Tuesday, April 21, 2020

Svaha: The Sixth Finger (2019) - கொரியன்




Svaha: The Sixth Finger (2019)
கொரியன்
Mystery / Thriller

ரு பிரசவம். தாயின் வயிற்றுக்குள்ளிருந்து வெளிவந்த குழந்தையின் வலது காலை யாரோ கொடூரமாகக் கடித்திருக்கிறார்கள். அதைப் பார்த்த அனைவருக்கும் ஒருவித பயம் வந்து தொற்றிக் கொள்கிறது. உண்மையில் பிறந்தது ஒன்றல்ல. இரட்டை. முதலில் வெளிவந்த குழந்தையை தந்தையிடம் காட்ட மறுத்து விடுகிறார்கள். அது அவ்வளவு கொடூரமாக, கோரைப் பற்களுடனும் உடலெல்லாம் நீண்டு வளர்ந்த முடியுடன் இருக்கிறது. அதைப் பிறந்தவுடன் பார்க்க சகிக்காமல், துணியைப் போர்த்தி மூடி வத்து விடுகிறார்கள். இதுதான் அந்த மற்றொரு குழந்தையின் காலைக் கடித்து சதையை குதறியிருக்கிறது. தாயின் வயிற்றுக்குள்ளே! இரண்டும் பெண் குழந்தைகள்.

அது இன்னும் சிறிது நேரத்தில் இறந்துவிடும் என்றும், அது ஒரு சாத்தான் ஆகையால் யாருக்கும் தெரியாமல் புதைத்துவிடுமாறும் தந்தையிடம் கூறுகிறார்கள். ஆனால், அது சாகவில்லை. ஒரு வாரம் கழித்து அதன் தாய் இறந்து போகிறாள். சிலநாட்கள் கழித்து அதன் தந்தையும் தற்கொலை செய்து கொள்கிறான்.

இரண்டு குழந்தைகளையும் அதன் பாட்டனும் பாட்டியும் வளர்க்கிறார்கள். ஒன்று ஊருக்குத் தெரிந்து. மற்றொன்று unregistered child. அப்படி ஒரு குழந்தை இருப்பதே இவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.

ஆனால், அவர்களை அந்த ஊர்மக்கள் நிம்மதியாக இருக்க விடுவதில்லை. அரசல் புரசலாக அந்த குழந்தையின் உருவ அமைப்பு பற்றி சில வதந்திகள் இருப்பதாலும், அந்தக் குழந்தை எந்த ஊரிலெல்லாம் குடிபெயருகிறதோ அங்கெல்லாம் சிறுமிகள் காணாமல் போவதும் தொடருவதால், ஊரார் அவளைக் கொல்லவும் முயற்சிக்கிறார்கள்.

அவளை வீட்டின் பின்புறத்தில் ஒரு அறையில் சங்கிலியால் பிணைத்து வைத்திருப்பதாகவும், ராத்திரியானால், நாய்கள் கோரமாக ஊளயிடுவதாலும், ஆடுகளும் மாடுகளும் நின்ற இடத்திலேயே பொத் பொத்தென்று கீழே இறந்து போவது வாடிக்கையானதாலும், அவளைக் கொல்வதென ஊரார் தீர்மானிக்கின்றனர்.

ஆனால், நாள்பட அவளது சக்திகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அவளை அவ்வளவு சீக்கிரம் நெருங்க முடிவதில்லை. அவளது அறைக் கதவை நெருங்கும் முன்னரே எக்கச்சக்கமாக பாம்புகளை ஏவி விடுவாள். அவைகள் இவளது அறைக் கதவுக்கு சில அடி தொலைவிலேயே வருபவர்களைக் கடித்துக் கொன்றுவிடும்.

இதனால், ஊரார் அமைதியாக அந்த வீட்டை விட்டு வெகுதூரம் நகர்ந்து சென்று வாழ்கின்றனர்.

ச்யோல்-ஜின், ஒரு கான்க்ரிட் லாரி டிரைவர். அவன் ஒருநாள் இரவு வீட்டுக்கு வந்தபோது, அவனது நண்பன் ஜியோங் ந-ஹான் வந்திருந்தான். அவனிடம் தான் மிகவும் பயந்திருப்பதாகவும், நாம் கொல்லும் குழந்தைகள் இரவில் வந்து அவனிடம் அலறுவதாகவும், அவன் கூறுகிறான். அதற்கு ஜியோங், உனது தாயின் சூடான உணவு உன்னைக் கோழையாக்கி விட்டது. நீ உன் உயிரை மாய்த்துக் கொள். மீதி வேலையை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு செல்கிறான்.

பாஸ்டர் பார்க், மற்ற பாதிரியார்கள் போல சுவிசேஷ கூட்டங்கள் நடத்தி பாவமன்னிப்பு தரும் நார்மல் பாதிரியார்கள் அல்ல. மதத்தின் பெயரால் போலியாக மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் திருட்டு மற்றும் போலிச் சாமியார்களை கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை வாங்கித் தருவதுதான் அவரது வேலை. கிட்டத்தட்ட ஒரு டிடெக்ட்டிவ் மாதிரி.

அப்படி ஒரு புத்த மத சாமியாரினி ஒருவரை டார்கெட் செய்யும் போது, சில விநோதமான ஒரு வரலாறு பற்றித் தெரிய வருகிறது. அதில் புத்தரைச் சுற்றி நான்கு இந்திய தேவர்களும், அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சாத்தானைக் கொல்வதாகவும் படங்களும் அதன் வரலாரு கொண்ட ஒரு புத்தகமும் கிடைக்கிறது.

உண்மையில், புத்த மதத்தில் சாத்தான்களே கிடையாது. இது யாரோ இடைக்காலத்தில் எழுதியது. ஆனால், அதில் எழுதியிருப்பது போல ஒரு ரகசியக் கூட்டம் உண்மையில் இயங்கி வருவதையும், அவர்கள் கொலைகளைத் தொடர்ந்து செய்து வருவதையும் பார்க் கண்டுபிடிக்கிறார்.

ஆனால், அவர்கள் எங்கிருக்கிறார்கள்? யாரந்த புத்த முனிவர்? அவரைப் பாதுகாக்கும் நான்கு ராஜாக்கள் யார்? ஒரு க்ளூவும் இல்லை.

சியோலில் உள்ள ஒரு டனல் (Tunnel) வாயில் சுவற்றில் ஒரு பிணம் புதைக்கப்பட்டது போலிஸிற்கு தெரிய வருகிறது. அதை உடைத்து எடுத்தபோதுதான் அது ஒரு சிறுமியின் உடல் என்று தெரிய வருகிறது. அவளது உடலை போஸ்ட் மார்ட்டம் செய்தபோது, அவளது வாய்க்குள் சில மந்திரித்த பீன்ஸ்களும், ஒரு தாயத்தும் வைத்து எதோ மதச்சடங்கைப் போல பலி கொடுத்திருப்பது தெரிய வருகிறது.

அந்தச் சிறுமி யார்? அவளைக் கொன்றது யார்? பாஸ்டர் பார்க்கின் கதை என்னவானது? அந்த நான்கு ராஜாக்களை நெருங்கினாரா? ச்யோல்-ஜின் என்னவானான்? தனது உயிரை மாய்த்துக் கொண்டானா? அந்த இரண்டு பெண் குழந்தைகள் என்னவானார்கள்? என்பதை Svaha: The Sixth Finger (2019) படத்தில் காண்க.

படம் ஆங்காங்கே மெதுவாகச் செல்வது போலத் தோன்றினாலும், வொர்த்து தான். ஹாரர் படமாக இருந்தாலும், அடிக்கடி பின்னால் வந்து நின்று பயமுறுத்தும் பேய்களோ, பழிவாங்கும் ஆவிகளோ இல்லை. ஆனாலும் பயப்பட வைத்திருக்கிறார்கள். உண்மையில் கதையைமிஸ்டீரியஸாகவும், ஒரு டிடெக்ட்டிவ் நாவலைப் போலவும் நகர்கிறது.

கொரியன்களின் மண்டைக்குள் மட்டும் எப்படி இத்தனைக் கதைகள் உதிக்கிறது? அதுவும் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக? ஆச்சரியமான மண்டையர்கள்.

கண்டிப்பாகப் பார்க்கலாம். நெட்ப்ளிக்ஸில் அவைலபிள்.

No comments:

Post a Comment