Friday, February 12, 2021

Live Telecast (2021) - TV Series

 




Live Telecast (2021)

Horror

TV series

 

நம் டிவியில நல்லா போய்ட்டிருந்த பேய்களைப் பத்தின ஷோவுக்கு திடீர்னு ஒருநாள் பலமான எதிர்ப்பு மக்கள்கிட்ட இருந்தும், சோசியல் மீடியாக்கள்ல இருந்தும் கிளம்புது. அதுக்குக் காரணம், அந்த ஒரு எபிசோட்ல ஒரு பொண்ண, பேய் பலவந்தப்படுத்தி ரேப் பண்ற மாதிரி ஆபாசமா சித்தரிச்சிருப்பாங்க. உடனே எல்லாரும் ஆபாசம், பெண்களை இழிவு படுத்தும் நோக்கத்துடனான புரோகிராம்னு எதிர்ப்பு அலை கெளம்பவும், அந்த ஷோவுக்கான மெயின் ஸ்பான்ஸர்ஸ் எல்லாம், அக்ரிமெண்ட்ட டெர்மினேட் பண்ணி ஒதுங்கிடறாங்க. இதனால, சக்சஸ்புல்லா ஓடிகிட்டிருந்த ஒரு டீம் மொத்தமும் வேலையை இழக்குது.

அந்த டீம் ஹெட் ஜெனிபருக்கு இந்த விவகாரம் ரொம்பவே கோபத்தைக் கெளப்புது. சேனல் தரப்புலேர்ந்தும் சப்போர்ட் இல்லாம போகவும், வேற வழியில்லாம வேற ஷோ பண்ண அவங்க டீமோட உக்காந்து டிஸ்கஸ் பண்ண, ஒரு யோசனை கிடைக்குது.

ஒரு காட்டு பங்களாவுல நெசமாவே பேய் இருக்கறதாகவும், அது அந்த வீட்ல உள்ளவங்க மட்டுமில்லாம, அந்த ஊர்ல உள்ள பலருக்கும் தொந்தரவு கொடுக்கறதாகவும், ஒரு நியூஸ் கிடைக்குது. அதை டாக்குமெண்டரியா எடுத்து முன்ன மாதிரி சித்தரிக்க முடியாது. ஏன்னா அந்த ஷோவையே சேனல்ல ஸ்கிராப் பண்ணிட்டாங்க. அதனால இந்த முறை சித்தரிப்பெல்லாம் கிடையாது. பேயை லைவ்ல காட்றோம்னு எறங்கறாங்க. அப்பவும் சேனல்ல அவ்ளோ சாதாரணமா அந்த ஷோவுக்கு ஒத்துழைப்பு கிடைக்கறதில்ல. எப்படியோ பேசி சமாதானப்படுத்தி அந்த வீட்டுக்குப் போறாங்க.

இன்னொரு முக்கியமான விசயம் அந்த வீட்ல பேய் இருக்கறது உண்மைதான். அதனால அந்த வீட்டை வித்துட்டோ விட்டுட்டோ ஓடிறலாம்னு பாத்தா அந்தப் பேய் அவங்கள வெளியவே விடறதில்ல. இப்படியிருக்கற நிலமையில அந்த வீட்டுக்கு ஒரு பெரிய டீமே போகுது.

அவங்க அந்தப் பேயை லைவ்ல காட்டினாங்களா, பேயை கேமராவுக்குள்ள படம் புடிச்சாங்களா, இல்ல அந்தப் பேய் இவங்களப் புடிச்சதாங்கறத Live Telecast சீரிஸ்ல பார்த்து தெரிஞ்சிக்கோங்க.

மாநாடு சூட்டிங் தள்ளிப் போன கேப்புல வெங்கட் பிரபு செமயா ஒரு கதைய ரெடி பண்ணி அதை வெற்றிகரமா ரிலீஸும் பண்ணிருக்காப்ல. பேய்ப்படம்ங்கறதால, பேய்ன்னா பின்னாடி சொய்ங்ன்னு போறது, திரும்பும்போது பின்னாடியிருந்து பூச்சாண்டின்னு பயமுறுத்துன்னு இல்லாம நெசமாவே மெரட்டிருக்காரு.

தொடக்கத்துல இருந்து மொத்தக் கதையும் அந்த வீட்டை நோக்கிப் போகல. இவங்களோட சூழ்நிலை அந்த வீட்டை தேர்ந்தெடுக்க வேண்டியதாகிருது. அதனால, அந்த வீட்டுக்குண்டான பிளாஷ்பேக் ஆரம்பத்துல இல்லை. அங்க ஆல்ரெடி ஒரு பேய் இருக்கு. அதை இவங்க லைவல காட்டனும். அவ்ளோதான் மேட்டர். ஆனா மொத்த டீமும் அந்த வீட்டுக்குள்ள வந்ததுக்கப்புறம், பாக்கற நம்மளயும் உள்ள வச்சி பூட்டி மெரட்டி வுட்டுட்டானுக.

வைபவ், காஜல் அகர்வால், குக்கு வித் கோமாளி - அஸ்வின், கயல் ஆனந்தி, டேனியல் ஆனி போப், மல்லிகா, செல்வான்னு எல்லாருமே ஞாபகத்துல நிக்கிற மாதிரி சிறப்பா நடிச்சிருக்காங்க. எங்க வீட்ல எல்லாரும் அஸ்வினுக்காகவே இந்த சீரிஸ பாத்தோம்ன்னா பார்த்துக்கோங்களேன். அவ்ளோ ஃபேன்ஸ் இருக்கோம் வீட்ல. ஆனா, அஸ்வின் வாய்ஸ் ரொம்ப மேன்லியா ஹீரோயிக்கா இருக்கும்ங்கறதால அவருக்கு டப்பிங் வேற ஆள விட்டு பேச வச்சிருக்காங்க போல. பரவால்ல இருந்தாலும் நல்லாத்தான் இருக்கு.

வெங்கட் பிரபு + பேய்க்கதை = மாஸ் என்கிற மாசிலாமணி மாதிரி இல்லாம, வெங்கட் பிரபு + பேய்க்கதை – மாஸ் என்கிற மாசிலாமணியா இருக்கறது தான் இதுல பியூட்டியே. உண்மையிலயே நல்ல ட்விஸ்ட்டும், இதுவரைக்கும் பேய்ப்படங்கள்ல வராத மாதிரி சிறப்பான திகில் காட்சிகளும் இதுல இருக்கு.

நல்லாவே இருக்கு. கண்டிப்பா பார்க்கலாம்.


Wednesday, February 10, 2021

X: Past is Present (2015)

 


X: Past is Present (2015)

Mystery/Drama

 

மொத்தம் 11 கதை. 11 இயக்குநர்கள் சேர்ந்து இயக்கின படம்.

நம்ம ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், படம் இருக்கில்லையா, அதெல்லாம் அப்டி தள்ளி நிக்கனும். ஏன்னா நம்ம ஹீரோவோட எக்ஸ்களைப் பத்தின கதைதான் மொத்தப் படமும். மொத்தம் 12 பொண்ணுங்க. அதனால ஆட்டோகிராப் மாதிரி நெனச்சிக்காதிங்க. டஜன் பொண்ணுங்க இருக்கறப்பவே தெரிஞ்சிருக்கனும். இது ஆட்டோகிராப் இல்ல. மஸ்த்ராம்னு. ஆமா 18+ தான். ஆனா… அதுவேணா. ஸ்ட்ரெய்ட்டா கதைக்குள்ள போனா…

ஹீரோ பேரு K. அதான் பேரே. அந்தாளு ஒரு ஃபேமஸ் டைரக்ட்டர். இதுவரைக்கும் 20 படங்கள் எடுத்திருக்காரு. ஆனா எல்லாமே பிலிம் பெஸ்டிவல்ல மட்டும்தான் ரிலீஸாகும். அப்டியாப்பட்ட டைரக்ட்டர். தண்ணிக்கொடம் தூக்குறவனுக்கு எதுக்குடா கூலிங்கிளாஸுங்கற மாதிரி, இருட்டு பார்லயும் கூலிங்கிளாஸோடதான் சுத்துவாரு. அங்கனக்குள்ள ஒரு புள்ள இவராண்டயே வந்து வாயப் புடுங்குது. அப்டியே பேச்சுவாக்குல அந்தப் புள்ளகிட்ட தன்னோட ஒவ்வொரு கதையா சொல்ல ஆரம்பிக்கிறாரு. சரக்கு உள்ள போயிருச்சில்ல. அப்றம் பழச போட்டு கிண்டிக் கெளறலேன்னா அப்றம் அந்தக் கருமத்த எதுக்கு குடிச்சிகிட்டு.

அப்டி அவர் சொன்ன கதைகள்ல எனக்கு ரொம்பப் பிடிச்சது ரெண்டு கதைகள்.

அதுல ஒன்னு,

ஹீரோ மும்பைல இருந்து கல்கத்தாவுக்கு வேலை விசயமா போறாரு. ஆனா வேலை கிடைச்சும் தங்க ரூம் கிடைக்கறதில்ல. எங்கெங்கயோ சுத்தி ஒரு எடத்துல ஒரு ஓல்ட் லேடி ரூம் குடுக்க ஒத்துக்கறாங்க. ஆனா அவங்களும் ஆரம்பத்துல, நீ மும்பை பையனா, ரூமில்ல ராசாங்கறாங்க. இவன் மேல மேல கெஞ்சவும், ஒரு ரூம் இருக்கு. ஆனா அதுல ஆல்ரெடி ஒருத்தங்கள குடி வச்சாச்சேங்கறாங்க. இவனும் வுடாம, நான் நைட்டு எட்டு மணிக்கி வேலைக்கிப் போனா காலைல எட்டு மணிக்கித்தான் வருவேன்ங்கறான். ஓ அப்ப சரி. இங்க குடியிருக்கற ஆளு காலைல எட்டு மணிக்கி வேலைக்கிப் போனா நைட்டு எட்டு மணிக்கித்தான் வருவாங்கன்னு சரின்னு ஒத்துக்கறாங்க. ஏற்கனவே ஒரு ஆள் குடியிருக்கறதால, லீவு நாள்ல கூட நீ நைட்டு எட்டு – மார்னிங் எட்டு வரைக்கும் எப்பயும் போல வேலை பாக்குற எடத்துலதான் தங்கிக்கனும்னு சொல்லி ரூம் குடுக்கறாங்க.

இவன் டைரக்ட்டர் வேலைக்கி ட்ரை பண்றதால நெறய எழுதுவாப்ல இல்லியா. அத அப்டியே ரூம்ல வச்சிட்டு வேலைக்கு போயிருவாப்ல. அடுத்து அங்க இன்னொரு ஆள் தங்கிருக்கில்லையா அது ஒரு பொண்ணு. இவனோட எழுத்துக்கள வாசிக்கறதும், அதுக்கு பக்கத்துலயே இவங்க அதே மாதிரி எழுதறதும், அடுத்து இவன் வந்து அதை வாசிச்சிட்டு பதில் எழுதறதும்னு செமயா இருக்கும்.

ஒரே ரூம்லயே தங்கிருந்தாலும் ஒருத்தர ஒருத்தர் பாக்காமயே இப்டி எழுத்து மூலமா ஒருத்தர ஒருத்தர் பிடிச்சுப் போயி விரும்ப ஆரம்பிச்சிடறாங்க.

அப்றம் என்னாச்சி?

ஹ்ம்ம் கூல்ட்ரிங்க்ஸ் குடிங்க. எல்லாத்தையும் நானே சொல்லனுமாக்கும்? நீங்க பாக்கறதுக்கும் புரிஞ்சிக்கறதுக்கும் படத்துல நெறய இருக்கு. அதையெல்லாம் சொல்லி ஸ்பாய்ல் பண்ண விரும்பல.

இந்தப் படத்துல ஒரு போர்ஷன் மட்டும் (அவங்க தங்கிருந்த போர்ஷன் இல்ல) நம்ம நலன் குமாரசாமி இயக்கினது. அது படத்துல கட்டக் கடைசியா வரும். படம் மொத்தமும் ஆங்கிலமும் ஹிந்தியும் கலந்து வந்தாலும், அந்தக் கடைசி போர்ஷன் முழுக்க தமிழ்ல, நம்ம தமிழ்நாட்டுலதான் நடக்குது. கிளைமேக்ஸே இங்கதான்.

படத்துல ஹீரோவா நடிச்சிருக்கறது ரஜத் கபூர்னு ஒரு நடிகர். ஆனா அவரோட டீனேஜ் காலத்து வர்சனா நடிச்சிருக்கறது நம்ம மஸ்த்ராம் ஹீரோ அன்ஷுமன் ஜா.

இது போக எனக்குத் தெரிஞ்ச முகங்கள், காலாவுல ரஜினியோட எக்ஸா வர்ற ஹ்யூமா குரேஷி, ராதிகா ஆப்டே, ராஞ்சானாவுல தனுஷ் கூட நடிச்ச ஸ்வரா பாஸ்கர், கோ படத்துல வர்ற பியா பாஜ்பாய், சிங்கர் உஷா உதூப், நம்ம தோர் நடிச்ச Extraction (2020) மற்றும், The painted House (2015) படத்துல நடிச்ச நேஹா மகாஜன், அப்றம் நம்ம பில்லாவோட ரைட் ஹேண்ட் ரஞ்சித் ஞாபகம் இருக்கில்லையா யோக் ஜேபி. இவ்ளோதான் இந்த படத்துல எனக்கு தெரிஞ்ச முகங்கள்.

இவ்வளவுக்கும் மேல எனக்கு தெரிஞ்ச இன்னொருத்தரும் இருக்காரு. அவர்தான் இந்தக் கதையை அனு மேனன்ங்கறவங்களோட சேர்ந்து எழுதி மொத்தக் கதைக்கும் திரைக்கதை எழுதினவரு. அவர்தான் நம்ம தியாகராஜன் குமாரராஜா.

படம் நெட்பிளிக்ஸ்ல அவைலபிள் 


Friday, February 5, 2021

WandaVision (2021) Mini Television Series

 


WandaVision (2021)

WebSeries

MCU

 

வாண்டாவுக்கும் விஷனுக்குமான அறிமுகத்தைத் தெரிஞ்சிக்க The Legends-ல வந்த ரெண்டு எபிசோடுகளைப் பார்த்துக்கலாம். அது தெரிஞ்சா இந்த சீரிஸ் புரிஞ்சிக்கறது ரொம்ப ஈஸி. தெரியாதவங்களுக்காக அடுத்த சில பத்திகள்:

வாண்டா மேக்ஸிமாஃப் அலயஸ் ஸ்கார்லெட் விட்ச், ஹைட்ராவால உருவாக்கப் பட்ட ஒரு ஹ்யூமன் வெப்பன். லோகியோட ஸ்பியர்ல இருந்த மைண்ட் ஸ்டோனால அப்டேட் செய்யப்பட்ட மியூட்டண்ட். அவளுக்கு, கூட ஒட்டிப் பிறந்த சகோதரனும் உண்டு. அவன் பெயர் பியட்ரோ மேக்ஸிமாஃப். ரெண்டு பேரும் மியூட்டண்ட்ஸ். யெஸ். மியூட்டண்ட்ஸ்-தான். ஏன்னா இவங்களோட தோப்பனாரும் ஒரு மியூட்டண்ட். எல்லாருக்கும் நல்லாவே தெரிஞ்சிருக்கும். எக்ஸ்-மேன் சீரிஸ் படங்களில் அதிகப்படியா மெயின் வில்லனா இருந்த மக்னீட்டோ-தான் இவங்களோட அப்பாஸ். பொறக்கும் போதே மியூட்டண்ட்ஸ்-தான்னாலும் அவங்க சக்தி மேம்படுத்தப்பட்டது மைண்ட் ஸ்டோனாலதான். அதை செஞ்சது ஹைட்ராவுல இருந்த பாரோன் ஸ்ட்ரக்கர்.

விஷன் ஒரு சிந்தசைட். ரோபோட். டோனி ஸ்டார்க்கும், ப்ரூஸ் பேனரும் சேர்ந்து லோகியோட மைண்ட் ஸ்டோனை வச்சி அதுக்குள்ள ஜார்விஸ்சை புகுத்தி, உலகத்தை ஏலியன்ஸ்ங்ககிட்டயிருந்து காப்பாத்துற ரோபோட்டை உருவாக்க நினைக்க, மைண்ட் ஸ்டோன் தன்னிச்சையா அந்த தகர டப்பா ரோபோட்டுக்குள்ள நுழைஞ்சி, அது அழிவை உருவாக்குற அல்ட்ரானா உருவாகி, அது தன்னைத் தானே வைப்ரேனியத்தால அப்கிரேட் செஞ்சிக்க நினைக்க, அதை அவெஞ்சர்ஸ் தடுத்து சிலபல உள்கலவரங்களுக்கிடையில தோரோட உதவியால அந்த அல்ட்ரான், விஷனா உருவாகுது. ஆக, விஷனை உருவாக்கினது டோனி ஸ்டார்க், ப்ரூஸ் பேனர் மற்றும் தோர். (காமிக்ஸ்ல விஷன் உருவான விதம் எப்டின்னா, இறந்துபோன ஹ்யூமன் டார்ச்சோட உடல்ல வைப்ரேனியத்தை செலுத்தி அல்ட்ரானை உருவாக்க ட்ரை பண்ணப்ப, அவெஞ்சர்ஸ் அதைத் தடுத்து விஷனை உருவாக்குவாங்க.)

விஷனுக்கும், வாண்டாவுக்கும் இடையில கேப்டன் சிவில் வார்ல காதல் மலருது. இன்பினிட்டி வார்ல, மைண்ட் ஸ்டோனுக்காக வாண்டா கையால ஒருமுறையும், தானோஸ் கையால இன்னொரு முறையும் நிரந்தரமா இறந்து போயிடறாரு விஷன்.

ஸ்பாய்லர் அலர்ட்

ஏற்கனவே, வாண்டாவோட சகோதரன் பியட்ரோ, சொக்கோவியால அல்ட்ரான் கையால இறந்து போன துக்கமும், விஷன் வகாண்டாவுல இறந்து போன துக்கமும் சேர்ந்து அவளைத் தனிமைப்படுத்துது. ஆனா, அவளுக்கான வாழ்க்கையை இதுவரைக்கும் வாழாமயே இருந்ததால, தனக்கான ஒரு வாழ்க்கையை வாழனும்னு ஒரு பாக்கெட் டைமன்சனை உருவாக்கி அதுக்குள்ள விஷனும், வாண்டாவும் சந்தோசமான தம்பதிகளா வாழறாங்க. அந்த இடத்துக்கு பேருதான் வெஸ்ட்வியூ. அது ஒரு குறு நகரம். (காமிக்ஸ்லயும் அப்டி வாண்டா ஒரு பாக்கெட் டைமன்சன் ஊரை உருவாக்குவாங்க. அந்த ஊருக்குப் பேரு - லியோனியா.) இதை வாண்டாவா உருவாக்கி அவங்க பேரு வைக்கல. ஏற்கனவே இருக்கற ஈஸ்ட்வியூவ இவங்களோட பாக்கெட் டைமென்சனுக்குப் பயன்படுத்திக்கிறா. அதுக்கு வெஸ்ட் வியூன்னு பேரையும் மாத்தி வச்சிக்கிறா.

விஷனைப் பொறுத்தவரைக்கும் இதெல்லாம் எதுவுமே தெரியாது. ஏன்னா, விஷனுக்கு இன்பினிட்டி வாரோ, எண்ட் கேமோ, தானோஸோ எதுவுமே ஞாபகத்துல இல்லை. வாண்டாவைக் கல்யாணம் செஞ்சிருக்கறதாகத் தெரியும். மேற்படி, தான் ஒரு சின்தசைடுங்கறதும் ஞாபகத்துல இருக்கு. அவ்ளோதான். விஷனைப் போலவே அந்த வெஸ்ட்வியூ மக்களுக்கும் பழசு எதுவும் ஞாபகத்துல இருக்கறதில்லை. இன்னும் சரியா சொல்லனும்ன்னா வாண்டா வெஸ்ட்வியூவ தன்னோட பாக்கெட் ரியாலிட்டியா மாத்திகிட்டதுக்கு முன்னாடி இருந்ததுக்கும் இப்ப இருக்கறதுக்கு உண்டான வித்தியாசத்தை உணரல. எதோ ரொம்ப காலமா அவங்க ஒரு டிவி உலகத்துல பிளாக் அண்ட் வொய்ட்ல வாழ்ந்துகிட்டிருக்கறதாகத்தான் நினைச்சுகிட்டிருக்காங்க. ஏன்னா அது வாண்டாவோட ரியாலிட்டி. அவங்க மொத்தப் பேரையும் தன்னோட கண்ட்ரோல்ல வச்சிருக்கா. அதனால யாருக்கும் பழசு எதுவும் நினைவுல இல்ல.

அப்டி யாராவது வந்து பழசை ஞாபகப் படுத்தினா, குறிப்பா விஷன் இருக்கும்போது வாண்டாவுக்கு கெட்ட கோவம் வரும். அந்த ஸ்பாட்லயே அந்த ரியாலிட்டிய ஆல்ட்டர் பண்ணிடறாங்க. மொத எபிசோடுல மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் ஹார்ட் வாண்டா – விசன் வீட்டுக்கு நைட் டின்னருக்கு வர்றாங்க. அப்ப பேச்சுவாக்குல, மிஸ்சஸ் ஹார்ட் பேச்சுவாக்குல, நீங்க ரெண்டு பேரும் எந்த ஊர்லயிருந்து வந்தீங்க? இந்த ஊருக்கு எப்ப வந்தீங்க? எதனால இந்த ஊருக்கு வந்தீங்க? எப்பக் கல்யாணமாச்சுன்னு கேசுவலா கேக்கப் போக, வாண்டாவுக்கும் விஷனுக்கும் இதுக்கு என்ன பதில் சொல்றதுன்னு உண்மையாவே தெரியாம முழிக்கிறாங்க. உண்மையாவே அப்டி ஒன்னு நடந்திருந்தாத்தான பதில் சொல்ல முடியும். பதில் சொல்ல முடியாம தெணர்றாங்க. அப்ப அதே கேள்விகள, மிஸ்டர் ஆர்தர் ஹார்ட் அதிகாரத் தொனியில திரும்பத் திரும்பக் கேக்கவும், வாண்டாவுக்கு கோவம் வந்துருது. ஆனா அத முகத்துல காட்டுறதுக்கு சாதாரண ஆள் இல்லியே நம்ம வாண்டா. தன்னோட பவரால, தொண்டைக்குள்ள எதோ அடைச்சிக்க வச்சி அவரு மூச்சு விட முடியாம தெணறவும், மிஸ்சஸ் ஹார்ட் ஸ்டாப் இட்… ஸ்டாப் இட்னு திரும்பத் திரும்ப சொல்றாங்க. ஆனா ரெண்டு வாட்டிதான் தன்னோட கணவரைப் பாத்து சொல்றாங்க. அதுக்கப்புறம் சொன்ன எல்லா ஸ்டாப் இட்-டுமே வாண்டாவைப் பாத்து சொன்னது.

அந்த செகண்டுலயே வாண்டா அந்த ரியாலிட்டியில ஒரு சின்ன மாற்றம் செய்யிறாங்க. அதாவது மேற்படி கேட்ட கேள்விகள அந்த ரியாலிட்டியில இருந்து நீக்கிடறாங்க. அப்புறம் எப்பவும் போல அவங்க ரெண்டு பேரும் விருந்து முடிஞ்சி உபசரிப்புக்கு நன்றின்னு சொல்லி விஷனுக்கு புரமோசன் குடுத்துட்டு போயிடறாங்க.

இதுதான் முதல் ரியாலிட்டி ஆல்ட்டர்.

அடுத்து ஒருமுறை ஒரு Bee Keeper வாண்டாவும் விஷனும் இருக்கும்போது டிரெய்னேஜ் வழியா மேல வர்றாரு. உடனே வாண்டா டக்குன்னு ஒரு ரியாலிட்டி ஆல்ட்டர் செய்யிறா. ஏன்னா அந்த மொத்த செட்டப்பும் (என்னதான் ரியாலிட்டியா இருந்தாலும் அது ஒரு செட்டப்தான். ஏன்னா அது) விஷனுக்காக.

விஷனோட டெட்பாடிய கடத்திட்டு வந்து, தன்னோட பாக்கெட் ரியாலிட்டியில உயிர் குடுத்து தன்னோட கணவன் எப்டியெல்லாம் இருக்கனும்னு ஆசைப்பட்டாளோ எப்டியெல்லாம் வாழனும்னு எதிர்பார்த்தாளோ அதே மாதிரி மாத்திக்கிறா. ஆனா வாண்டாவுக்கு ஒரு ரோபோட் எப்பிடி இயங்கும், விஷனோட உண்மையான சக்திகள் என்னென்னன்னு தெரியாது. அவ முன்னாடி இதுவரைக்கும் விஷன் வெளிக்காட்டின சக்திகள மட்டுமே வச்சி விஷனை உருவாக்கிருப்பா. ஆக இங்க இருக்கறது வாண்டாவோட விஷன். மேல மூனாவது பாரால சொன்ன மாதிரி விஷன் இது கிடையாது. அதனாலதான் மைண்ட் ஸ்டோன் இல்லாமக் கூட விஷனால உயிரோட வாழ முடிஞ்சிருக்கு. கூடவே விஷனுக்கு தன்னோட சகோதரன் பியட்ரோவோட சக்தியையும் கொடுத்திருப்பா.

இது எல்லாமே மேனுப்லேட் பண்றது வாண்டாதான்னாலும், அவளயும் ஒரு சக்தி மேனுப்லேட் பண்ணிட்டிருக்கு. அது எப்படியும் இந்த சீரிஸ் முடியறதுக்குள்ள நமக்குத் தெரிய வரும். ஆனா அதுக்கான க்ளூஸ் எல்லாத்தையும் மொத எபிசோட்ல இருந்தே ஆங்காங்கே தூவி விட்ருக்காங்க.

அது என்னென்ன?

ஆரம்பத்துலயே ஒரு பக்கத்து வீட்டுக் கேரக்ட்டர் என்ட்ரியாகும். Agnes. அவ மொத எபிசோட்ல இருந்தே குழந்தைங்களப் பத்தியே பேசிட்டிருப்பா. அந்த ஊர்ல உள்ள ஸ்கூல்ல குழந்தைகளுக்காகன்னு ஒரு பங்சன் நடக்கும். அதுல வாண்டாவும் விசனும் கலந்துக்குவாங்க. சரியா சொல்லப் போனா அந்த ஊர்ல ஸ்கூல் இருக்கும். அதுக்கான பேரண்ட்ஸ் டீச்சர்ஸ் அசோசியேசன் இருக்கும். ஆனா கொழந்தைங்களே இருக்காது. இந்த மாதிரி அவங்க ரெண்டு பேர்த்து மனசுலயும் கொழந்தைங்க கொழந்தைங்கன்னு சொல்லி சொல்லி அந்த ஆசைய அவங்க மனசுல அவங்களுக்கே தெரியாம விதைக்கிறாங்க. இதைத்தான் ஒரு எக்ஸ்டர்னல் ஃபோர்ஸ் அவளையும் மீறி அங்க இருக்குன்னு சொன்னேன்.

சரி அது ஏன் கொழந்தைங்க?

அப்டி ஒரு டவுட்டு வரணும்ல. கண்டிப்பா அதுக்கு ஒரு காரணமும் இருக்கும். காமிக்ஸ்ல வாண்டா விசனுக்கு நிறைய வில்லன்களும் நண்பர்களும் இருந்தாலும், மெயின் வில்லன் & வில்லி Agatha Harknes & Mephisto. ஆக, அது யாரா இருக்கும்னு இந்த சீரிஸ் பாத்துகிட்டிருக்கறவங்க கண்டிப்பா யூகிச்சிருப்பிங்க.  அதுல ஒன்னு Agnes. இன்னொருத்தர் யார்னு இன்னும் யாரும் கண்டுபுடிக்க முடியாத மாதிரிதான் போயிட்டிருக்கு.

காமிக்ஸ்க்கும் சினிமாட்டிக் யுனிவர்ஸுக்கும் நிறைய மாற்றங்கள் செய்யிற மாதிரி இதுல அந்த வில்லனை அப்படியே மாத்திக் கூட காட்ட வாய்ப்பிருக்கு. டாக்டர் ஸ்ட்ரேஞ்ல த ஏன்சியண்ட் ஒன்னை பெண்ணா மாத்தின மாதிரி, மெபிஸ்ட்டோவ பொண்ணா மாத்தக் கூடிய சாத்தியக் கூறுகள் நிச்சயமா இருக்கு.  அது டாட்டியா இருக்க நிறைய வாய்ப்பிருக்கு.

ஏன்னா அந்த வில்லி / வில்லனுக்கு வாண்டா மூலமா பொறக்கப்போற ரெண்டு கொழந்தைங்களும் வேணும். அது ஏன் / எப்டி ரெண்டு? ஏன்னா வாண்டாவே ஆல்ரெடி ஒரு ட்வின்ஸ் தான். அதனால அத அவ மனசுல விதைக்கனும்னு அவசியமே இல்ல. அது ஆட்டோமேட்டிக்கா நடக்கும். ஆக ரெண்டு கொழந்தைங்க பொறக்கறாங்க.

இந்த எடத்துல வாண்டாவுக்கு பிரசவம் பாக்குறது மோனிகா ராம்போ. அவங்க யாருன்னா, கேப்டன் மார்வலோட தோழி மரியா ராம்போவோட பொண்ணு. ஆனா, மோனிகாவும் வெஸ்ட்வியூல உள்ள மத்தவங்க மாதிரி தான் யார்ன்னே தெரியாம தன்னோட பேரை மறந்து ஜெரால்டின்ங்கற பேர்ல வாழ்ந்துகிட்டிருக்காங்க. அவங்களையும் அறியாம ட்வின்ஸ்ங்கற பேச்சு அடிபட்டதும், ஆமால்ல உங்க சகோதரர் பியட்ரோ. அல்ட்ரான் கூட கொன்னுடுச்சேன்னதும், வந்துச்சு பாருங்க வாண்டாவுக்கு அந்த குட்டி சைஸ் மூக்குக்கு மேல கோவம்… சும்மா சொல்லக் கூடாதுங்க நம்ம கேப்டன் தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்கன்னு வாய்லதான் சொன்னாரு. வாண்டா அத அப்டியே செஞ்சிட்டா… அப்டி மோனிகா வெஸ்ட்வியூ வெளிய வந்து விழும்போதுதான் அது ஒரு பாக்கெட் ரியாலிட்டிங்கறதே நமக்கு ரிவீலாகும்.

S.H.I.E.L.D உருவாக்கினது Peggy Carter, Howard Stark மற்றும் Hank Pym. அது ஹைட்ராவ அழிக்கிறதுக்காக தன்னையும் சேர்த்து அழிச்சிகிச்சு. அதுக்கப்புறம் ஷீல்டோட பணிகளையெல்லாம் பாத்துக்கறது S.W.O.R.D. இதை உருவாக்கினது கேப்டன் மார்வல், மரியா ராம்போ மற்றும் நிக் ப்யூரி. ஆமாம் நிக் ப்யூரிதான். ஸ்வார்ட் இருக்கற தைரியத்துலதான் ப்யூரி ஷீல்டை கொஞ்சம்கூட யோசிக்காம அழிக்க முன்வந்தாரு. இதோட தலைமையகம் எங்க இருக்குன்னு யாருக்காவது ஞாபகமிருக்கா?

பரவால்ல, நானே சொல்லிடறேன். Spider-Man Far From Home-ல ஒரு எண்ட் கிரெடிட் சீன்ல பூமியில உள்ள நிக் ப்யூரி ஸ்க்ரல்லாவும், ஒரிஜினல் நிக் ப்யூரி ஒரு விண்வெளி ஓடத்துல மிதந்துகிட்டு அங்கிருந்து பூமியில உள்ள டூப் நிக் ப்யூரிக்கி இன்ஸ்ட்ரக்ஸன் கொடுக்கறதாகவும் காட்டிருப்பாங்களே. அந்த இடம்தான் ஸ்வார்டோட ஒரிஜினல் தலைமையகம். இப்போதைக்கி ஏஜண்ட் கோல்சன் மாதிரி இந்த வெஸ்ட்வியூ கேஸை பாத்துக்கற ஸ்வார்ட் ஏஜெண்ட் Jimmy Woo. இவர் Ant-man and the Wasp படத்துல ஹவுஸ் அரெஸ்ட்ல உள்ள ஸ்காட் லேங்கை வீட்டை விட்டு வெளிய போன தொரத்திப் புடிக்கிற அதிகாரியா வருவாரே அவரேதான்.

இனிவரும் காலங்கள்ல ஸ்வார்டுல A.I.M ஊடுறுவிட்டதாகவும் அத அழிச்சிட்டு வேற ஒன்னை உருவாக்கி அதை ஒரு ஃபோர்ஸாவும் காட்ட நிறைய வாய்ப்பிருக்கு. ஏன்னா எய்மோட எம்பளம் ஹெக்ஸாகன் ஷேப்லதான் இருக்கும். அதுகூட ஸ்வார்டுல உள்ள எல்லாமே ஹெக்ஸாகன் ஷேப்ல இருக்கறதுக்கான காரணமா இருக்க-லாம். இந்தப் பாரா மட்டும் லாம் தான். ஏன்னா எதுவும் உறுதியா சொல்றதுக்கில்ல.

ஈஸ்ட்வியூ எங்க போச்சு? வெஸ்ட் வியூன்னு ஒன்னு புதுசா ஏன் முளைச்சது? அங்க இருந்த மூவாயிரத்து சொச்சம் மக்களெல்லாம் என்ன ஆனாங்க? அந்த ஊருக்குள்ள போக விடாம ஒரு கண்ணுக்குத் தெரியாத சுவர் படலம் ஏன் தடுக்குது? இதையெல்லாம் கண்டுபுடிக்க சில அந்தந்த துறை சார்ந்த நாலஞ்சி பேரை ஸ்வார்டு நியமிக்கிது. அதுல ஒருத்தங்கதான் Dr. Darcy Lewis. இவங்களை ஆல்ரெடி நாம Thor மற்றும் Thor: The Dark World படங்கள்ல பார்த்திருப்போம். அதுல ஜேன் ஃபாஸ்டரோட ப்ரெண்டா வருவாங்க. ஞாபகமிருக்கா ப்ரெண்ட்ஸ்? நான் கூட மார்வெலால் இருட்டடிப்பு செய்யப்பட்ட அழகான நடிகைகள்னு ஒரு பதிவெழுதிருந்தனே அந்த அதே தேவதைதான் இந்த டாக்டர் டார்ஸி லூயிஸ்.

இந்த சீரிஸ் முழுக்க சிட்காம் மாதிரியும், பழைய சிட்காம் ரெபரென்ஸ்களும் வச்சிட்டேதான் இருக்காங்க. அதுல ஒன்னு முதல் எபிசோட்ல வந்த மிஸ்சஸ் ஹார்ட். அவங்க F.R.I.E.N.D.S சிட்காம்ல வந்த ஒரு நடிகை. அவங்க பேர் Debra Jo Rupp. அடுத்து டார்ஸியோட கணவர், Phil Jones. அவர் அப்டியே அச்சு அசல் F.R.I.E.N.D.S சிட்காம் நடிகர் டேவிட் ஸ்விம்மரின் டூப் மாதிரியே இருப்பார். அடுத்து டார்ஸியாக நடிச்சிருக்கற கேட் டென்னிங்ஸே ஒரு சிட்காம் நடிகைதான். அதுல ரொம்ப பேமஸானது 2 Broke Girls. டார்ஸி வந்துதான் இது ஒரு பாக்கெட் ரியாலிட்டி. அதுக்குள்ள இன்னதெல்லாம் நடந்துகிட்டிருக்குன்னு கண்டுபுடிக்கிறாங்க.

ஆனா, இந்த பாக்கெட் ரியாலிட்டிக்கி உள்ள நடக்கற விசயங்களையெல்லாம் சிட்காம் வடிவுல வெளிய ஒளிபரப்புறது யாரு? மத்த யாரையுமே உள்ள அனுமதிக்காத அந்த கண்ணுக்குத் தெரியாத சுவர் படலம், மோனிகா ராம்போவை மட்டும் எப்படி அனுமதிச்சது? உள்ள போன Bee Keeper என்ன ஆனாரு? யாரந்த எக்ஸ்டர்னல் ஃபோர்ஸ் அப்டிங்கறத இனிவரும் எபிசோடுகள்ல பாக்க நானும் உங்கள மாதிரியே படு ஆவலா இருக்கேன்.

அதேமாதிரி இன்னொரு விசயம். அபிசியலா எக்ஸ்-மென்ல உள்ள மியூட்டன்ஸ் இந்த சீரிஸ் மூலமா மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ்க்கு உள்ள வந்தாச்சு. அது இன்னிக்கி வந்த அஞ்சாவது எபிசோட் கிளைமாக்ஸ் பார்த்தவங்களுக்குப் புரியும். ஆரோன் டெய்லரா இல்லாம எவான் பீட்டர்ஸ் வந்ததுதான் ஹைலைட்டே!

சீரிஸ் முடியட்டும் வரேன்.

 


Wednesday, February 3, 2021

Mirage (2018) Durante La Tormenta (Spanish)

 


Mirage (2018)

Durante La Tormenta (Spanish)

Drama / Sci-Fi       

 

இதுவும் காலப்பயணம் சம்பந்தப்பட்ட படம்தான். 1989ல ஒரு கொலை ப்ளஸ் ஆக்ஸிடண்ட் நடக்குது. அன்னிக்கி மின்புயல் வேற 72 மணி நேரத்துக்கு தொடர்ந்து மேல இடிச்சிட்டே கெடக்கு. சரியா 25 வருசம் கழிச்சி அந்த வீட்டுக்கு ஒரு குடும்பம் புதுசா குடி வர்றாங்க. நர்ஸ் வெரா ராய், அவளோட கணவன் டேவிட் ஆர்டிஸ் மற்றும் அவங்க குட்டிப் பொண்ணு குளோரியா.

 

அந்த வீட்ல ஆல்ரெடி இருந்த பர்னிச்சர்ஸ் எல்லாம் அப்டியேதான் முன்ன குடியிருந்தவங்க விட்டுட்டு போயிருக்காங்க. அப்படி எல்லா ரூமையும் கிளீன் பண்றப்ப அவங்களுக்கு ஒரு பழைய டிவி ஒன்னும், வீடியோ கேமராவும், ஒரு பெட்டி நெறய அதுல ரெக்கார்ட் பண்ண வீடியோ கேசட்டுகளும் கிடைக்குது. அதையெல்லாம் ஒன்னொன்னா போட்டுப் பாக்கறாங்க. அந்த வீடியோக்கள் எல்லாத்துலயும் இதுக்கு முன்னாடி இந்த வீட்லயிருந்த பையன் நிக்கோ லசார்ட்டே கிட்டார் வாசிக்கிறதா இருக்கு. அதுல கடைசி வீடியோ ஒன்னு எக்ஸாக்ட்டா இவங்க பாக்குற அதே தேதி, அதே மாசம், ஆனா வருசம் மட்டும் 1989ன்னு இருக்க இவங்க அட பாரேன் என்ன ஒரு கோ-இன்ஸிடன்ஸ்ன்னு அவங்க பாட்டுக்கு போயிடறாங்க.

 

ஆனா அன்னிக்கி இன்னொரு கோ-இன்ஸிடன்ஸும் இருந்தது. அன்னிக்கி வந்த அதே மின்புயல் இன்னிக்கும் சரியா 25 வருசம் கழிச்சி அந்த நகரத்தை தாக்குது.

 

எதிர் வீட்டுல ஒரு அம்மாவும் பையனும் குடியிருக்காங்க. அந்தப் பையன் எய்ட்டோர் பைலட்டா வேலை பாக்கறான். அவங்களை நைட் டின்னருக்கு வரவேத்து உபசரிக்கிறாங்க. அப்ப அந்த வீடியோக்களப் பத்தி சொல்லவும், எய்ட்டோர், அது தன்னோட பால்ய சினேகிதன் நிக்கோ. அவன் அன்னிக்கி நைட்டு ஆக்ஸிடண்டாகி செத்துப் போயிட்டான்னு சொல்ல, அவனோட அம்மா கிளாரா, மேற்கொண்டு அவன எதுவும் சொல்லவிடாம, சின்னக் கொழந்தைங்க இருக்கறப்ப இந்த மாதிரி பேச்செல்லாம் எதுக்குன்னு சொல்லி அவனை தடுத்துடறாங்க

 

அன்னிக்கி நைட்டு இவங்க தூங்கிட்டிருக்கறப்போ, அந்த பழைய டப்பா டிவி தன்னப்பாட்டுல ஆன் ஆயிக்கிது. வேரா, எந்திரிச்சிப் போயி என்னடா அந்த ரூம்ல சத்தம்னு பாத்தா அந்த டிவில நிக்கோ, கிட்டார் வாசிச்சிட்டிருக்கான். ஆனா டிவி கேமரா எல்லாம் ஆப் பண்ணி வச்சிருக்கு. வேராவுக்கு செம ஷாக்கு.

 

அந்தப் பக்கம் நிக்கோவுக்கும் ஷாக்கு. ஏன்னா அவனுக்கு டிவியில தன்னோட உருவத்துக்கு பதிலா வேரா தெரியிறாங்க. அவன் இருக்க அதே ரூம்ல அவன் உக்காந்திருக்கற ஷோபாவும் அவளுக்குப் பின்னாடி இருக்கு. அச்சு அசலா எல்லாமே அவனோட ரூம்தான்னு உறுதியா தெரியிது. அவன் பதட்டத்தோட ஹலோ சொல்ல, பதிலுக்கு வேராவும் ஹலோ சொல்றாங்க.

 

அதே ரூம், அதே டிவி ஆனா காலம் மட்டும் வேற. காரணம் அந்த மின்புயல்.

 

அப்பதான் ஒரு விசயம் வேராவுக்கு புரியவருது. இப்ப நம்மால நிக்கோ கூட பேச முடியிதுன்னா, அவன் அன்னிக்கி நைட் ஆக்ஸிடண்டாகி சாகப் போறதையும் சொல்லி தடுக்க முடியும்தானே? அதைத்தான் செய்யிறாங்க. ஆனா, தப்பு பண்ணிட்டியே சிங்காரம். நீங்க காலம்ங்கற பேட்ட வேலன் மேல கை வச்சிருக்கக் கூடாது.


காலைல கண்ணு முழிச்சிப் பாத்தா வேரா தான் நர்ஸா வேலை பாக்கற ஹாஸ்பிட்டல்ல ஒரு பேமஸான டாக்டரா இருக்காங்க. இது ஒரு நல்ல ஷாக்குன்னாலும் பின்னாடியே ஒரு ஆப்பும் இருக்கு. அது என்னன்னா, அவளோட கணவன் டேவிட்டுக்கு இவ யார்ன்னே தெர்ல. ஆப்பு சுமார்தான்னாலும் அடுத்து இன்னொரு பெரிய ஆப்பு இடி மாதிரி சொழட்டி அடிக்கிது. வேராவுக்கும், டேவிட்டுக்கும் கல்யாணமே ஆகலேன்னா, அவளோட அழகான குட்டிப் பொண்ணு குளோரியா பொறந்திருக்கவே வாய்ப்பில்லேல்ல. மொத்தமும் போச்சா? பழச கொழப்புனதுனால இப்ப வேரா இருக்கறது ஒரு புது டைம்லைன்.

 

இப்ப வேராவுக்கு தன்னோட பழைய குடும்ப வாழ்க்கை வேணும். அவ பொண்ணு குளோரியாவும் வேணும். இதுக்கெல்லாம் அவ அந்த பழைய டைம்லைனுக்குப் போகணும்.

 

அது எப்படிங்கறத Mirage (2018) Aka Durante La Tormenta (2018) ஸ்பானிஷ் படத்துல பாருங்க. செம சுவாரஸ்யமான படம். நெட்பிளிக்ஸ்ல இருக்கு. நான் ரெண்டு வாட்டி பாத்துட்டேன். போன கர்ப்யூ டைம்ல ஒருக்கா பாத்துட்டேன். இந்தப் படத்தைப் பத்தி எழுதிட்டேன்னே நெனச்சிட்டிருந்தேன். ஆனா, அந்தப் பதிவயே என்னோட ப்லாக்ல காணோம். ஒருவேள வேற டைம்லைன்ல எழுதிருப்பனோ, என்னவோ? ஆனா, அடிச்சி சொல்றேன். நான் அப்பவே எழுதி போஸ்ட் பண்ணிருந்தேன். ஆனா, உங்க மேல சத்தியமா காணோம். ட்ராஃப்ட்லயும் இல்ல. ட்ராஸ்லயும் இல்ல.

 

அப்புறம் இதுல வேராவோட கணவனா நடிச்சிருக்கறது நம்ம Money Heist Professor.