Thursday, April 23, 2020

ஆதலினால் காதல் செய்வீர் - சுஜாதா



ஆதலினால் காதல் செய்வீர்

- சுஜாதா

ஜோமோ, அரிஸ், கிட்டா, பார்ஸாரதி அலைஸ் மாமா. இந்த நால்வரும் ஒரு பத்திரிக்கையில் பிரசுரமான காமெடி துணுக்கினால் ஜோமோவுடன் இணைந்த நண்பர்கள். நால்வரும் ஒரே வீட்டில் வசிக்குமளவு அவர்களது நட்பு, நெருக்கம். இந்த நால்வரில் பார்ஸாரதி (பார்த்தஸாரதி அல்ல) மட்டும் திருமணமானவன். அதனாலேயே மற்ற மூவருக்கும் செல்லமாக மாமா! அவன் மனைவி வேறு ஒரு கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியை. இவனுக்கு சென்னையில் வேலை. விடுமுறையில் மனைவியைப் பார்க்கச் சென்று திரும்பும் போது மட்டும் தேன் குடித்த நரியாட்டம் வருவான்.

ஜோலார்பேட்டை மோகனரங்கம் சுருக்கமாக ஜோமோ. விளம்பர நிறுவனத்தில் வேலையிலிருக்கிறான். அங்கேதான் கண்டான் அபி அல்லது அபிக்குட்டி அல்லது அபிலாஷாவை. அவன் முதன் முதலில் கண்டது ஆடையில்லாமல். கடவுளே கடவுளே ரீதியில். அதுவும் அவனது அலுவலகத்தின் ஸ்டூடியோவிலிருக்கும் ஒரு தட்டு முட்டுச் சாமான்களிருக்கும் அறையில். கண்டதும் காதல். ஆனால், அவள் வீட்டிற்குச் சென்று சம்பந்தம் பேசிய போது மட்டும் சரியாகக் காணாமல் அவளது வீட்டு வேலைக்காரியை சம்பந்தம் செய்து கொள்ள சம்மதிக்கிறான். காரணம் பெயர்க்குழப்பம். அவளது பெயர் அபிராமி.


அரிஸ். கணிதப் பேராசிரியன். ஒரு புத்தகம் படிக்க நூலகத்தையே வாங்க வேண்டுமா என்று லட்சியத்தோடு வாழ்பவன். அவனை ஹவுஸ் ஓனரம்மாவின் மகள் லின்னி (வயசு பதினெட்டாகிறதென்று நினைக்கிறேன்), கணக்கு டியூசன் படிக்கிறேன் பேர்வழி என்று கணக்குப் பண்ணுகிறாள். அரிஸ் கணக்கு மட்டுமா கற்றுத் தந்தான். உலகத்திலுள்ள எல்லா ‘பி’ கிரேட் நாவலையும் வாசிக்கக் கொடுத்தான். அடல்ஸ் ஒன்லி கவிதை வாசித்தான். அவள் பின்னால் நின்று அணைத்துக் கொண்டு கிதார் நரம்புகளை மீட்டினான். அதில் அவள் வயதுக்குண்டான நரம்பும் சேர்த்து மீட்டியது. பாவம் அரிஸ். அவனைப் பொறுத்தவரை காதல் கத்திரிக்காய், பெண் சகவாசமெல்லாம் சுத்த ஹம்பக். அவன் சகஜமாகத்தான் பழகினான். ஆனால் வந்தது வினை.

கிட்டா. கிருஷ்ணமூர்த்தியின் சுருக்கம். மெடிக்கல் சேல்ஸ் ரெப். மாதத்தில் பாதி நாள் சுற்றுப் பயணத்திலேயே இருப்பான். அப்படி ஒரு முறை மங்களூர் போய் வந்ததில் கான்ஸ்டபிள் ‘கத்தரிக்கோல்’ கஸ்தூரியுடன் காதல். அதுவும் இவன், ஒரு பிராத்தல் கேஸ் ரைடில் அவளிடம் மாட்டிக் கொண்டபோது.

மேற்கண்ட அத்தனை கதாபாத்திரங்களும் மேல் மேற்சொன்ன ஒரே வீட்டில் வந்து பாத்திரங்களை உருட்டினால் எப்படி இருக்கும்?

அப்படித்தான் இருந்தது இந்த “ஆதலினால் காதல் செய்வீர்” நாவலை வாசிக்கும் போது. செம காமெடி நாவல். எழுதியவர், சாட்சாத் சுஜாதா அவர்களே தான். அவர் எத்தனையோ கட்டுரைகள், நாவல்கள் மற்றும் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். அறிவியல் கதைகளில் பின்னி எடுத்திருப்பார் என்பது நான் சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்றில்லை. அவர் காமெடி ஜானரில் எழுதியதாக நான் இதுவரை கண்டதுமில்லை. கேட்டதுமில்லை. பாலக்காடு டு வேலூர் அப் அண்ட் டவுன் இந்த நாவலை ரயிலிலும் பேருந்திலும் வாசித்துக் கொண்டிருந்த போது என்னைப் பார்த்தவர்கள் ‘யாரிவன் சரியான லூஸா இருப்பானோ?’ என்று நினைக்குமளவு நான் பத்திக்கொரு முறை தனியாக விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தேன்.

இதற்கு மேல் இந்தக் கதையை நான் சொன்னால் சில சிரிப்பு ட்விஸ்ட்டுகளின் சுவாரஸியம் குறையலாம் என்பதால், இம்மட்டும் நிறுத்திக் கொள்கிறேன்.


No comments:

Post a Comment