Thursday, April 16, 2020

A Day (2017) - கொரியன்


A Day (2017)

Korean

Thriller / Mystery


இது ஒரு டைம் லூப் கான்செப்ட் கொண்ட படம். Edge of Tomorrow, Time Crimes, Triangle போல. ஆனால், கொரியன் படங்களில் வரும் நல்ல கதையம்சமுள்ள ஒரு படம்.

கதையின் நாயகன் ஒரு டாக்டர். தனது மகளின் பிறந்தநாளைக் கொண்டாட தனது பணியை முடித்துக் கொண்டு விமானத்தில் வந்திறங்குகிறான். பணிப்பெண் அவனிடம் ஆட்டோகிராப் கேட்கிறாள். போட்டுத் தருகிறான். ஏர்போர்ட்டில் ஒரு சிறுவன் மூச்சு விட முடியாமல் சிரமப்பட, அவனைக் காப்பாற்றுகிறான். காரில் டோல்கேட்டில் சில்லறை தரும் போது தவறுகிறது. ஒரு சிக்னலில் மற்றொரு கார் சில நொடிகளுக்கு முன்னர் விபத்துக்குள்ளானதை கவனிக்கிறான். ஏர்போர்ட்டில் சிறுவனைக் காப்பாற்றியதைப் போல அந்த விபத்தில் உயிருக்கு போராடுபவர்களையும் காப்பாற்ற நினைக்கிறான். ஆனால், தனது மகள் ஜங் யூன் தனக்காக ஆவளுடன் காத்திருந்து தாமதமானால் ஏமாற்றமடைவாளென்று அவளுக்கு போன் செய்து சற்று நேரத்தில் வந்து விடுகிறேனென்று சமாதானப்படுத்தி விட்டு அந்த காரில் விபத்துக்குள்ளானவர்களுக்கு உதவுகிறான். காரின் டிரைவர் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறான். பின் சீட்டிலிருந்த ஒரு பெண் பயணி ஏற்கனவே இறந்து போயிருந்தாள்.

விபத்துப்பகுதியை இரண்டு ஆம்புலன்ஸுகள் சமீபிக்கின்றன. அவர்களிடம் டிரைவருடைய உடல் நிலையைப் பற்றி தெரிவித்து விட்டு, அந்தக் கார் மோதியிருந்த இன்னொருவர் சிக்னலுக்கு எதிர்புறம் தரையில் கிடக்க, அவர்களையும் காப்பாற்றி விட்டுச் செல்லலாமென்று எண்ணி, மீண்டும், ஜங் யூனுக்கு கால் செய்து தனது தாமதத்தை தெரியப்படுத்த, மறுமுனையில் ஒரு ஆண்குரல்.

ஸ்டாப்.

இனி இந்தப் படத்தைப் பற்றி விளக்குவதற்கோ எழுதுவதற்கோ எதுவுமில்லை. டைம் டிராவல், டைம் லூப் பட விரும்பிகளுக்கு இது ஒரு அருமையான மிஸ்டரி திரில்லர் படம். மிஸ் பண்ணாம கட்டாயம் பாருங்க.

No comments:

Post a Comment