The Platform
(2019)
ஸ்பானிஷ்
Science Fiction / Horror
கோரெங்
(Goreng) கண் விழிக்கையில் தான் ஒரு சிறையிலிருப்பதை உணருகிறான். அங்கே 48 என்கிற எண்
பெரியதாக அந்த அறையின் மையத்தில் எழுதப்பட்டிருந்தது. அது சாதாரண சிறையைப் போலல்லாமல்
வித்தியாசமான அமைப்பைக் கொண்டதாக இருக்கிறது. கதவுகளில்லை. கம்பிகளில்லை. ஜன்னல்களுமில்லை.
மாறாக அந்த அறையின் நடுவில் மேலேயும் கீழேயும் பெரியதாக ஒரு சதுர வடிவ துளையைக் காண்கிறான்.
அதன் வழியாக அந்த அறையின் மேற்கூறையின் மேலாகவும், தரையின் கீழாகவும் இதே போன்ற அமைப்புள்ள
சிறைகளையும், சிறைவாசிகளையும் காண்கிறான். தனது அறையிலும் தன்னுடன் மற்றொரு செல்மேட்
(CellMate) இருப்பதையும் காண்கிறான். அவர் சற்றே வயதானவர். அவரது பெயர் திரிமகாஸி.
திரிமகாஸி மேற்கூறையை பார்த்தவாரு தனது தலையணையை எடுத்துக் கொண்டு எதற்கோ தயாராகிறார். அப்போது அங்கே மேற்கூறை வழியாக ஒரு தளம் இறங்கி வந்து ஒரு மேசையைப் போல தரைதள துளையின் மேலாக நின்று விடுகிறது. அதன் மேல் எக்கச்சக்கமான உணவுப்பண்டங்கள் கபளீகரம் செய்யப்பட்டு பத்து இருபது நாய்கள் ஒன்றாக சண்டையிட்டுக் குதறிய குப்பைத் தொட்டியைப் போல் கொடூரமாகக் காட்சியளிக்கிறது. ஆனால், அதையெல்லாம் எதையும் பொருட்படுத்தாமல், திரிமகாஸி அந்த தலையணையைப் போட்டு அதன் மேல் அமர்ந்து கொண்டு தனக்கு அருகே உள்ள உணவுகளை அருவருப்பில்லாமல் எடுத்து மென்று திண்ண ஆரம்பிக்கிறார். அவரது கையில் நிஞ்சா கத்தி ஒன்று எப்போதும் பளபளத்துக் கொண்டிருக்கும்.
அந்த இடம் அப்படித்தான். மேலுள்ள 47 தளங்களில் உள்ள சிறைவாசிகள் தின்றது போக மீதம்தான் அவர்களது 48ஆவது தளத்திற்கு வரும் என்று திரிமகாஸி கூறுகிறார். அப்படியென்றால், 48ற்குக் கீழுள்ள தளங்களில் உள்ள சிறைவாசிகளுக்கு அன்றைக்கு உணவு சரியான முறையில் கிடைக்காது என்பதை கோரெங் உணர்ந்து கொள்கிறான். கீழே எத்தனை லெவல் தளங்களிருக்கும் என்பது யாருக்கும் தெரியாது.
ஒருநாள் தூங்கிக் கண் விழிக்கையில், கோரெங் 48ஆவது தளத்திலிருந்து 171ஆவது தளத்திற்கு மாற்றப் பட்டிருந்தான். திரிமகாஸி அவனை அவனது படுக்கையில் உள்ள துணிகளைக் கிழித்து கயிறாக்கி கோரெங்கை படுக்கையுடன் இணைத்து கட்டிப் போட்டிருந்தார். 171ஆவது தளத்திலிருந்து மாற்றப்படும்வரை உண்ண உணவு எதுவும் கிடைக்காது எனவும், அதனால் அவனை கொஞ்சம் கொஞ்சமாக வெட்டித் தின்னப் போவதாகவும் கூறி திரிமகாஸி அவனிடம் இதற்காகத் தன்னை மன்னித்து விடுமாறும் கூறுகிறார் அதே நிஞ்சா கத்தியுடன். இரண்டு நாட்கள் அவனை எதுவும் செய்யாமல் பட்னியுடன் கடந்த நிலையில் மூன்றாவது நாள் திரிமகாஸியை பசி வாட்டி எடுக்க கத்தியுடன் கோரெங்கை நெருங்குகிறார்.
திரிமகாஸியிடமிருந்தும் அந்த இடத்திலிருந்தும் கோரெங் தப்பித்தானா? அங்கே உள்ள உணவுப்பழக்கம் என்னவானது என்பதுதான் The Platform (2019) படத்தின் மீதிக் கதை.
இந்தப் படத்தின் கதையை ஒரு வரியில் சொல்வதானால், ’நம்ம பசி தீர்ந்ததுக்கப்புறம் நாம சாப்பிடற இட்லி இன்னொருத்தனோடது’ என்று கூறி விடலாம். ஆனால், அந்த வரிகளின் பின்னால் சொல்லப்பட்டிருக்க வேண்டிய மனிதர்களான, பசியோடிருப்பவனின் வலியும் வேதனையும் யாராலாவது உணரப்பட்டிருக்கிறதா?
இந்த உலகம் உருவானதிலிருந்து இன்றுவரை எல்லா உயிரினமும் சளைக்காமல் ஓடிக் கொண்டிருப்பதும், இயங்குவதும் தனது அன்றாடப் பசியைத் தீர்த்துக் கொள்வதற்காகத்தானே!. ஆனால், இதில் மனிதன் எனும் விலங்கு மட்டும் விதிவிலக்கு. அவன் மட்டும்தான் தனது பசி தீர்ந்த பிறகும் ருசிக்காக உண்ணுபவன். எறும்புகளுக்குக் கூட உணவை சேமித்து வைக்கும் பழக்கமுண்டு. ஆனால் அவை மழைக்காலங்களில், அந்த உணவை பகிர்ந்து உண்டு பசியாற்றிக் கொள்ளுவதற்காகவே அந்த சேமிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டன. ஆனால், மனிதன், அவன் மட்டும்தான் அடுத்தவேளை, அடுத்தநாள், அடுத்த தலைமுறை என சேர்த்து வைக்கும் பழக்கமுடைய சுயநல மிருகம். அவன் தனது பசியை அடக்கிக் கொள்வதை விட, தீர்த்துக் கொள்ள எடுக்கும் ஒவ்வொரு முன்னெடுப்பும், பல உயிர்களைப் பலி வாங்கிக் கொண்டேதான் இருக்கிறது.
1884இல் Mignonette என்றொரு கப்பல், கடலில் சென்று புயலில் மாட்டிக் கொண்டது. அங்கேயும் பசி நாட்கள் கரையக் கரைய அவர்களை வாட்டுகிறது. அப்போது அந்தக் கப்பலின் உதவி கேப்டன் ஒரு யோசனையைக் கூறுகிறான். சீட்டு குலுக்கிப் போட்டு எவர் பெயர் வருகிறதோ, அவரைக் கொன்று மற்றவர்கள் தின்று உயிர் வாழ்ந்து கொள்ளலாமென்று கூறுகிறான். சீட்டு குலுக்கி எடுத்ததில் யோசனையைக் கூறிய உதவி கேப்டனின் பெயரே வருகிறது. அவனைக் கொன்று தின்று உயிர் பிழைத்து கரை சேர்ந்தனர். பின்னர் அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது வேறு கதை.
ஆக மனிதன் மட்டுமே தனது பசிக்காக சக மனிதனை அடித்துக் கொன்று தின்பவன். அதற்கு இந்தச் சம்பவம் அதற்கு ஒரு உதாரணம்.
படத்தில் உள்ள சித்தரிக்கப்பட்ட சிறைவாசிகளும் நாமும் வேறு வேறு அல்ல. நாமும் அவர்களும் ஒன்றுதான். நமக்கும் அவர்களுக்கும் இம்மியளவு வித்தியாசமும் கிடையவே கிடையாது.
இதெல்லாம் ஒருவகை perception. இன்னொரு வகையில் பார்த்தால், அரசு ஒரு திட்டத்தை வகுக்கிறது. அது அவர்களிடமிருந்து, அந்தந்த துறைக்கு நிதியைப் பகிர்ந்தளிக்கிறது. ஆனால், அது அப்படியே நேரடியாகவா மக்களைச் சென்றடைகிறது? அப்படித்தான் சென்று சேர்ந்திருக்க வேண்டும். அதுதான் சரியான திட்டமிடலும் பகிர்ந்தளித்தலும் கூட. ஆனால், அது அப்படியே ஒவ்வொரு படிநிலையாகக் கடந்து மக்களை வந்து சேரும் பொழுது, ஒரு கிலோ அல்ல, ஒரு பீஸ் சுண்டல் கூடக் கிடைக்காது. நமக்கும் அரசுக்கும் நடுவில் நூத்துக்கணக்கில் அரசு எந்திரத்தில் இயங்குபவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் நாம் நமக்காக தேர்ந்தெடுத்தவரும் அடக்கம். அவர்கள்தான் நம்மையும் அரசின் திட்டத்தையும் அண்ணாந்தே பார்க்க வைத்துக் கொண்டிருப்பவர்கள். கடைசிவரைக்கும் காலித் தட்டுதான் நம்மிடம் மிச்சமிருக்கும். அது நாம் உண்ட எச்சில் தட்டு அல்ல. எவனோ உண்ட எச்சில் தட்டு.
என்ன, இவன் என்னடா என்னென்னவோ உளறிக் கொண்டிருக்கிறானே என்று குழப்பமாக இருக்கிறதா? நான் சொல்வது ஒன்றும் புரியவில்லையா? இந்தப் படத்தைப் பாருங்கள், கண்டிப்பாக நான் உளறியது புரியும்.
நெட்ப்ளிக்ஸில் அவைலபிள்.

Perception paragraph அருமையான view...
ReplyDelete