Twin Murders The
Silence of the White City (2019)
(Original Title) El silencio de la ciudad blanca (2019)
ஸ்பானிஷ்
Action
/ Adventure / Crime
ஆரம்பத்திலேயே சொல்லி விடுகிறேன். அட்டகாசமான மேக்கிங்கில் உருவான டொம்மைப்படம். பொ அல்ல டொ. எல்லாம் எக்ஸ்ட்ராக்சன் பார்த்ததனால் வந்த வினை.
கதைப்படி ஸ்பெய்னில் ஒரு சீரியல் கில்லர். ஒத்த வயதுள்ள இருவரைக் கடத்தி அவர்களது வாயில், எரிவாயுப் புகையையும் தேனீக்களையும் செலுத்திக் கொன்றபின் அவர்களை நிர்வாணமாக்கி, ஜெமினி பொம்மை போல ஜோடியாக அருகருகே படுக்க வைத்து, ஒருவர் கை மற்றொருவரை நோக்கி நீட்டியவாரு அமைத்து, பொது இடத்தில் யாரும் பார்க்காத சமயமாய்ப் பார்த்து காட்சிக்கு வைத்துவிட்டு, மாயமாய் மறைந்து விடுகிறான்.
காவல்துறைக்கு ஒரு துப்பும் கிடைக்காமல், என்னடா இது பெரிய தலைவலியாக இருக்கிறதென்று தலையிலடித்துக் கொண்டு தேடுகிறது. அதில் முக்கியமான இரு அதிகாரிகள் கிராக்கன் (Kraken) மற்றும் அவனது மேலதிகாரி அல்பா (Alba). (இந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்பெய்ன் நடிகை Belén Rueda இல்லாத படமே இல்லை எனலாம் போல. சென்ற வாரம் நான் கண்ட நான்கைந்து படங்களில் அவர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். Julia's Eyes ஹீரோயினி என்றால் புரிந்திருக்கும்)
இரட்டைக் கொலைகளைப் பற்றிய எதாவது ஒரு கோணத்தில் இருவரும் யோசித்து, எதாவது ஒரு க்ளூவைக் கண்டுபிடித்து அதன் பின்னால் செல்ல அது இன்னொரு க்ளூவிற்கு வழிகாட்டிக் கொண்டிருக்கும். (கிட்டத்தட்ட The Davinci Code (2006) படம் போல. ஆனால், அது எதுவுமே சுவாரஸ்யத்தைத் தரவில்லை. மாறாக கொட்டாவியைத்தான் வரவழைத்தது.) அல்லது மற்றொரு ஜோடிப் பிணங்களிடம் கொண்டு சேர்க்கும்.
ஆனால், வில்லனும் லேசுப்பட்ட ஆளில்லை. ஒவ்வொரு முறை கிராக்கன் எதாவது துப்பை நோக்கி அலைந்து கொண்டிருக்கையில், அவனைப் படமெடுத்து, அதை ப்ரிண்ட் போட்டு மொய்க் கவரில் வைத்து, அவனுக்கு முன்னால் சென்று, அவன் கண்ணில் படுமாரு அந்தக் கவரை வைத்துவிட்டு மாயமாய் மறைந்து விடுவான். ஹீரோவிற்கு ஒரு ஸ்டெப் முன்னால் இருக்கிறாராம் அந்த வில்லன். என்ன ஒரு புத்திசாலித்தனம்.
சைக்கோ சீரியல் கில்லர் கதையை படமாக எடுப்பது என்றான பின் லாஜிக்கில் கொஞ்சமாவது மூளையைச் செலவளித்திருக்க வேண்டாமா?
இதில் உள்ள ஒவ்வாமையே அதுதான். சீரியல் கில்லர்கள், சைக்கோத்தனமாக மனிதர்களை வேட்டையாடுவார்கள். அடுத்து அவர்கள் ஸ்காட்லாண்ட் யார்டு போலிஸை விட அதிபுத்திசாலியாக இருப்பார்கள். என்ன மடத்தனமான லாஜிக் இது?
தனது இரையைத் தேடும்போதும், தேர்ந்தெடுக்கும்போதும் அவர்களுக்குள் சில பேட்டர்ன்கள் இருக்கும். அவ்வளவே. அதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான MO (Modus Operandi). ஆனால், அதிமுக்கியமாக அவர்களின் தேவை - ஒரு கொலை. அந்தக் கொலையை நிகழ்த்த அவர்கள் எப்பாடுபட்டாவது ஒரு இரையைத் தேட வேண்டும். அதில் வேகம் மட்டும்தான் இருக்கும். விவேகம் இருக்கவே இருக்காது. ஒரு மிருகம் தனது இரையை வேட்டையாடுவதைப் போல. சுருக்கமாக ஒரு பாம்பு எலியைத் துரத்தியோ காத்திருந்தோ பிடிப்பது போலத்தான் இருக்கும். அவர்களுக்கு, தான் பிடிபடப் போவதென்பது இரண்டாம் பட்சம்தான். போலீஸைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள். அல்லது வேலைமெனக்கெட்டு போலீஸையெல்லாம் சுத்தலில் விட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள். சிம்பிளாக ஒரு கொலை. அதற்குமேல் டிஸ்போசல் அல்லது தேவைப்பட்டால் அதை பொதுவில் காட்சிப்படுத்துதல். அத்தோடு அவர்களது வேலை முடிந்துவிடும் என்பதே ஏற்றுக்கொள்ளக் கூடிய சாத்தியக் கூறுகள்.
அந்த ‘தேவைப்பட்டால்’ என்பது எவ்வாறு இருக்குமென்றால்,
இப்படி ஒரு கொலைகாரன் உங்களிடையே இருக்கிறேன். இந்தக் கொடூரக் கொலையைச் செய்தது நான்தான். நான் என்பது இதே மாதிரியான கொலைகளை, அதாவது (உதாரணத்திற்கு) தலையை வெட்டி பொது இடத்தில் சிலுவையில் அறைந்து வைத்த கொலைகளெல்லாம் என்னுடைய கைங்கர்யம்தான் என்பது போலத்தான் இருக்கும். மாறாக அவன் தன்னை வேறு எந்த வகையிலும் பிரஸ்தாபித்துக் கொள்ளவோ, வெளிக்காட்டிக் கொள்ளவோ வாய்ப்பேயில்லை. இதில் எங்கிருந்து போலீஸ் ஸ்டேசனில் நுழைந்து, அவர்கள் தேடுதல் வேட்டையில் இருக்கும்போது அவர்களைப் பின் தொடர்ந்து வந்து சாட்சிகளைக் குழப்பி, பாருடா, இதையும் நான்தான் செஞ்சேன். முடிஞ்சா என்னைக் கண்டுபுடி என்றெல்லாம் சவடால் விட்டு தன்னை அறிவித்துக் கொண்டிருக்க மாட்டான்.
இதெல்லாம்தான் இந்தப் படத்திலிருந்த பிரச்சினைகள். தன்னை அறிவித்துக் கொண்ட ஒரு சீரியல் கில்லரும் இருக்கிறான். அவன் பெயர் ’ஸோடியாக்’. ஆனால் அவன் தன்னை வெளிக்காட்டிக் கொள்ள செய்த தந்திரம் வேறு மாதிரியானது. அவன் போலீஸாரின் முன்னே சென்று மறைந்திருந்து சாட்சிகளையெல்லாம் குழப்பியிருக்கவில்லை. வெறுமனே, சில சங்கேத வார்த்தைகளைக் கொண்டுள்ள கடிதங்களை, செய்தித்தாள் அலுவலகத்திற்கு அனுப்பிக் கொண்டிருந்தான். அதிகபட்சம் அவ்வளவுதான் அவனால் செய்திருக்க முடியும். அதைத்தான் அவனும் செய்திருந்தான். ’ஸோடியாக்’ நிஜ சம்பவம் என்பதால்தான் அதை இங்கே உதாரணமாகக் கூறியிருக்கிறேன். மற்றபடி லாஜிக்குகள் சினிமாவிற்கும் தேவை. படம் பார்ப்பவன், தனி ஒரு மனிதனின் எபிலிட்டி வரம்பை நிச்சயமாக தனது அறிவோடு பொருத்திப் பார்ப்பானல்லவா? அவனால் இன்னதெல்லாம் ஆகும். இன்னதெல்லாம் நடைமுறையில் ஆகாது. அது சாத்தியமேயில்லையென்று. அப்படிப்பட்ட சாத்தியங்களையெல்லாம் சுத்தமாக மறந்துவிட்டு எடுத்த கதைதான் இந்தப் படம்
இதனை, இரவு தூக்கம் வரவில்லையென்றால் பார்க்கலாம் என்றெல்லாம் பரிந்துரைப்பது என்னவகையில் சேர்த்தி? நெட்பிளிக்ஸில் உள்ளது.
இந்தப்படத்தைப் பற்றியும் கூகுளில் குடாய்ந்ததில் இது ஒரு நாவலின் அடாப்டேசன் என்பதை அறிந்து கொண்டேன். சொல்லி வைத்தாற்போல அதுவும் இன்னொரு படத்திற்கு என்னை இட்டுச் சென்றது. அது... The Invisible Guardian (2017)

No comments:
Post a Comment