் சுட்ட அந்த எட்டு முகமூடிகள் யார்? அவரால் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடிந்ததா? அவரது குடும்பத்தோடு நிம்மதியாக இருக்க முடிந்ததா என்பதை முழு நீள ஆக்சன் திரில்லரான 22 புல்லட்ஸ் (ஸ்பானிஸ்) படத்தின் கதை பரபரவெனவும் டமால் டூமீலெனவும் விரிகிறது.


இந்தப்படத்தில் என்னைக் கவர்ந்த பாஸிட்டிவ் அம்சங்கள்:

இது ஒரு கேங்ஸ்டர் மூவி. அதுவும் டானின் வாழ்க்கையைப் பற்றி பேசுவதால் எல்லா காட்சியிலும் காட்பாதர் படத்தின் பாதிப்பை எதிர்பார்த்தேன். ஆனால், உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் இந்தக்கதை எடுக்கப்பட்டிருக்கிறது. ப்ரான்சில் இருந்த ஜாக்கி இம்பர்ட் என்கிற நிஜ டானின் கதையையே படமாக்கியிருக்கிறார்கள். ஆகவே அதற்கு இடம் கொடுக்காமல் படம் வேறு பாதையில் பயணிக்கிறது.

சார்லி மித்தாய் ஆக நடித்திருக்கும் Jean Reno வை நாம் ஏற்கனவே டாவின்சி கோட், காட்சில்லா போன்ற படங்களில் பார்த்திருக்கிறோம். இந்த முக்கிய கதாபாத்திரத்திற்கு ரத்தமும் சதையுமாக உயிர் கொடுத்து வாழ்ந்திருக்கிறார்.

அடுத்து என்ன நடக்குமோ என்கிற பதைபதைப்பும், பரபர ஆக்சன் சேஸிங்குகளும் நல்ல விருந்து.

எதிர்பாராமல் பிரமாதமாக வந்து அசத்திய இரண்டே இரண்டு ட்விஸ்ட்டுகள்.

குழப்பாத திரைக்கதை.

காட்பாதர் படத்தைத் தாண்டியும் இன்னும் சொல்ல வேண்டிய டான் கதைகள் ஏராளம். அதில் ஒரு பங்கினை நிஜ சம்பவங்களைக் கொண்டு இந்தப் படத்தில் கொண்டு வர முயற்சித்திருக்கிறார்கள்.


நெகட்டிவ் அம்சங்கள்:

என்னதான் உண்மைச் சம்பவங்கள் என்றாலும் ஹாஸ்பிட்டல் இடம் மாற்றும் காட்சிகள் மட்டும் எல்லா வயதான டான் படங்களிலும் இடம் பெறுகிறது. சமீபத்தில் அச்சம் என்பது மடமையடாவிலும் பல வருடங்கள் முன்பே அக்னி நட்சத்திரத்திலும் நாம் பார்த்திருக்கிறோம். இவை தவிர வேறு எந்த நெருடலும் இல்லாத அண்டர்ரேட்டட் கிரைம் ஆக்சன் திரில்லர் இந்த 22 புல்லட்ஸ்.

கண்டிப்பாக பார்க்கலாம்.

No comments:

Post a Comment