Kingsman: The Secret Service (2014)
Action / Comedy
பத்து பேர், ஒற்றர்களாக (SPY) பயிற்சியெடுக்க ஒரே அறையில் தங்க வைத்திருக்கிறார்கள். திடீரென்று அந்த அறைக்குள் தண்ணீர் நுழைந்து அதன் நீர் மட்டம் அந்த அறையின் சீலிங் வரை பரவுகிறது. உயிர் தப்பித்தாக வேண்டும். பாதி உறக்கத்தில் திடுக்கிட்டு விழித்து குழப்பத்தில் என்ன செய்கிறோமென்று புரிவதற்குள் மூழ்கி விடுகிறார்கள்.
கதவு?
ம்ஹும் திறக்க மாட்டேன் என்கிறது. அந்த அறையிலிருக்கும் ஷவரைப் பிடுங்கி டாய்லெட் சின்கிற்குள் நுழைத்து தற்காலிகமாக ஆக்ஸிஜன் எடுத்து சுவாசிக்க முயற்சிக்கின்றனர். ஆனால் அது அதிக நேரம் தாங்காது. வெளியேறியே ஆக வேண்டும். அந்த பத்தில் ஒருவன் மட்டும், தப்பிக்கிறான். எப்படி?
மற்றவர்களின் கதி என்னவாகியிருக்கும்?
அதாவது தூக்கத்திலிருக்கும் போது உயிருக்கு ஆபத்து வந்தாலும் ஒற்றன், தன்னை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக நடக்கும் முதற்கட்ட சோதனை அது.
அடுத்த முக்கியமான சோதனை ஒன்றில், பாராசூட் சகிதம் விமானத்திலிருந்து இறக்கிவிடப்படுகிறார்கள். வானில் சுதந்திரமாக மிதந்து கொண்டும் விளையாடிக் கொண்டும் இருக்கும் போது, அவசர அறிவிப்பு ஒன்று வருகிறது. பத்துப் பேரில் ஒரு சிலரின் பாராசூட் மட்டும் வேலை செய்யவில்லை. முடிந்தால் உயிர் பிழைத்துக் கொள்ளவும் என்று. அந்த சோதனையில் தன்னுடைய பாராசூட் வேலை செய்தாலும் செய்யா விட்டாலும், மற்றவர்களையும் காப்பாற்றும் தன்மை இருக்கிறதா என்று நடத்தப் பட்ட சோதனை அது.
இதில் எத்தனை பேர் உயிர் பிழைக்க வாய்ப்புள்ளது?
இப்படி அடுக்கடுக்கான சோதனைகளில் தோல்வியடைபவர்கள் வெளியேற்றப் படுகிறார்கள். அல்லது இறந்து போகிறார்கள். கடைசியில் எஞ்சியிருப்பது மூன்றே பேர். அவர்களும் தங்களது முதல் உளவுப் பணியில் மயக்கமடைந்து எதிரிகளிடம் மாட்டிக் கொள்கின்றனர். விழித்துப் பார்க்கையில் பாதாள ரயில் தண்டவாளத்தில் கட்டி வைக்கப்பட்டிருப்பது புரிகிறது. உடன் இருந்தவர்கள் கொல்லப்பட்டு விட்டனரென்றும், தங்களது உளவு நிறுவனத்தைக் காட்டிக் கொடுத்தால்தான் உயிர் பிழைக்க முடியுமென்றும் மிரட்டப் படுகிறார்கள்.
இங்கேதான் ஒரு ட்விஸ்ட்...
அதுவும் அந்த உளவு நிறுவனத்தின் முக்கியமான சோதனைகளில் ஒன்று. உயிருக்கு பயந்து ரகசியங்களை உளறி விடக்கூடாது என்பதற்காக ஆட்களை வடிகட்டும் முறைகளில் ஒன்று அது.
கடைசி சோதனை.
பயிற்சிக் காலத்தின் ஆரம்பத்தில் ஆளுக்கு ஒரு உயர் ரக நாய் தரப்பட்டிருக்கும். அதற்கு ட்ரெய்னிங் கொடுத்து வளர்க்க வேண்டும். பயிற்சி நடந்த சில மாதங்களில் அந்த நாய்கள், அவர்களின் நண்பனாக மாறியிருக்கும். அல்லவா? 'அவ்வளவுதான். உங்களது சோதனைக் காலம் முடிந்து விட்டது. இந்தா துப்பாக்கி. இனி அந்த நாய் உனக்கு தேவையில்லை. அதை சுட்டு கொன்று விடு' என்று உத்தரவிடப்படுகிறது. சுட்டே ஆக வேண்டும். இல்லையென்றால் வேலை காலி. அந்த நாய் பரிதாபமாய் தனது எஜமானனைப் பார்க்கும். உயிர் நண்பனை சுடப் போகிறாயா என்பது போல.
இங்கேயும் ஒரு ட்விஸ்ட். சிக்கலான சூழ்நிலையில் ஒற்றனாகப் பட்டவன் எந்த மாதிரியான வாய்ப்புக்களை பயன்படுத்துகிறான் என்று கண்டறிய நடத்துப்படும் சோதனையின் கடைசிக்கட்டம் அது.
நான் இதுவரை வாட்ச்சிங் மூவி ஸ்டேட்டஸ் போட்டதோடு சரி. எந்தப் படங்களைப் பற்றியும் வாய் திறப்பதில்லை. இந்தப் படத்தை பார்க்கும் போதே இதன் கதையை யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று தோன்றியது. ஆகவே இந்தப் பதிவு. இல்லை. மேற்கூறியவைகள் கதை அல்ல. படத்தில் வரும் சில காட்சிகள். அவ்வளவே!
எக்ஸ் மென் : ஃபர்ஸ்ட் க்ளாஸ் படத்தின் இயக்குனர் என்பதால்தான் பார்க்கும் ஆவல் ஏற்பட்டது. அதிலிருந்த ரிச்னஸ் இதிலும் இருக்கிறது. நண்பர்கள் இந்தப் படத்தை தவர விட வேண்டாம் என்று பரிந்துரைக்கிறேன். தைரியமாக குடும்பத்தோடு பார்க்கலாம். டாட்
அப்புறம் ஒரு முக்கியமான விசயம். இந்த சோதனையெல்லாம் முடிஞ்சு கடைசியில நம்ம ஹீரோ மட்டும் எல்லாத்துலயும் பாஸாகிடுவாருன்னு தப்புக் கணக்கு போட்டுடாதிங்க. அவரு பெயிலு. அந்த ஊர்லயெல்லாம் சமச்சீர் கல்வித் திட்டம் இல்ல போல. ஆங் 

No comments:
Post a Comment