Friday, February 3, 2017

Fargo (1996)



Fargo (1996)


Crime / Thriller

ஜெர்ரி லுண்டெகார்ட், தனது மாமனார் நடத்தும், செகண்ட் ஹேண்ட் கார்களை வாங்கி விற்கும் கம்பெனியில் எக்ஸிகியூட்டிவ் சேல்ஸ் மேனேஜராக இருக்கிறான். அவனுக்கு பர்சனலாக கொஞ்சம் பணப் பிரச்சினை. அதற்கு நிறைய பணம் தேவைப்படுகிறது. நேரடியாக பல வியாபாரத் திட்டங்களைச் சொல்லி பணம் கேட்டு முயற்சிக்கிறான். ஆனால், அவனது மாமனார் சரியான உலோபி. கறார் பேர்வழி. சாமானியமாக பணம் பேராது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவன், குறுக்கு வழியில் ஒரு திட்டம் தீட்டுகிறான். தன் மனைவியைக் கடத்தி ஒளித்து வைத்துக் கொண்டு மாமனாரிடம் பணம் பிடுங்கலாம் என்று இரண்டு பேரை ஏற்பாடு செய்கிறான். கார்ல், கிரிம்.

கார்ல் ஒரு லொட லொடா ஆசாமி. சதா எதையாவது பேசிக் கொண்டும் உளறிக் கொண்டுமே திரிபவன். கிரிம் அதற்கு நேர்மாறானவன். பேசுவது குறைவு. ஒரு நாளைக்கு எண்ணி அரை வார்த்தை பேசினாலே அதிகம். மேலும் பார்த்தவுடன் கணிக்க முடியாத முகத் தோற்றம் கொண்ட முரட்டு ஆசாமி.

இந்த எதிரும் புதிருமான இரண்டு பேரைக் கொண்டு ஜெர்ரி நடத்திய கடத்தல் நாடகம் பலனளித்ததா? ஜெர்ரியின் மாமனார் பணம் கொடுக்க சம்மதித்தாரா? ஜெர்ரியின் கடன் பிரச்சினை முடிவுக்கு வந்ததா என்பதை குளுகுளு ஒளிப்பதிவுடனும், பல எதிர்பார்க்க முடியாத திடீர் திருப்பங்களுடனும் ஒன்றரை மணி நேர திரில்லராக ஓடி முடிகிறது இந்த Fargo.

ப்பூ இவ்வளவுதானா? இதில் என்ன பெரிய சுவாரஸ்யம் இருக்கப் போகிறது என்று நினைத்தால் மன்னிக்கவும், நீங்கள் ஒரு சுவாரஸ்யம் மிகுந்த திரில்லரை மிஸ் செய்யப் போகிறீர்கள். ஆம். இந்தப்படம் அப்படிப்பட்ட பல சுவாரஸ்யங்களை உள்ளடக்கியது. ஏனென்றால், ஜெர்ரி நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றல்ல. வேறு பல சம்பவங்கள். அதனால், கதை என்னவாகிறது? அதனால், கதையில் எத்தனை பேர் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை படத்தைப் பார்த்தே தெரிந்து கொள்ளுங்கள்.

இந்தப்படத்தில் நெகட்டிவ் பாஸிட்டிவ் விசயங்களெல்லாம் நான் எழுதப் போவதில்லை. மாறாக சில சுவாரஸ்யமான தகவல்களை மட்டும் (நெட்டில் கிடைத்ததுதான்) எழுதுகிறேன்.

இதில் மார்ஜி என்றொரு லேடி போலீஸ் கேரக்ட்டர் உண்டு. கற்பமான பெண் போலீஸ் டிடெக்ட்டிவ். மவுனகுரு படத்தில் உமா ரியாஸ் செய்த கேரக்ட்டரின் இன்ஸ்பிரேசன் இதுவாக இருக்கலாமென்றே தோன்றியது. படத்தில் மார்ஜிக்கு நார்ம் என்றொரு கணவனும் உண்டு. உண்மையில் இவர்களுக்கென ஒரு back story உருவாக்கப்பட்டிருந்தது. நார்மும் மார்ஜியும் ஒரே ஸ்டேசனில் வேலை பார்க்கும் போலீஸ் அதிகாரிகள். இருவருக்கும் காதல் மலர்ந்து திருமணமான பின் இருவரில் ஒருவர் மட்டும் போலீஸ் வேலையில் இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்த போது நார்ம் போலீஸ் வேலையை ராஜினாமா செய்து ஓவியராக வாழ்வதாகவும், மார்ஜி மட்டும் தனது போலீஸ் வேலையைத் தொடர்வதாகவும் எழுதப்பட்டது. பின்னர் அது காட்சிப்படுத்தப் படவில்லை. மார்ஜியாக நடித்த Frances McDormand ஐ இதன் இயக்குநர் ஜோயல் கோயன் பின்னர் மணந்து கொண்டது தனி வரலாறு.

ஜெர்ரியாக நடித்த William.H.Macy, இந்தக் கதையை படித்து அந்தக் கதையில் ஜெர்ரி கேரக்ட்டரில் தான் நடித்தே ஆக வேண்டும் என்று இயக்குநர்களை (ஆம் இரண்டு பேர்) கெஞ்சி சம்மதிக்க வைத்தார். படப்பிடிப்பு தொடங்கிய சமயத்தில் சொல்லாமல் கொள்ளாமல், நியூயார்க்கிற்கு பறந்து விட்டார். அங்கிருந்து இயக்குநர்களுக்கு போன் செய்து “நான் இல்லாமல் வேறு யாரையாவது ஜெர்ரி கேரக்ட்டரில் நடிக்க வைத்து படத்தை நீங்கள் கெடுத்து நாசமாக்கினால், நேரில் வந்து உங்கள் நாயை சுட்டுக் கொன்று விடுவேன்” என்று செல்லமாக மிரட்டியதாகவும், பின்னர் நேரில் வந்து ச்சும்மா லுல்லுல்லாயிக்கி என்று தமாஸ் செய்ததாகவும் வரலாறு உண்டு.

‘இயக்குநர்கள்’ என்று குறிப்பிட்டேனல்லவா? ஆம். இந்தப்படத்தை இயக்கிய இரட்டையர் Joel Coen, Ethan Coen. கோயன் பிரதர்ஸ் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். Blood Simple (1984), No country for Old Men (2007) படத்தை இயக்கியவர்கள். இவர்களைப் பற்றி ஒரு தனிப் பதிவே எழுதலாம். அதைப் பின்னர் ஒரு சமயத்தில் பார்த்துக் கொள்வோம்.

முதலில் இந்தப் படத்திற்கு Brainerd என்றுதான் பெயர் வைக்கப்பட்டிருந்தது. பின்னர் அதைவிட Fargo என்பது பொறுத்தமாக இருக்கும் என்றெண்ணி கோயன் சகோதரர்களால் மாற்றம் செய்யப்பட்டது. Fargo என்பது வடக்கு டகோட்டாவில் உள்ள ஒரு பெரிய நகரத்தின் பெயர். கதையின் முக்கியமான சம்பவங்கள் அங்கே நடக்கப்படுவதாக எழுதப்பட்டிருந்ததால் அவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மற்றபடி ப்ரெய்னெர்டில் தான் முக்கால்வாசி காட்சிகள் படமாக்கப்பட்டது. இதே பெயரில் ஒரு தொலைக்காட்சி தொடர் வருகிறது. அது இதே போன்ற சம்பவங்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு ஒளிபரப்பாகிறது. இந்தப் படத்தை விட அது செமையாக இருக்கும்.

இந்தப்படத்தில் நடித்த நடிகர்களுக்கு, கதை நடக்கும் Minneapolis ஏரியாவின் வட்டார பாஷையை பழக்குவதற்காக தனிப்பட்ட பயிற்சி வழங்கப்பட்டது. ஏனென்றால், அந்த ஊர் ஆங்கில உச்சரிப்பு சற்று வித்தியாசமானது.

கார்ல் கேரக்ட்டர் Reservior Dogs, Pulp Fiction- இல் நடித்த Steve Buscemi – க்காவே எழுதப்பட்டது. அந்த லொட லொடா கிட்னாப்பர். படம் பார்த்து முடித்த பின்பும் மனதில் நிற்கும் ஒரு கேரக்ட்டர். கிரிம்மிற்கு மொத்தமே 12 வரிகள் தான் வசனம். ஆனால் கார்லுக்கு 15 பக்கங்கள் வசனம்.

முக்கியமான ஒரு ஸ்கூப் என்னவென்றால், இந்தப்படத்தை விளம்பரப்படுத்திய போது உண்மையாக ப்ரெய்னெர்டில் நடந்த சம்பவங்களை படமாக்கப்பட்டது என்று கூறப்பட்டது. படத்தின் ஆரம்பக் காட்சியிலும் அதற்கான குறிப்புகள் ஸ்லைடாக காட்டப்பட்டிருந்தது. ஆனால் அந்த மாதிரி எந்த சம்பவங்களும் அங்கே நடக்கவே இல்லை என்றும் ஒரு செய்தி உண்டு.

படத்தில் ஒரு பின்னணி இசை ஆங்காங்கே தீம் போல ஒலிக்கும். அது படிக்காதவன் (ரஜினி சிவாஜி நடித்தது) படத்தின் சோக இசை போல எனக்குத் தோன்றியது. நீங்களும் பார்த்து விட்டு அந்த பீல் இருந்தால் தெரிவிக்கவும். கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். 

(குழந்தைகள் தவிர்க்க. வன்முறை மற்றும் அடல்ட் கன்டென்ட் நிறைந்தது)

நன்னி
நமஸ்கார்

No comments:

Post a Comment