Thursday, April 16, 2020

Forgotten (2017) - கொரியன்


Forgotten (2017)

Korean

Thriller / Mystery

ஜின்-சியூக்கின் மூத்த சகோதரன் யூ-சியூக்கை யாரும் அவ்வளவு எளிதில் வெறுத்து ஒதுக்க முடியாது. அவ்வளவு நல்ல படிப்பாளி, எந்த போட்டிக்கு சென்றாலும் முதல் பரிசு வாங்காமல் ஓய மாட்டான். வெற்றியின் விளிம்பு வரை சிரித்தும் ரசித்தும் கொண்டே போராடி, அதை பார்ப்பவர்களுக்கு அவன் சாதாரணமாகவே ஜெயிக்கப் பிறந்தவன் என்பதாக எண்ண வைத்து வெற்றிக் கோப்பைகளை முத்தமிடுபவன். இன்னும் சொல்லப் போனால் எல்லா கலைகளிலும் வல்லுநன். எலெக்ட்ரீசியன், ப்ளம்பர் வேலைகளிலிருந்து, பேராசிரியர் வேலை வரை எதோ பிறக்கும் போதே தெரிந்து கொண்டு பிறந்தவன் போல துல்லியமாக செய்து அசத்துபவன். இத்தனையும் 23 வயதில். Smart and Bright Boy.

ஜின்-சியூக், தன் சகோதரன் போல இல்லையென்றாலும் அவனும் நல்லவன் தான். அண்ணனை விட இரண்டு படியும் வயதும் கீழ் என்றாலும் யூ-சியூக் மீது அவ்வளவு இஷ்டம் இவனுக்கு.. அவனது ஆக்ட்டிவிட்டீசை பார்த்து ரசித்துக் கொண்டே இருப்பான். அதுதான் அவனது பொழுதுபோக்கு.

ஒரு விபத்தில் யூ-சியூக்கின் கால் ஊனமாகி விடுகிறது. ஆனாலும் அவன் அவன் தான். முன்பு நடந்து ஓடியாடி செய்து அசத்தியவைகளையெல்லாம், இப்போது நொண்டிக் கொண்டே செய்து அசத்திக் கொண்டிருக்கிறானென்று, ஜின் தன் அண்ணனை எண்ணி பெருமைப் பட்டுக் கொண்டிருக்கிறான்.

ஜின்னின் குடும்பம், வேறு ஊரில் உள்ள ஒரு வீட்டுக்கு குடி பெயர்கிறார்கள். அங்கிருந்துதான் கதையும் ஆரம்பிக்கிறது. அந்த வீடு அருமையான தோற்றத்துடன் இருக்கிறதென்றாலும், ஜின்னிற்கு ஏற்கனவே அங்கே வந்த உணர்வு. தனது 21 வயதில் இந்த ஊருக்கு வருவது இதுவே முதல் முறை என்பதையும் நினைவில் கொள்க. அந்த வீட்டின் மாடியில் சகோதரர்கள் தங்கும் அறைக்கு எதிராக ஒரு அறை இருக்கிறது. அதில் அந்த வீட்டின் சொந்தக்காரரது உடமைகளெல்லாம் இட்டு வைத்திருப்பதால், அந்த அறையை மட்டும் இவர்கள் உபயோகிப்பதில்லை. அடிக்கடி அந்த அறையில் யாரோ நடக்கும் சப்தமும், உருட்டும் ஓசையும் அடிக்கடி ஜின்னிற்கு மட்டும் கேட்கிறது. மாறாக யூ-சியூக்கிறகோ, அவர்களது பெற்றோர்களுக்கோ கேட்பதில்லை.

ஒருநாள், தனது கண் முன்னேயே, தன் பாசமிகு சகோதரன் யூ-சியூக்கை நான்கு பேர் கொண்ட ஒரு ரவுடிக் கும்பல், கடத்திக் கொண்டு செல்கிறது. ஜின்னால் அவனைக் காப்பாற்ற முடியவில்லை என்றாலும், அந்த அடை மழையிலும், அந்த வேனின் நம்பர் பிளேட்டை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு, போலிஸிடம் தெரிவிக்கிறான். ஆனால், போலிஸோ அவன் சொன்னமாதிரி கருப்பு நிற வேன்கள் அந்த நாட்டிலேயே கிடையாது. அப்படி ஒரு நிறத்தில் வண்டிகளை அந்த நாட்டில் தயாரிப்பதே இல்லையென்று கூறியதோடு, மழையில் தூரத்திலிருந்து பார்த்ததால் அந்த நம்பர் பிளேட் தவறானதாகவும் இருக்கலாமென்றும் கூறுகின்றனர்.

ஜின்னிற்கு சில பிரச்சினைகள் உண்டு. தினசரி வரும் துர்சொப்பனங்கள். அதற்காக அவன் தினசரி மருந்துகளை உட்கொள்வதும் வழக்கம். இந்த சம்பவத்தால் அவன் மிகவும் பாதிக்கப் படுகிறான். அண்ணனுக்காக ஏங்குகிறான். அவன் கடத்தப்பட்டு பத்தொன்பதாவது நாள் யூ-சியூக் வீடு திரும்புகிறான். கடத்தலைப் பற்றி அவனிடம் போலிஸ் விசாரணை மேற்கொள்கிறது. ஆனால், யூ-சியூக்கிற்கு அந்த பத்தொன்பது நாளாக என்ன நடந்தது என்பதே ஞாபகத்திலில்லை.

ஆனால், அன்றிலிருந்து ஜின்னின் வாழ்க்கை மாற்றமடைகிறது. அதுவும் அவன் எந்த வகையிலும் விரும்பத்தகாதவாரு. நிற்க.

இதற்கு மேல் ஜின்னிற்கு நடக்கப் போகும் எதையும் எழுத இயலாது. அதை படத்தில் பார்த்து தெரிந்து கொள்க. இதுவும் ஒரு வகையில் டைம் டிராவல் வகையைச் சேர்ந்த படம்தான். ஆனாலும் படத்தில் ரசிக்க வைக்கும் சுவாரஸ்யங்களும், திக் திக் திருப்பங்களும் ஏராளம். தாராளமாக அனைவரும் பார்த்து ரசிக்கும்படியான ஒரு படம். கண்டிப்பா மிஸ் பண்ணாதிங்க. மீண்டும் சந்திப்போம்.

வழக்கம் போல லின்க் கேட்பவர்களுக்கு, இந்தப்படம் நெட்பிளிக்ஸில் உள்ளது.

No comments:

Post a Comment