Wednesday, April 22, 2020

Door Lock (2018) - கொரியன்




Door Lock (2018)
கொரியன்
Drama / Thriller

க்யூங் ச்சோ மின், ஒரு வங்கியில் பணி புரியும் எக்ஸிகியூட்டிவ். தனியாக ஒரு ப்ளாட்டில் வசித்து வருகிறாள். அவளுக்குத் தன்னை யாரோ எப்பொழுதும் கண்காணித்துக் கொண்டே இருப்பதைப் போலவும், எப்போதும் தன்னுடன் யாரோ இருப்பதைப் போலவும் ஒரு இன்செக்யூரான உணர்வு இருந்து கொண்டே இருக்கிறது.

இரவு பணி முடிந்து ப்ளாட்டிற்கு வரும்போது தனியாகத்தான் லிப்ட்டில் வருவாள். ஆனால், அவளோடு யாரோ உடன் பயணிப்பதைப் போலவே நினைத்துக் கொண்டும் பயந்து கொண்டும் இருக்கிறாள்.

அவளது வீட்டின் கதவில் உள்ளது ஒரு நம்பர் லாக் பூட்டு. கிட்டத்தட்ட Flip Open cordless phone model போல இருக்கும். அதை ஒவ்வொரு முறை திறக்கும் போதும் ஏற்கனவே யாரோ திறக்க முயற்சித்திருப்பதைப் போலவே அவளுக்குத் தோன்றும். அந்த பில்டிங் ஜானிட்டரை அழைத்துக் கேட்ட போதும் அவன் யாராவது குடித்து விட்டு இந்த மாதிரித்தான் எல்லா வீட்டுப் பூட்டையும் தவறுதலாகத் திறக்க முயற்சித்துவிட்டு சென்று விடுவார்கள். பயப்பட ஒன்றுமில்லை என்று கூறுகிறான்.

ஒருநாள் அவள் வீட்டின் உள்ளே நுழைந்து கதவைச் சாத்திய சில நிமிடங்களில் யாரோ கதவை பலமாகத் திறக்க முயற்சி செய்கிறார்கள். யார் என்கிற இவளது கேள்விக்கும் கதவின் மறுபுறம் இருந்து பதிலெதுவும் வரவில்லை. கதவின் Peep hole வழியாக பார்த்தபோது அங்கே எவரும் இருப்பதாகத் தெரியவில்லை. நடுக்கத்துடனே கதவைத் திறந்து பார்த்தால் அந்தக் காரிடாரிலேயே எவரும் இருக்கவில்லை. ஆனால், இவளது கதவின் முன்பு ஒரு சிகரெட் துண்டு கிடக்கிறது. அதை எடுத்துக் கொண்டு போலிஸிடம் புகார் செய்கிறாள். ஆனால், சாட்சியங்களோ, சேதமோ, களவோ எதுவுமில்லாததால் அவர்கள் கம்ப்ளைண்ட் எடுக்க மறுத்து விடுகிறார்கள்.

இது ஒருமுறையல்ல. பலமுறை.

இவளது வங்கியில், பணமிட வரும் வாடிக்கையாளர்களிடம் குழைவாகப் பேசி இன்ஸ்யூரன்ஸ் விற்க வேண்டும். அதுதான் அவளது வேலை. அப்படி ஒருநாள் ஒரு வாடிக்கையாளரிடம் பேசுகையில் இவள் தன்னை Flirt செய்வதாக எண்ணி அவன் காபி ஷாப்பிற்கு அழைத்து, இவள் வரமாட்டேன் என்று சொல்லி பெரிய சீனாகி விடுகிறது. அதன் பிறகு அவன் இவளை வெளிப்படையாகவே பின்தொடர ஆரம்பித்து அடிக்கடி இவளிடம் வந்து கையைப் பிடித்து இழுத்து தகாத வார்த்தைகளில் மிரட்டுகிறான்.

அப்படி ஒருசமயம் அவன் மிரட்டிக் கொண்டிருக்கையில், இவளது மேனேஜர் அந்த வழியாகக் காரில் சென்று கொண்டிருந்தவர் இவளைப் பார்த்து இறங்கி வந்து காப்பாற்றி அழைத்துச் சென்று வீட்டில் விடுகிறார். அவள் வீடு நுழைந்து சில நொடிகளில் எப்போதும் போல தடதடவென கதவு தட்டப்படும் ஓசை. யாரென்று பார்த்தால், அவளது மேனேஜர். இவளது மணிப்பர்சை காரில் மறந்து விட்டுவிட்டதை தருவதற்காக வந்திருந்தார். மேலும் தான் கைகளைக் கழுவ வேண்டும் என அவளது பாத்ரூமை உபயோக்க வேண்டும் என்று கேட்கிறார். இவள் தயக்கத்துடனே உள்ளே அனுமதிக்கிறாள்.

அவர் கைகழுவிக் கொண்டிருக்கும்போது தான் இவளுக்கு ஒன்று உறைக்கிறது. தான் இந்த பில்டிங்கில் வசிப்பதே இவருக்கு இப்போதுதான் தெரியும். ப்ளாட் எண்ணை இவள் சொல்லியிருக்கவில்லை. எப்படி இவர் சரியாக நம் ப்ளாட்டிற்கு வந்தான் என்று சந்தேகம் வரவே, இதை அவரிடமே கேட்டும் விடுகிறாள். அவர் அதற்கு பதில் சொல்லத் திணற ஆரம்பித்த சில நொடிகளில் இவளுக்கு விசயம் புரிந்து விடுகிறது.

அவரை வீட்டுக்குள் பூட்டி வைத்து விட்டு குடுகுடுவென ஓடிப்போய் போலிஸை அழைத்து வருகிறாள். கதவைத் திறந்து பார்த்தால், கதவில் அவனது கழுத்திலிருந்து டையால் (Tie) கட்டி வைத்தபடி அவர் இறந்து போயிருக்கிறார். உடலெல்லாம் ரத்தம். யாரிடமோ போராடித் தோற்றுப் போய் பரிதாபமாய் இறந்திருக்கிறார். உண்மையில் யாரோ அவரை பலமாகத் தாக்கிக் கொன்றிருக்கிறார்கள்.

போலீஸ் இவளை நாடகமாடுகிறாள் என்று அரெஸ்ட் செய்கிறது. ஆனால், இவள் அந்தக் கொலையைச் செய்யவில்லை. செய்தது யார்? இவளது பயம் உண்மையா? நாடகமா? உண்மையில் இவள் பயப்படுவது போலவே உண்மையில் யாராவது இருந்தால், அது யார்? அவன் ஏன் இப்படி இவளைப் பின் தொடருகிறான் என்பதை Door Lock (2018) என்கிற கொரியன் படத்தில் காண்க.

ஆக்சுவலாக இது ஸ்பானிஷ் படமான Sleep Tight (2012) இன் அதிகாரப்பூர்வ ரீமேக். 



அதற்காக படத்தை அப்படியே ஃப்ரேம் பை ஃப்ரேம் ரீமேக் செய்யவில்லை. அந்தக் கதையைத் தழுவி, அதிலிருக்கும் முக்கியமான Theme-ஐ மட்டும் எடுத்து கொரியன் ஸ்டைலில் மிரட்டியிருக்கிறார்கள். ஷ்பானிஷ் படத்தைப் பார்த்திருந்தாலும், இது மொத்தமாக வேறு கதை என்பதால் கடைசி வரை அதே திரில். என்னைக் கேட்டால் அதை விட சிறப்பாக எடுத்திருக்கிறார்கள் என்று கூறுவதை விட, இரண்டுமே வேற வேற லெவல் என்று கூறுவேன்.

கிளைமேக்ஸிற்கு முன்பு திக்கென்ற ஒரு திகில் சீன் இருக்கிறது. பார்ப்பவர்களை டர்ராக்கி விடும்.

கண்டிப்பாக பார்க்கலாம். குழந்தைகள் தவிர்க்கவும்.

1 comment:

  1. படத்தைவிட இந்த பதிவுதன் அமர்க்களம்.😍😍

    ReplyDelete