இனி
நாம கொஞ்ச நாளைக்கி ஒரு முக்கியமான ஒரு இயக்குநரோட படங்களைத் தான் வரிசையா பாக்கப்
போறோம். அதுவும் அவரைப் பத்தி யாரும் அதிகமா பேசினதும் கிடையாது. அவர் இயக்கின எல்லா
படங்களுமே ஒன்னொன்னும் ஒவ்வொரு ரகம். ஆனா எல்லாத்துலயும் ரெண்டு ஒத்துமை இருக்கும்.
முதல் ஒத்துமை இப்டியெல்லாம் கூடவா யோசிச்சி படம் எடுப்பாங்கன்னு நம்மள வியக்க வக்கிற
கதையமைப்பு. இன்னொன்னு அப்புறமா சொல்றேன். அந்த இயக்குநர்தான் Sebastian Gurierrez. என்ன, கேள்விப்பட்ட
மாதிரியே தெரியலியா? தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லைன்னாலும் அவரோட ஒரு சில படங்களை கண்டிப்பா
பாத்திருப்பிங்க. அதையும் பாப்போம்.
அதிகமா
அண்டர் ரேட்டட் ஓவர் ரேட்டட்னெல்லாம் போட்டு உருட்டாம அவரோட படங்களைப் பத்தி நாம பேசலாம்.
அதுல நாம இன்னிக்கி பாக்கப் போற படம்,
She Creature (2001)
Horror / Sci-Fi
இது
ஒரு (Mermaid) கடல்கன்னியைப் பத்தின படம்.
இதுவரைக்கும் அவ்ளோ சிறப்பான கடல்கன்னிகளோட கதைகளெல்லாம் எந்தப் படத்துலயும் வந்ததா
எனக்கு ஞாபகமில்லை. Pirates of the
Caribbean பட வரிசைகள்ல On Stranger
Tides (2011) மட்டும் விதிவிலக்கு. அதுலயும் அது ஒரு ஓரத்துல இருக்கும். கேப்டன்
ஜேக் ஸ்பாரோ இருக்கற எடத்துல வேற யார் வந்தாலும் நாம பெருசா கண்டுக்கவும் மாட்டோம்.
ஆனா She Creature படத்துல கதையே அந்த கடல்கன்னிதான்.
கதை
1905ல அயர்லாந்துல ஆரம்பிக்கிது. Angus Circus-ல ஒரு சின்ன சம்பவம் நடக்குது. அங்க
காட்சிக்காக சங்கிலியில கட்டி வச்சிருக்கற ஒரு காட்டுமிராண்டி மனுசன் திடீர்னு வெறி
பிடிச்ச மாதிரி எல்லார்த்தையும் தாக்கத் தொடங்குறான். மேடையில இருந்த அந்த சர்க்கஸ்
சிப்பந்திகளையெல்லாம் அடிச்சிட்டு கடைசில சர்க்கஸ் ஓனர் Angus Shawவை அடிக்க வரவும்,
அவன் பயந்து நடுங்கை என்னைய விட்ரு விட்ருன்னு கெஞ்சறான். அப்ப அந்த சமயத்துல எங்கிருந்தோ
ஒரு பாட்டு மாதிரி ஒரு இசை சத்தம் கேக்க அந்த காட்டுமிராண்டி அந்த சத்தம் வந்த திசைய
நோக்கி அப்டியே போறான். அந்த பாட்டுச்சத்தம் சர்க்கஸ் கூடாரத்துக்கு பின்பக்கமா இருந்து
வருது. போயிப் பாத்தா அங்க ஒரு கண்ணாடி கூண்டுக்குள்ள இருந்து ஒரு கடல்கன்னி வார்த்தைகளே
இல்லாம குரலை அசைச்சி பாடிகிட்டிருந்திச்சி. இந்தக் காட்டுமிராண்டியும் அப்படியே அதுபக்கத்துல
சொக்கிப்போய் நின்னு கேட்டுக்கிட்டிருக்க, சர்க்கஸ் சிப்பந்திகள் அங்க வேடிக்கை பாத்துகிட்டிருந்த
பார்வையாளர்களை துரத்தறாங்க.
எல்லாரும்
போனதுக்கப்புறம், “சரி எல்லாரும் போயிட்டாங்க. ரெக்கார்ட ஆப் பண்ணு”ன்னு அந்த கடல்
கன்னி உள்ள இருக்கற யாருக்கோ உத்தரவு போடுறா. ஏன்னா அவ உண்மையான மெர்மெய்ட் கிடையாது.
போலி. சர்க்கஸ் ஷோவுக்காக அவங்க போட்ட செட்டப்பு. அந்தக் காட்டுமிராண்டியும் அதே டெய்லர்.
அதே வாடகை. உட்டாலக்கடி.
இத
அங்க வந்திருந்த ஒரு கிழவனார் கண்டுபுடிச்சிடறாரு. ஆத்திரத்துல அவங்களை திட்டவும் செய்யிறாரு.
ஆனா, அவங்க இதுதாங்க எங்க ஷோவேன்னு சொன்னதுக்கப்புறம் சரின்னு ஒத்துக்கறாரு. ஆனா அவர்
ஃபுல் மப்புல இருந்ததால அவரை இவங்களே கொண்டு போய் விடலாம்னு கூட்டிட்டு போறாங்க. அதாவது
சர்க்கஸ் ஓனர் ஆங்கஸ் ஷா-வும், அந்த மெர்மெய்ட் நடிகை லில்லியும். ரெண்டு பேரும் காதலர்களும்
கூட.
சரி
வீடு வரைக்கும் வந்துட்டீங்க. வந்து சாப்ட்டு போங்கன்னு அந்த கிழவனார் அவங்களை வீட்டுக்குள்ள
கூப்ட்டு உபசரிக்கிறாரு. வீட்ல அவர் தனியாத்தான் இருக்காரு. அதனால புதுசா ரெண்டு பேர்
வந்ததும் போதையில நெறய பேசறாரு. கடல்கன்னிகளோட வரலாறா அடிச்சி விடறாரு. ரெண்டு பேருக்கும்
செம போர் அடிக்கவும் கெளம்பறாங்க. ஆனா பெருசு விடல. நீங்க நான் சொன்ன எதையுமே நம்பலேன்னு
தெரியும். அதனால இதையும் சொல்லிடறேன்னு அவங்கள ஒரு அறைக்குள்ள கூட்டிட்டுப் போறாரு.
அங்க போயிப் பாத்தா இவங்களுக்கு செம ஷாக்கு. அங்க கண்ணாடித் தொட்டியில நெசமாவே ஒரு
மெர்மெய்ட் இருக்கு. யெஸ் மேற்புறத்துல எந்த பாசாங்கும் இல்லாம பொண்ணாவும், கீழ்புறம்
மொத்தமும் மீனோட உடலமைப்புல ஒரு நிஜ கடல்கன்னி.
திரும்ப
சர்க்கஸ் கூடாரத்துக்கு வந்ததுக்கப்புறம் ஆங்கஸோட மூளை வேற மாதிரி ஒரு யோசனை செய்யிது.
அந்தக் கடல்கன்னியை அங்கிருந்து கடத்தறதுன்னு ஒரு முடிவோட துணைக்கு ரெண்டு பேர்த்த
கூட்டிகிட்டு அங்க போறாங்க. அதுக்கப்புறம் ஒன்னு தொட்டு ஒன்னு, ஒரு கேயாஸ் மாதிரி,
சீட்டுக்கட்ட வரிசையா அடுக்கி வச்சி அத தட்டிவிட்டா ஒன்னொன்னா வரிசையா விழுகற மாதிரி
மீதிப் படம் செம சுவாரஸ்யமா இருந்தது.
நான்
பாத்தது மொக்கைப் ப்ரிண்டா இல்ல படத்தோட ஒளிப்பதிவே அப்படித்தானான்னு தெர்ல. ஒரு B Grade Movie மாதிரி தரத்துலதான் அந்த ஒளிப்பதிவு
இருந்தது. ஆனா விசுவல் எபெக்ட்ஸ்லாம் எந்தக் குறையும் சொல்ற மாதிரி இல்ல. நாக்கு நீளறது,
மூக்கு நீளறதுன்னு மொக்கையா இல்லாம சிறப்பா தரம்மா இருந்தது.
நிச்சயமா
அடிச்சி சொல்றேன். உங்களுக்கும் புடிக்கும். ஏன்னா நேத்து பாக்கறப்ப கூட எனக்கு இது
இருபது வருசத்துக்கு முன்னாடி எடுத்த படம்ங்கற ஃபீலே இல்ல. ஆனா ரொம்ப கஷ்டப்பட்டுதான்
இந்தப் படத்த தேடிப் புடிக்கனும். எனக்கே ஒரு விடா முயற்சியில கிடைச்ச விஸ்வரூப வெற்றியாத்தான்
இந்தப் படத்தோட லின்க் கிடைச்சது. குழந்தைகள் தவிர்க்கவும். கடல்கன்னி வேற. நிறைய டாப்லெஸ்
காட்சிகள் இருக்கும்.
அப்புறம்
அந்த ரெண்டாவது ஒத்துமை. மறந்துட்டேன்னு நினைச்சிங்களா? நோ வே. அது அந்த லில்லியா நடிச்ச
நடிகை Carla Gugino தான் அந்த ரெ.ஒ. ஏன்னா செபாஸ்டியனோட எல்லா படங்கள்லயும் முக்கியமான
ரோல்ல நடிப்பாங்க. ஏன்னா அவங்கதான் அவரோட மனைவி.


No comments:
Post a Comment