Sniper: Ultimate Kill (2017)
Action
குறிப்பாக ஸ்னைப்பர் கதைகள் என்றாலே எனக்கு அதில் அலாதியான ஆர்வம் வந்து தொற்றிக் கொள்ளும். துப்பாகிகளைப் பற்றி உண்மையில் எனக்கு சுத்தமாக எதுவும் தெரியாது. ஆனால், ஸ்னைப்பர்களைப் பற்றி நிறைய விசயங்களை தேடித் தேடிப் படித்திருக்கிறேன். நிறைய டாக்குமெண்டரி வீடியோக்களையும், படங்களையும் கூட அந்த லிஸ்ட்டில் சேர்க்கலாம். நண்பர்கள் விரும்பினால் நான் அதனை உங்களோடு பகிர்ந்து கொள்ளவும் ஆர்வமாயிருக்கிறேன். அந்தவகைத் துப்பாக்கிகளின் மீது எனக்குத் தணியாத ஒருவகைக் காதலே உண்டு. பல மீட்டர் தொலைவுகளிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவுகள் வரை அசையாமல் ஒரே இடத்தில் பதுங்கிப் படுத்துக் கொண்டும், டார்கெட்டின் அசைவுகளை கிராஸ்ஹேரில் (Crosshair) நோட்டம் விட்டுக் கொண்டும், சரியான ஒரு நொடி வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருப்பார்கள்.
ஒரு வாய்ப்புதான். மறு வாய்ப்பு என்கிற பேச்சுக்கே இடமிருக்காது. குறி, காலம், காற்று எல்லாமே ஒரே கோட்டில் இருக்கவேண்டும். இம்மி பிசகினாலும் டார்கெட் சுதாரித்துக் கொண்டுவிடும். மறுவாய்ப்புக்கு இடமிருக்காது. அப்படியே முயற்சித்தாலும் அது பெரும்பாலும் தற்கொலைக்கான முயற்சியாக அமைந்துவிட வாய்ப்புள்ளது. முதல் வாய்ப்புக்கும் இரண்டாம் வாய்ப்புக்கும் இடையில் உள்ள கால அளவை (Event) ஸ்னைப்பரின் இருப்பிடத்தை காட்டிக் கொடுத்துவிடும். காரியத்தைக் கெடுத்துவிடும். ஆக ஸ்னைப்பர்களைப் பொறுத்தவரை பதுங்கியிரு, விழித்திரு, காத்திரு தான்.
இதெல்லாமே ஸ்னைப்பர்கள் ஒரே ஒரு டார்கெட்டை மட்டுமே கொல்ல முனையும்போதுதான். அதுவே ஒரே சமயத்தில் பல டார்கெட்டுகளைத் தாக்க வேண்டுமென்றால் அதற்கு ஒரே ஒரு விதிதான். பதுங்கியிருக்கும் இடம் கூடுமானவரை பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். ஒரு சினாரியோவாக பத்து டார்கெட்டுகள் என்று வைத்துக் கொண்டால், பத்தையும் பத்து ஷாட்டுகளில் முடித்தாக வேண்டும். முதல் டார்கெட்டை தாக்கியவுடனே மீதி ஒன்பது டார்கெட்டுகளும் செய்வதறியாது இஷ்டப்படி இடம் மாறும். அந்த மூவிங் டார்கெட்டுகளையும் அடுத்தடுத்த ஒன்பது ஷாட்டுகளில் முடித்தாக வேண்டும். இவையெல்லாமே மிகவும் குறுகிய காலத்திற்குள் நடந்தாக வேண்டும். இதற்கு அந்த ஸ்னைப்பர் ஷார்ப் ஷூட்டராக இருந்தால் மட்டுமே சாத்தியம்.
இதையெல்லாம் தாண்டி இன்னொரு வகையான பிரச்சினை இருக்கிறது. Two Snippers. டார்கெட்டுக்கு பாதுகாப்பாக மற்றொரு ஸ்னைப்பர் இருந்து விட்டால் அவ்வளவுதான் முடிந்தது கதை. நாம் நம் டார்கெட்டை சுட்டவுடன் நமது இருப்பிடத்தை, அவனது ஸ்னைப்பர் சர்வ நிச்சயமாக கண்டு கொள்வான். அவன் சுதாரிப்பதற்கு ஒரு சில செகண்டுகளுக்கு முன்னதாக நாம் அவனையும் கவனித்தாக வேண்டும். ஆனால் அதற்கு அவன் நம்மை சுட ஆரம்பித்திருக்க வேண்டும். ரொம்பவுமே அசாதாரண சூழல் இது.
அப்படி ஒரு கதையுள்ள படம்தான் Snipper: Ultimate Kill (2017)
படத்தைப் பற்றி நான் எந்தவித கருத்தோ விமர்சனமோ முன்வைக்கப் போவதில்லை. எனக்கு ஸ்னைப்பர்கள் கதை மிகவும் பிடிக்கும். இதற்கு முன்னர் நான் பார்த்த பல ஸ்னைப்பர்கள் பற்றிய படங்களும் அப்படிப்பட்டதுதான். ஆனால் அவைகளில் படம் முழுக்க ஸ்னைப்பர்களை உபயோகப் படுத்தியிருக்க மாட்டார்கள். Shooter (2007), Enemy at the Gates (2001), Vantage Point (2008). அந்தப் படத்தில் அவர்கள் ஒரு பகுதியாகத்தான் இருந்திருப்பார்கள். Shooter-இல் ஹீரோ ஒரு ஸ்னைப்பராக இருந்தாலும் படத்தின் ஆரம்ப மற்றும் இறுதிக் காட்சிகளில் மட்டுமே ஸ்னைப்பர் காட்சி இடம்பெற்றிருக்கும். Enemy at the Gates-இலும் அப்படியே. Vantage Point-இல் ஒரு கொலை ஸ்னைப்பரால் நடைபெறும். பிறகு அதைச் சுற்றியே கதை பலரின் பார்வைகளில் மாறி மாறி காட்டப்பட்டிருக்கும்.
ஆனால் இந்தப் படத்தில் இரண்டு ஸ்னைப்பர்கள். ஹீரோ & வில்லன். இருவருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்ல. அப்படிப்பட்ட ஷார்ப் ஷூட்டர்ஸ். வில்லன் சுட நினைக்கும் டார்கெட்டை ஹீரோ பாதுகாப்பான். இதுதான் இதன் ஒருவரிக்கதை. மேற்கொண்டு படத்தை நெட்ப்ளிக்ஸில் காணலாம். ஆக்சன் ரசிகர்களுக்கு நல்ல விருந்து.

No comments:
Post a Comment